கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபைக் கூட்டம் மன்ற வரலாற்றில் நீண்ட காலத்திற்கு பின் ஏற்பட்ட வரலாற்றுப் பதிவான தீர்மானங்கள்

காரைநகரில் கல்வி வளர்ச்சி, மற்றும் மனிதநேய உதவிக்காக 24 இலட்சம் ரூபாய்கள்

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபைக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக் கிழமை(27.04.2014) அன்று மாலை 3:00 மணிக்கு ஸ்காபுரோ Sun City Plaza  இல் அமைந்துள்ள நடன வகுப்பறை மண்டபத்தில் மன்றத் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

உப-தலைவர், செயலாளார், பொருளாளர், உப-பொருளாளர் உட்பட்ட 15 நிர்வாக சபை உறுப்பினர் கலந்து கொண்ட இக்கூட்டத்தினை திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் கடவுள் வணக்கத்துடன் தொடக்கி வைத்தார்.

இக்கூட்டத்தில் மன்ற நிர்வாக நடைமுறைகள், தமிழ், சமய, பிரெஞ்ச், யோகா வகுப்புகள், மன்றத்தின் வரிப்பத்திரம் அரச வருமான வரித்திணைக்களத்தில் சமர்ப்பித்தல், மன்றத்தின் அரச பதிவினைப் புதுப்பித்தல் மற்றும் காரைநகரில் கல்வி வளர்ச்சி, மனிதநேயத்திற்கான உதவி உள்ளிட்ட ஆக்கபூர்வமான பல விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஆராயப்பட்டிருந்தன.

மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்த விவாதங்களின் பின்னர் மன்ற வரலாற்றில் நீண்ட காலத்தின் பின் ஏற்பட்ட ஒரு திருப்புமுனையாக அமைந்த பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரங்கள் பின்வருமாறு:

1) வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட செல்வராசா நிலாமதியின் காது கேட்பதற்கான சிகிச்சைக்கான நிதியுதவியாக இதுவரை 1,535 கனடிய டொலர்கள் மற்றும் 400 அமெரிக்க டொலர்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் மே 15 வரை சேகரிக்கப்படும் நிதியுடன் அமரர். செல்வி.எஸ்.சிறி நினைவாக மன்றத்தின் பங்களிப்பாக 100 டொலர்களும் மற்றும் அமரர்.பொன். பஞ்சாட்சரக் குருக்கள்; நினைவாக மன்றத்தின் பங்களிப்பாக 100 டொலர்களும் சேர்த்து அனுப்பி வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


2) காரை அபிவிருத்தி சபையினால் நடத்தப்படும் தரம் 5 புலமைப்பரிசில்  கருத்தரங்கிற்கு ரூ109, 000 நிதி ஒதுக்கப்பட்டது.


3) திரு.தம்பையா அம்பிகைபாகன் (கொழும்பு வலய முன்னாள் ஆசிரிய ஆலோசகர்) அவர்களினால் நடத்தப்படும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக் கருத்தரங்கிற்கு ரூ 43,150 ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.


4) காரைநகர் பிரதேச மருத்துவ மனைக்குத் தேவையான 5 நோயாளர் படுக்கைகள் (Bed with mattress Stainless Steel)கொள்வனவுக்கான நிதியுதவியாக ரூ150,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.


5) வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை(சடையாளி) பாடசாலை கணனி அறிவை விருத்தி செய்தல் ரூ68,000 ரூபாவும் ஆங்கில அறிவை விருத்தி செய்தலுக்கு ரூ30,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டது.


6) வியாவில் சைவ வித்தியாலயம் பிரதி எடுக்கும் இயந்திரம் (Photo Copier) கொள்வனவுக்கான நிதியுதவியாக ரூ 56,000 ரூபா ஒதுக்கப்பட்டது.


7) யா-ஊரி அ.மி.த.க பாடசாலைக்கு பொருளாதாரத்தில் பின் தங்கிய கற்றலில் இடர்படும் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டத்திற்காக ரூ214,810 ரூபா ஒதுக்கப்பட்டது.


8) பாலாவோடை இந்து தமிழ்க் கலவன் பாடசாலை ஆங்கில பாட விருத்திக்கான உதவியாக ரூ40,000 ரூபா ஒதுக்கப்பட்டது.


9) தொடக்கப் பாடசாலைகள் ஐந்தின் கற்றல் உபகரணம் (Pin Boards) கொள்வனவிற்காக ரூ60,000 ரூபா ஒதுக்கப்பட்டது.


10) யாழ்ற்றன் கல்லூரி ஆங்கில பாட விருத்திக்கான உதவியாக ரூ200,000 ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


11) கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பல்லூடக அறையை மேம்படுத்தலும், தகவல் தொழில் நுட்பக் கல்வியை அபிவிருத்தி செய்தலுக்குமான திட்டத்திற்கு ரூ13,60,000 ரூபாவிற்கு உள்ளான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.   
 
மேற்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் எழுத்தில் பதிவு செய்து ஆவணப்படுத்தப்பட்டதுடன் தீர்மானத்தை உறுதிப்படுத்தி நிர்வாக சபை உறுப்பினர் ஒவ்வொருவரினதும் கையொப்பமும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

இத்தீர்மானங்கள் மிக விரைவில் நிர்வாக சபையினால் காரை அபிவிருத்தி சபைக்கு ஊடாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டங்கள் அமுல் படுத்தப்படும் பட்சத்தில் காரைநகரில் கல்வித்தர மேம்பாட்டிலும் மனிதநேய உதவிகளிலும் கணசமான பங்கினை வகித்த பெருமை கனடா-காரை கலாச்சார மன்றத்திற்கு உண்டு என்பதோடு கனடா வாழ் காரைநகர் மக்களின் நம்பிக்கையையும் பெற்று மன்றம் வளர்ச்சிப் பாதையில் முன்நோக்கி நகரும் என்பதில் ஐயமில்லை.