அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய “தியாகச் சுடர்” நினைவுத் தொகுப்புக் கட்டுரை

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டிய  "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்புக் கட்டுரை

 

PATKUNARAJAH

 

 

 

ஆக்கம் திரு. ச. பற்குணராஜா
உலக சைவ பேரவைத் தலைவர் (பிரான்ஸ்)


 

மலரும் நினைவுகள்…

 

பதவியை நீ தேடிப்போனால் பதவிக்குப்பெருமை, 
பதவி உன்னைத் தேடிவந்தால் உனக்குப்பெருமை.

பலர் பதவிகளைப் பயன்படுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் வெகு சிலரோ பதவிகளைப் பயன் படுத்திச்  சமூகத்தை வளப்படுத்துவார்கள். அமரர்  கலாநிதி ஆ.தியாகராசா அவர்கள் சமூகத்திற்கான சேவையில் தன்னை முழுவதுமாக இழந்தார்.

ஐம்பதுக்கு ஐம்பது எனக் கேட்டு இலங்கை அரசியலில் தனியிடம் பெற்ற அரசியல் தலைவராக விளங்கிய  திரு ஜி .ஜி  பொன்னம்பலம் அவர்கள் 1970ல் நடைபெறவிருந்த தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்துவதற்கு தகுதியும் பலமும் கொண்ட ஒருவரின் தேவை இருந்தது. காரணம் அந்தத்தொகுதியின் தளபதியாக விளங்கியவர் தமிழரசுக் கட்சியின் தலைவராக விளங்கிய தளபதி திரு அ. அமிர்தலிங்கம் அவர்கள். அந்தக் கோட்டையைத தகர்த்து எறிந்தவர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்கள்.

ஆதிபராக இருந்தவர் ஓய்வு பெற்று தமிழ்க்காங்கிரசின் அபேட்சகராக களமிறக்கப்பட்டார். முதல் ஊர்வலமும் கூட்டமும் காரைநகர் சைவ மகாசபையிலிந்து தொடங்கி வாரிவளவு பிள்ளையார் கோவில் வரை சென்று வீதியில் அமைந்திருந்த மேடையில் கூட்டம் நடைபெற்றது. தலைவர் ஜி .ஜி பொன்னம்பலமும் தியாகராசாவும் மற்றைய ஆதரவாளர்களுடன் ஆரவாரங்கள், வானவேடிக்கைகள், பூரண கும்பங்கள் நிறைந்த வீதிவழியே வந்துகொண்டிருந்தார்கள். நான் அப்போது வாக்களிக்கும் வயதை எட்டாத பள்ளிமாணவன். இதுவே எனது முதல் தரிசனமாக இருந்தது. தேர்தலில் 551 வாக்குகளால் வெற்றியீட்னார் என்ற செய்தி அதிகாலையில் தான் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த வெற்றி எதிர் வேட்பாளரால் மறுக்கப்பட்டு மீண்டும் வெற்றி என்பது உறுதிப்படுத்படுவதற்கு சிலகால இடைவெளிகள் தேவையாயிற்று.

காந்தியச் சிந்தனைகளில் மட்டுமன்றி, பொதுவுடைமைச் சிந்தனைகளாலும் தோய்ந்திருந்தவர்கள் எங்கள் ஊரில் இருந்தார்கள். அவ்வகையில்  ஆசிரியர் பானுதேவன், திரு நடராஜா, ஆசிரியர்  சுந்தரசிவம் (இவர் வட்டுக்கோட்டைத் தொகுதியில் லங்கா சம சமாஐக்கட்சியின் சார்பில் போட்டியிட்டவர்) மறைந்த பேராசிரியர  கலாநிதி இராமகிருட்ணன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். 

கலாநிதி. தியாகராஜா பொதுவுடைமைச் சிந்தனையாளர். ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கடமையாற்றியவர். அவர் மறைந்த பின்னர் அவருக்கான ஒரு நினைவு அஞ்சலிக் கூட்டத்தை திரு சுந்தரமூர்த்தி (தனிச்சிங்கள மசோதா கொண்டுவந்த போது அரசாங்க சேவையிலிருந்து விலகி தனிமனிதனாக  இருந்து காந்தீய வழியில் வாழ்ந்தவர்) அவர்களுடன் இணைந்து சைவமகாசபையில் ஏற்பாடு செய்திருந்தோம். அதில் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாராக விளங்கிய டாக்டர் எசு. ஏ. விக்கரமசிங்கா அவர்களின் 75வது பிறந்தநாள் விழாவை 1975 களில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் கொண்டாடிய போது அதில் பங்கு பற்றி அரசியலுக்கு அப்பால் தனது மனித நேயத்தையும் சோசலிச தத்துவத்தின் பக்கமே தனது சிந்தனைகள் உள்ளது என்பதை நிலை நிறுத்தினார்கள்.

