சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் “தியாகத் திறன் வேள்வி 2017” தொடர்பான முன்னோடிக் கலந்துரையாடல்.

                       சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 
                  "தியாகத் திறன் வேள்வி 2017" தொடர்பான 
                           முன்னோடிக் கலந்துரையாடல். 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகின்ற "தியாகத்திறன் வேள்வி" மாணர்களுக்கான ஆளுமைத்திறன் போட்டிகள் இம்முறை 2017 இல் இரண்டாம் தவணை விடுமுறைக்கு முன்பதாக இடம்பெறவுள்ளது. இந் நிலையில் எமது சபையின் தயார்நிலை உறுப்பினர் திரு. அருணாசலம் லிங்கேஸ்வரன் அவர்கள் சமீபத்தில் காரைநகர் சென்றிருந்தார் தியாகத்திறன் வேள்வி 2017 க்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை அவர் முன்னிலையில் நடாத்துவதென மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு திர்மானித்திருந்துது. இதற்கமைய இவ் ஆலோசனைக் கூட்டம்  07.04.2017 வெள்ளக்கிழமை  அன்று பிற்பகல் 14.00 மணிக்கு காரை அபிவிருத்திச் சபைத் தலைவர் திரு. சிவாமகேசன் தலைமையில் காரைநகர் மாணவர் நூலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் பின்வரும் சான்றோர் கலந்து சிறப்பித்தனர்

1)    சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபரும் காரை அபிவிருத்திச் சபையின் பொருளாளருமாகிய கலாபூஷணம், பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்கள்.

2)    சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினரும் ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகருமாகிய கலாபூஷணம், பண்டிதை யோகலட்சுமி சோமசுந்தரம் அவர்கள்.


3)    சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உறுப்பினரும் வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய பிரதி அதிபருமாகிய திரு. அருணாசலம் வரதராஜன் அவர்கள்.

4)    முன்னாள் காரை அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வுநிலை வடமகாண கல்விப்பணிப்பாளரும், காரை அபிவிருத்திச் சபை உப தலைவருமாகிய திரு. ப. விக்கினேஸ்வரன் அவர்கள்.


5)    பாலவோடை இந்து தமிழ் கலவன் பாடசாலை அதிபரும் காரை அபிவிருத்திச் சபை செயலாளருமான திரு. ஆ.யோகலிங்கம் அவர்கள்.

6)    கலாநிதி  திருமதி. வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்
சிரேஷ்ட ஆங்கில விரிவுரையாளர் மொழியியற் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்;.

7)    வவுனியா சித்தி விநாயகர் வித்தியாலய ஆசிரியை திருமதி. பாராசக்தி வரதராஜன் அவர்கள்.

8)    காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திருமதி. சிவந்தினி வாகீசன் அவர்கள்.


9)    யாழ்ற்றன் கல்லூரி அதிபர் திரு. வே. முருகமூர்த்தி அவர்கள்.

10)    யாழ்ற்றன் கல்லூரி பிரதி அதிபர் திரு. ந. கிருஷ்ணபவான் அவர்கள்


11)    காரைநகர் சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய அதிபர் திரு. அருளானந்தம் சாந்தகுமார் அவர்கள்.

12)     காரைநகர் சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய பிரதி அதிபர் திருமதி. கமலாம்பிகை லிங்கேஸ்வரன் அவர்கள்.


13)    காரைநகர் வியாவில் சைவ வித்தியாசாலை அதிபர் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்கள்.
      
  மேற்படி கூட்டத்தில் உரையாடப்பட்ட முக்கிய விடயங்களும் தீர்மானங்களும்:

1.    கடந்த கால தியாகத்திறன் போட்டிகளில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்கள் எமது மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் இணைப்பாளரின் சிபார்சின் அடிப்படையிலும் சபையினரதும் குழுவின் ஏனைய உறுப்பினர்களினதும் ஏகோபித்த ஆதரவுடனும் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவின் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்.  

2.    இவ்வருடம் திருக்குறள் மனனப் போட்டி ஆண்டு இரண்டில் இருந்து ஐந்து வரையான மாணவர்களுக்கு மாத்திரம் நடாத்தப்படும்.

3.    தியாகத்திறன் போட்டிகளில் மாணவர்களின் விருப்பமும் பங்குபற்றலும் அதிகரித்திருப்பதால் அதற்கு ஈடுசெய்யும் வகையில் ஆசிரியர்கள் அதிபர்கள் தமது பங்களிப்பை மேலும் அதிகரித்தல். 

4.    மாணவர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த காரை சமூகத்தின் ஆளுமையை மேம்படுத்தவும் முத்தமிழின் மூன்றாம் கலையாம் நாடகக் கலையை மீண்டும் காரையூரில் துளிர்க்க வைக்கவும் இம்முறை நாடகப் போட்டிகள் அறிமுகப்படுத்தப் படும். 

5.    நாடகப் போட்டிகளில் பாடசாலை தாண்டிய ஏனைய பொது நிறுவனங்கள் பொது மக்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகள் ஆங்கில புரட்டாதி மாதமளவில் இடம்பெறும். ஆர்வமுடையோர் தற்போதிருந்தே தயார்செய்து கொள்ளலாம். போட்டியின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரையும் போட்டி பற்றிய அறிவித்தல் விதிமுறைகள் குறித்த அறிக்கையும்  விரைவில் வெளிவரும்.

6.    நாடகப் போட்டிகளுக்கான முதற் பரிசாக ரூபாய் ஒரு இலட்சம் உட்பட பரித்தொகையாக இரண்டு இலட்சம் ரூபாய்களை வழங்கவும் அமரர் சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக சுழல் கேடயம் ஒன்றை வழங்கவும் நம் சபையின் போஷகர்களில் ஒருவரான அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர் முன்வந்துள்ளார் என அறிவிக்கப்பட்டது.

7.    நாடகக் கலையின் முக்கியத்துவம் சமூக வளர்ச்சியில் அதன் பங்களிப்பு ஆகியன பற்றிய புரிதலுடனும் பெருமனதுடனும் அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் போட்டிகளுக்கு அனுசரணை நல்க முன்வந்தமை பற்றி கூட்டத்தில் நன்றியறிதலுடன் பாராட்டப்பட்டது.

8.    நாடகம் தவிர்ந்த ஏனைய போட்டிகள் ஆங்கில ஆடி மாதம் முதல் வாரத்தின் பின்னர் இடம்பெறும். இது குறித்த விரிவான அறிக்கையும் விண்ணப்பங் கோராலும் விரைவில் வெளிவரும். 

9.    தியாகத்திறன் வேள்வி போட்டிகள் மேலும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.

10.    ஆங்கில மொழிப் பயிற்சி தொடர்பாக முன்முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

11.    மாணவரின் ஆளுமை விருத்தியே காரைநகரின் வளர்ச்சியின் ஆதாரம் என்பதால் இப் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தவும் விரிவாக்கம் செய்யவும் உறுதி எடுக்கப்பட்டது.  

கலந்துரையாடலின் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

                                                               நன்றி

                                             "ஆளுயர்வே ஊருயர்வு"

                      "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".


                                                                                                   இங்ஙனம்.
                                                                               சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                        மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                     18.04.2017