சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் “தியாகத் திறன் வேள்வி 2018” மாணவர் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளுக்கான அறிவித்தலும், விண்ணப்பங்கள் கோரலும்.

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்

“தியாகத் திறன் வேள்வி 2018”

மாணவர் போட்டிகளுக்கான  புதிய விதிமுறைகளுக்கான

அறிவித்தலும், விண்ணப்பங்கள் கோரலும்.

 

சிவமயம்

 

குஞ்சி யழகுங் கொடுத்தானை கோட்டழகும்

மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு

-நாலடியார்

 

எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபை நிர்வாகத்தினர் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினருடன் இணைந்து 21.04.2018 சனிக்கிழமை 3.00மணிக்கு  காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. ப. விக்கினேஸ்வரன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு அமைய “தியாகத் திறன் வேள்வி -2018” போட்டிகள் இம்முறையும் விரிவாக்கம் பெற இருக்கிறது அந்தவகையில் கடந்த வருடங்களில் மூன்று பிரிவுகளாக நடாத்தப்பட்ட போட்டிகள் நான்கு பிரிவுகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

 

இம்முறை முத்தமிழின் மூன்றாம் எழிலாம் நாடகத்திறன் வளர்க்கும் போட்டியும் இரு பிரிவுகளாக பாடசாலை மட்டப்போட்டி, சமூக நிறுவனங்கள் ஊடான போட்டி என விரிவுபடுத்தப்பட்டுள்ளன.  மாணவர்களின்; போட்டிகளுக்கான சகல இணைப்பு சேவைகள் அனைத்தும் காரை அபிவிருத்திச் சபையினர் பணிபுரிவார்கள். பரீட்சைக்கான மண்டபம், நேர அட்டவணை என்பன வெகு விரைவில் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும் என்பதையும்  அறியத்தருகின்றோம்.

 

அமரர் ஆ.தியாகராசா அவர்களின் பணியை நினைவு கூறும் வகையிலும் சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் ஆள் உயர்வே ஊர் உயர்வு என்றும் மகிட வாசகத்துக்கும் இணங்கவும் மொழிக் கல்வி,

 

கலை மேம்பாட்டுச் சுவிஸ்குழுவினரின் ஒழுங்கமைப்பும் காரைநகர் அபிவிருத்திச் சபையின் தெரிவுக்குழுவினரும் சேர்ந்து வருடா வருடம் நடத்தி வரும் போட்டியாகும். இப்போட்டி மூலம் மாணவச் செல்வங்களின் ஆளுமைத்திறன், மொழித்திறன், கலைத்திறன் என்பவற்றை வளர்ப்பதற்கு ஏதுவாகும். போட்டிகளாவன (2018)

 

  1. பேச்சுப் போட்டி
  2. கட்டுரைப் போட்டி
  3. திருக்குறள் மனனப்போட்டி
  4. இசைப் போட்டி
  5. பொதுஅறிவு வினாடி வினாப்போட்டி
  6. நாடகப் போட்டி

 

போட்டிப் பிரிவுகளாவன

  1. ஆரம்பப் பிரிவு – தரம் – 3,4,5 மாணவர்கள்
  2. கீழ்ப் பிரிவு – தரம் – 6,7,8 மாணவர்கள்
  3. மத்திய பிரிவு – தரம் – 9,10,11 மாணவர்கள்
  4. மேற்ப் பிரிவு – தரம் – 12,13 மாணவர்கள்

 

 

