“தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும் நினைவுப் போட்டியும்.

"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு மீள்பார்வையும்
 நினைவுப் போட்டியும்.

New Microsoft Office Word Document0001

காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்கள் செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்க்காது உழைத்த மகான். அன்னார் காரைநகருக்கு ஆற்றிய தன்னலமற்ற ஆசிரிய சமூக பொருளாதார சேவைகளை நன்றியறிதலோடு நினைவு கூர்ந்து பாராட்டி எமது சபையினரால் ஓழுங்கு செய்யப்பட்ட அமரரது நூற்றாண்டு விழாவும், "தியாகச்சுடர்" நினைவுத் தொகுப்பு வெளியீடும் கடந்த 17.07.2016இல் St.Josef Pfarramt Röntgenstrasse 80, 8005 Zürich மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இத் தொகுப்பு எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழுவினரால் மிக மிகக் குறுகிய காலத்தில் வடிவமைக்கப்பட்டு சுவிற்சர்லாந்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ற்றன் கல்லூரியில் நடைபெற்ற எமது சபையின் முப்பெரும் விழாவில் கடந்த 12.01.2017இல் இந்நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

இந்நூலின் ஆக்கங்களை வாரம் தோறும் இணைய தளங்களில் பிரசுரித்து வருகின்றோம். இவ் வெளியீட்டின் ஒருவருடப் பூர்த்தியை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்களை ஊக்குவிக்கு முகமாக 'தியாக நினைவுப் போட்டி'    ஒன்றை ஏற்பாடு செய்கிறோம். அமரர் கலாநிதி ஆ. தியாகராஜா அவர்களின்  தனிப்பட்ட சமூக அரசியல்  வாழ்க்கை தொடர்பாக இந்நூலில் இருந்து எடுக்கப்பட்ட ஐம்பது வினாக்களடங்கிய கேள்விக் கொத்தினை இணையதளத்தில் 17.07.2017இல் வெளியிட இருக்கின்றோம். 

இக் கேள்விகளுக்கு சரியான பதில்களை 17.08.2017 இற்கு முன்பதாக swisskarai2004@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். சரியான பதில்களை அனுப்பும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் காத்திருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சரியான பதில்களை அனுப்பும் சந்தர்ப்பத்தில் வெற்றியாளர்கள் திருவுளச் சீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர் வரும் ஆதிரைத் திருவிழாவின் போது இடம்பெறும் முப்பெரும் விழாவில் வெகுமதியான பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.

எமது மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளர், கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களால் வழங்கப்பட்ட இந்நூலிற்கான அறிமுகம் இத்துடன் இணைக்கப்படுகின்றது.

இதுவரை எட்டு கட்டுரைகள் இணைய தளங்களில் வெளிவந்த நிலையில் போட்டியாளர்களின் வசதிக்காக துரித இடைவெளியில் இத்தொகுப்பின் மிகுதி ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.  என்பதை அறியத்தருகின்றோம்.

 

PHOTO

 

 

 

 

 

 

                                                       அறிமுகம்

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுத் தகவல்களையும், கல்வி, பொருளாதாரம், சமூக சேவைகள் ஆகிய தளங்களில் அன்னாரது பணிகள் பற்றிய தகவல்களையும் தாங்கி இந்நூல் உங்களிடம் வருகிறது. அறிமுகவுரை அன்னாரது சமகாலத்தைய சர்வதேச, பிராந்திய மற்றும் இலங்கையின் சிங்கள, தமிழ்த் தேசிய வரலாற்றுச் சூழல்களை விவரிக்கிறது. அதன் வாயிலாக நம் சமூகத்தின் வளர்ச்சியில் அன்னாரின் பங்களிப்பையும் வகிபாகத்தையும் விளக்க முற்படுகிறது.

