நான் கண்ட அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா

நான் கண்ட அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய "தியாகச் சுடர்" 
நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 திருமதி. உஷா செல்வரத்தினம்
 ஓய்வுபெற்ற ஆசிரியர், காரைநகர்.

காரைநகர் இந்துக்கல்லூரி என்று நினைக்கும்போது, எம்மனக்கண்முன் முதற்கண் நிழலாடுபவர் அதிபர் தியாகராசாவே! இந்த உண்மையினை யாரும் மறுப்பதற்கில்லை. வெள்ளை வேட்டியும் நஷனலும் அணிந்து கம்பரமான தோற்றத்துடன் பாடசாலையின் இரு பக்க வளாகத்தினுள் நடமாடித் திரியும் அந்தக் கல்விமானின் தோற்றப் பொலிவு என்றும் எம் மனத்திரையில் விரிந்து செல்லும். காலைப் பிரார்த்தனை மணியொலி, நடராசா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ஆராதனை வகுப்பு ஆரம்பம், இந்நிலைமைகளில் அதிபரின் காற்செருப்பொலியினைத் தொடர்நது எங்கும் ஒரே நிசப்தம் சிவபுராணம் ஓர் அட்சரம் கூடப் பிசகு இல்லாமல் கல்விச் செயற்பாடுகளின் மேற் பார்வை ஒழுங்குகளை மேற் கொள்ள முன்னேற்றப்படுத்தும் திட்டம்; பாடசாலை விதிமுறைகள், சட்ட  திட்டங்களை அனுசரிக்கும் மாணவர் குழாம். இதுதான் எமது அதிபர் முகாமைத்துவத்தின் கீழ் காரை இந்துக் கல்லூரியின் கல்விச் சூழல் இத்தகைய கவின் சூழலை ஏற்படுத்தி மாணவ சமுதாயத்தை அறிவு ஆற்றல், திறன் மிக்க நன்னடத்தை கொண்ட உன்னத பாதைக்கு வழிகாட்டி, நெறிப்படுத்திக் கூடவே வெற்றியும் கண்ட சாதனையாளர். எமது அதிபரை எண்ணும் தோறும் எமது உள்ளம் உவகையில் பூரித்து நிற்கின்றது. பெருமிதம் அடைகின்றது. இத்தகையாளரை காலத்தால் அழியாத உன்னத புருஷராக கருதுவதில் என்ன தவறு.

காட்சிக்கு எளியவனாய், எளிமையான தோற்றத்தைக் கொண்ட எமது அதிபர் காந்தீயத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்டவர். மகாத்மாவின் கருத்துக்களைப் பேசும் போதும், கற்பிக்கும் போதும் அடிக்கடி கூறுவார். ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் சமய விழாக்கள் வைபவங்களை பெரியார் சொற்பொழிவுகளை நடத்தி, மாணவர்கள் செல் நெறியினை செம்மைப்படுத்திய உத்தமர். "தொட்டனைத்தூறும் மணற்கேணிமாந்தர்  தம்கற்னைத் தூறும் அறிவு'' என்ற வள்ளுவர் வாய்மொழிக்கிணங்க மாணவர்கள் பல்துறை சார்ந்த நூல்களை கற்க நூலக வசதி வளங்களை விஸ்தரித்து, அதற்கென தனியானதோர் நூலகப் பொறுப்பாளரை நியமித்து, மாணவர்கள் ஓய்வு நேரங்களை நூலகத்தில் கழிக்க வாய்ப்பளித்தார். வாசிப்புத்திறனின் விருத்திக்கு வழிவகுக்கின்றார்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரதும் கடமையும் தான் வாழும் சமுதாயத்தின் தேவைகளை உணர்ந்து, அவற்றைப் பூர்த்தி செய்வதே என்ற கல்வியியலாளரின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் வரிசையில் எமது அதிபரும் இடம்பிடித்துள்ளார் என்று கூறுவதில் பெருமிதம் அடைகினறேன். பதிகளுக்குள்ளே ஓர் காரைநகர், அக்காரைநகருக்கோ ஓர் இந்துக்கல்லூரி அதனை வழிப்படுத்திய, அதன் பெருமைக்கு உறுதுணையாக விளங்கிய அதிபர்கள் வரிசையில் புதியதோர் சகாப்தத்தை உருவாக்கியவர் எமது அதிபர் எனக் கூறுவது மிகை மொழியாகா.

கல்வியே சமுதாயத்தின் வளர்ச்சிக்கான ஏணிப்படி. எமது காரைநகர் மக்கள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல கல்வியிலும் ஏற்றம் பெற வேண்டும், காரை அன்னை ஈன்றெடுத்த புதல்விகள் உலகின் எங்கோ ஓர் மூலையில் வாழ்ந்தாலும் அவர்கள் பெருமை பேசப்பட வேண்டும் என்ற உன்னத இலக்கை இலட்சியமாகக் கொண்டு, "இந்துக் கல்லூரி" என்னும் கல்விக் கூடத்தினூடாக எதிர்கால நற்பிரஜைகளை சமுதாயத்திற்கு கையளிக்க வேண்டும் என்ற அடிப்படைக் கல்விக் குறிக்கோளை தனது மனதில் நிறுத்தி, பாடசாலைத் திட்டங்களை வகுத்து செயற்படுத்து வதில் முனைப்பாக
ஈடுபட்டவர். சாதனைகள் படைத்து மனநிறைவு அடைந்தவர். இன்று எமது கல்லூரி மாணவர்கள் மருத்துவர், பொறியியலாளர், சட்ட வல்லுநர்கள், பொருளியலாளர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள், கல்வியியலாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் என தத்தம் துறைகளில் சிறப்பாக தமக்கும் தம் குடும்பத்துக்கும், சமுதாயத்துக்கும் சேவையாற்றி வருவது கண்கூடு. நாம் எந்தச் செல்வத்தை இழந்தாலும், கல்விச் செல்வத்தை இழக்கக் கூடாது என்ற உயர்ந்த எண்ணக்கருவினை பெற்றோர் பொதுமக்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் முனைப்புப் பெற்று நிலைபெறுவதற்கு வித்திட்டுச் சென்ற எமததிபர் கலாநிதி தியாகராசாவை மாணவ சமுதாயம் என்றும் மறக்க முடியுமா?

