தர்சனன் தேவராசா அவர்கள் கல்வி பயின்ற கொழும்பு இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.த.முத்துக்குமாரசாமி அவர்கள் அன்னாரதும் குடும்பத்தினரதும் மறைவு குறித்து வழங்கிய அனுதாபச் செய்தி.

 

தர்சனன் தேவராசா அவர்கள் கல்வி பயின்ற

கொழும்பு இந்துக் கல்லூரியின்

முன்னாள் அதிபர் திரு.த.முத்துக்குமாரசாமி அவர்கள்

அன்னாரதும் குடும்பத்தினரதும் மறைவு குறித்து வழங்கிய

அனுதாபச் செய்தி.

23-02-2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.14மணியளவில் ஏற்பட்ட கோர விபத்தில் இராமலிங்கம் சோமசுந்தரம், ஆறுமுகம் தேவராசா, தேவராசா சுகந்தினி, தேவராசா தர்சனன், வாகன ஓட்டுனர் ஆகியோர் உயிர் இழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். எங்கிருந்தோ வந்த பஸ் வண்டி உங்களுக்குச் சதியாகும் என்று யார் நினைத்திருப்பார்கள். இது விதியின் விளையாட்டா? அல்லது பஸ் வண்டிச் சாரதியின் விளையாட்டா? எதுவும் புரியவில்லை.

குன்றாத செல்வமும் குறைவற்ற புகழுடனும் வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள். நான் கொழும்பு இந்துக் கல்லூரியின் அதிபராக வந்ததிலிருந்து இவர்களைப்பற்றி நன்கு அறிவேன். இவர்களில் தேவராசா தர்சனன் எமது மாணவன். அவனது அப்பா, அம்மா, பேரன் அடங்கலாக நால்வரும் எமது கல்லூரியுடன் நெருக்கமாக வாழ்ந்தவர்கள். செல்வம், புகழ் எல்லாம் மனித வாழ்வில் நிலையற்றவை என இவர்களின் இறப்பு எடுத்துக் காட்டுகின்றது. நகமும் சதையும் என மிகவும் அன்போடும் பாசத்துடனும் வாழ்ந்த குடும்பத்திற்கு இந்நிலை ஏற்பட்டதையிட்டு வேதனை அடைகின்றேன்.

வாழ்க்கை என்பது ஆயிரம் காலத்துப் பயிர். அந்தப் பயிரின் வாழ்வை கபடம் நிறைந்த காலன் பறித்து விட்டான். “எப்பவோ முடிந்த காரியம்” எனக் கூறிய சிவயோக சுவாமிகளின் வாக்கு முற்றிலும் உண்மையானது. பிறப்பும் இறப்பும் இறைவன் நியதி. கொடுத்தவனே எடுத்துக்கொண்டான் என எம் மனங்களை யாராலும் தேற்றமுடியாது. எமது கல்லூரி அழைப்பு விடுத்தால் உடன் வரும் தர்சனனும் இன்றில்லை. அவன் தாய் தந்தையரும் இன்றில்லை. நல்ல பெற்றார்களாக பாடசாலைக்கு வந்து அதிபர் ஆசிரியர்களுடன் தேவையான விடயங்கள் தொடர்பில் அளவளாவி வேண்டிய உதவிகள் செய்த அத் தாய் தந்தையரின் உயிர்களையும்கூடக் காலன் பறித்து விட்டான்.

தர்சனன் எனது காலத்திலேயே பாடசாலையில் சேர்ந்து உயர் கல்வி வரை கல்வி கற்றுச் சென்ற மாணவன். சின்னக் காலெடுத்து சிங்காரக் கதை பேசி வண்ண மொழியாம் தமிழை வண்ணமாகக்கொண்டு அரிச்சுவடியினை இந்துக் கல்லூரியில் ஆரம்பித்ததை எண்ணிப் பார்க்கின்றேன். கல்வியை கருத்தூன்றிக் கற்ற சிறந்த மாணவன். குடும்பத்தை ஒரு கண்ணாகவும் பாடசாலையை மறு கண்ணாகவும் கொண்டு வாழ்ந்தவன்.

