கலாநிதி.தில்லைநாதன் சிவகுமாரன் அவர்களின் மறைவு குறித்து கனடா காரை கலாச்சார மன்றம் வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

 

                            கண்ணீர் அஞ்சலி


                             கலாநிதி. தில்லைநாதன் சிவகுமாரன்
       (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்)

தோற்றம்: 21.12.1936                                                                        மறைவு: 18.06.2018

கனடாவில் காரை மக்களை ஒன்றிணைத்த காரை கலாச்சார மன்றத்தின் ஆரம்பகால திட்டமிடல் போஷகர் சபை உறுப்பினராகத் திகழ்ந்தவர். மன்றத்தின் உறுப்பினராகவும், தொடர்ச்சியாக காரை நிகழ்வுகளில் பங்குகொண்டும் சிறப்பித்த பெருமகனார் ஆவார். காரை வசந்தம் மலருக்கு பயனுள்ள ஆக்கங்களும், ஆலோசனைகளும் வழங்கிய உத்தமர். காரை வசந்தம் கலை விழாவில் பிரதம மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து காரை மக்களை மகிழ்வித்த வள்ளல்.

கலாநிதி. தில்லைநாதன் சிவகுமாரன் அவர்கள் ஆழமான கல்விப்பின்புலமும், கண்ணியமான பாரம்பரியமும் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். 1963 ஆம் ஆண்டு கனேடிய மண்ணில் குடியேறிய முதல் காரைநகரான் என்ற பெருமதிப்புக்குரியவர். கனடா நாட்டில் உயர்கல்விகற்றதுடன், முதலாவது காரைமாதாவின் பல்கலைக்கழக மாணவனாக, விரிவுரையாளராக, இணைப்பேராசிரியராக, பேராசிரியராக சாதனை படைத்தவர். புகழ்பெற்ற மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் பல தசாப்தங்களாக நடாத்திய விரிவுரைகள் மூலம் ஆயிரக்கணக்கான இரசாயனவியல் துறைசார் விற்பன்னர்களை உருவாக்கிய தன்நிகரில்லாப் பேராசான்.

கனடாவில் அரைநூற்றண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தாலும், பிறந்த காரை மண் மீது தீராத காதல் கொண்டவர். ஊர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அன்போடு பழகிய பண்பாளன். ஈழத்து சிதம்பரத்து ஆண்டிகேணி ஐயனார் மீதும், கருங்காலி முருகப்பெருமான் மீதும் அயராத பக்தி கொண்டு வாழ்ந்தவர்.

ஆன்மீகத்தில் இணையில்லா நாட்டம் கொண்டு, அத்தகைய சிந்தனை கருத்துக்களை சுவைபட கூறும் வல்லமை படைத்தவர். நிலையில்லா இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான கல்விப் பெரும் செல்வம், தெய்வ நம்பிக்கை மற்றும் தியான வழிபாடு போன்றவற்றை வலியுறுத்தியவர்.

கலாநிதி. தில்லைநாதன் சிவகுமாரன் அவர்களின் மறைவினால் மீளாத் துயரத்தில் மூழ்கியிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்கள், நண்பர்கள், கல்விச்சமூகத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவடிகளை வணங்கி நிற்பதோடு, கனடா காரை கலாச்சார மன்றம் கண்ணீர் அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

ஓம் சாந்தி !

கனடா காரை கலாச்சார மன்றம்