வடக்கா, தெற்கா என்று ஊர் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்ததைக் காரணம் காட்டி நமது ஊருக்கு மின்சார வசதி கிடைக்காது மின் கம்பங்கள் வயலிற்கூடாகச் சென்று கடற்படைக்கு மின்சாரம் கிடைக்கப்பெற்றது. குடிநீர் என்பது காலங்காலமாக பிரச்சனையாக இருந்து வந்துள்ளது. மருத்துவ வசதிகள் குறைந்த நிலை. வுசதி உள்ளவர்கள் மூளாய் மருத்துவ விடுதியில் பயன் பெறுவார்கள். இந்த நிலையைப் போக்குவதற்கு  ஒருவர் எமது கிராமத்திற்கு காலத்தின் கட்டாயத்தால் தேவையாகவிருந்தது. அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் அவர்பட்ட துன்பங்கள் சிறிதல்ல.

இவ்விடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். யான் யாழ்மத்திய கல்லூரியில் பயின்று கொண்டிருந்த காலத்தில் காரைநகர் இந்துக்கல்லூரியில் 1974 களில் ஒரு சில மாணவர்களுடன் தான் உயர்தர வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஒரு தரவு அறிக்கையை சில நண்பர்களுடன் இணைந்து தயாரித்ததில் சுமார் 80 மாணவர்கள் வெளியிடங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயின்று வந்தது தெரியலாயிற்று.. அந்தக் காலத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியின் பதிலதிபராக திருவாளர்  சுப்பிரமணியம் ஆசிரியர் கடமையாற்றிவந்தார்கள். (அக்காலத்தில்  தரப்படுத்தல் என்னும் நடைமுறையால் யாழ்ப்பாணத்தில் கல்வி பயின்ற பலர் உயர்தர பரீட்சையை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா என்ற பின்தங்கிய பகுதிகளில் எழுதி பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பைப் பயன்படுத்தி வந்ததும் உண்டு.)

நீண்ட கலந்துரையாடல்களின் ஊடாக யாம் வாரிவளவு நல்லியக்கச்சபையில் உயர் கல்வியும் இந்துக் கல்லூரியும் என்ற கருப்பொருளில் ஓரு ஆலோசனைக்கூட்டம் ஏற்பாடு செய்து காரைநகர் இந்துக்கல்லுரியில் உயர்தர வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர் ஒருவரை அழைத்திருந்தோம். நாம் எதிர்பார்த்தது கல்லூரியின் வளர்ச்சிக்கு ஏதும் ஆலோசனை கூறுவார் என்பதே. ஆனால் விளைவு எதிர்மாறாக அமைந்தது. அவர் கூறியது இது தான்; நீங்கள் சிறு பிள்ளைகள், உங்களுக்கு அனுபவம் காணாது. இது என்ன சப்பறமா? (சப்பறம் – இது கோவிலில் விசேட திருவிழா நாட்களில் சுவாமியை வைத்து இழுத்து வருவது. பகுதி பகுதியாக இருப்பதை இணைத்து உருவாக்குவது.) பொருத்துவதற்கு?. நாங்கள் எவ்வளவோ காலம் பல முயற்சிகள் செய்தோம். முடியவில்லை என்று முடித்தார்.

இதனால் நாம் தளர்ந்து போகவில்லை. புதிலாக தொடர்முயற்சிகளில் ஈடுபட்டோம். முதல் முயற்சியானது அந்தக்காலத்தில் ஈசன் ஆசிரியர் உயர்தர மாணவர்களுக்காண Double maths கற்பித்தலில் யாழ்ப்பாணத்தில் புகழ் பெற்று விளங்கினார். அவர் வெலிங்டன் தியேட்டரின்( இப்போது அது இல்லை) பின்புறம் அமைந்திருந்த மேல் மாடியில் வகுப்புக்கள் எடுத்து வந்தார். அவரிடம் நண்பர் க. சிவபாதம் அவர்கள் மூலமாக அனுகினோம். அதற்காக பாடசாலை முடிந்ததும் ஆசிரியர் சுப்பிரமணியமும், நண்பர் சிவபாதமும் யாழ்ப்பாணம் வருவார்கள். யானும் பாடசாலை முடிந்ததும் அவர்களுடன் இனைந்து பல தடவை சந்தித்து உரையாடி ஈசன் ஆசிரியர் அவர்களின் அனுமதியைப் பெற்றோம் (பாராளுமன்ற உறுப்பினரான தியாகராஜா அவர்கள் வட்டுக்கோட்டைத் தொகுதியின் உறுப்பினர். காரைநகர் என்பது அதன் ஒரு பகுதி. அவர் ஊரை மட்டும் உயர்த்த முடியாது. மற்றைய கிராமங்களுக்கும் சேவை செய்யவேண்டிய தேவை உண்டு.) 