தர்சனன் படிப்பில் மட்டுமா? சொற்போர், பேச்சுப்போட்டி, நாடகம், உதை பந்தாட்டம், தடகள விளையாட்டுப் போட்டி அனைத்திலும் பங்குபற்றி பல பரிசுகளையும் கேடயங்களையும் அதிபர், ஆசிரியர்கள் போற்றி நிற்கும் வகையில் பெற்றுக்கொண்ட நிலைகள் நினைவுக்கு வருகின்றன. பாடசாலையின் மன்றச் செயற்பாடுகளில் தலைவர், செயலாளர் பதவிகள் பிரதி சிரேஷ்ட மாணவ தலைவன், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவு போன்ற நிலைகளில் நின்று செயற்பட்ட விதங்கள் மற்றவர்களை பிரமிக்கச் செய்தன. ஒலி வாங்கியின் முன் நீ ஆற்றிய உரைகள், அறிவித்தல்கள், பேச்சு, சொற்போர் நிகழ்வுகள் உனது கணீரென்ற குரலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பிரதி சிரேஷ்ட மாணவ தலைவனாக இருந்து மற்றைய மாணவ தலைவர்களுடன் சேர்ந்து பாடசாலையின் ஒழுக்க விழுமியங்களைப் பேணி பாடசாலையின் நற்பெயரை மேம்படுத்தச் செய்த செயற்பாடுகள் அளவற்றன. பாடசாலையில் நீ கால் பதிக்காத இடங்கள் இல்லை என்றே கூறலாம். கல்லூரி நிகழ்வுகளில் நீ ஓடிவந்து செய்யும் செயல்கள், அர்ப்பணிப்புக்கள் நினைவில் ஊஞ்சலாடுகின்றன.

மகிழ்வோடு எப்போதும் சிரித்த முகம், துடுக்கான கதை, பாசம் நிறைந்தவனாய், பண்பு மிக்கவனாய் அனைவருடனும் பழகி, கதைத்து நிற்கும் உன்கோலம், உன் பணிவால், செயலால் ஆசிரியர்களின் மனதில் நீங்காத இடம்பெற்ற ஒரு நல் மாணவனாக விளங்கினாய். மனித நேயம் கொண்ட ஒருசில மக்களில் குணத்தால், செயலால் முதலிடம் பெறும் தர்சனன் சாதாரண மனிதர்களிடம் காணமுடியாத அளப்பெரும் அன்பையும், அறிவையும் ஆற்றலையும் பெற்றிருந்தான். இனியசொல், தெளிந்தகொள்கை, செயலில் உறுதி இவற்றிற்கு உரியவர்களே சாதிக்கக்கூடியவர்கள் எனச் சாதித்துக்காட்டியவன் நீ. இவ் உலகைவிட்டு நீங்கினாலும் நீ கல்லூரிக்கு விட்டுச்சென்ற நினைவுகள் பல. உன்னைச் சுற்றி உன் இந்துவின் அன்பு நண்பர்கள், மாணவ தலைவர்கள், ஆசிரியர்கள் ஏங்கி நிற்கின்றனர். உன் துணிச்சல் யாரிடமும் இல்லை. உன் மனத்தைரியம், எதையும் தாங்கும் இதயம், எம் கல்லூரி மீது நீ வைத்திருக்கும் பற்று, அன்பு எமது கல்லூரி என்றால் நீ துடிக்கும் துடிப்பு எல்லாம் சுக்குநூறாகிவிட்டதே. இல்லறமாகிய நல்ல தர்மத்தில் இணைந்து அருளோடும் அறிவோடும் வாழ்ந்த தர்சனன் இன்று இல்லை. நீ வாழ்க்கையில் நிறையச் சாதிப்பாய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வாய், மாணவச் சந்ததியினருக்கு உன்னை உதாரணம் காட்டி மகிழலாம் என்றிருந்தபோது நீ எல்லோரையும் தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாயே. மண்ணுலகில் பிறந்தோம் வாழ்ந்தோம் இறந்தோம் எனப் பல்லாயிரக்கணக்கானவர்கள் வாழ்ந்து மடியும் இவ் உலகில் கல்லூரி வரலாற்றில் சாகா வரம்பெற்று என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சாதனையாளர் பட்டியலில் நீங்கா இடம்பெற்ற உத்தம மாணவனாக நீ திகழ்வாய்.

இவர்களது பிரிவுத் துயரை இவரது உறவுகளால் மட்டுமல்லாது இவர்களை நன்கு அறிந்தவர்களாலும் ஜீரணிக்க முடியாது. விதியும் இறை அழைப்பும் வர இவர்கள் இறையடியை நாடியுள்ளனர் என ஆறுதலடைவோமாக.

இவர்களின் பிரிவால் ஆறாத் துயர்கொண்டுள்ள தர்சனின் ஆருயிர்த் தம்பி ஹர்சனனிற்கும் ஏனைய உறவினர்கட்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இவர்கள் மறு உலகில் ஆன்ம ஈடேற்றம்பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.

த.முத்தக்குமாரசாமி
ஓய்வுநிலை அதிபர்,
இந்துக் கல்லூரி, கொழும்பு.