தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 17.07.2016இல் வெளியிட்ட நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

தன்னலமற்ற சேவையாளர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள்
அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின்    17.07.2016இல் வெளியிட்ட  நூற்றாண்டையொட்டிய 
"தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

DSC_4869-Copy-Copy
 
 

 

கலாநிதி (திருமதி) வீரமங்கை ஸ்ராலினா யோகரத்தினம்
சிரேஷட விரிவுரையாளர்
மொழியியல் ஆங்கிலத்துறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 

                    "தோன்றிற்  புகழொடு தோன்றுக அஃதிலார்
                             தோன்றலிற் தோன்றாமை நன்று"

    புகழ்பூத்த கல்விமான்களும், பணபலம் படைத்த வணிகப் பெருமக்களும் நிறைந்து வாழும் காரைநகர் என்ற அழகிய கிராமத்தை, நேசித்து, காதலித்து வாழ்ந்த பெருந்தகைகளுள் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள் முதலிடம் பெறுகின்றார். அவருடைய பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். அமரர் அவர்கள் காரைநகர் மண்ணுக்காக, மக்களுக்காக, காரைநகர் இந்துக் கல்லூரிக்காகத் தன்னையே அர்ப்பணித்து வாழ்ந்த ஒரு மகான். நிறைந்த கல்வி அறிவும், சிறந்த ஆளுமைப் பண்புகளும்,  சேவை மனப்பாங்கும், தியாக உணர்வும் கொண்ட அதிபர் தியாகராசா அவர்கள் தனது மண்ணுக்கும், மக்களுக்கும், காரைநகர் இந்துக்கல்லூரிக்கும் சேவை செய்வதற்காகவே தனது வாழ்நாளில் பெரும் பகுதியை  செலவழித்தவர் என்றால் அது மிகையாகாது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக காரைநகர் இந்துக் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் தன்னால் இயன்றவரை மிகவும் கடுமையாக உழைத்தவர் என்பதை காரைவாழ் மக்கள் என்றும் மறந்துவிட முடியாது. இந்தச் சேவை மனப்பாங்கு, அவரை அரசியலில் ஈடுபடுவதற்கு மேன்மேலும் உத்வேகத்தை வழங்கியது. ஒரு தாய் தனது குழந்தைகளுக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக பல இன்னல்களை எதிர் கொள்வது போல அதிபர் தியாகராசாவும் காரை வாழ் மக்களுக்காக பல இன்னல்களையும், சவால்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டவர். இந்த மனநிலையே அவரது மரணத்தையும் நிச்சயித்தது என்பதை இங்கே ஆணித்தரமாக கூறிவிடமுடியும். 

ஆசிரியராக, அதிபராக, காரைநகர் இந்துக்கல்லூரியில் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்கியவர். அவரிடம் படித்த மாணவர்கள் பலர் இன்றும் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். இந்துக்கல்லூரியில் பௌதீக வளங்களையும், ஆசிரிய வளங்களையும் பெற்றுக் கொடுத்து ஒரு சிறந்த மாணவ பரம்பரையை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. 


இவர் அதிபராகப் பொறுப்பேற்ற வேளையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், யாவற்றையும் சமாளித்து, எதிர்நீச்சல் போட்டு வெற்றியும் கண்டார். காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்காக அல்லும்பகலும் பாடுபட்டு, பாடசாலையை ஒரு சிறந்த 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்திய பெருமை அன்னாருக்கு உண்டு. பாடசாலையில் பல புதிய வகுப்பறைகள், ஆய்வுகூடங்கள், நூல்நிலையம், புவியியல் அறை போன்றவற்றைப் புதிதாகக் கட்டுவித்து, மாணவர்களின் கல்விக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தார். பல இன்னல்களுக்கு மத்தியிலும் மலேசியா சென்று பாடசாலைக் கட்டிடங்களுக்காக நிதி சேகரித்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. திரு. தியாகராசா அவர்களின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள்   ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் பலர் தெரிவு செய்யப்பட்டனர். 

கல்வியில் எவ்வளவு திறமையாகத் திகழ்ந்தாரோ அதேமாதிரி விளையாட்டுத்துறை, கலை, இலக்கியத்துறையிலும் ஆர்வம் காட்டினார் உதைபந்தாட்டத்திலும் சங்கீதக்கலையிலும் மிகவும் ஈடுபாடுடையவர். 

