‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம். என்கின்ற இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

காரை வசந்தம் தரும் சுகந்தம்‘ என்கின்ற இக்கட்டுரை 2015ஆம் ஆண்டு வெளிவந்திருந்த ‘காரை வசந்தம்’ சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. கனடா வாழ் காரையின் சொந்தங்கள் கூடிக் களிக்கின்ற மற்றுமோர் பெரு விழாவான காரை வசந்தம் கலை விழாவின் சிறப்புக்களை பொதித்து வைத்துள்ள இக்கட்டுரை எதிர்வரும் 04ஆம்திகதி சனிக்கிழமை 18வது ஆண்டாக கலைவாசனையுடன் காரை. மண்ணின் வாசனையும் பரப்பி மலரவிருக்கின்ற காரை வசந்தம் -2017 இற்கு முன்னோட்டமாக இவ்விணையத்தளத்தின் ஊடாக எடுத்துவரப்படுகிறது.

 

 

‘காரை வசந்தம்’ தரும் சுகந்தம்.

-கனக. சிவகுமாரன்-

அலையெறிந்து ஆர்ப்பரிக்கும் கடல்சூழ் நன்நகரான காரைநகரானது எந்தக் கிராமத்திற்கும் இல்லாத சிறப்புக்களைக் கொண்டு விளங்குகிறது. உள்நாட்டு யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற எமது கிராமத்தின் பாரிய இடப்பெயர்வானது ஊரின் அனைத்து வளங்களையும் பாதித்தது. ஊரின் வனப்பும் பொலிவிழந்து போனது.

எனினும் பிறந்த மண்மீது ஆழமான பற்றினைக் கொண்டுள்ள புலம்பெயர்ந்த காரைநகர் மக்களது உணர்வுமிக்க தொடர் செயற்பாடுகளினால் கிராமம் துரிதகதியில் மீளப் புனரமைக்கப்பட்டு வருகின்றது. அத்தோடு அதன் புகழும் பெருமையும் என்றுமில்லாதவாறு சர்வதேசமெங்கும் பறைசாற்றப்பட்டு இத்துணை சிறப்பு மிக்க கிராமமா காரைநகர்? என பலரும் வியக்கும் வண்ணம் சிறப்புற்றிருக்கின்றது. இவ்வூரில் நாம் பிறந்தோம் என்ற உணர்வும் உரிமையும் எம்மைப் பேருவகை கொள்ளவைக்கின்றது.

புலம்பெயர் காரை அமைப்புக்களினதும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வதியும் ஊர்ப்பற்றும் சமூக உணர்வும் மிக்க தனவந்தர்களினதும் உதவிகள் ஊருக்குக் கிடைக்கின்றன. அங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முனைப்பான பணிகள் இவ்வுதவிகளால் முன்பிருந்ததைக் காட்டிலும் வளமும் வனப்பும் மிக்க முன்னுதாரணமான கிராமமாக மாறி வருவதைக் கட்டியம் கூறுவதாகவுள்ளன.

மலேசியா நாட்டிற்கு வேலைவாய்ப்பின் நிமித்தம் புலம்பெயர்ந்து சென்ற காரைநகர் மக்கள் 1919ஆம் ஆண்டு Karai Union Of Malaya என்ற அமைப்பினை நிறுவி காரையின் மேம்பாட்டிற்கு உதவினார்கள். தொண்ணூற்றாறு ஆண்டுகளிற்கு முன்பாகவே புலம்பெயர்ந்தோராக வாழ்ந்து தாம் பிறந்த ஊருக்கு உதவி முன்னுதாரணமாகத் திகழ்ந்தோர் காரைநகர் மக்களாகவே இருக்கமுடியும் என்பது பெருமைக்குரிய செய்தியாகும். தற்போது புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொருவருக்கும் தம்மண்ணை மறவாது அதற்கு உதவவேண்டும் என்கின்ற வரலாற்றுக் கடமை உண்டு என்பதையும் இச்செய்தி உணர்த்துகின்றது.