தற்கால வரலாற்றின் தறிகெட்ட செல்நெறி

வரலாறு என்பது இன்று சமுத்திரத்தை அங்குலக் கணக்கில் அளந்து சொல்வது போல் ஆகிவிட்டது. கோடனுகோடி வகைகளாகப் பரந்து விரிந்த பிரபஞ்சம் மனித அறிவியலின் ஆணைக்குள் கட்டுண்டு சுருங்கிக் கிடப்பது போல் தோற்ற மயக்கம் தெரிகிறது. அல்லது அப்படிக் கற்பிக்கப்படுகிறது. கடந்த ஐந்து நூற்றாண்டுகளுக்கும் மேலான துரித அறிவியற் பிரயத்தனங்களின் தோள்களில் வசதியாக ஏறி நின்றபடி மூலதனம் என்ற பெரும்பூதம் பூகோள அரசியல், பொருளாதாரம், பண்பாடு என்பவற்றைப் பந்தாடிக் கொண்டிருக்கிறது. மேற்குலகின் ஒற்றை உலகப் பார்வையே சரியென்றுபடும் வகையில் ஒட்டுமொத்த மனித அறிவுத்தொகுதியே மாற்றப்பட்டிருக்கிறது. மனித உணர்வுகள், புரிதல்கள், தலையீடுகளுக்கு அப்பாற்பட்ட இராட்சத இயந்திரமாக மூலதனம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இயற்கையின் ஆரோக்கியமான பன்முகம் பூஞ்சை பிடித்துக் கிடக்கிறது. மறுதலையில் மூலதனம் போதிக்கும் ஒற்றைப் பண்பாட்டு ஏகாந்தவாதம் பூமியின் முகத்தில் தேமலாய், போலி முலாமாய் மினுமினுத்துப் படர்கிறது. குறிச்சித் தனித்துவம், வட்டாரம், பிரதேசம், குறுநிலம், மாவட்டம், மாகாணம், மாநிலம், நாடு ஆகிய சொற்கள் வழக்கிழந்து, கருத்திழந்து, முக்கியத்துவமிழந்து போய்க்கொண்டிருக்கின்றன. காலமும் இடமும் ஓடுங்கி பிரமாண்டமான அதிகாரத்தின் பிடியில் மூச்சுத் திணறி நிற்கின்றன. காலத்தையும் இடத்தையும் சார்ந்ததுதான் வரலாறு. மூலதனம் இன்று இம்மூன்றையும் தீர்மானிக்கும் தட்டிக் கேட்க ஆளில்லாத தண்டப் பிரசண்டனாக உருவெடுத்து நிற்கிறது.

இவற்றை எதிர்கொள்ளும் முயற்சிகள்தான் நமது ஊர்ச் சங்கங்களும், பண்பாட்டு நிகழ்வுகளும், ஒன்று கூடல்களும், எமது சமூகத்தின் முன்னாள் தலைவர்களை நினைவு கூர்வதும், வரலாற்றை மீள் கட்டமைப்பதும், புத்தக வெளியீடுகளும் என விரிவான வடிவம் பெறுகின்றன. அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்கள் உலகப் பெருந்தலைவர் அல்ல. ஆனால் தான் சார்ந்த சமூகத்தின் பல தேவைகளை உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்த மகான். உண்மையிலேயே சிறியதான ஆனால் பிரமாண்டமாகத் தோன்றுபவற்றைவிடவும் சிறிதாகத் தோன்றும் பிரமாண்டங்களே இயற்கையின் வரப்பிரசாதங்கள். அன்னாரின் எல்லை ஊர், மாவட்டம் என்பன. ஆனால் அவரது ஆளுமையும் சேவையின் வீச்சும் மிகப் பிரமாண்டமானது. 

கடந்த மூன்றரைத் தசாப்தங்களுக்கு முன்புதான்  உலக ஒழுங்கில் எதிர்பாராத மாற்றங்கள் ஆர்முடுகல் வேகத்தில் உந்தப்பெற்றன. அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் படுகொலை 1981இல்  நிகழ்ந்தது வெறும் விபத்தோ அல்லது பலர் கூறுவது போல தனிநபர் பயங்கரவாதம்மட்டுமோ அல்ல. வரலாற்றின் புறக்காரணிகளே இத்தகைய துயரச் சம்பவங்களின் பின்புலமாகும் என்பது அறிவியலாளர்களின் ஏற்புடைய கருத்தாகும். சர்வதேச, பிராந்திய, சிங்கள மற்றும் தமிழ்த் தேசிய அரசியல் வரலாறுகளின் பின்னணியை விளங்கிக் கொள்கிறபோதுதான் அன்னாரின் வாழ்க்கையும் நம் சமூக மேம்பாட்டில் அவரது பங்களிப்பையும் நாம் சரிவரப் புரிந்துகொள்ள முடியும்.

அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களது சமகாலத்தைய (சர்வதேச, பிராந்திய, தேசிய அரசியல்) வரலாற்றுப் பின்புலம்.

1970 களின் இறுதியில் தென்னாசியப் பிராந்தியத்தில் மையங்கொண்ட சர்வதேச நெருக்கடி முக்கியமானது. மேற்கத்தைய திறந்த சந்தைப் பொருளாதார நலன்களுக்கும் அதற்கெதிரான இந்தியத் துணைக்கண்டத்தின் பிராந்தியப் பொருளாதார, தந்திரோபாய, பாதுகாப்பு நலன்களுக்குமான முறுகலை இங்கு முக்கியமான பின்புலமாகக் கருதுகிறேன். 

ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் ஆட்சிக்காலம் வரை இலங்கையில் இந்திய இறக்குமதியே முதன்மையானது. போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு, சர்வதேச அரசியல் நிலைப்பாடு என பல வழிகளிலும் இந்திய- இலங்கை உறவு இறுக்கமாக இருந்தது. இந்தியாவிலும்; இலங்கையிலும் வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட தொழில் நுட்ப சாதனங்கள் பெரிதும் அறிமுகமில்லாத காலம். 

மேற்கில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தோன்றிய இயந்திர மயப்பட்ட முதலாளித்துவப் பொருளாதாரம் இந்தியாவில் 1960 களில் பெருமுனைப்புடன் உந்தப்பெறுகிறது. இதே காலகட்டத்திற்தான் இந்தோ- சீன யுத்தமும், இந்தோ- பாகிஸ்த்தான் யுத்தமும் இடம் பெறுகின்றன. அவற்றில் கணிசமான உளவுத் தகவல் சறுக்கல்கள் இந்தியத்தரப்பில் ஏற்படுகின்றன. இதன் விளைவாக இந்திய முதலாளித்துவத்தின் நேரடிப் பொருளாதார நலன்களைப் பேணவும், அதன் தேசியச் சந்தையைக் காக்கவும் சர்வதேசத் தரத்திலான தேசிய உளவுப் பிரிவான 'றோ' 1968 இல் இந்திரா அம்மையாரால் உருவாக்கப்படுகிறது. 

இந்தியத் துணைக்கண்டத்தில் இயந்திரமயப்படுத்தப்பட்ட, நகரமயமாக்கலுடன் கூடிய இந்திய சுதேசிய முதலாளித்துவப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இந்திரா காந்தி அம்மையாரின் இறுக்கமான கொள்கை. கிராமியப் பொருளாதாரம் பேசிய காந்தி அடிகளின் காலத்திலிருந்தே மறைமுகமாக இந்தியப் பெருந்தேசிய முதலாளிகளான டாட்டா, பிர்லா, சிந்துஜா, என விரல் விட்டு எண்ணக் கூடிய ஆதிக்க சமூகக் குடும்பங்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா ஆட்சிக்காலம் 1977 ம் ஆண்டு நிறைவுறும் வரை இந்திய – இலங்கையின் உறவு இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார,அரசியற் தேனிலவுக் காலமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தனா அதிரடியாக இந்தியாவுடனான மேற்கூறிய உறவுகளை நிறுத்தி அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் நலம் சார்ந்த திறந்த சர்வதேசப் பொருளாதாரத்தைப் பின்பற்றினார். ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் முன்னுதாரணமான பொருளாதார வெற்றிகளே அவரை இவ்வழிக்குத் தூண்டின.

