க.பொ.த. சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக யாழ்ற்ரன்கல்லூரி அதிபரின் கருத்து

YARLTON COLLEGE

க.பொ.த. சா/த தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக 
யாழ்ற்ரன்கல்லூரி அதிபரின் கருத்து:-

க.பொ.த சா/த 2016 ம் ஆண்டுக்கான பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளை யாழ்ற்ரன் கல்லூரி பெற்றது மட்டுமன்றி அயல் பாடசாலைகளும் சிறந்த பெறுபேறுகளை பெற்றமை காரைநகரில் கல்வி மட்டம் சிறந்த நிலையில் இருப்பதனை எடுத்துக் காட்டுகின்றது. க.பொ.த உ.த 2016 பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ற்ரன் கல்லூரி மாணவி 3A சித்தியை பெற்றமை காரைநகர் கல்வி வளர்ச்சியில் அதுவும் ஓர் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.

    1990 ற்கு முன்னர் காரைநகர்ப் பாடசாலைகளில் க.பொ.த. (சா.த) பரீட்சையில் 8 பாடங்களிலும் 7D,6D பெற்ற மாணவர் எண்ணிக்கை மிக சொற்பளவில் காணப்பட்டமை காரைநகரில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் அறிவர். ஆனால் இன்று தீவக கல்வி வலயத்தில் காரைநகர் கல்விக்கோட்டமே முதன்மையாக இருப்பது பற்றி தீவக வலய கல்வித்திணைக்களத்தினர் அடிக்கடி அதிபர் கூட்டங்களில் கூறிவருகின்றார்கள்.  இதற்கு காரணம் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணமான சேவை மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ள காரை அபிவிருத்திச் சபையினர் பாடசாலைகளில் காட்டி வரும் அதீதமான அக்கறையுமென்பதும் ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. காரைநகர் பாடசாலைகளில் கற்றல் அடைவு மட்டம், பௌதீக வள மட்டம் என்பவற்றினை ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வளர்ப்பதற்கு வெளிநாடுகளிலுள்ள காரைநகர் அபிவிருத்திச் சபைகள் செய்து வரும் உதவிகள் காரைநகர்ப் பாடசாலைகள் தீவக வலயத்தில் முன்னிற்பதற்கு ஒர் உந்து சக்தி எனக் கருதுகின்றேன்.

    உதாரணமாக கனடா காரை கலாச்சார மன்றத்தினர் யாழ்ற்ரன் கல்லூரிக்கு கணனிகளை வழங்கி, கணனி ஆய்வு கூடத்தினை வளம் படுத்தியமையினால் (Computer Lap) எமது கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3 ஆண்டுகளாக   ICT(தகவல் தொடர்பாடல்தொழினுட்பம்) பாடத்திற்கு 100% சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கனடா காரை கலாச்சார மன்றத்தினர் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு நிதி உதவிகள் அளிக்கின்றமை, லண்டன் காரை அபிவிருத்திச் சங்கம் எமது கல்லூரி நூலகத்திற்கு புத்தக இறாக்கைகள் வழங்கி நூலகத்தை வளம்படுத்தியமை  சுவிஸ் காரை அபிவருத்திச்சங்கம் கல்லூரிக்கு போட்டோ கொப்பி மெசின் வழங்கியமை, அவுஸ்த்திரேலியா காரை அபிவிருத்திச்சங்கம் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கியமை என்பவை வெளிநாடுகளிலுள்ள காரை அபிவிருத்திச்; சங்கங்கள் எமது கல்லூரரிக்கு செய்தமை குறிப்பிடத்தக்கனவாகும். இதைவிட ஒவ்வோர் வெளிநாட்டு காரை அபிவிருத்திச் சபையினர் இன்னும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார்கள்.

எனவே தீவக வலயத்தில் காரைநகர் கல்விப் புலத்தின் முன்னேற்றத்திற்கு  காரை அபிவிருத்தியின் அமைப்புக்கள் ஆற்றி வருகின்ற இச் சேவைகள் தேசிய பரீட்சைகளில் எமது மாணவர்களின் அடைவு மட்ட வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிக் கொண்டிருக்கின்றன என்பதை மிகுந்த நன்றியுணர்வுடன் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன். தங்கள் சேவைகள் மேலும் தொடர எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.

       அதிபர்
வே.முருகமூர்த்தி