போட்டிகளுக்கான பொது விதிகள்

  • காரைநகரை பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் எப்பாடசாலையில் கற்றாலும் இப்போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். தேவை ஏற்படின் ஊராளன் என்பதை ஏற்பாட்டாளருக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
  • விண்ணப்பிப்போர் காரைநகர் பாடசாலை மாணவராயின் பாடசாலை அதிபர் மூலம் விண்ணப்பிக்கலாம்.
  • ஏனைய மாணவர்கள் விண்ணப்பிப்பதாயின் விண்ணப்பத்தைப் பெற்று பூரணப்படுத்தி தாம் கற்கும் கல்லூரி அதிபரிடம் கற்கும் தரம் பற்றி உறுதிப்படுத்தி அனுப்ப வேண்டும்.
  • விண்ணப்பிப்போர் மென் பிரதியாயின் swisskarai2004@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கும் காகிதப் பிரதியாயின் பொருளாளர். காரைநகர் அபிவிருத்திச்சபை, தியாகத்திறன் வேள்வி 2018, மணற்காட்டு அம்மன் வீதி, காரைநகர். என்ற முகவரிக்கு06.01 ஆம் திகதி வெள்ளிக் கிழமைக்கு முன் அனுப்பி வைக்க வேண்டும்.
  • மாணவர் ஒருவர் மூன்று போட்டிகளில் மாத்திரம் பங்கு கொள்ளலாம். இசைப் போட்டியில் தனியும் குழுவும் ஒன்றாகக் கருதப்படும்.
  • போட்டிகளுக்கான காலம், நேர அட்டவணைகள் கல்லூரி அதிபர் ஊடாகவும் இணையத்தளத்தினூடாகவும் அறிவிக்கப்;படும்.
  • மாணவர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக சமூகமளிக்க வேண்டும்.
  • போட்டியாளர்கள் பாடசாலை சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது.
  • போட்டிகள் காரைநகர் இந்துக் கல்லூரி அல்லது காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் நடைபெறும்.
  • போட்டியில் அதிகூடிய புள்ளிகள் எடுக்கும் ஐவருக்கு முதல் ஐந்து பரிசு வழங்கப்படும்.
  • போடடிகளில் 75 புள்ளிகள் எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழும் பரிசு புத்தகமும் வழங்கி கௌரவிக்கப்படும்.
  • போட்டிகளில் அதிகூடிய புள்ளி 65க்கு குறைவாக எடுக்கும் மாணவர்கள் போட்டியினின்றும் புறந்தள்ளப்படுவார்கள்.
  • போட்டிகளில் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
  • போட்டிகள் யாவும் திருவுளச் சீட்டின் மூலம் பெற்ற தலைப்பில் பங்கு கொள்ளுதல் வேண்டும்.

 

 

போட்டிகளுக்கான சிறப்பு விதிகள்

பேச்சுப் போட்டிகள்

ஆரம்பப் பிரிவு, கீழ் பிரிவு மாணவர்களுக்குரிய பேச்சுக்கள் மூன்றும் சபையினரால் தயாரித்துக் கொடுக்கப்படும். அம்மூன்று பேச்சுக்களையும் மாணவர்கள் தயார் செய்து வைத்திருக்க வேண்டும்.

மத்திய பிரிவு மேற்பிரிவினருக்கும் மூன்று தலையங்கள் கொடுக்கப்படும் அம் மூன்றும் தலையங்களிலும் பேச தாமே தயார் செய்து பேச வேண்டும்.  பேச்சுத் தலைப்புக்கான அம்சங்கள் மாத்திரம் எமது சபையால் தரப்படும்.

பிறமொழிக் கலப்பு தவிர்க்கப்பட வேண்டும். குரல் ஏற்றத் தாழ்வுகள் முகபாவம் தெளிவான உச்சரிப்பு கருத்துச் செறிவு என்பவற்றில் கவனம் எடுக்கப்படும். மத்திய பிரிவினர் 5 – 6 நிமிடம் வரையும் மேற் பிரிவு 6 – 8 நிமிடம் வரையும் பேசலாம்.

தலைப்புகள்

1)   ஆரம்ப பிரிவு – (தரம் – 3,4,5)

  • அறம் செய விரும்பு
  • தமிழ் மொழி
  • கல்விச் செல்வம்

2)   கீழ் பிரிவு – (தரம் – 6,7,8)

  • உலகப் பொது மறையாம் திருக்குறள்
  • தாயன்பு
  • அறத்தின் பெருமை

3)   மத்திய பிரிவு – (தரம் – 9,10,11)

  • கம்ப இராமாயணக் காப்பியத் தலைவன் இராமபிரான்
  • ஒழுக்கம் விழுப்பம் தரும்
  • நாட்டார் பாடலில் அழகியல் அம்சங்கள்

4)   மேற் பிரிவு – (தரம் – 12,13)

  • கலை வளர்ச்சியில் காரைநகர் மக்களின் பங்கு
  • மகாபாரதத்தில் கர்ணன்
  • பாரதியாரின் கவிநயம்

 

 

 

கட்டுரைப் போட்டிகள்

ஆரம்பப் பிரிவு, கீழ் பிரிவு மாணவர்களுக்குரிய கட்டுரைகளுக்குரிய தலைப்பும் குறிப்பும் வழங்கப்படும். கொடுக்கப்படும் கட்டுரைகள் யாவும் கற்றுத் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். ஆரம்பப் பிரிவு மாணவர்கள் அறுபது சொற்களுக்கு குறையாமலும் கீழ் பிரிவு மாணவர்கள் 200 சொற்களுக்கு குறையாமலும் கட்டுரை அமைதல் வேண்டும். கட்டுரைகளுக்குரிய நேரம் 40 நிமிடங்களாகும்.

