காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 08/02/2014 அன்று பி.ப. 1.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமானது.

பிரதம விருந்தினராக தீவக வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. இ.குணநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கல்விக் காருண்யன் திரு.E.ளS.P. நாகரத்தினம் அவர்களும், கௌரவ விருந்தினராக சுன்னாகம் தேசிய சேமிப்பு வங்கி அதிகாரம் அளிக்கப்பட்ட உத்தியோகத்தர் திரு. க. சிவகுமார் அவர்களும், கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் ஆகியோர் சகிதம், கல்லூரிக் கொடியை ஏந்திய மாணவத் தலைவர் அணியினாலும், கல்லூரியின் BAND இசைக்குழுவினராலும் கல்லூரி முன்றலிலிருந்து விளையாட்டு மைதானம் வரை அழைத்து வரப்படும் காட்சி மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தது.

 மங்கள விளக்கேற்றல், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இல்ல விளையாட்டுப் போட்டி பிற்பகல் 5.30 மணிக்கு இனிதே நிறைவேறியது. இடைவேளையின் போது நடைபெற்ற மாணவர்களின் உடற்பயிற்சிக் கண்காட்சி பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. இறுதியாக அதிபர், விருந்தினர்கள் உரை நடைபெற்றது. அதிபர் தனது உரையில் மாணவர்களின் கல்விமட்டம் மிகவும் சிறப்பாக முன்னேறி வரும் அதேவேளை மாணவர்கள் விளையாட்டிலும் இன்னும் முன்னேற வேண்டி இருப்பதை எடுத்துக்கூறினார்.

 பிரதம விருந்தினர் தனது உரையில் விளையாட்டுப் போட்டிகள் நன்கு திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்டு நடைப்பெற்றதாகவும் கல்லூரியின் BAND இசைக்குழு தேசிய பாடசாலையின் BAND இசைக்குழுவின் செயற்பாடுகளை ஒத்திருந்ததாகவும் வெகுவாகப் பாராட்டினார். சிறப்பு விருந்தினர் தனது உரையில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பெற்றோர் அதீத அக்கறை காட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கௌரவ விருந்தினர் தனது உரையில் கல்லூரியின் முன்னேற்றத்தினை வெகுவாகப் பாராட்டினார். கல்லூரியின் பல பழைய, மூத்த மாணவர்களும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். பெரும் எண்ணிக்கையான பெற்றோர்களும், பழைய மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 அதிபர் தனது உரையில் ஞாபகார்த்தக் கேடயங்களையும், பரிசுப்பொருட்களையும் வழங்கிய பின்வருவோருக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

 1. கந்தையா கணேசன் – வாரிவளவு, காரைநகர் (கனடா) வாரிவளவு நல்லியக்கச் சபை ஸ்தாபகர் அமரர். பத்மநாதன் (பட்டு மாமா) ஞாபகார்த்தமாக கேடயம் வழங்கப்பட்டது

 2. வேலுப்பிள்ளை சிற்சபேசன் – சின்னாலடி காரைநகர் இவரது தந்தையாரும் கல்லூரி ஸ்தாபகர்களில் ஒருவருமான அமரர்.செல்லப்பா வேலுப்பிள்ளை ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது

 3. ஆரம்பப்பிரிவு விளையாட்டுப் போட்டிக்கு பரிசுப்பொருள் வழங்கி உதவிய திரு.க.சிவநேசன் – கணேசன் டெக்ஸ்டைல்ஸ், யாழ்ப்பாணம் திரு. க. அருள்நேசன் – சிவகணேசன் டெக்ஸ்டைல்ஸ் யாழ்ப்பாணம்

 4. மயூரன் ஸ்டோர்ஸ், ஆலடி, காரைநகர்

 5. இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, காரைநகர்

 6. பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பழைய மாணவர்

 7. விளையாட்டுப் பொருட்களை வழங்கிய திரு. S. ஸ்ரீவரதன்

                                        வெற்றி பெற்ற இல்லங்களின் நிலைகள் வருமாறு

 நாவலர் இல்லம் – 1ம் இடம்

 இராமநாதன் இல்லம் – 2ம் இடம்

 விபுலானந்தர் இல்லம் – 3ம் இடம்