சொல்! செயல்! இரண்டிலும் வாழ்ந்து காட்டிய தியாகச்சுடர் அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா

சொல்! செயல்! இரண்டிலும் வாழ்ந்து காட்டிய

 தியாகச்சுடர் அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா 

Karai Thayaparan

 

 

 


எமது பார்வையில் உயர்திரு கலாநிதி ஆ தியாகராசாவின் வாழ்க்கைப் பணி பற்றி குறிப்பிடுவதில் மிகப் பெரிய பங்கு உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிறந்த சமுதாய பேரறிஞன் என சட்டெனச் சொல்லித் தொடங்கலாம். காரணம் சமூக சேவை என்பது கற்றுக் கொள்ளாமல் அனுபவத்திலும் வரமுடியும் ஆனால் திட்டமிட்ட சமூகப்பார்வை சமூகக் கொள்கை என்பது கற்றுக் கொண்டால் மட்டுமே வரமுடியும் என்பதற்கு கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் ஒர் சிறந்த ஒர் உதாரணம்.

அன்னார் இலங்கைத் திருநாட்டின் வடபால் அமைந்த கற்பக தருக்கள் நிறைந்த சைவமும் தமிழும் ஒங்கி வருகின்ற காரையம்பதியிலே வாழ்ந்து எமது வட்டுக்கோட்டை தொகுதிக்கும் மக்களுக்கும் ஆற்றிய சேவை அளப்பெரியதும் தன்னலமற்றதும் என்றால் அது மிகையாகதது. இப்படிப்பட்ட தியாகச் சுடர் 1981 ம் ஆண்டு அணைந்தது. இல்லை. அணைக்கப்பட்டது. 

ஓர் உன்னதமான நிலையை ஒரு தேசம் பெற வேண்டுமானால் முதலில் கடின உழைப்பு அவசியம். பின்பு அதற்கான கல்வித் தகைமை, அனுபவம், பயிற்சி, இப்படி முன்பின் ஆன சரித்திர வளர்ச்சி எல்லாம் இணைந்து கொண்டால் மட்டுமே அந்த ஊர் அது சார்ந்த தேசம் உண்மையான உச்சத்தை, ஒரு வளர்ச்சியை எட்டமுடியும். பக்கத் துணை இல்லாத இந்த வளர்ச்சிக்கு பல துறைகளும் துணை நின்றால் அது சிகரத்தை எட்ட முடியும். இவற்றை எல்லாம் ஒரே நாளிலோ ஒரு நோடிப் பொழுதிலோ பெறமுடியாது. நீண்ட நெடிய பயணம். கல்லும் முள்ளும் நிறைந்த அந்தப் பாதையில் பயணித்துப் பெற வேண்டிய வளர்ச்சியை, விடுதலையை எப்படி ஒரு சிறு காலத்துக்குள் கொண்டு வரமுடியும்? இது அனைவரும் சரியாக சிந்தித்து செயற்பட வேண்டிய விடயம். ஒற்றுமை என்பதும் அரசியற் கருத்து வேறுபாடுகளற்ற நிலமை என்பதும் பயத்தினாலோ அல்லது பணத்தினாலோ பெறமுடியாது. சரியான  புரிந்துணர்வு மற்றும் ஆரோக்கியமான முன்னேற்றத்தினால் மட்டுமே பெற முடியும். இதை மனதிற் கொண்டு செயற்பட்டவர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் ஆவர்.

இவற்றைச் சரியாக உணர்ந்த பொருளியல் ஆசான் ஆ.தியாகராசா அவர்கள். அவர் சுயநலமானவர் என்றால் மலேசியாவிலே சிறப்புற வாழ்ந்திருக்க முடியும். ஊருக்குள் வந்து ஆசிரியர் வேலை பார்த்திருக்கத் தேவையில்லை. பின்பு கொஞ்சம் முன் வந்து பாராளுமன்ற உறுப்பினராகக் கூட வந்திருக்கத் தேவையில்லை. மக்கள் நலம் ஒன்றே உயரியது என்பதை சிந்தனையால் கண்டு கெண்டதால் இவர் இறுதி வரை அது விடயமாகவே செயல்பட்டார். சிலருடைய உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவினால் ஒரு தலைசிறந்த சேவையாரை நாம் இழந்தோம். 

கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் தான் கற்றுக் கொண்ட கல்வியை சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படுத்தினார். மிக எளிமையாக நடந்து கொள்ளும் அவர் எந்தக் கால கட்டத்திலும் தன்னலம் கொண்டு செயல்படவில்லை. இவ்வுண்மையை அவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களிடமிருந்து அறிந்து கொள்ளமுடியும். அது மட்டுமல்ல அவர் மூலமாக வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொண்ட அன்றைய இளைஞர்கள் இன்றைய முதியோர்களாக உள்ளவர்களிடம் கேட்டறிந்து கொள்ள முடியும்.

பொருளியலில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் நல்ல இறைபக்தி கொண்டவர். பல துறைகளையும் ரசித்துப் பார்க்கும் கலைஞன். பொருளாதார வளர்ச்சியினாலேயே ஒரு சமூகம் தனித்து வாழும் தகுதியை பெற்றுவிடுகிறது  என்ற இறுக்கமான கொள்கை கொண்டவர். சோவியத் யூனியனை உருவாக்கிய புரட்சித் தலைவர் வளதிமிர் லெனினுடைய கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தனது தன்னலமற்ற சமூக சேவைக்கான பயணத்தை இறுதி வரை மனம் தளராது உறுதியாக மேற் கொண்டார். மாவடி அரசியல் மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவரது உயிர்பறிக்கப் பட்டமை அன்னாரது தளாராத கொள்கையை வெளிக் காட்டுகிறது.

நுனிப்புல் மேய்ந்த, நல்ல தலைமையின் கீழ் பயிற்சி பெறாத இளைஞர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றே எம்மவர் எம்மை அழிக்கும் காலம் தொடங்கி விட்டது. அன்று அவரை அரசியல் ரீதியாகக் குற்றம் சாட்டியவர்கள் இன்று அரச கட்டிலில் சுகபோகம் அனுபவித்துக் கொண்டு மக்கள் நலம், மக்கள் நலம் என்று கூக்குரல் போடுகிறார்கள். வேடிக்கை உலகம். உண்மை சொல்பவர்களை அழித்துவிடுகிறார்கள். பொய் சொல்பவர்களை மாலை போட்டு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கிறார்கள். இதுதான்  விந்தை உலகம். வேடிக்கை மனிதர்கள்.

அறிமின் அறநெறி அஞ்சுமின் கூற்றம் 
பொறுமின் பிறர்கடுஞ்சொல் போற்றுமின் வஞ்சம் 
வெறுமின் வினைதீயார் கேண்மை எஞ்ஞான்றும் 
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
                                                               –    நாலடியார் 172

அற நெறிகளை அறிந்து கொள்க. காலனுக்கு அஞ்சுக. அறியாதவர்கள் சொல்லும் தீய சொற்களைச் சகித்துக் கொள்க. வஞ்சகமென்பது உங்கள் நெஞ்சத்தை நெருங்காமல் காத்துக் கொள்க. தீய செயல் புரிவோருடைய நட்பை வெறுத்து ஒதுக்குக. எப்போதும் நல்லோர் கூறும் அறிவுரைகளையும் அறவுரைகளையும் கேட்டுத் தெளிவு பெறுக. நன்றி

                                                                                        தம்பையா தயாபரன் B.A
                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை தலைவர்
                                                                               ஆசிரியர், காரை ஆதித்தியன்                                                                                                         (காலாண்டு செய்தி இதழ்)