பரப்பளவில் இலங்கை சிறயதெனினும் இந்தியச் சந்தை, அதன் சர்வதேச அரசியற் சமநிலை சார்ந்த நலன்கள் ஆகியன தொடர்பில் இலங்கை முக்கியமானது. இலங்கையின் அமைவிடம் காரணமாக அது இந்தியப் பாதுகாப்புடன் பின்னிப் பிணைந்த நிலையில் இருந்தது. இன்னும் இருக்கிறது. இந்நிலையில் ஜெயவர்த்தனாவின் அரசியற் பொருளாதாரச் செல்நெறிகளின் சடுதியான திருப்பம் இந்திரா அம்மையாரையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய சுதேசப் பெருமுதலாளிகளையும் குறிப்பாக அவர்களுடைய நலன் பேணும் "றோ" வையும் எரிச்சலூட்டியது. இலங்கையின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. 

இதே நேரம் கியூப, வியட்னாமியப் புரட்சிகளின் உந்தலில் உலகளவிலும் குறிப்பாகத் தென்னாசியாவிலும் 1960 களில் வளர்முகம் கண்ட பொதுவுடமைச் சித்தாந்தம் 1970 களில் தேய்நிலையடைந்தது, மாற்றாக 'தேசியவாதம்' மார்க்சிய முற்போக்கு முகமூடியோடு மேற்படி அரங்கை ஆக்கிரமித்தது. பிராந்திய வல்லரசான இந்தியா உண்மையில் பிற்போக்கு நிலவுடமைக் கருத்தியல் சார்ந்த தேசியவாதத்தை வைத்தே தம் மக்களின் புரட்சிகர சிந்தனைகளை மழுங்கடித்து வந்தது. திராவிடத் தனி நாடு கோரிய அண்ணாவுக்கும் வெறும் கோஷங்களைச் சார்ந்த நிலவுடமை தமிழ்த் தேசியம் மாற்று மருந்தாக வழங்கப்பட்டது. இது நிகழ்ந்தது 1967 இல்.

இதே காலப்பகுதியில் மேற்கூறியபடி இலங்கையிலும் 1960 களில் சிங்களவர் தமிழர் என்ற வேறுபாடின்றிய நிலையில் தொழிற் சங்கங்கள், புத்திஜீவிகள் தலைமை தாங்கிய மார்க்சிய அரசியல் ஓரளவில் வளர்ச்சியடைந்திருந்தது. ஆனாலும் அதை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்குத் தேசிய இனப்பிரச்சனையும் தொடர்ச்சியான வளர்நிலையில் இருந்தது. குறிப்பாகத் தமிழர் மீதான அசம்பாவிதங்கள் அதிகரித்தன.

1956 இல் தனிச் சிங்கள மொழிச் சட்டம்.

1957 இல் திருமலை நடராசன் காவற்துறையாற் படுகொலை செய்யப்பட்டது.

1958 இல் பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர் காவற்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது.

1958 இல் தமிழர்களுக்கு எதிரான நாடளாவிய வன்முறை.

1959 இல் பிரதமர் பண்டார நாயக்கா பிக்கு ஒருவரால் கொல்லப்பட்டது.

1961 இல் மூதூர் பா. உ. க. ஏகாம்பரம் அவர்கள் அறப்போரில் ஈடுபட்டபோது காவற்துறையால் தாக்கப்பட்டு நோயுற்று இறந்தது என்பவற்றை உதாரணங்களாகக் கூறலாம்.

1970 களில் பெரும்பான்மை சிங்கள தேசிய அடக்குமுறைக் கொள்கைகளும்  உச்சமடைய ஈழத்தமிழ்த் தேசியவாதம் முனைப்படைகிறது. இதில் முன்னையது ஒடுக்குமுறைத் தேசியவாதமாகவும், மற்றையது தற்காப்புத் தேசியவாதமாகவும் அமைந்ததை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இக்காலத்திலும் தமிழர் தரப்பில் ஐக்கிய இலங்கை நிலைப்பாட்டை ஆதரித்த பொதுவுடமைவாதிகள் பலர் இருந்தனர். தோழர் சண்முகதாசன், வி. பொன்னம்பலம், பேராசிரியர்கள் கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் தீவிர சிங்கள-தமிழ்த் தேசியவாதிகள் மீது அருவெறுப்புப் பார்வை கொண்டிருந்தார்கள். 

