தில்லை மயான அபிவிருத்தி

 

தில்லை மயான அபிவிருத்தி
எஸ்.கே.சதாசிவம்

காரைநகர் கிழக்கு பிரதேச மக்கள் தங்கள் இறுதிக் கிரியைகளை நிறைவேற்றுவதற்க்கு காரைநகர் கிழக்கு வீதியில் அமைந்துள்ள தில்லை மயானத்தை பயன்படுத்துகின்றனர்.கடந்த காலங்களில் கடற்கரையை அண்மித்த இச் சதுப்பு நிலப் பிரதேசத்தில் தில்லைச் செடிகள் நிறைந்து காணப்பட்டமையால் தில்லைச் சுடலை என அழைக்கப்படலாயிற்று.மாரிகாலங்களில் தில்லைச்செடியில் ஊதா நிற மலர்கள் மலரும்.மூலிகைப் பெறுமானம் மிக்க தில்லைச் செடிகள் ஐந்து மீற்றர் உயரம் வரை வளரக் கூடியவை.

1928 இல் காரைநகரின் முதலாவது கிராம சபை ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் தில்லைச் சுடலை ஆரம்பிக்கப்பட்டதாக இப்பகுதியில் வாழ்கின்ற மூத்த குடிமக்களின் கருத்தாக உள்ளது.ஆரம்ப காலத்தில் தில்லைப் பகுதியில் மூன்று சுடலைகள் உபயோகத்தில் இருந்த போதும் வசதியான இடத்தில் அமைந்துள்ள தற்போதய சுடலை மாத்திரம் பாவனையில் உள்ளது.

ஆரம்ப காலங்களில் பாவனையில் இருந்த மடமும் கிணறும் அழிந்து போய் உள்ளது.யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு தி.மகேஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தற்போது அமைந்துள்ள எண்கோண வடிவிலான இளைப்பாறு மண்டபம்,கிணறு, வரவேற்பு வளைவு என்பன 26.10.2003ல் கட்டப்பட்டது.இப் பணிகளை திக்கரை கிராம அபிவிருத்தி சங்கம் நிறைவேற்றியது.

காரைநகர் கிழக்கு பிரதேச மக்கள் தில்லை மயானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு இலண்டன் காரை நலன்புரி சங்கத்திடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக இலண்டன் காரை நலன்புரி சங்கத்தின் அனுசரணையுடன் காரைநகர் பிரதேச சபை அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றியுள்ளது.இரு உடல்கள் ஒரே நேரத்தில் தகனம் செய்யக்கூடியவாறு தளம் அமைக்கப்பட்டு எரி கொட்டகை போடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் சமதளம் அற்ற நிலையில் காணப்பட்ட மயானம் மண் நிரப்பபட்டு சமதரையாக செப்பனிடப்பட்டுள்ளது.இறுதிக் கிரியைகளை வசதியாக மேற்கொள்ளவும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் இறுதி கிரியைகள் நடைபெறும் இடத்தில் நின்று கலந்து கொள்ளவும், வாகனங்கள் தரித்து நிற்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அடித்தளம் அமைக்கப்பட்டு100மீற்றர் நீளமுள்ள 3 அடி உயரமான கட்டுமானத்தின் மூலம் மயானம் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த காலத்தில் கட்டப்பட்ட கிணறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு பிரதான வீதியில் இருந்து மயானத்திற்கு கிழக்கே அமைந்துள்ள வேணண் அணைக்கட்டு வரையிலான 340 மீற்றர் வீதிக்கான அபிவிருத்தி பணிகள் பகுதி பகுதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.பிரதான வீதியில் இருந்து 40 மீற்றர் நீளம் உள்ள பாலாவோடை ஊரி வீதி  வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் செப்பனிடப்பட்டுள்ளது.வரவேற்பு வளைவில் இருந்து பிரதான வீதிப் பக்கமாக 65 மீற்றர் நீளமுள்ள பகுதியை அபிவிருத்தி செய்வதற்கு கௌரவ கல்வி ராஜாங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரன் அவர்களால் கம்பெரெலிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2 மில்லியன் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளது.65 மீற்றர் வீதிப் பகுதி 22அடி அகலம் உடையதாக 2 அடி உயரத்தப்பட்டு இரு கரைகளுக்கும் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு செப்பனிடும் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

மீதமுள்ள வேணண் அணைக்கட்டு வரையிலான 235 மீற்றர் வீதியும் 22 அடி அகலம் உடையதாக 2 அடி உயர்த்தப்பட்டு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டடு மழைகாலத்தில் மழைநீர் இரு பக்கமும் போய் வரக் கூடியவாறு இரண்டு மதகுகள் அமைத்து செப்பனிடுவதற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

22 அடி அகலமாக அபிவிருத்தி செய்யப்படவுள்ள இவ் வீதியில் எதிர்காலத்தில் இரண்டு வாகனங்கள் எதிர் எதிர் திசையில் இலகுவாக பயணிக்கமுடியும்.கடந்த ஆண்டு மழைக்காலத்தில் இறுதி கிரியைகளுக்கு தில்லைச் சுடலைக்கு செல்வதில் மக்கள் பாரிய இன்னல்களை எதிர் நோக்கி இருந்தனர்.தில்லை மயான அபிவிருத்திக்கு அனைத்து தரப்புக்களிலும் இருந்து உதவிகள் கிட்டியமையால் தில்லை மயானம் வசதி மிக்க மயானமாக மாற்றம் பெற்றுள்ளது.