அக்காலகட்டத்தில் காரைநகர் இருந்த நிலைமை வேறு தற்போது இருக்கின்ற நிலைமை வேறு. இடர்மிகுந்த காலகட்டத்தில் நிம்மதியிழந்து நம்பிக்கையற்ற அவலவாழ்வு வாழ்ந்து பலவற்றையும் இழந்துவிட்ட உறவுகளிற்கு அவர்களின் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான மனோ பலத்தினை புலம்பெயர்ந்த அமைப்புக்களும் ஊர்ப் பற்றாளர்களும் வழங்கி வருகின்ற உதவிகளும் ஊக்கிவிப்புக்களும் ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் சேவையுள்ளம் கொண்ட பெரியோர்களினால் ஈழத்துச் சிதம்பர திருத்தொண்டர் சங்கம் என்ற பெயரில் 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு 1992ஆம் ஆண்டு கனடா-காரை கலாசார மன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தாயக உறவுகளுக்கு உதவும் சேவையில் முழுமனதோடு ஈடுபட்ட இவ்வமைப்பு, தன் பணியில் 25ஆண்டுகளைக் கடந்து 26வது ஆண்டில் தடம் பதிக்கின்றது.

காரைநகரில் வாழும் உறவுகளிற்கு உதவுவதுடன் மட்டுமல்லாது கனடாவில் வாழும் காரை மக்களுக்கிடையேயான உறவினைப் பேணி அவர்கள் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தி வருகின்றது. எமது கிராமத்திற்கே உரித்தான தனித்துவம் மிக்க கலை கலாசார சமய பண்பாட்டு அடையாளங்களையும் பாரம்பரியங்களையும் பேணி எமது அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்லக்கூடியவாறான செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. கடந்த 25 ஆண்டுகளாக கனடா-காரை கலாசார மன்றம் முன்னெடுத்து வரும் அளப்பரிய பணிகள் அனைவராலும் விதந்து பாராட்டப்படக்கூடியதாகும்.

மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வருடாந்த நிகழ்வு செயற் திட்டங்களுள் ‘காரை வசந்தம்’ என்கின்ற சிறப்பு மிக்க பெரும் கலைவிழா முதன்மை பெற்று விளங்குகின்றது.

காரைநகர் மக்களின் கலை ஈடுபாடும் பங்களிப்பும் அக்கிராமத்திற்கு பெரும் புகழ் சேர்ப்பனவாகவுள்ளன. கலைத்துறையில் காரை மக்கள் ஆற்றிய, ஆற்றிவருகின்ற சாதனைகள் வரலாற்றுப் பதிவாகி வருகின்றன. காரைநகர் மக்கள் தமிழ்க் கலை உலகிலே பதித்த, பதித்து வருகின்ற தடங்கள் அவர்களின கலை ஆற்றலிற்கும் கலை உணர்விற்கும் சான்று பகர்வனவாக அமைந்துள்ளன. அந்த வரிசையில் கனடா-காரை கலாசார மன்றத்தினால் 2000ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று 16வது ஆண்டில் பாதம் பதிக்கின்ற ‘காரை வசந்தம்’ என்கின்ற பெரும் கலைவிழா ரொறன்ரோவில் ஊர்களின் பெயரால் நடாத்தப்பட்டு வருகின்ற நூற்றுக்கணக்கான கலைவிழாக்களுள் பிரபல்யம் மிக்க தலைசிறந்த ஒன்றாக மிளிர்வடைந்துள்ளது.

வளர்ந்து வருகின்ற காரையின் இளம் கலைஞர்களை ஊக்குவித்து அவர்களது திறமைகளை வளர்ப்பதற்குக் காரை வசந்த அரங்கு களம் அமைத்துக் கொடுப்பதுடன் பல திறமை மிக்க கலைஞர்களை அறிமுகம் செய்து அவர்களிற்கும் அவர்களது படைப்புக்களிற்கும் மதிப்பளிக்கின்ற அரங்காகவும் அமைந்து விளங்குகின்றது. ரொறன்ரோவில் பல நவீன வசதிகளுடன் அமைந்த முதற்தர கலாசார மண்டபத்தில் பெரும் பொருட்செலவில் நடத்தப்பட்டு வருகின்ற இப்பெருவிழாவைக் கண்டு களிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து வருகின்ற காரைநகர் மக்களால் மண்டபம் நிரம்பி வழிவது விழாவின் உன்னதத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது. கலை வாசனையுடன் காரை மண்ணின் வாசனையும் பரப்பி வருகின்ற இவ்விழா காரைநகர் மக்களிற்கும் கலா ரசிகர்களிற்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். ஊர் உணர்வோடும் கலை உணர்வோடும் காரை மக்கள் சங்கமித்து வருகின்ற இவ்விழா அவர்களை காரை மண் பற்றி சிந்திப்பதற்கு தூண்டுவதாகவும் கனடா-காரை கலாசார மன்றத்தின் நிதி வளத்தினை ஏற்படுத்துகின்ற உறுதியான ஊற்றாகவும் அமைந்து விளங்குகின்றது.

