காரை வசந்தம் 2018 மலரில் வெளிவந்த நூலக நிறுவனத்தின் ஆக்கம். “காரைநகரின் வரலாற்றுச் சுவடுகளைக் காலத்தால் அழியாமல் பாதுகாக்கும் நூலக நிறுவனத்தின் அரிய பணிகள்”

காரைநகரின் வரலாற்றுச் சுவடுகளைக் காலத்தால் அழியாமல் பாதுகாக்கும் நூலக நிறுவனத்தின் அரிய பணிகள்
                                                                                     நூலக நிறுவனம் – செப்ரம்பர் 2018

புலம்பெயர்ந்து வாழும் சூழலிலும் எமது பூர்வீக ஊருடனான தொடர்பு நெருக்கமானது. நெடுங்காலம் அங்கு இருந்துவிட்டுப் பின்பு போர்ச் சூழலினால் குடிபெயர்ந்தவர்களாக இருக்கலாம். அல்லது இங்கு பிறந்து, எமது ஊரைப் பெற்றோர்கள், மூத்தோர்கள் வாயிலாகக் கேட்டறிந்தவர்களாக இருக்கலாம். எப்படியிருப்பினும், எமது ஊரானது எமது குடும்பத்தின் சுற்றத்தின் உறவுகளின் பூர்வீக தொடர்புகள், வேர்கள், அடையாளங்கள், பண்பாடுகள், பல்வேறுவகைப்பட்ட அறிவுகள் என்பனவற்றைக்கொண்டு எம்மோடு நெருங்கிய ஒன்றாகும்.

ஊர் என்று கூறும்போது அது வெறும் நிலத்தினை மட்டும் குறிப்பதில்லை. எமது ஊரில் நாம் உரித்துப் (belong) பெறுகிறோம். அது நினைவுகள், உணர்வுகள், எண்ணங்கள் போன்றவற்றாலான ஒரு சமூக-மன வெளி (social and mental space). சாதிய சமய வேறுபாடுகளை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உடைத்து ஊர் என்கின்ற அடிப்படையில் நாம் ஒன்றாக இணையமுடிகிறது. ஊர் ஒன்றியங்கள், ஊர்ச் சந்திப்புக்கள், கலை நிகழ்வுகள், சமூகப் பணிகள் போன்றவற்றின் ஊடாக நாம் ஊரோடு மீண்டும் இணையக்கூடியதாக உள்ளது.

ஒரு ஊரின் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்கு அந்த ஊர் பற்றிய நிலப்படங்கள் (maps), புள்ளிவிபரங்கள் (statistics), எழுத்தாவணங்கள் (textual documents), வாய்மொழி வரலாறுகள் (oral histories), ஒளிப்படங்கள் (photographs), ஒலி காணொளி (audio video) உட்பட்ட பல்லூடக ஆவணப் பதிவுகள் ஆகியன அவசியம். ஈழத்தின் பெரும்பாலான ஊர்களுக்கு இத்தகைய ஆவணப்பதிவுகள் இல்லை. ஈழத்தின் பெரும்பாலான ஊர்களில் நூலகங்கள், ஆவணகங்கள் (archives),அருங்காட்சியகங்கள் (museums) இல்லை.

வளங்கள் நிறைந்த காரைநகர் சற்று விதிவிலக்கானது. காரைநகர் தொடர்பான கணிசமான ஆவணப்பதிவுகள் உண்டு. சுவடிகள் தொடக்கம் வலைத்தளங்கள் வரை காரைநகரின் பல கூறுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நூலக நிறுவனத்தின் எண்ணிம நூலகத்திலும் (noolaham.org) பல்லூடக ஆவணகத்திலும் (aavanaham.org) காரைநகர் தொடர்பான பல்வேறு வளங்கள் கிடைக்கின்றன. இவற்றுள் நூல்கள், இதழ்கள், சுவடிகள், ஆளுமைகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்கள், ஒளிப்படங்கள், வாய்மொழி வரலாறுகள் போன்றன அடங்குகின்றன.

எடுத்துக்காட்டுக்கு காரைநகர் மான்மியம், காரைநகர் சைவ மகா சபை பொன்விழா மலர்(1967), விஷ்ணு புத்திரர் வெடியரசன் வரலாறு போன்ற நூல்கள், காரைநகர் கோயில்கள், பாடசாலைகள் வெளியிட்ட சில நூல்கள் போன்றவை எண்ணிம நூலகத்தில் உள்ளன.

முருகேசையர், கார்த்திகேயப்புலவர், ச. அருணாசலம் உட்பட்ட பல ஆளுமைகளைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுகள், காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலை, காரைநகர் வர்தாக் கல்விக் கூடம், காரைநகர் சிவன் கோயில் உட்பட்ட பல அமைப்புக்கள் பற்றிய விபரங்களையும் எண்ணிம நூலகத்தில் தற்போது காணமுடியும்.

