விளானை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட அமரர் பரமு கிருபாலரத்தினம் ஞாபகார்த்த உரை 19 – 02 – 2017

            Kirupa

    விளானை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட

   அமரர் பரமு கிருபாலரத்தினம் ஞாபகார்த்த உரை 19 – 02 – 2017


இன்று அமரர் பரமு கிருபாலரத்தினத்தின் மரணக் கிரியை இங்கிலாந்தில் நடைபெற்ற பொழுது விளானை சனசமூகநிலைய/கிராம அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் விளானை. களபூமி மக்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். அக்கூட்டத்தில் சிவஸ்ரீ சண்முகராஜக் குருக்கள், திரு கதிரவேலு தில்லையம்பலம், திரு வேலுப்பிள்ளை நடராசா, காரைநகர் தென்கிழக்கு கமக்குழுவின் தலைவர் திரு பொன்னம்பலம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் சிவா தி மகேசன் ஞாபகார்த்த உரையினைச் சபையின் முன் வாசித்து வழங்கினார். அவ்வுரையின் சுருக்கம் பின் வருமாறு:  

பரமு கிருபாலரத்தினம் எனும் பெயரினைத் தாங்கி இவ்வுலகில் உலாவிப் பிரிந்து சென்ற ஆன்மாவிற்கு  இந்நிகழ்ச்சி  கண்ணீர் அஞ்சலி  என்ற தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலும் இதனை ஒரு ஞாபகார்த்த நிகழ்வு  எனக்குறிப்பிட்டு ஞாபகார்த்த உரை என்ற தலைப்புடன் இவ்வுரை வழங்கப்படுகின்றது.

எவ்வாறரயினும் விளானை, களபூமி மக்களாகிய நாங்கள் எமது அன்பையும் மதிப்பையும் பெற்ற தம்பி கிருபாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளையில் அவர் செய்த நற்காரியங்களை நினைவுகூர்ந்து அவற்றினைப் பாராட்டும் முகமாகவும் இன்று கூடியுள்ளோம். ஒரு மனிதன் பிறந்தால் இறப்பது நிச்சயம். இந்நிகழ்வுகளைப் பிறப்பு, இறப்பு என்ற இரு சொற்களால்  வர்ணிக்கின்றோம். எமது பிறப்பு பெற்றோரினால் நிச்சயக்கப்படுகின்றது. பிறந்த அன்றே இறப்பும் இறைவனால் கணிக்கப்படுகின்றது. இவை இரண்டுக்கும் இடையே சிறப்பு என்ற  ஒன்றும் உள்ளது. அதனை  நாம் சிறுபராயம் முடிந்து பின்பு வாலிபத்தினைக் கடக்கும் பொழுது நம் வாழக்கை எப்படி அமைய வேண்டும் என்று சிந்திக்கும்  நிலையிலுள்ளோம். இச்சமயத்தில் புத்தரின் போதனைகளில் ஒன்று ஞாபகம் வருகின்றது. நாம் எப்படி  வாழ்க்கை அமைய வேண்டுமென்று நினைக்கின்றோமோ அப்படியே நம் வாழ்க்கை அமையும் (What we think, we become) என்பது புத்தர் பெருமானின் போதனையாகும். அதாவது நல்லதையே நாம் நினைத்தால்  நல்லவர்களாகவே மாறுவோம் என்பது அதன் தத்துவமாகும். இத்தத்துவம் அமரர் பரமு கிருபாலரத்தினம் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பொருத்தமாகும். மனிதனாகப் பிறந்தவன் இறைவனில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அதேவேளையில் மக்கள் சேவை மகேசன் சேவை என்ற வாக்கியத்திற்கிணங்க நம் சகமனிதர்களுக்குச் சேவை செய்து எல்லோரும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'; என்று செயற்படுவோமேயானால் நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ  வைக்கலாம். இதனைச் சங்க இலக்கியத்தில் பூங்கண்ணனார்  'யாதும் ஊரே யாவரும் கேளிர்;' என்று கூறியுள்ளார். இதற்கமைய அமரர் பரமு கிருபாலரத்தினம் தனது வாழ்க்கையினை நடாத்திச் சென்றார் என்று அவருடன் பழகியவர்கள் அறிவார்கள்.. 

கல்வி என்றால் படித்துப் பட்டம் பெறுகின்றோமோ இல்லையோ அதனை ஒரு  தொழில் பார்ப்பதற்கு வழிகாட்டும்  கருவியாகக் கருதுகின்றோம்.  ஆனால்; மனிதனை மனிதனாக வாழ வைப்பது தெய்வ நம்பிக்கை. அத்துடன்  அவனை ஒரு  பொறுப்புள்ள  மனிதனாக, சமூக சீலனாக நிலை நாட்டுவது கல்வியுடன் சேர்ந்த  கலை, விளையாட்டு போன்ற துறைகளாகும். கலை மனிதனை முழு மனிதனாக்குகின்றது.  ஆகவே நாம் நம் சிறார்களை  இத்துறைகளில் ஊக்குவிக்க வேண்டும். கல்விக்கும்  விளையாட்டிற்கும் அரசாங்கம் மட்டுமன்றி தனி நபர்களும் தேவையான உதவிகளைப் புரிந்து வருகின்றனர். ஆனால் கலையினைப் பொறுத்த வரையில் ஒரு சில பெற்றோர்களைத் தவிர பொது மக்களோ அல்லது பொறுப்பிலுள்ளவர்களோ அவ்வளவு அக்கறை செலுத்துவதில்லை. இவற்றினைக் கருத்தில் கொண்டு களபூமி கலையகம் உருவாகி ஓரளவு செயற்பட்டு வருகின்றது. இக்கலையகம் மேலும் வளரந்து ஒரு கலைக் கோயிலாக அமையவேண்டும் என்பது அதில் ஈடுபட்டுள்ளவர்களின் நோக்கமாகும். அதற்கிணங்க காணி நிலம் பெற்று முறைப்படி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பணியில் அமரர் பரமு கிருபாலரத்தினம் தன்னால் இயன்ற உதவிகள் செய்தது மாத்திரமில்லாமல் பொருளுதவியும் வழங்குவதற்காக முன் வந்திருந்தார். ஆனால் காலன் முந்திவிட்டான்.

எமது  கண்ணீர் அஞ்சலியில் 'நாம் இவ்வுலகிற்கு வந்தது ஒரு யாத்திரை என்றும் அந்த யாத்திரை முடிவதில்லை. அது ஒரு தொடராகும்' என்பதனைச் சுட்டிக் காட்டியுள்ளோம். பரமு கிருபாலரத்தினம் என்ற பெயரினைக் கொண்டு இவ்வுலகில் உலாவிய ஆன்மாவனாவது தனது அடுத்த யாத்திரையினைத் தொடரவுள்ளது. தம்பி கிருபாலரத்தினத்தின் வாழ்க்கையில் தொடர்பு  கொண்ட உறவுகளும் உற்றாரும் பனித்த கண்களுடன் அமரத்துவம் அடைந்த அவ்வான்மாவின் அடுத்த பயணத்திற்கு வழியனுப்பும்  நாள் இதுவாகும். அவ்வான்மாவானது சாந்தியடைந்து  அடுத்த பயணத்தினைத் தொடர்வதற்கு இங்கு கூடியுள்ள நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போமாக.


                                      ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!


                                                                              விளானை கிராம அபிவிருத்திச் சங்கம்

                                                                                       விளானை சனசமூக நிலையம்

                                                                                                 களபூமி கலையகம்