எனினும் தூரநோக்கின்றியதும் அதிகார அரசியலை மட்டுமே இலக்காகக் கொண்டதுமான சிங்களத் தலைமைகளின் வாக்கு மைய அரசியல் தொடர்ந்தது. இதனால் இலங்கையின் அரசியல் சீரழிவிற் சிக்கியது. முற்போக்கு மரபிலிருந்து சறுகி துருவ நிலைப்பட்ட சிங்கள, தமிழ்த் தேசிய இனவாதச் சேற்றுக்குள் சிக்கியது. தனது அரசியல் அதிகாரத்தைத் தக்க வைக்க ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா உருவாக்கிய புதிய அரசியலமைப்புடன் இலங்கை 1972 மே 22 இல் குடியரசாகிறது.

இப்போக்கின் எதிர்வினைகள் தமிழர் தரப்பில் முனைப்புற்றது. 1970 இல் தமிழ் இளைஞர் பேரவை, சிவகுமாரனின் செயற்பாடுகள் இடம் பெற்றன. 1971 இல் தமிழ்க் கட்சிகளின் இணைப்புக்கான கூட்டம் வல்வை ஞானமுத்தப்பா வீட்டில் இடம்பெற்றது. 1972 இல் குடியரசு யாப்பை எதிர்த்து தந்தை செல்வா தனது நாடாளுமன்றப் பதவியைத் துறந்தார். திருமலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி உதயம். இப்படித் தமிழர் தரப்பிலும் தேசிய அரசியல் வலுப்பெறுகிறது.   

தமிழர்களின் தேசிய அரசியல் எனும் தேர் 1976 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மூலம் கிழக்கு ரதவீதிக்குத் திரும்புகிறது. ஆனாலும் மிகவும் அமைதியாகவும், இனவாதமற்ற முறையிலும் இது நிகழ்கிறது. தந்தை செல்வாவின் நிதானமான ஆனால் தீர்க்கமான தலைமைத்துவம், கொள்கை, செயற்பாடுகள் ஆகியன அவரைச் சிங்கள தேசியத்துக்கு எதிரானவராக அடையாயாளங் காட்டவில்லை. ஆனால் அவரது மறைவின் பின்னர் தமிழ்த் தேசிய அரசியற் தலைமைகள் பெரும் தத்துவார்த்தச் சறுக்கலில் தடுமாறிப்போயினர்.

1970 இல் பிரபலமான கல்வியாளனாகவும் சமூக சேவையாளனாகவும் அரசியற்களம் இறங்கி வெற்றி கண்ட கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் வாழ்வும், அரசியல் வாழ்வும் 1981 இல் தமிழ்த் தேசியவாதி எனத் தன்னை அடையாளப்படுத்திய "தோழர்" சுந்தரம் என்பவரின் துப்பாக்கி வேட்டுக்களின் மூலம் முடிவுறுகிறது. அமரரின் மறைவுக்குக் காரணமான தமிழ்த் தேசியத் தலைமைகளின் தடுமாற்றமான, இரண்டுங்கெட்டான் அரசியற்போக்கு இறுதியில் அவர்களுக்கே ஆபத்தாய் முடிந்தது. இது பற்றிச் சிறிது விரிவாகப் பார்க்கலாம்.

கலாநிதி ஆ. தியாகராசாவின் அரசியற் பிரவேசமும் அது தமிழரசியலில் ஏற்படுத்திய அதிர்வலைகளும்.

மேடைப் பேச்சுக்கும் அரசியற் செயற்பாட்டுக்;குமான இடைவெளி தந்தைக்குப் பின்னர் அதிகரித்தபடியே சென்றது. அத்தகைய உணர்ச்சி நிலைப்பட்ட அரசியற் போக்கின் வெளிப்பாடே கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் படுகொலை. அன்னாரது படுகொலையும் அத்தகைய "உயிரகற்றல் அரசியலும்" தவறென்பது குறுகிய காலத்தில் நிரூபணமாகிறது. அவரைக் கொன்றவர் ஓராண்டிற்குள் (02- 01- 1982) கொல்லப்பட்டதும், எட்டாண்டுகளின் பின்னர் (13- 07 1989) த. வி. கூ. தலைவர் அமிர்தலிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும் இதையே நிரூபிக்கிறது. 