மத்திய பிரிவு மேற் பிரிவு மாணவர்களுக்கு கொடுக்கப்படும் தலையங்களுடன் குறிப்புகள் உசாத்துணை நூல்களும் கொடுக்கப்படும். இவற்றைக் கற்றுத் தயார் நிலையில் இருத்தல் வேண்டும். மத்திய பிரிவு மாணவர்கள் 300 சொற்களிலும் மேற் பிரிவு மாணவர்கள் 350 சொற்களிலும் அமைதல் வேண்டும். இரு பிரிவினருக்கும் உரிய நேரம் ஒரு மணித்தியாலமாகும்.

  1. ஆரம்ப பிரிவு – (தரம் – 3,4,5)
  • பெற்றோரைப் பேணுவோம்
  • எமது ஊர்
  • ஓடி விளையாடு பாப்பா
  1. கீழ் பிரிவு – (தரம் -6,7,8)
  • சிக்கனமும் சேமிப்பும்
  • வாசிப்பின் முக்கியத்துவம்
  • செய்தித்தாளின் பயன்கள்
  1. மத்திய பிரிவு – (தரம் – 9,10,11)
  • கலாநிதி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் பணிகள்
  • தமிழ்ப் பண்பாடு
  • வாசிப்பதனால் மனிதன் பூரணமாகின்றான்
  1. மேற் பிரிவு – (தரம் – 12,13)
  • காரை மாதா பெற்;றெடுத்த தமிழ் பெரியார்கள்
  • பேராசிரியர் கைலாசபதி அவர்களின் தமிழ்ப்பணி
  • வாழ்வு வளம் பெற இலக்கியம் அவசியம்

 

திருக்குறள் மனனப் போட்டி

 

திருக்குறள் போட்டியில் பங்கு பற்றும் மாணவர்கள் தம் பிரிவுக்குரிய திருக்குறள் அதிகாரங்களை மனனம் செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் தொகை அதிகரிக்கப்படின் எழுத்து மூலம் பரீட்சை நடத்தி தெரிவு செய்யப்பட்டு வாய்மொழியாகக் போட்டி நடத்தப்படும். கேட்கப்படும் குறள்களை முறையான உச்சரிப்போடு ஓதுதலும் நடுவர்களால் கேட்கப்படும் மூன்று குறள்களுக்கு பொருள் கூறுதலும் கேட்கப்படும் வினாக்களுக்கு பதில்; கூறுவதும்; வேண்டும். போட்டியில் அடங்கும் பிரிவு வாரியான திருக்குறள் அதிகாரங்கள்.

 

1) ஆரம்ப பிரிவு – (தரம் – 3,4,5)

  • கல்வி
  • ஒழுக்கமுடைமை

 

 

2)   கீழ் பிரிவு – (தரம் – 6,7,8)

  • நட்பு
  • அடக்கமுடைமை
  • வாய்மை

3)   மத்திய பிரிவு – (தரம் – 9,10,11)

  • பேதமை
  • இனியவை கூறல்
  • அறன் வலியுறுத்தல்

 

4) மேற் பிரிவு – (தரம் – 12,13)

  • பெரியோரை துணைக்கோடல்
  • தெரிந்து செயல் வகை
  • அமைச்சு
  • வினைத் தூய்மை

 

இசைப் போட்டி

இசைப் போட்டிகள் தனி இசை, குழு இசை என இரு வகையாகப் பங்கு பெறலாம். குழு இசை திறந்த போட்டியாகக் கருதப்படும்.

தனி இசை சுருதி, தாளம் ஆகிய கருவிகளுடன் பாடலாம். பாடலுக்கு புத்தாக்கமெட்டு எடுத்தும் பாடலாம். பாரதியார், பாரதிதாசன், சோமசுந்தரப் புலவர், நாட்டார் பாடல்கள் அமைகின்றன.

