கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இப்பொதுக் கூட்டத்திற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் உட்பட்ட சுமார் ஐம்பது வரையான பழைய மாணவர்கள் சமூகமளித்திருந்தனர்.
நிர்வாக உறுப்பினர் திரு.க.நாகராசா அவர்களின் கடவுள் வணக்கத்தைத் தொடர்ந்து, கல்லூரியுடன் மிக நெருக்கமான தொடர்பைப் பேணி கல்லூரி வளர்ச்சிப் பணிகளில் உறுதுணையாக இருந்து இந்த ஆண்டு எம்மை விட்டுப்பிரிந்த அமரர். கலாநிதி.ச.சபாரட்ணம், அமரர்.சி.தம்பிராஜா (மாஸ்டர்) ஆகியோருக்கும் ஏனையோருக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு கூட்டம் தொடங்கப்பட்டது.
பொதுச் சபையில் சமூகமளித்த அனைவருக்கும் அதிபர் அறிக்கை, செயற்பாட்டு அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பவை அடங்கிய பிரதி நூல் வடிவில் வழங்கப்பட்டது.
கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்திய கல்லூரி அதிபரும் சங்கத் தலைவருமான திருமதி.வாசுகி தவபாலன் அவர்கள் தலைவர் அறிக்கையினை வாசித்தளித்திருந்தார்.
செயலாளர் திரு.இ.திருப்புகழுர்சிங்கம் அவர்ளினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட செயற்பாட்டு அறிக்கை,  பொருளாளர் திரு.பா.இராமகிருஷ்ணன் அவர்களினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாளர் அறிக்கையும் சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அடுத்து 2014 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது. கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய பதவி வழியாக கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைவராக இருப்பார்.
தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையின் விபரம் வருமாறு:
தலைவர்: திருமதி.வாசுகி தவபாலன் (அதிபர்)
உப-தலைவர்: பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை(ஓய்வு நிலை அதிபர்)
செயலாளர்: திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசன் (தபாலதிபர்)
உப-செயலாளர்: திரு.சண்முகம் சுகந்தன்
பொருளாளர்: திரு.சுந்தரலிங்கம் அகிலன்
உப-பொருளாளர்: திரு.செல்வரத்தினம் அருட்செல்வம்(ஆசிரியர்)

நிர்வாக சபை உறுப்பினர்கள்:
1. திரு.நல்லதம்பி யோகநாதன் (யோகா ரான்ஸ்போட் உரிமையாளர்)
2. திரு.கயிலாபிள்ளை நாகராசா (ஊர்காவற்றுறை நீதிமன்ற அலுவலர்)
3. திரு.வேலாயுதம் ஆனைமுகன் (காரைநகர் பிரதேச சபைத் தலைவர்)
4. செல்வி விமலாதேவி விஸ்வநாதன் (அதிபர் வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலை)
5. திரு.குகனேசசர்மா சரவணபவானந்தசர்மா (ஆசிரியர்)
6. திரு.சிவராசா பகீரதன்

உள்ளகக் கணக்காய்வாளர்: திரு.அரியரத்தினம் ஜெகதீஸ்வரன்

2011 பொதுக் கூட்டத்தில் பதிதாக உருவாக்கப்பட்ட பதவியணியாகிய போசகர் பதவிக்கு மீண்டும் கல்லூரியின் முன்னாள் விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியரும் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமாகிய திரு.எஸ்.கே.சதாசிவம் அவர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
புதிய நிர்வாக சபைத் தெரிவினைத் தொடர்ந்து தலைவர் திருமதி.வாசுகி தவபாலன் தமது உரையில் புதிய நிர்வாகத்தை வரவேற்பதுடன் பழைய நிர்வாகத்திற்கு தமது நன்றியையும் தெரிவித்து பழைய மாணவர்கள் ஒரு பாடசாலையில் மதிப்பிடமுடியாத சொத்துகள் எனவும் நாம் தற்போதய கல்விச் செயற்பாட்டில் பாரிய சமூகச் சவால்களைக் குறுகிய காலத்தில் எதிர்நோக்க வேண்டி இருந்ததாகவும், பழைய மாணவர்கள் பாடசாலை நிர்வாகத்திற்க ஒத்துழைப்பு வழங்குவதுடன் மாணவர் சமூகத்தை ஒழுங்குபடுத்த வேண்டிய பெரும் பொறுப்பும் பழைய மாணவர்களுக்கு உரியது எனவும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் கூட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கூறி தனது உரையினை நிறைவு செய்து சபையோர் கருத்துத் தெரிவிக்குமாறு கூறினார்.
பொதுச் சபை உறுப்பினர்கள் திரு.தம்பிப்பிள்ளை சற்குணராசா, காரைநகர் இ.போ.ச.சாலை முன்னாள் முகாமையாளர் திரு.மு.ஊ. கந்தசாமி, ஓய்வுநிலை அதிபர் திரு.க.தில்லையம்பலம், கலாநிதி.திருமதி.வீரமங்கை யோகரட்ணம், லண்டன் காரை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.ப.தவராசா, பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, காரைநகர் பிரதேச சபைத் தலைவர் திரு.வே.ஆனைமுகன் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.
பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.ப.தவராசா உரையாற்றும்போது தமது சங்கத்தின் ஆதரவு தொடர்ந்து கல்லூரியின் வளர்ச்சிப்பாதைக்கு உறுதுணையாக அமையும் என்று உறுதியளித்தார்.
பாடசாலையின் பெயர் மாற்நம் தொடர்பாக திரு.தம்பிப்பிள்ளை சற்குணராசா காரைநகர் இந்துக்கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிய திரு.சபாநடேசன் சிவரூபன் வழிமொழிந்தார். திரு.மு.ஊ.கந்தசாமி பாடசாலையின் கல்வி முன்னேற்றம்தான் தேவை என்றும் பெயர்மாற்றப் பிரேரணையைத் தான் எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தியாகராசா இந்துக் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யலாம் எனக் கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்து திரு.வேலாயுதம் ஆனைமுகன் கருத்துத் தெரிவிக்கையில் பொது மக்களின் கருத்துகளையும் கேட்டு பெயர்மாற்றம் செய்யப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் சபையினரின் கருத்துகளுக்கு பதிலளித்து உரையாற்றும்போது பெயர்மாற்றம் தொடர்பாக பொதுமக்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் முடிவிற்கு தாம் ஒத்துழைப்பு வழங்கலாம் என்று கூறினார். இது தொடர்பாக இன்னொரு பொதுக் கூட்டத்தைக் கூடி ஆராயலாம் என சபையோர் கேட்டுக் கொண்டமைக்கு, அதிபர் இணக்கம்; தெரிவித்தமையைத் தொடர்ந்து புதிய செயலாளர் திரு.கணபதிப்பிள்ளை நிமலதாசனின் நன்றியுரையுடன் இந்தப் பொதுக் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.