அசாதாரண சூழ்நிலையில் அரும்பணியாற்றிய அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம்.

                          

               அசாதாரண சூழ்நிலையில் அரும்பணியாற்றிய அதிபர்

                                     திருமதி.தேவநாயகி பாலசிங்கம்.

காரைநகர் களபூமி அம்பலவாணர் பரமேஸ்வரி தம்பதிகளின் புதல்வி திருமதி. தேவநாயகி பாலசிங்கம் ஆரம்பக் கல்வியை காரைநகர் பாடசாலைகளிலும் தொடர்ந்து உயர்கல்வியைப் பண்டத்தரிப்பு மகளீர் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் விலங்கியல் பாடத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற விஞ்ஞானப் பட்டதாரி பட்டம் பெற்றார்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்று அதிபராகப் பணியாற்றி பரீட்சை திணைக்களத்தில் உதவிப் பரீட்சை ஆணையாளராகப் பதவி உயர்வு பெற்று மாற்றலாகி சென்றார். க.பொ.த உயர்தர வகுப்புகளில் விலங்கியல் பாடத்தை சிறப்புடன் போதித்து மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி பெறப் பணியாற்றினார்.

1991ம் ஆண்டு இடப்பெயர்வினைத் தொடர்ந்து கல்லூரி பல சவால்களை எதிர் கொண்ட வேளை சாதுரியமாக நிருவாக நடவடிக்கைகளைக் கையாண்டு கல்லுரியின் தனித்துவத்தையும் அந்தஸ்தையும் பேணியவர். 1991ம் ஆண்டு இடப்பெயர்வு நடைபெற்றவேளை தனது பாதுகாப்பினையும் கருத்தில் கொள்ளாது துணிச்சலாக துவிச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு வருகை தந்து அலுவலகத்தில் பேணப்படும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆகிய இடங்களில் போர் காலசூழலில் கவனமாகப் பேணி மீளக்குடியமர்வின் போது காரைநகரிற்கு எடுத்து வந்தார். கல்லூரி ஆவணங்களை எடுத்து வந்தமை கல்லுரியின் நிருவாக செயற்பாட்டிற்கு மாத்திரம் அன்றி ஏனைய பாடசாலைகளின் செயற்பாட்டிற்கும் உதவியாக அமைந்தது.

இடம்பெயர்ந்த நிலையில் கல்லூரி யாழ்ப்பாணத்தில் இயங்கிய வேளை ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்களின் உதவியுடன் கல்லுரியை முழுநேரக் கல்லூரியாக இயக்குவதற்கு தேவையான பௌதீக வளங்களைப் பெற்று கல்லூரியைத் திறம்பட இயக்கினார். 1996ம்ஆண்டு ஏப்பிரல் 25ம் திகதிக்குப் பின் காரைநகரில் மீள் குடியேற்ற்றம் ஆரம்பானபொழுது காரைநகரிற்கு விரைவாகத் தன் சக ஆரிரியர்களுடன் வருகைதந்து கல்லூரியைச் சொந்த இடத்தில் இயக்கியவர். அதிபராகப் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் நிருவாகத்தில் அனைத்து ஆசிரியர்களையும் இணைத்துப் பயணித்தவர்.

அதிபர் பணிகளுக்கு அப்பால் (1991-1994) மூன்று ஆண்டுகள் தொண்டமனாறு வெளிக்கள நிலைய செயலாளராகப் பணியாற்றி க.பொ.உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகளை சுமுகமாக நடத்துவதில் சிறப்பாகப் பணியாற்றியவர்.

பரீட்சை திணைக்கள உதவிப் பரீட்சை ஆணையாளராகக் கடமை ஆற்றியவேளை ஆய்வு அபிவிருத்தி கிளையிலும் (research and development branch) இரகசிய கிளையிலும் (confidential branch) பணியாற்றினார். அன்னார் ஓய்வுபெற்ற பின்னரும் பரீட்சைத் திணைக்களம் அன்னாரின் சேவை தேவைப்படும் வேளைகளில் பணிக்கு அமர்த்தியது திறந்த பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திபோமாக.

எஸ். கே. சதாசிவம்