 

 

ஆரம்ப பிரிவு

1)   பாப்பா பாட்டு

  • ஓடி விளையாடு பாப்பா
  • சின்னஞ்சிறு குருவி
  • காலையெழுந்தவுடன்
  • பொய் சொல்லக் கூடாது
  • துன்பம் நெருங்கி

கீழ் பிரிவு

1)   ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

  • பார்ப் பானை ஐயர் என்ற
  • எங்கும் சுதந்திர மென்தே
  • உழவுக்கும் தொழிலுக்கும்
  • நாமிருக்கும் நாடு

 

 

மத்திய பிரிவு

1)   தமிழ்

  • யாமறிந்த மொழிகளிலே
  • யாமறிந்த புலவரிலே
  • பிறநாட்டு நல்லறிஞர்
  • உள்ளத்தில் உண்மையொளி

மேற் பிரிவு

1)   பாரததேச மென்று பெயர் சொல்லு

  • வெள்ளிப் பனி மலையில்
  • சிங்களத் தீவினுக்கோர்
  • சிந்து நதியின் மீசை நிலவினி
  • சாதி இரண்டொழிய வேறில்லை

 

குழு இசை

குழு இசையில் நான்கு பிரிவினர்களும் பங்கு பற்றலாம். குழுவில் ஆறிலிருந்து பன்னிருவர் வரையும் மேற் பிரிவு மாணவர்களாயின் மூன்றிலிருந்து எட்டு வரை பங்கு பற்றலாம். இசைக்குரிய பக்கவாத்தியங்கள் பயன்படுத்தலாம்.

 

ஆரம்ப பிரிவு

1)   நாட்டார் பாடல்

  • கண்ணாடி வளையல்
  • வாய்க்கால் வரம்புச் சாமி
  • களை யெடுக்க வந்தவங்க
  • களை யெடுத்த கட்டை எல்லாம்

 

 

கீழ் பிரிவு

  • தலைவாரி பூச்சூடி உன்னை

மத்திய பிரிவு

  • செந்தமிழ் மக்களே வாரீர்

மேற் பிரிவு

  • எங்கள் தமிழ் இனிமைத் தமிழ்

 

 

 

பொது அறிவு வினாடி வினாப் போட்டி

 

இப்போட்டியானது நான்கு பிரிவினர்களுக்கும் உரியதாகும். நான்கு பிரிவினருக்கும் பொது அறிவு சம்மந்தமாக எழுத்துப் பரீட்சை நடத்தப்படும். அதில் தேர்ந்தெடுக்கப்படுவோர் வினாடி வினாப் போட்டிக்கு உட்படுத்தப்படுவார். எமது ஊர் பற்றிய வினாக்கள் 40 அடக்கப்பட்டிருக்கும் ஏனைய பல துறையினதாக இருக்கும்.

 

ஆரம்ப பிரிவு

எழுத்துப் பரீட்சையின் போது ஐம்பது வினாக்களுக்கு 60 நிமிடத்தில் விடையளித்தல் வேண்டும்.

கீழ் பிரிவு

எழுத்துப் பரீட்சையின் போது 60 வினாக்களுக்கு 65 நிமிடத்தில் விடையளித்தல் வேண்டும்.

மத்திய, மேற் பிரிவு மாணவர்களுக்கு 100 வினாக்களுக்கு 90 நிமிடத்தில்  விடையளித்தல் வேண்டும்.

 

நாடகப்போட்டி

 

காரைநகரின் கலை மேம்பாட்டின் உயர்வுக்காக நாடகப் போட்டிகளையும் சென்ற ஆண்டில் (2017) இருந்து நடத்தி வருகின்றோம். இந்நாடகப் போட்டிக்கு அறக்கொடை அரசு சுவிஸ் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் அனுசரனையாளனாக விளங்குவதோடு தமது தந்தையார் கதிரவேலு சுப்பிரமணியம் அவர்களின் ஞபாகார்த்த சுழற்கேடயம் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

 

இவ்வாண்டு நாடகப் இரு பிரிவுகளாக நடத்தத் தீர்மானித்துள்ளோம்.

