மண்ணைக் காத்த மகான்


மண்ணைக் காத்த மகான்

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்   நூற்றாண்டையொட்டி 17.07.2016இல் சூரிக் நகரில் வெளியிட்ட "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரையில் இருந்து

ஆக்கம்: திரு. வி.கேதீஸ்வரதாசன்
காரைநகர்.
 
காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராக 1946ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரை25 ஆண்டுகள் சேவையாற்றிய கலாநிதி அ.தியாகராசாவின் 100 ஆவது ஜனன தினம் கடந்த17ஆம் திகதியாகும். தன்னலமற்ற அர்ப்பணிப்பான அயராத சேவையால் எமது மக்களால் போற்றப்படுகின்றது. இவர் தனது பட்டப் படிப்பை இந்தியாவில் கற்ற பொழுது கர்நாடக சங்கதம், உதைபந்தாட்டம், மல்யுத்தம், ஹொக்கி போன்றவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

    பன்னாங்கினால் சுவரும் கிடுகினால் கூரையும் அமைந்த ஒன்பது வகுப்பறைகளைக் கொண்ட கட்டடத்தொகுதிகளை இந்தப் பாடசாலை கொண்டிருந்து. வெளிநாடுகளில் வதியும் எம்மவர்களின் உதவி மிகவும் சொற்பமாக இருந்த காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் சென்று அந்த நாடுகளில் கோலாலம்பூர், ரவுப், மென்ரகாப், செரம்பான், ஈப்போ, பினாங்குவாந்தன் போன்ற பெரிய சிறிய நகரங்களில் பரந்து வாழ்ந்த எமது ஊர் மக்களிடம் சிரமம் கருதாது சென்று நிதியுதவி பெற்று வந்து பாடசாலைக் கட்டடம் பூர்த்தி செய்யப்பட்டு மிக எளிமையாகத் திறப்பு விழா கொண்டாடப்பட்டது. அன்னார் எமது மக்களின் கல்வியில் மிகவும் ஆர்வம் காட்டியது மட்டுமன்றி, கால்பந்து, கைப்பந்து, தடகளப் போட்டி, கர்நாடக சங்கீதம்,கலாசாரம், சமயநெறி, ஒழுக்கம் என்பனவற்றிலும் மிகவும் அக்கறை காட்டினார். பாடசாலை மாணவர்களும், பழைய மாணவர்களும் விளையாட்டுக்களிலும் பங்குபற்ற வேண்டும் என்பது இவரது நோக்கமாக இருந்தது. இவரது காலத்தில் கல்லூரியில் கிட்டத் தட்ட ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இருந்த தச்சன் பனை என்னும் இடத்துக்கு நடந்து வந்து கால்பந்து விளையாடுவதும் விளையாட்டுப் போட்டி நடத்துவதும் நிறுத்தப்பட்டு, தற்போதுள்ள மைதானத்தின் பக்கத்திலுள்ள காணிகளின் பகுதிகள் வைத்தியசாலை நிலத்தின் ஒரு பகுதி என்பன இவரது முயற்சியால் பெறப்பட்டு நிரவப்பட்டு அமைக்கப்பட்டது.

டயானா நிறுவன விற்பனை வாகனம் கொழும்பிலிருந்து வரும்போது விளையாட்டு ஆசிரியர் விளையாட்டுக் குழுத் தலைவர்களுடன் ஆலோசித்து தேவையான பொருள்களை வாங்குவது இவரது வழக்கம்.

வாழ்நாள் முழுவதும் மது, மாமிசம், வெற்றிலை, புகையிலை முதலியவற்றைத் தவிர்த்தே வாழ்ந்துள்ளார். முற்கோபி, பிழைகளை நேரடியாகக் கண்டிக்கிறவர் என்று சிலர் கூறுவர். எல்லாத் தெய்வங்களிலும் பக்தி கொண்டிருந்தாலும் மணற்காடு முத்துமாரி அம்பாளில் மிகுந்த பக்தி கொண்டவர். சமய சரிததிர திரைப்படங்களைப் பார்க்குமாறு சரித்திர திரைப்படங்களைப் பார்க்குமாறு கூறுவார். தற்போது அத்தகைய படங்கள் வருவதில்லை.
    
காரைநகர் கிழக்குக் கடற்கரையில் வேணன் அணை அமைப்பதற்கு இவரே முன்னோடியாக இருந்தார். இதனால் புற்றரை நன்னீர் என்ற நன்மைகள் உண்டாகும் எனக் கூறினார். பிரதான வீதிகள் ஒழுங்கைகளை அண்மித்த வீட்டு வளவுகளில் நிழல் மரங்கள் நடவேண்டும் என்றும் – இது சுயநலத்துடன் கூடிய பொதுநலம் என்றும் கூறினார். எல்லாச் சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது இவரது கொள்கை.