தந்தை செல்வாவிற்குப் பின்னரான த. வி. கூ. தலைமைகளின் போலித் தீவிரவாத அரசியலின் விளைவே இது. உணர்ச்சியூட்டி உசுப்பேற்றித் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற "அரியாசனம்" ஏறும் வகையிலான அரசியல் மோசடிகளின் விளைவே இது. மந்திரத்தில் மாங்காய் பிடுங்கித் தருவோம் என்பது போல் அடுத்த தேர்தல் தமிழீழத்திற்தான் என தந்தை செல்வாவின் வாரிசுகள் போலி அரசியலைப் பின்பற்றினர்.

71 ஆம் ஆண்டுக் குடியரசு யாப்பு நிறைவேற்றப்படுவற்குப் பத்து மாதங்களுக்கு முன்பு தேர்தலில் அப்பாத்துரை அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டை தேர்தற் தொகுதியில் அதிர்ச்சித் தோல்வி அடைகிறார். அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் பட்டியலில் போட்டியிட்ட புதுமுகமான கலாநிதி ஆ. தியாகராசா சிறிதளவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டியது "தளபதி" அமிர்தலிங்கம் அவர்களுக்கு அதிர்ச்சியளித்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்னாரின் படுகொலைக்கு முன்னரான மூன்று தசாப்தங்களில் ஆட்சியாளர்களின் தமிழர் விரோதச் சட்டங்கள், படுகொலைகள், வன்முறைகள் ஒரு புறமும் த. வி. கூ. பின்பற்றிய (அதிதீவிரவாத) மிதவாத -மேடைப் பேச்சு- வாக்கு அரசியல் மறுபுறுமும் தமிழரசியலில் ஒரு மடைமாற்றத்தை, உருமாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தன. செல்வாவின் நேர்மையான மிதவாத அரசியலின் இறுதிச் சுவாசத்திற்கும் (1977- 04- 27) முளுமையான ஆயுதப் போராட்டம் பிரசவிப்பதற்கும் இடையிலான (தடியெடுத்தவனெல்லாம் தண்டல்க்காரன் என்ற) குழப்ப அரசியற் சூழலிற்தான் அமரரது உயிர்பறிக்கப்பட்டது. 

இம்மாற்ற நிலை பத்தாண்டுகள் தொடர்ந்தது. 1977 இல் தந்தை செல்வாவின் மறைவு மற்றும் இந்திய நலன்களுக்கு எதிரான ஜே. ஆரின் ஆட்சி தொடங்கியதிலிருந்து இது தொடங்கியது. இறுதியில் 1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தம் வரை இக்குழப்ப அரசியல் தொடர்ந்தது. மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் ஓரளவு உறவுச் சமநிலை ஏற்பட்டது. அதுவரை இந்தியா திட்டமிட்ட முறையிலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் ஈழத்தமிழர் தேசிய அரசியலைத் தனது நலன்களுக்காகப் பயன்படுத்தியமையும் மேற்படி குழப்ப நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று. 

இன்றும் இலங்கைத் தீவின் இரு தேசிய இனங்களைத் துருவ நிலைப்படுத்தி இந்தியாவும் மேற்குலகும் இணைந்த சர்வதேசம் "சர்வசேதம்" செய்து மக்களின் குருதியில் தமது நலன்களை மாறிமாறித் தக்கவைத்துக் கொள்கிற நிலையே தொடர்கிறது. சிங்கள மற்றும் தமிழ் அரசியற் தலைமைகள் நிதானித்துச் செயற்படாவிட்டால் இந்து சமுத்திரம் அப்பாவி மக்களதும் அன்னாரைப் போன்ற தலைவர்களதும் குருதியினாற் சிவந்து கொண்டே இருக்கும்.