  1. பாடசாலை மட்டப்போட்டி
  2. சமூக நிறுவனங்கள் ஊடான போட்டி

 

பாடசாலை மட்ட நாடகப் போட்டிக்கான விதிகள்

 

  1. பாடசாலையில் கற்கும் மாணவர்கள் பாடசாலை அதிபர் பொறுப்பாசிரியர் ஊடாக விண்ணப்பித்து பங்கு கொள்ளலாம்.
  2. நாடகக் குழுவில் பங்குபற்றும் நடிகர்கள் ஏனையோரும் காரைநகரை பூர்வீகமாகக் கொண்ட மாணவர்களாக இருத்தல் வேண்டும்.
  3. நவீன நாடகம், வரலாற்று நாடகம், சமயம் சார்ந்த நாடகம், புராண நாடகம், பாட நூலில் வரும் நாடகம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்கலாம்.
  4. நாடகத்துக்குரிய நேரங்கள் 45 நிமிடத்திற்கும் 75 நிமிடத்திற்கும் இடையில் அமைய வேண்டும்.
  5. நாடகப் பிரதியும் நடிப்போரின் முழுமையான பெயர், முகவரி முதலியன அரங்கேற்கும் நாளிற்கு பத்து நாட்களுக்கு முன்னர் சபையினருக்கு அறியத் தரவும்.
  6. மற்றவர் மனம் துன்புறாத நிலையிலும் களங்கம் ஏற்படாத வகையிலும் கருப்பொருள், கதைவசனம் அமைதல் வேண்டும்.
  7. ஒரு பெண் பாத்திரம் உட்பட குறைந்தது ஐந்து கதாபாத்திரங்கள் இருத்தல் வேண்டும்.
  8. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதாகும்.

 

சமூக நிறுவனங்கள் ஊடான நாடகப் போட்டிற்கான விதிகள்

 

  1. கலைக் கழகங்கள், சனசமூக நிலையங்கள், கோயில் சார்ந்த நிறுவனங்கள், தொழிலாளர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், குறிச்சி வாரியான குழுக்கள் ஆகியன போட்டிக்கு விண்ணப்பித்து போட்டியிட முடியும்.
  2. நாடகத்துக்குரிய நேர எல்லை 75 நிமிடத்திற்கும் 120 நிமிடத்திற்கும் இடையில் இருத்தல் வேண்டும்.
  3. ஏனைய விடயங்கள் யாவும் பாடசாலை மாணவர்களுக்கான போட்டி விதிகளில் குறிக்கப்பட்டுள்ளன.
  4. இரு நாடகப் போட்டியாளர்களும் காரைநகர் அபிவிருத்திச் சபையினரிடமிருந்து விண்ணப்ப படிவங்கள் பெற்றுப் பூரணப்படுத்தி 30.06.2018 திகதிக்கு முன்னதாக சபைக்கு அனுப்பி வைக்கவும்.
  5. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானதாகும்.

 

  1. மேலதிக விளக்கம் ஏற்படின் 0777242988 என்னும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்க.

 

 

இசைப் போட்டிக்கான பாடல்கள்

 

ஆரம்ப பிரிவு

 

1) பாப்பா பாட்டு

 

  1. ஓடி விளையாடு பாப்பா, – நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,

கூடி விளையாடு பாப்பா, – ஒரு

குழந்தையை வையாதே பாப்பா.

 

  1. சின்னஞ் சிறுகுருவி போலே – நீ

திரிந்து பறந்துவா பாப்பா,

வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா.

 

  1. காலை யெழுந்தவுடன் படிப்பு – பின்பு

கனிவு கொடுக்கும்நல்ல பாட்டு

மாலை முழுவதும் விளையாட்டு – என்று

வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா.

 

  1. பொய் சொல்லக் கூடாது பாப்பா – என்றும்

புறஞ்சொல்ல லாகாது பாப்பா,

தெய்வ நமக்குத்துணை பாப்பா – ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா.

 

  1. துன்பம் நெருங்கிவந்த போதும் – நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா,

அன்பு மிகுந்ததெய்வ முண்டு – துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா.