மேலும் பாடசாலை என்பது மாணவர்களின் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணர்நது, வளர்ப்பதற்கான சிறந்த ஓர் களம் என்ற கருத்துக்கு செயல்வடிவம் கொடுத்தவர்களுள் எமது அதிபர் ஒருவர் எனக் கூறுவதில் என்ன தவறு? இன்று உலகளாவிய ரீதியில் பரந்து, வாழும் எமது நாட்டவர் மத்தியில் காரை இந்துக் கல்லூரி மாணவர்கள் தனக்கென தனித்துவமான சாதனைகளை பல்துறைகளிலும் ஈட்டி வருவதற்கு எமது அதிபரின் பணிக்கான பங்களிப்பு அடித்தளமாக அமைவதை நாம் யாரும் மறுக்க முடியாது.

எமது ஊர் காரைநகர், இன்று பெருமிதத்துடன் தலைநிமிர்ந்து நிறபதற்கு அடித்தளமாக அமைவது எமது பாடசாலைகளே கல்வி, ஒழுக்கம், கொண்ட பலதுறை சார்ந்த விற்பனர்கள் காரையம்பதி சமுதாயத்திறகு அன்றும் இன்றும் என்றும் கையளிககப்படுவதற்கு. இத்தகைய பெருமைக்குரியவர்கள் அதிபர்கள், ஆசிரியர்களே! அந்த வகையில் இன்று எமது பாடசாலைகள் மாணவ சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு அயராது உழைத்து வருகின்றனர் என்றால் தமது முன்னோர்கள் காட்டிய வகுத்த அரும்பணிகளே காரணம் எனக்கூறலாம். இந்த வகையில் பார்க்கும் போது தலைசிறந்த அதிபர், ஆசிரியர்களைக் கொண்ட தலைமுறையினை உருவாக்குவதில் எமது அதிபர் தியாகராசாவின் கல்விப் பணி பெருமளவில் பங்களிப்பினை செலுத்துகின்றது எனத்துணிந்து கூறலாம்.

மேலும் பாடசாலையில் மட்டுமல்ல தமது சமுதாயத்தின் தேவைகளைப் பூர்ததி செய்வதற்கு அதிபர் சேவை மட்டும் போதியதன்று என உணர்ந்த அவர் அரசியல் களத்தில் புகுந்து வட்டுக்கோட்டைப் பாராளுமன்ற உறுப்பினராக (1970) தெரிவு செய்யப்பட்டார். தமது தொகுதி வாழ் மக்களின் தேவைகளை அவ்வப்போது, கேட்டறிந்து அவற்றை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டிய அவர், குறிப்பாக காரைநகர் மக்களுக்கென மருத்துவ வசதிகளை அங்கேயே பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வைத்தியசாலை விஸ்தரிப்பு, மத்திய தபாற்கந்தோர், குடிநீர் வசதிக்கான குழாய்நீர் விநியோகம் மின்சாரம், படித்த இளைஞர் வேலைவாய்ப்பு இன்னோரன்ன வசதிகளை பெற்றுக்கொடுத்ததோடு அமையாது, ''ஈழத்துச் சிதம்பரம்'' என அழைக்கப்படும் சிவன்கோயில் அமைந்த சூழல் எவ்விதத்திலும் புனிதத்துவம் கெடக்கூடாது என்பதற்காக கசூரினா கடற்கரைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கான உல்லாச விடுதி கட்டக்கூடாது என்பதற்கு ஆணிததரமாக தனது எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தவர்.

எனவே ஒருங்கு சேர்த்து நோக்குமிடத்து தலைசிறந்த கல்விமான்களுள் ஒருவரான எமது அதிபர் கலாநிதி ஆ.தியாகராசாவை ஈன்றெடுத்த காரையம்பதி, இன்று தலைநிமிர்ந்து, நிற்பதற்கு தனது வாழ்க்கைப் பயணத்தில் இறுதி மூச்சு வரை அரும்பாடுபட்டுழைத்த அவர்தம் பணியினை நினைவுகூரும் முகமாக வெளியிடப்படும் இம்மலர் வெளியீட்டுக் குழுவினரை உளமாரப் பாராட்டி, நிறைவு செய்கின்றேன்.

                                                                     நன்றி

                                               "ஆளுயர்வே ஊருயர்வு"
                            "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

                                                                                                                இங்ஙனம்
                                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                              செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                             மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                              11 – 05 – 2017