கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5 புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின் கௌரவிப்பு விழா வைபவம்

கோலாகலமாக நடைபெற்ற யாழ்ற்ரன் கல்லூரியின் தரம் 5

புலமைப்பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களின்

கௌரவிப்பு விழா வைபவம்

யாழ்ற்ரன் கல்லூரியில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கட்கான கௌரவிப்பு வைபவம் 17-11-2017 வெள்ளிக்கிழமை மு.ப 8.00 மணிக்கு கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக காரைநகர் பிரதேச செயலாளர் திரு.E.தயாரூபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக காரைநகர் இலங்கை வங்கி முகாமையாளர் திரு.P.புவனேந்திரராஜா அவர்களும், தீவகக்கல்வி வலய விசேட கல்விக்கான சேவைக்கால ஆலோசகர் திரு.S.மணிவண்ணன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

கல்லூரி அதிபர், விருந்தினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் ஆகியோர் கல்லூரி மாணவத் தலைவர்கள் அணி, பாண்ட் இசை குழுவினர், தமிழ் பாரம்பரிய இசை நடன குழுவினரால் அழைத்து வரப்பட்டமை மிகவும் தனித்துவம் மிக்கதாகக் காணப்பட்டது.

பிரதம விருந்தினரால் தேசியக்கொடியும் கல்லூரி அதிபரால் கல்லூரிக் கொடியும், பாண்ட் வாத்தியம் முழங்க, சங்குநாதம் ஒலிக்க, மாணவர்களின் பலத்த கரகோசங்களின் மத்தியில் மரியாதை பூர்வமாக ஏற்றி வைக்கப்பட்டு விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், கடவுள் வணக்கம், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பன நிகழ்வில் ஆரம்ப நிகழ்வுகளாக இருந்தன.

அதிபரின் தலைமையுரை

அதிபர் தனது தலைமை உரையில் தான் 08-12-2017 உடன் ஓய்வு பெறுவதால் தனது 40 வருட கால பாடசாலை கல்லூரியின் சேவையில் இறுதியாக நடைபெறும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வு என்ற பிடிகையுடன் உரையை ஆரம்பித்தார்.

கல்லூரி மீதான சமூகத்தின் மதிப்பு ஏற்படுவது மாணவர்களின் பெற்றோர்களினால் ஆகும். எமது கல்லூரி தேசிய பரீட்சையில் தீவக வலயத்தில் முதன்மை பெறுபேறுகளாக இருப்பதை அதிபர் சுட்டிக் காட்டினார். 2017 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் யாழ்ற்ரன் கல்லூரியில் தீவக வலயத்தில் அதிகூடிய மாணவர் எண்ணிக்கை மாணவர்கள் சித்தி அடைந்த பாடசாலை என்ற பெருமையை தக்க வைத்துள்ளது. 2012 ஆம் ஆண்டு 12 மாணவர் சித்தி அடைந்து கல்லூரி தீவகவலயத்தில் 1ஆம் இடத்தையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டமையும் அதிபர் நினைவு கூர்ந்தார். இந்தளவு வெற்றிக்கும் காரணகர்த்தாவாக விளங்குபவர் எனது அன்புக்கும் மரியாதைக்குமுரிய ஆசிரியப் பெருந்தகை திரு.மு.சுகந்தன் அவர்கள் என மிகவும் உணர்வு பூர்வமாக அதிபர் தனது நன்றி பாராட்டினை தெரிவித்தார். 2011-2017 காலப்பகுதியில் கல்லூரியில் 47 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடைந்துள்ளனர். கல்வி வளர்ச்சியில் தேசிய பரீட்சைப் பெறுபேறுகள் முன்னிலையில் இருப்பதை அதிபர் குறிப்பிட்டார்.

மாணவர் ஆசிரியரின் விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து சித்தியடைந்த மாணவர்கட்கு பெறுமதி மிக்க நினைவுப் பட்டயம் பிரதம விருந்தினர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இம் மாணவர்களின் வெற்றிக்காக உழைத்த ஆசிரியர் திரு.மு.சுகந்தன் அவர்களுக்கு சித்தி அடைந்த மாணவர்களின் பெற்றோர்களால் மனமுவந்து அளிகக்கப்பட்ட தங்கப்பதக்கத்தினை துணைவேந்தர் பேராசிரியர் R.விக்னேஸ்வரன் அவர்களால் அணிவித்து கௌரவிக்கப்பட்டார். மேலும் ஆசிரியர் சுகந்தன் அவர்கட்கு கல்லூரிச் சமூகத்தினர் சார்பாக நினைவுப்பட்டயம், மற்றும் கடந்த காலங்களில் கற்ற மாணவர்களால் வழங்கப்பட்ட வாழ்த்துப்பாவும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக அதிபர் தனது உரையில் தான் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து இக்கௌரவிப்பு நிகழ்வினை காரைநகர் வாரிவளவு (தேர்க்கார) கந்தையா கணேசன் (கனடா) அவர்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றது. அவர் சிவபதம் அடைந்த பின்னர் அவரது பிள்ளைகளினால் தொடர்ந்து அனுசரணை வழங்கிக் கொண்டு வருகிறார்கள். இதனால் ‘அமரர் கந்தையா கணேசன் ஞாபகார்த்த பாராட்டு வைபவம்’ என ஆக்கப்பட்டது. எனவே இந்நிகழ்வுகளுக்கு அனுசரணையாளர்களாக இருக்கும் அமரர் கந்தையா கணேசன் அவர்களின் பின்ளைக்கு அதிபர் தனது மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தார்.

ஆசிரியர் திரு மு.சுகந்தன் அவர்களின் தனது ஏற்புரையில் அதிபர் எவ்விடயத்திலும் மிகுந்த அக்கறையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். மாணவர் கல்வி அடைவு மட்டத்தினை உயர்த்துவதில் தானும் பாடுபட்டு ஆசிரியர்களை அதிபர் பாடுபட வைப்பார். பல விடயங்களில் தன்னை ஊக்கபடுத்தி இவ் வெற்றியின் பங்குதாரர்களில் அதிபரும் குறிப்பிடத்தக்கவர். மேலும் தனக்கு தரப்பட்ட கௌரவிப்பிற்காக தனது இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்தார். அவரிடம் கல்வி கற்று சித்தியடைந்த மாணவர் எல்லோரும் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து, பாராட்டுப்பத்திரம், பரிசுகள் வழங்கி தமது நன்றி உணர்வினை வெளிப்படுத்தினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா இனிது நிறைவேறியது.