இவ்விழா ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் காரைச் சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழித் திறன் போட்டிகளை நடத்தி வெற்றிபெற்றவர்களிற்கும் பங்குபற்றியவர்களிற்கும் இவ்வரங்கில் பரிசளித்து வருகின்றமையும் பேச்சுப் போட்டியில் முதலிடத்தைப் பெறும் சிறுவர்கள் இவ்வரங்கில் பேசுவதற்கு வாய்ப்பளிக்கின்ற முறைமையும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றமை சிறுவர்கள் மத்தியில் தமிழ்மொழி ஆர்வம் ஏற்பட வழி செய்கின்றன.

நீண்ட காலமாகக் கனடாவில் வாழும் எமது பிள்ளைகள் எமது மொழி, கலாசாரம், பாரம்பரியம் பற்றி எதுவும் அறியாமலே கனடா நாட்டுக் கலாசார நீரோட்டத்தில் கலந்துகொள்வது தவிர்க்க முடியாதது போல் தோன்றினாலும் எமது கலாசாரத்தையும் மொழியையும் தக்கவைக்கும் முயற்சியில் ‘காரை வசந்தம்’ கலைவிழா ஆற்றிவரும் பங்களிப்பு குறிப்பிடக்கூடியதாகும்.

கனடாவின் நான்கு பருவ காலங்களுள் ஒன்றான இலைதளிர் காலமே வசந்த காலம் எனப்படுகின்றது. கடும் குளிர்காலம் முடிவடைந்து மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் நிலவுவதே வசந்தமாகும். இந்தப் பருவ வசந்தமும் எமது ஊரும் இணைந்து அனைவரையும் வசீகரிக்கின்ற அழகிய பெயராக மலர்ந்த ‘காரை வசந்தம்’ கலை விழாவினை வசந்த காலத்தில் கொண்டாடுவதே பொருத்தமானதாக அமையும் என்பதுடன் அதனை ஏன் குளிர்காலத்தில் கொண்டாட வேண்டும்? என்கின்ற கேள்வி முன்வைக்கப்படுவதும் உண்டு. உண்மையில் வசந்தம் என்கின்ற பருவத்தைக் கொண்டாடாது அதன் பண்புக் கூறுகளாக விளங்கும் பொலிவு, உற்சாகம், மகிழ்ச்சி, பூரிப்பு, குதூகலம் ஆகியனவே முதன்மைப்படுத்தப்படுகின்றன. வசந்த காலத்தில் பெறுகின்ற சுக அனுபவத்தினைக் குளிர்காலத்தில் கொண்டாடப்படுகின்ற ‘காரை வசந்தம்’ மூலம் காரை மக்கள் பெற்று இன்புறுகின்றனர் என்றால் அது மிகையாகாது.

 

கனடாவின் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தினாலும் தரம் மிக்க சிறந்த கலை விழா எனப் பதிவுசெய்யப்பட்ட ‘காரை வசந்தம்’ குறித்து கனடாவின் முன்னணி வாராந்தப் பத்திரிகையான ‘கனடா உதயன்’, ‘கடும் குளிரை விரட்டியடித்த காரை வசந்தம்’ எனத் தலைப்பிட்டு ஒரு முறை விமர்சனம் வெளியிட்டிருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூருவது பொருத்தமானதாகும்.