காரைநகர் மக்கள் வைத்திருந்த மதிப்பிற்கும் அபிமானத்திற்கும் அவரது வைர விழா ஒரு எடுத்துக்காட்டு, மத்தியானத்துக்கு சிறிது நேரம் செல்ல ஆரம்பமான ஊர்வலம் காரைநகர் பிரதான வீதியைச் சுற்றி கல்லூரி மைதானத்தை அடைய சூரிய அஸ்தமனமாகிவிட்டது. வழிநெடுக மாவிலை
தோரணம், மலர் மாலைகள், நிறைகுடங்கள், கலந்து கொண்டோருக்கு கரைகடந்த உற்சாகம். கல்லூரி மைதானத்தில் இதற்கு முன்பு ஒரு நாளும் இத்துணை மக்கள் கூட்டம் கூடியதில்லை. இனிமேலும் கூடப்போவதும் இல்லை.

இதன் பின்பு இவர் இந்த மக்களின் ஆதரவுடன் தமிழ் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், இந்தக் காலத்துக்கு முன்பிருந்த அரசை சார்நதவர்களுக்குத்தான் உத்தியோகம் நன்மை என்ற நிலை மேலும் தீவிரம் அடைந்து எமது மக்கள் இன்னலுற்றதால் செல்லையா குமாரசூரியருடன் அரசியலில் சேர்ந்து தனது தொகுதி மக்களுக்கு மாத்திரம் அல்லாமல் யாழ்.மாவட்ட வேறு தொகுதி மக்களுக்கும் உத்தியோகம் வேலைவாய்ப்பு அடிப்டை வசதிபோன்ற நன்மைகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இதற்காக ஒருவித இலாபத்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. சொத்து, சுகம், வாகன
வசதி தேடவில்லை. புகையிரதத் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஆணைச் சீட்டுக்களையே பிரயாணத்திற்குப் பயன்படுத்தினார். அவரது மைத்துனாரால் அன்பளிக்கப்பட்ட காரைத்தான் பயன்படுத்தினார். தலைநகரத்தில் அவரது உறைவிடமாகவும் கந்தோராகவும் மைத்துனரின் வீடடின்; ஒரு பகுதியை உபயோகித்தார்.

எல்லோரும் கல்வி கற்று முன்னேற வேண்டும் என்ற நோக்கம் கொண்டவரான இவர், கல்லூரிக் கூரையில் ஒழுக்கு உண்டான பொழுது தனது வீடடிலிருந்த ஓடுகளைத் தானே கொண்டு வந்து தனது வீட்டிலிருந்த பெட்ரோமாக்ஸ் கொண்டு வந்து கொடுத்தார். ஏன் சேர் என்று கேட்ட போது வீட்டுக்கு அரிக்கன் விளக்குப் போதும் என்றார். அந்தக் காலத்தில் மலைநாட்டுப் பகுதியிலிருந்து வந்து வீட்டு வேலை செய்யும் சிறுவர்கள் கல்வி கற்கவும் வருவதுண்டு. அப்படிக் கல்வி பயின்ற பெரியசாமி என்னும் மாணவனின் திறமையைக் கண்ட தியாகராசா ஐயா அந்த மாணவன் இருந்த வீடடுக்காரை அணுகி அவரின் கல்வியில் கல்வியில் கூடிய அக்கறை எடுக்கச் செய்து பின்னர் அவரை மருத்துவக் கல்லூரி பிரவேசம் செய்வதற்கு பாடசாலையில் அனுமதி வாங்கிக் கொடுத்து உதவிகள் செய்தமையால், அவர் ஒரு மருத்துவர் ஆனார். அவரது பகுதியைச் சேர்நத இரண்டு ஏழைச் சிறுமிகளுக்கு படிப்புக்காகத்; தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்தார் ஏன்று கூறுவார். அன்னார் மிகவும் எளிமையாக வெள்ளை
வேட்டி நஷனல் என்பவற்றையே அணிவார். சரசரவென்று சத்தமிடும் ஒரு செருப்பைத் தான் அணிவார்.

ஒரு முறை உப அதிபராகக் கடமையாற்றிய ஆங்கில ஆசிரியர் என்.சபாரத்தினம் டெயிலி நியூஸ் பத்திரிகையுடன் எங்கள் வகுப்புக்கு வந்தார். அதில் இடைக்கால பிரதமராக இருந்து பதவி விலகிச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டபிள்யூ தஹநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதியான சிராவஸ்தியில் இருந்து ஒரு றங் பெட்டியுடன் வீட்டுக்குச் செல்லும் படம் முன் பக்கத்தில் போடப்பட்டிருந்தது.அத்தகைய அப்பழுக்கற்ற மறைந்த பிரதமர் டாக்டர் டபிள்யூ டபிள்யூ தஹநாயக்க போன்றவர்களைப் பின் பற்றித்தான் அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களும் அரசியல், கல்வி பயிலும் அவர் தன்னலமற்ற தியாக மனப்பான்மையில் பணியாற்றியவர்.

                                                                        நன்றி

                                                             "ஆளுயர்வே ஊருயர்வு"
                                    "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                           இங்ஙனம்
                                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                        செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                       சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                            மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                         25 – 06 – 2017

13765756_854626341348760_7075660729101349105_o