யாழ்ற்ரன் கல்லூரியில் சரஸ்வதிசிலை திறப்புவிழா வைபவம்

யாழ்ற்ரன் கல்லூரியில் முன்னால் உள்ள பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்ட சரஸ்வதி சிலை கல்லூரியின் பழைய மாணவரும் சிலையை ஸ்தாபிப்பதற்கு தனது முழுமையான பங்களிப்பைச் செய்தவருமான சுவிஸ்நாதன் என்று எல்லோராலும் அழைக்கப்படும் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களால் 28.07.2014 மு.ப 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.

அவருடன் யாழ்மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரும் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சுவிஸ்நாதன் அவர்களால் கல்லூரி நுழைவாயிலில் அமைக்கப்படவிருக்கும் அலங்காரவளைவிற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது. இதற்கு முன்னதாக விருந்தினர்கள் கல்லூரியின் மாணவதலைவர்கள் ,கல்லூரியின் பான்ட் இசைக்குழு ஆகியோரால் மணற்காட்டு அம்மன் கோயிலில் நடந்த விசேட பூசையைத் தொடர்ந்து கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டனர்.

இறுதியாக கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி அதிபர் தனது தலைமை உரையில் கல்லூரியின் பழைய மாணவரும் அன்புக்கும் மதிப்பிற்கும் உரிய சுவிஸ்நாதன் அவர்கள் கல்லூரி அன்னைக்கு ஆற்றிவரும் சேவையை மனதாரப் பாராட்டினார்.

அவரின் குறிப்பிடத்தக்க சேவைகளான கணினிஆய்வு கூடத்தின் அபிவிருத்தி வேலைகள் ஏழைமாணவருக்கான புலமைப்பரிசில் திட்டம் ஆகியவற்றைக் கோடிட்டுக் காட்டி அன்னை சரஸ்வதிக்கு சிலை அமைத்தமைக்கும் அதிபர் தனது உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

கல்லூரியின் நுழைவாயிலில் அலங்கார வளைவு அமைப்பதற்கும் அதிபர் தனது நன்றி உரையில் குறிப்பிட்டார்.
இதனைக் கௌரவிக்கும் முகமாக கல்லூரி அதிபர் அவர்கள், சுவிஸ் நாதன் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் கல்லூரியுடன் தொடர்புகளை மேற்கொண்டு இச்சேவைகளை வழங்கி உதவி அளிக்கும் பிரதேச சபை உறுப்பினர் திரு. பாலச்சந்திரன் அவர்களையும், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் அவர்களையும் அதிபர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

சிறப்பு விருந்தினர் பிராந்திய பொலிஸ்மா அதிபர், பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் திரு.சிற்சபேசன் ,கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பு.ஸ்ரீவிக்னேஸ்வரன் ,பிரதேச சபை உறுப்பினர் திரு. பாலச்சந்திரன் ஆகியோரின் உரைகளுடன் விழா இனிதே நிறைவேறியது.