அன்னாரின் பன்முக ஆளுமை

காரைநகர் என்ற பல குறிச்சிகளின் தொகுதி ஓர் ஊரென உணர்வு பெற்றது அமரர் காலத்திலேதான். பல பிற்போக்குக் கருத்தியல்களால் பிளவுபட்டிருந்த காரைநகர் தமிழ்த் தேசியவாதத்தால் ஒன்றுபடுவதற்கு முன்னர் அன்னாரின் கால் நூற்றாண்டுக்கும் மேலான கல்விச் சேவையால் ஒன்றுபட்டது. பின்னர் அவரது அரசியற் பிரவேசத்தின் போது முன்வைக்கப்பட்ட பிரதேசவாதத்தை எதிர்கொண்டு ஒன்றுபட்டது. இன்று மீண்டும் மழைக்காலப் புற்றீசல்கள் போல் ஊர் ஒற்றுமைக்கு எதிரானவர்கள் பலர் அறியாமை, பதவி, புகழ், இன்னபிற தன்னலப் போக்குகளால் உந்தப் பெற்றுச் செயற்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. இது தற்காலிகமாக இருந்தால் நன்று. அன்பு, விட்டுக்கொடுப்பு, சேவை உணர்வு, பொறுமை, கடும் உழைப்பு, சகோதரத்துவம் என்பனவே சீரழிந்த எம் சமூகத்திற்கு இன்று அருமருந்தும், அன்னாருக்குச் செய்யும் நன்றியுமாகும்.

கல்வியே ஒரு பிரசையினதும், குடும்பத்தினதும், சமூகத்தினதும், தேசத்தினதும், ஏன் மொத்த உலகத்தினதும் நிரந்தர விடுதலையைப் பெற்றுத் தரும் என்பது திண்ணம். இதனாற்தான "என் (ஏன்) ஒருவன் சாந்துணையும் (சாகும் வரை) கல்லாதவாறு (கற்கக் கூடாது)" என வள்ளுவர் வினாவெழுப்பி அறிவுரை கூறுவார். அமரர் பணிஒய்வு பெற்றபின்னும் கற்றார். பல பட்டங்கள் பெற்றார். அது போலக்  காரைநகரினதும் அயலூர்களினதும் கல்வி மேம்பாட்டைத் தனது மூச்சாகக் கொண்டு அல்லும் பகலும் அரும்பாடுபட்டார். 

தமிழ்ச் சூழலில் சில தசாப்தங்களுக்கு முன்னர் "படிச்ச ஆள்" பற்றிய கருத்து முற்றிலும் வேறு பட்டது. அன்னாரின் காலத்தில் ஆசிரியத் தொழில் புனிதமானதாகக் கருதப்பட்டது. ஆங்கிலப் பதத்துடன் இன்று எம்மத்தியில் கவர்ச்சியாக உலாவரும் பிரத்தியோக மற்றும் தனியார் கல்வி நிறுவன முறை அக்காலத்தில் இல்லை. ஏனெனில் ஆசிரியத் தொழிலும் மருத்துவத் தொழிலும் தெய்வீகமாகப் பார்க்கப்பட்ட காலம். ஆதியில் தமிழ் மரபில் ஆசிரியரும், மருத்துவரும் தமது சேவைக்குப் பிரதியுபகாரமாகப் பணம் பெறுவதில்லை. தேவையேற்படின் உணவும், நீராகாரமும் மட்டுமே பெறுவர். அன்னார் அதையும் மீறி அத் தொழிலைத் தம்மக்கள் தொண்டாகக் கொண்டவர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தமிழ் மரபு. குருவே தெய்வத்தின் முன்னின்ற காலம். பள்ளி நாட்களில் அங்கு செல்லாமல் கோவிலுக்குச் சென்றால் அங்கேயே குருநாதர் தியாகராசா மாணாக்கருக்கு கிழுவங்கம்புச் சாத்துப்படி செய்யக் கூடிய அறமிக்க காலம். பெற்றோர் அதை ஏற்றுக் கொண்ட காலம்.  இன்று மாணாக்கருக்கு முன்பே ஆசான்கள் கடமை நேரத்திலும் கல்வியை விடுத்துத் "தெய்வீகப் பணி" புரிவதைக் காண்கிறோம். ஐயா! உங்களைப் போன்ற அறமிக்க ஆசான்களை நினைத்து ஏங்குவதைத் தவிர என் செய்வது?

