கனேடிய மண்ணில் காரை மாதாவை குளிர்வித்து கரை புரண்டோடிய காரை வசந்தம் – 2018

கனேடிய மண்ணில் காரை மாதாவை குளிர்வித்து கரை புரண்டோடிய

காரை வசந்தம் – 2018

கனடா காரை கலாச்சார மன்றம் நடாத்திய 19வது ஆண்டு விழாவும்,  காரை வசந்தம் 18வது கலை விழாவும் வெகு சிறப்பாக  தமிழ் இசைக்கலாமன்ற  மண்டபத்தில் நடைபெற்றது.   400 இற்கும் அதிகமான காரை உறவுகள்   கலந்து உறவு கொண்டாடி  மண்ணின் பெருமையை  கனேடிய மண்ணில் நிலைநிறுத்தினர்.  ஈழத்து தமிழ் இலக்கியத்திற்கு  பெரும்புகழ் சேர்த்த, காரைநகரின் அரும்பெரும்புலவராக   கருதப்படும் கார்த்திகேசப் புலவருடைய 120 வது நினைவு நாளில் காரைவசந்தம் இடம்பெற்றது சிறப்பிற்க்குரியதாக  அமைந்திருந்தது.  பிரம்மஸ்ரீ  கார்த்திகேசுப் புலவரின் ஞாபகார்த்த  அரங்காக காரை வசந்தம் 2018 தமிழிசைக்  கலா மன்றத்தை அலங்கரித்தது.

வழமை போன்று  மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து  தமிழ்த்தாய்   வாழ்த்து , கனேடிய தேசிய கீதம் ,  காரை மன்ற கீதம் போன்றன  மாணவிகளால் இசைக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மரணித்த மக்கள் எல்லோருக்குமாக இரண்டு  நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.  மன்றத்தின் அடுத்த கட்ட நகர்வாக ஏற்கத் துணியும் இளம் தலை முறையின் முன்னோடியாக திகழ்கின்ற திரு. கோகுலன் ,  செல்வி.சகானா  குணரட்ணம் அவர்களும் இணைந்து நிகழ்ச்சிகளை  தொகுத்தளித்து  விழாவை அலங்கரித்தனர்.

வரவேற்புரையை தொடர்ந்து ” கணேஷ துதி” என்கின்ற நாட்டிய சமர்ப்பணம் முதலில் சமர்ப்பணமாகி நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.   அதனைத்தொடர்ந்து “சங்கத் தமிழ்” என்ற வரவேற்பு நடனம் நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியது.  .  கர்நாடக  இசைப்பாடல்களை  தொடர்ந்து “முருகன் கூத்துவம்” என்ற  நடன நிகழ்வும் கலை  ரசிகர்களை கலை உலகுக்கு இழுத்துச் சென்றது.

இதனை தொடர்ந்து மன்றத் தலைவரின்  காரைவசந்தம்  சிறப்புரை இடம்பெற்றது.  தலைவர்  தனதுரையில் கடந்த கால காரை  நிகழ்ச்சிகள் யாவும் வெற்றிகரமாக நடைபெற்றதாகவும்,   இதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற  பணம் வங்கியில் நிரந்தர வைப்பில் இடப்படுவதாகவும் குறிப்பிட்டார்.  நிரந்தர வைப்பிற்கான  வட்டிப்பணம்   வறுமைக் கோட்டிற்கு  கீழ் உள்ள மக்களுக்கான  வாழ்வாதார உதவிகளுக்கு பயன் படுவதாகவும் குறிப்பிட்டார்.  அத்துடன் உதவிகள் யாவும் காரை அபிவிருத்தி சபையூடாக மட்டுமே  மேற் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.  மேலும் தனதுரையில் உயர்கல்விக்கான உதவி,  ஐனாதிபதி  நடமாடும்  சேவைக்கான  மரம் நடுகை உதவி,   வீடமைப்பு  உதவி,  அடுத்த  தலைமுறையினரின் ஊருக்கான   தெளிவற்ற நிலைப்பாடு என்பவற்றையும்  விபரித்தார்.  ஆகையால் எல்லோருக்கும் பொதுவான   காரைமன்றத்தோடு   சேர்ந்து ஒற்றுமையாக செயற்படுமாறு கேட்டுக்கொண்டார்.

காரைவசந்தம் 2018  பிரதம விருந்தினராக   கலந்து கொண்ட பாராளமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி அவர்கள் இங்குள்ள மக்கள் பல விதமான சேவைகளை புரிவதாகவும்,  தங்கள் ஊரின்  அடிப்படை தேவைகளை  பூர்த்தி செய்ய உதவுவதையும் ,  அதற்கான  முறையான வழிமுறைகளை  பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.  அத்துடன்  பல்கலாச்சார கனேடிய மண்ணில் உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து,  கனேடிய  தேசத்தை  கட்டியெழுப்ப பாடுபடுமாறும் இளைய சமூகத்தை வேண்டிக்கொண்டார்.

விழா  நிகழ்ச்சிகளின் இடைஇடையே  மொழித்திறன் போட்டிகளில் பங்குபற்றி முதலிடம் பெற்ற மாணவர்களின் பேச்சாற்றல்  வெளிக்கொண்டு வரப்பட்டது.  விழாவின் இன்னுமொரு சிறப்பம்சமாக காரைநகரில் இருந்து வருகை தந்திருந்த  கொடை வள்ளலும் , சமூக சேவையாளருமான   திரு. சண்முகம் சிவஞானம்  தம்பதிகள் கலந்து  கொண்டு விழாவை மேலும் மெருகூட்டினர்.

விழாவின் சிறப்பம்சமாக மாணவ,  மாணவிகளின் “தமிழர் வாழ்வெல்லாம் இசையே” என்கின்ற நாடகம் மேடையேற்றப்பட்டு உறவுகளை மனதார மகிழ்வித்தது.  இடைவேளையைத்  தொடர்ந்து  பொன்மாலைப் பொழுதை  மகிழ்விக்க ” நட்சத்திரா    இசைக்குழுவின்”   மெல்லிசை கானங்கள்  வசந்தத்தில் வீசியது.  இன்னிசை ராகங்கள் நிகழ்ச்சியின் இடைஇடையே  மொழித்திறன் போட்டிகளில்   வெற்றி பெற்ற  மாணவர்களுக்கான  சான்றிதழ்களும், வெற்றிக் கிண்ணங்களும்  வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.   நன்றி நவிலலுடன்   விழா நிகழ்வுகள்  இனிதே நிறைவு பெற்றன.  விழா நிறைவுவரை மக்கள் நிறைந்திருந்தது  நிகழ்ச்சிகளை  பார்த்து , ரசித்து   இன்புற்று  வீடு சென்றனர் .  காரை வசந்தம் 2018 பூமிப்பந்தில் உள்ள  காரை உறவுகள் அனைவரையும் மகிழ்வாக்கிய  வசந்தமாக வீசிச் சென்றுள்ளது  என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

 

நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்வையிட

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

 

https://photos.app.goo.gl/FZAmHEXNDTkExMxP7