2018 இன் தொடக்கப் பகுதியில் சுவடிகள் ஆவணப்படுத்தல் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக காரைநகரில் சில களப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. ஏட்டுச் சுவடிகளைத் தேடிச் சென்ற நூலகக் குழுவினர் காரைநகரில் ஏட்டுச் சுவடிகளுடன் நின்று விடாது மேலும் சில பணிகளையும் முன்னெடுத்தனர். அவ்வகையில் சுமார் 5 மணிநேர வாய்மொழி வரலாறுகள் பதிவு செய்யப்பட்டன. சுமார் 50 புகைப்படங்கள் மூலம் காரைநகரது தரைத்தோற்றங்கள், கோவில்கள் சில பதிவு செய்யப்பட்டன. காரைநகரைச் சேர்ந்த மறைந்த சிலரது கல்வெட்டு நூல்களும் ஆவணப்படுத்தப்பட்டன. காரைநகரின் அரும்பொருட் சேகரிப்பாளர் கந்தப்பு நடராசாவின் வாய்மொழி வரலாறு பதிவு செய்யப்பட்டதுடன் அவரது அரும்பொருட் சேகரிப்பின் ஒருபகுதி புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகர் தொடர்பான மேற்குறிப்பிடப்பட்ட ஆவணப்பதிவுகள் எமக்கு முன் இருக்கும் பணியின் மிகச் சிறு பகுதியே. 2013 காலப் பகுதியில் காரைநகரைச் சார்ந்த ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் விரிவான கள ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் செயற்திட்டங்களுக்கு திட்டமிட்டனர். இந்தச் செயற்திட்டத்தில் இளம் ஆய்வாளர்களையும் மாணவர்களையும் ஈடுபடுத்துவதும் ஒரு நோக்கமாக இருந்தது. ஏற்கனவே நூல்களில் மலர்களில் வெளிவந்த தகவல்களைக் கடந்து, கள ஆய்வின் (field research) ஊடாக, பல்லூடக கள ஆவணப்படுத்தலின் (multimedia field documentation) ஊடாக தரவுகளை, தகவல்களை எண்ணிம வடிவில் தொகுத்து அணுக்கப்படுவது இந்தச் செயற்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.

அதில் பின்வரும் கூறுகளும் திட்டமிடப்பட்டன:
1) காரைநகர் சுவடிகளை எண்ணிமப்படுத்தி பாதுகாத்து அணுக்கப்படுத்தல் (குறிப்பாக வைத்தீஸ்வர குருக்களின் சேகரிப்புக்கள்).
2) கள ஆய்வின் ஊடாக காரைநகரின் சூழலியல், உயிரினங்கள், புவியல் கூறுகளை ஆவணப்படுத்தல்.
3) கள ஆய்வின் ஊடாக காரைநகரின் இடப்பெயர்கள், நில உரிமைப் பெயர்கள், வரலாற்றுக் கூறுகளை ஆவணப்படுத்தல்.
4) கள ஆய்வின் ஊடாக காரைநகரின் தனித்துவ பேச்சுமொழிகள், நாட்டுப்புறவியல், நாடகம் அல்லது கூத்து, இசை போன்ற விடயங்களை ஆவணப்படுத்தல்.
5) மரபாய்வுகள் (genealogy) இனவரைவியல் (ethnographic) ஆய்வுகளை முன்னெடுத்தல்.
6) காரைநகர் மக்கள் தொகையியல், உட்கட்டமைப்பு, சமூகத் தேவைகள் தொடர்பான துல்லிய புள்ளிவிபர ஆய்வுகளை முன்னெடுத்தல்.
7) காரைநகரின் கணித மற்றும் வானியல் மரபுடைமை (குறிப்பாக பேராசிரியர் அலன் ஆபிரகாம் அம்பலவாணர் ஆகியோரின் பங்களிப்புக்கள்) என்பவற்றை ஆவணப்படுத்தல்.

பல ஆக்கபூர்வமான திட்டக் கூறுகளைக் கொண்ட இந்த முன்னெடுப்பு இதுவரை நிறைவேற்றப்படவில்லை. மேற்சுட்டப்பட்ட விடயங்கள் உள்ளடக்கியதாக நூலக நிறுவனம் கள ஆய்வு அடிப்படையிலான ஊர் ஆவணப்படுத்தல் தொடர்பான சட்டகம் ஒன்றை உருவாக்கி வருகிறது. அதனைப் பற்றி மேலும் இங்கு அறியலாம்: https://github.com/noolahamfoundation/village-documentation. இந்த சட்டகத்தின் நோக்கம் நீண்டகாலம் பயன்படக்கூடிய வகையில் எண்ணிம வளங்களை உருவாக்கி பாதுகாத்துப் பகிர்வது ஆகும்.

தரவு அறிவியலால் நெறிப்படுத்தப்படும் இன்றைய உலகுக்கு நம்மை தயார் செய்து கொள்ள எமது ஊர்களைப் பற்றிய பல்வேறு தரவுகளை துல்லியமாக ஆவணப்படுத்தி தொகுத்துப் பகிர்ந்து பயன்படுத்துவது அவசியமாகும். இருபது தலைமுறைகளுக்கு மேல் தம்மை ஆவணப்படுத்தி வைத்திருக்கும் காரைநகர் மக்கள் இத் துறையில் ஒரு சிறந்த முன்னோடியாக, எடுத்துக்காட்டாக தொடர்ந்து விளங்க முடியும்.