 

கீழ் பிரிவு

 

  • ஆடுவோம் பள்ளுப் பாடுவோமே

 

சுதந்திரப் பள்ளு

பள்ளர் களியாட்டம்

ராகம் – வராளி                  தாளம் – ஆதி

 

பல்லவி

ஆடுவோமே-பள்ளுப் பாடுவோமே;

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று

(ஆடுவோமே)

சரணங்கள்

  1. பார்ப்பானை ஐயரென்ற காலமும்போச்சே-வெள்ளைப்

பரங்கியைத் துரையென்ற காலமும்போச்சே-பிச்சை

ஏற்பாரைப் பணிகின்ற காலமும்போச்சே-நம்மை

ஏய்ப்போருக் கேவல் செய்யுங் காலமும்போச்சே.

(ஆடுவோமே)

  1. எங்கும் சுதந்திர மென்பதேபேச்சு-நாம்

எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு

சங்குகொண் டேவெற்றி யூதுவோமே-இதைத்

தரணிக்கெல் லாமெடுத் தோது வோமே.

(ஆடுவோமே)

  1. உழவுக்குந் தொழிலுக்கும் வந்தனைசெய்வோம்-வீணில்

உண்டுகளித் திருப்போரை நிந்தனைசெய்வோம்

விழலுக்கு நீர்பாய்ச்சி மாயமாட்டோம்-வெறும்

வீணருக் குழைத்துடலம் ஓயமாட்டோம்.

(ஆடுவோமே)

  1. நாமிருக்கு நாடுநம தென்பதறிந்தோம்-இது

நமக்கே யுரிமையா மென்பதறிந்தோம்-இந்தப்

ப10மியி லெவர்க்குமினி அடிமைசெய்யோம்-பரி

பூரணனுக் கேயடிமை செய்துவாழ்வோம்.

(ஆடுவோமே)

 

மத்திய பிரிவு

1) தமிழ்

  1. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவ தெங்கும் காணோம்,

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்வீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

 

  1. யாமறிந்த புலவரிலே கம்;பனைப்போல்

வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை,

உண்மைää வெறும் புகழ்ச்சியில்லை!

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!

 

  1. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;;;

மறைவாக நமக்குள்ளே பழக்கதைகள்

சொல்வதிலோர் மகிமை யில்லை;;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

 

  1. உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்

வாக்கினிலே ஒளியுண்டாகும்;;;

வெள்ளத்தின் பெருக்கைப்போற் கலைப்பெருக்கும்

கவிப்பெருக்கும் மேவு மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருடரெலாம்

விழிப்பெற்றுப் பதவி கொள்வார்;;

தௌ;ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

இங்கமரர் சிறப்புக் கண்டார்.

 

மேற் பிரிவு

 

1) பாரததேச மென்று பெயர் சொல்லு

பாரத தேசம்

 

ராகம் – புன்னாகவராளி

 

பல்லவி

பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்-மிடிப்

பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்.

 

சரணங்கள்

 

  1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்-அடி

மேலைக் கடல்முழுதுங் கப்பல்விடுவோம்

பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்கு வோம் எங்கள்

பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

 

  1. சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம்

வங்கத்தி லோடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளிற் பயிர்செய்குவோம்.

 

  1. சிந்து நதியின்மிசை நிலவினிலே

சேரநன் னாட்டிளம் பெண்களுடன்

சுந்தர தெலுங்கினிற் பாட்டிசைத்துத்

தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம்.

 

  1. சாதி இரண்டொழிய வேறில்லையென்றே

தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்

நீதி நெறியினின்று பிறர்க்குதவும்

நேர்மையர் மேலவர் கீழவர்மற்றோர்.

 

குழு இசை

 

ஆரம்ப பிரிவு

 

  • நாட்டார் பாடல்

 

  1. கண்ணாடி வளையல் போட்டு

களையெடுக்க வந்த புள்ள

கண்ணாடி மின்னல் இட

களை யெடுப்புப் பிந்துதடி

 

  1. வாய்க் கால் வரம்புச் சாமி

வயல் காட்டுப் பொன்னுச் சாமி

களை யெடுக்கும் பெண்களுக்கு

காவலுக்கு வந்த சாமி

 

  1. களை யெடுக்க வந்தவங்க

கதை கதையாய் பேசிநின்டால்

களை யெடுத்து முடிக்கேலா

கதைய விட்டுக் களைபிடுங்க

 

  1. களையெடுத்த கட்டை யெல்லாம்

சிக்காராய் கட்டி யாச்சு

தூக்கி விடு நேரமாச்சு

சீக்கிரமாய் வீடு போவோம்.

 

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்

         சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

      மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

21 – 05 – 2018