இவ்விழாவின் சிறப்பு அம்சமாகக் ‘காரை வசந்தம்’ என்ற சஞ்சிகை ஒன்றும் வரலாற்று ஆவணமாக விழா ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை வெளியிடப்பட்டு வருகின்றது. தொன்மை மிக்க காரைநகரின் வரலாற்றுப் பெருமைகள் கலை, கலாசாரம், கல்வி, சமயம், பண்பாட்டுப் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் வகையில் காரைநகர் சார்ந்த விடயங்களை முதன்மைப்படுத்திய ஆக்கங்களையும் காலவோட்டத்திற்கு ஏற்ப சமூகத்திற்கு பயனளிக்கக் கூடியதான பல்துறை சார்ந்த ஆக்கங்களையும் தாங்கிய சிறந்த வரலாற்று ஆவணமாகவும் தமிழ் வாசனையையும், காரை மண்ணின் வாசனையையும் நுகருவதாகவும் இக் ‘காரை வசந்தம்’ சஞ்சிகை அமைந்துள்ளது. படைப்பாளிகளின் படைப்பாற்றலை ஊக்கிவித்து மேம்படுத்துகின்ற களமாகவும் இச்சஞ்சிகை அமையப்பெற்றுள்ளது. அத்துடன் காரைநகர் சார்ந்த சமய சமூக கல்வி கலாசார அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கலைஞர்கள், ஊர்ச் சான்றோர்கள் வழங்கி வருகின்ற வாழ்த்துச் செய்திகள் எழுச்சியை ஏற்படுத்தி வலுச்சேர்ப்பனவாகவுள்ளன. மன்றப் பணிகளிற்கு உதவிடவேண்டும் என்ற நல்நோக்குடன் விளம்பரங்களை வழங்கி வரும் வர்த்தகத்துறை சார்ந்தோர் இச்சஞ்சிகையின் தொடர்ச்சியான வெளியீட்டில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இங்குள்ள காரைச் சிறார்கள் உள்ளிட்ட அனைத்து காரைநகர் மக்கள் நெஞ்சங்களிலும் நிலைத்து அவர்கள் உச்சரிக்கின்ற ஓரு சொல்லாக ‘காரை வசந்தம்’ என்ற நாமம் உள்ளது. காரைநகர் மக்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இவ்விழாவில் வசீகரிக்கின்ற சிறந்த கலை நிகழ்வுகளை கண்டு களிக்கமுடியும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் வெளியிடத்தைச் சேர்ந்த பலரும் கலையுணர்வுடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

காரைநகர் மக்களின் அடையாளம் ‘காரை வசந்தம்’ என்று கூறுமளவிற்கு இச்சொல் அனைவர் நெஞ்சங்களிலும் வியாபித்து நிற்கின்றது. அவ்வப்போது அமையப்பெற்று வருகின்ற நிர்வாகங்களின் செயற்திறனும் அர்ப்பணிப்பும் மிக்க உழைப்பு, கலைஞர்களின் உற்சாகமான பங்களிப்பு, அனுசரணையாளர்கள் விளம்பரதாரர்கள் ஆகியோரின் பேருதவி, காரைநகர் மக்கள் மற்றும் கலாரசிகர்களின் அமோக ஆதரவு என்பவற்றின் இணைந்த செயற்பாட்டின் விளைவே காரை வசந்தத்தின் வெற்றியின் இரகசியமாகும்.

காரை வசந்தத்தின் சிறப்பிற்கும் பொலிவிற்கும் நிறைவான பல அம்சங்கள் இருந்தாலும் ஒரு சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. விளம்பரப்படுத்தப்பட்ட நேரத்திற்குப் பதிலாக சில மணித்துளிகள் தாமதித்த நிகழ்ச்சிகளின் ஆரம்பமும் இதன் காரணமாகப் பின்தள்ளப்பட்டு இடம்பெறும் இறுதி நிகழ்சியின்போது ரசிகர்கள் மண்டபத்திலிருந்தது கலைந்து செல்லுதலும் அவ்வப்போது நிகழும் குறைபாடுகளாகும். ஒரு சில சந்தர்ப்பங்களில் நேரப் பற்றாக்குறை காரணமாக இறுதி நிகழ்வு இடம்பெறாமல் போனதால் படைப்புக்களைத் தயார் செய்து வந்த கலைஞர்கள் ஏமாற்றமடைந்தமை துரதிஷ்டவசமானதாகும். இவற்றினை நீக்கி வைப்பதில் ஏற்பாட்டாளர்களுடன் ரசிகர்களும் ஒத்துழைக்கவேண்டியதன் அவசியத்தை புரிந்துகொண்டு செயற்பட்டால் கரையிலா ‘காரை வசந்தத்தின்’ தரம் மேலும் மேன்மையுற்று கரை புரண்டோடும் என்பதில் சந்தேகமில்லை.