படித்த ஆள் என்ற பதம் முழு அர்த்தம் கண்டதும், நம் சமூகத்தில் உன்னத நிலையில் இருந்ததும் அமரர் கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களது காலத்திற்தான். நமது தமிழ்ப் பண்பாட்டில் சங்க காலப் புலவரான ஒளவையார் வேள் பாரிக்கும் வேந்தர் மூவருக்கும் உற்ற தோழியாகவும், ஆலோசகராகவும் இருந்தார். அவர்களுக்கிடையிலான யுத்தத்திற்கு முன்னர் சமாதானத் தூதராகவும் பணியாற்றி இருந்தார். இது நம் சமூகம் கல்வியை மேன் நிலையில் வைத்திருந்தமைக்குத் தொல் ஆதாரம். அமரருடைய வாழ்விலும் காரைநகர் மக்கள் அவரை உன்னத நிலையில் வைத்திருந்தனர். வைத்திருக்கின்றனர்.

இளைஞர்- யுவதிகளின் உடலாரோக்கியமும் பிரதானம். அமரர் விளையாட்டுத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அது போல விளையாட்டுத் துறையை வளர்க்கப் பாடுபட்டார். ஏறத்தாள 75 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் மல்யுத்தத்தில் ஈடுபாடு உடையவராக இருந்தீர்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையை நினைக்க நெஞ்சம் வேகாமல் என் செய்யும் ஐயா?

கல்விச் சேவை போன்றே அவர் அரசியலிலும் பணம் சேர்க்கவில்லை. அவருடைய பொருளாதார அறிவும், அபிவிருத்திப் பணிகளும் முக்கியமானவை. இந்நூலில் வரும் கட்டுரைகள் பல அவற்றை நிரற்படுத்தி நிற்கின்றன. எனவே கூறுவது கூறலஞ்சியும், விரிவஞ்சியும் அதை விடுக்கிறேன். 

சுருக்கம்

ஈழத் தமிழரின் கல்வி வரலாற்றில்  அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் பங்களிப்பு காத்திரமானது. காரைநகரின் கல்வி, அரசியல், பொருளாதாரம், அடிப்படை வசதிகளின் அபிவிருத்தி, ஆன்மீகம், கலை, விளையாட்டுத்துறை எனப் பலதுறைகளின் மேம்பாட்டிலும் தனக்கென ஒர் தடம் பதித்துச் சென்றவர் அமரர். ஒரு சகல கலா வல்லவன் என்பது மிகையல்ல. 

அவரது சமகாலத்தில் ஈழத்தமிழர் தேசிய வரலாறு பாரிய உருமாற்றம் பெற்றதால் அவரது ஆளுமையின் முழுப் பயனையும் நாம் பெற்றுக் கொள்ள முடியாதது எமது துர்ப்பாக்கியமும் வரலாற்றின் முரண் நகையும் ஆகும். அவர் தனது அரசியல் நிலைப் பாட்டில் வளைந்து கொடுக்காத தன்மையும் அதற்குக் காரணமாகும் என்பது காய்தல் உவத்தல் இன்றிய உண்மையாகும். 

ஆழங்காற்பட்ட அவரது பன்முக ஆளுமை கனபரிமாணங்களை உடையது. அவற்றை வெளிக்கொணரும் வகையில் உயர்தர ஆய்வு நூலொன்று தொகுக்கப்படுவது அவசியம். அதற்கு முன்னோடியாக அமையும் வண்ணம் இந்நூலை ஆக்க முயற்சித்திருக்கிறோம்.   

                                                                    நன்றி

                                                      "ஆளுயர்வே ஊருயர்வு"
                                   "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                  இங்ஙனம்
                                                                        சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                               செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                     மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                               சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                   20.05.2017