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தன்னலமற்ற சேவை செய்த அதிபர் அவர்கள் தனது படிப்பிலும் மிகுந்த அக்கறையும் ஆர்வமும் கொண்டவர். M.A, M.Lit பட்டத்தை முடித்த அவர் இந்தியப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

தன்னலமற்ற சேவையாளராகவும், மன உறுதி கொண்டவராகவும் விளங்கிய தியாகராசா அவர்கள் காரைநகர் இந்துக்கல்லூரியின் வளர்ச்சிக்காக மாத்திரமல்ல, அரசியலில் ஈடுபட்டு காரைநகர் மண்ணுக்கும் மக்களுக்கும் அளப்பரிய சேவைகள் செய்தவர்.அதிபர் பதவியில் இருந்து பதவிக்காலம் முடிவடையும் முன்னரே ஓய்வு பெற்றுக் கொண்ட அதிபர் அவர்கள் வட்டுக்கோட்டை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ்கட்சியில் சேர்ந்து, தளபதி அமிர்தலிங்கத்துடன் போட்டியிட்டு வெற்றிவாகையும் சூடிக்கொண்டவர்.

கலாநிதி தியாகராசா  அவர்கள் பரந்த சிந்தனையாளர் மாத்திரமன்றி சிறந்த சமூகசேவையாளருமாவார். ஊருக்கும், நாட்டுக்கும் உதவ வேண்டும் என்ற பேராசையில் அரசியல்வாதியாக மாறினார். அவரது கொள்கை சோசலிசக் கொள்கையாகும். தமது தொகுதியையும், நாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்பதே அவரின் இலட்சியமாகும்.
 
    பாராளுமன்றத்தில் பதவி வகித்த காலத்தில் காரைநகர் மக்களுக்கு மின்சார வசதி, குடிநீர், குழாய்நீர் விநியோகம் ஆகியவற்றை பெற்றுக் கொடுத்தார். காரைநகர் சிவன்கோவில் வீதி (புதுறோட்), கோவளம் வெளிச்சவீடு வீதி, ஆகிய இரண்டையும்  கிராமசபை நிருவாகத்தில் இருந்து பிரித்து நெடுஞ்சாலை இலாகாவுக்கு மாற்றம் செய்தார். கோவளம் வெளிச்சவீடு வீதி அகலமாக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரிதும் பயன் அடைந்தார்கள். சிவன்கோவில் வீதி, கோவளம் வீதி ஆகிய இரண்டிற்கும் பேரூந்து சேவையை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அவருடைய காலத்தில் காரைநகர் தபாற்கந்தோருக்கு புதிய கட்டிடம் ஒன்றும் அமைக்கப்பட்டது. வியாவிலில் ஓர் உபதபால் நிலையம் திறக்கப்பட்டது. காரைநகரில் ஓர் கிராமிய வங்கி திறக்கப்பட்டது மாத்திமல்ல கட்டிடம் நிருமாணிக்க உத்தேசிக்கப்பட்டது. 

அவர் தனது பாராளுமன்றப் பதவிக் காலத்தில் குடும்ப முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டதில்லை என்பது யாவரும் தெரிந்த உண்மையாகும். சுயநலம் பாராது பொதுநல எண்ணத்துடன் செயற்பட்ட அமரர் அவர்கள் தனது அறுபத்தைந்தாவது அகவையில் அகாலமரணத்தைத் தழுவிக் கொண்டது. யாராலும் ஜீரணிக்க முடியாத மாபெரும் துயரச் சம்பவமாகும்.

நல்லவர்களை இறைவன் சீக்கிரம் தன்னுடன் அழைத்துக் கொள்வான் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். அது போலவே அமரர் தியராகராசாவையும் இறைவன் தன்னுடன் அழைத்துவிட்டான் போலும். அவர் அகாலமரணத்தைத் தழுவாது இருந்திருந்தால் எமது மக்களுக்கு இன்னும் பல சேவைகளைத் தொடர்ந்தும் செய்திருப்பார். அவருடைய இழப்பு காரைநகர் மக்களுக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் ஓர் பாரிய இழப்பாகும். 

அவருடைய நல்ல எண்ணங்களும், உயர்ந்த சிந்தனைகளும் இப்பிரபஞ்சத்தில் நிலைத்து, நிறைந்து நின்று சிறந்த சேவையாளர்களையும், கல்விமான்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், தியாகிகளையும் உருவாக்கும் என்பதே உண்மையாகும்.

                                                  "ஆளுயர்வே ஊருயர்வு"
                       "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"

 

                                                                                                         இங்ஙனம்
                                                                                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                     செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                      சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                         மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                    13 – 03 – 2017