ஈசன் ஆசிரியர் அயற்கிராமமான வேலனையில் வசித்து வந்தார்கள். அவர் இந்துக்கல்லூரிக்கு வருகை தந்தார். பாராளுமன்ற உறுப்பினர் தனது  மகள் புனிதவதியையும் ஊரிற்கு அழைத்து கல்லூரியில் இணைத்தார் அவர்களுடன் விலங்கியல் கற்பித்தலில் சிவபாலராஜா சிறப்புற்று விளங்கினார். திரு ம.ம. நடராஜா அதிபராகப் பொறுப்பேற்றார்கள். யானும்  யாழ் மத்திய கல்லூரியை விடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் இணைந்து கொண்டேன். யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையில் விளம்பரம் வெளியாகியது. அயற் கிராமங்களான பொன்னாலை, வட்டுக்கோட்டை, சுழிபுரம், மூளாய், வேலனை ஆகிய பகுதிகளிலிருந்து மாணவர் வந்து கல்வி கற்கத் தொடங்கினார்கள்.  அந்த ஆண்டில் தோன்றிய உயர்தரப் பரீட்சையில் பங்கு பற்றிய பலர் பல்கலைக் கழகத்திற்கு தெரிவுசெய்யப் பட்டார்கள் என்பதே நற்செய்தியாகும்.

ஈசன் ஆசிரின் நியமனம் 3 மாதகாலத்திற்குள் கிடைக்காவிட்டால் அவர் விலகிச் சென்று விடுவார் என்ற உடன்பாட்டில் தான் ஒப்புக்கொண்டார். நியமனம் கிடைப்பது என்பது இலகுவானதாக இருக்கவில்லை (அப்போதைய கல்வி அமைச்சர் பதியூதீன் முகமது அவர்களது அன்றைய தரப்படுத்தல் திட்டமானது பாரியளவில் விவாதத்திற்குரியதாக இருந்தது.) ஈசன் ஆசிரியரது நியமன விடயமாக தொல்புரத்தில் அமைந்த கமநல ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைப்பதற்கு வருகை தந்த விவசாய அமைச்சர் கொப்பேகடுவ, தபால் தந்தி அமைச்சர் திரு குமராசூரியர் ஆகியவர்களிடம் ஒரு மகஐரை கையளிப்பதற்காக தம்முடன் என்னையும், நண்பர் சிவபாதம் அவர்களையும் தம்முடன்  அழைத்துச் சென்றார்கள்;. மகஐரை கையளித்து கூட்டம் முடிந்த நிலையில் திரும்பி வருவதற்கான சூழ்நிலை தாறுமாறாக அமைந்து விட்டது. காரணம் பாராளுமன்ற உறுப்பினரது வாகனத்தில் பாது காப்பு கருதி இரண்டு பொலிசார் அவருடன் சென்று விட்டனர். கடைசியில் சங்கானைப் பலநோக்கு கூட்டுறவுச் சங்க லொறியில் எங்களைப் பொன்னாலைப் பாலத்தில் கொண்டு வந்து விட்டார்கள். அங்கிருந்து நடைப் பயணத்தில் வீடு வந்து சேர நள்ளிரவாயிற்று.

இவ்வாறான பல அயராத முயற்சியின் விழைவாக ஈசன் ஆசிரியர் அவர்களது  நியமனம் கிடைக்கப்பெற்றது.  அவரது ஏழாண்டு அரசியல் வாழ்வில் வட்டுக்கோட்டைத் தொகுதியின் மக்களுக்கு தன்னாலியன்ற சேவையை செய்தார்.

எமது ஊரைப் பொறுத்த வரையில் இருண்டிருந்த ஊரிற்கு மின்னொளி கொடுத்தார். குடிநீர் விநியோகிக்கும் திட்டத்தை அமுல் படுத்தினார். சாதாரண மக்களிற்கான வைத்தியசாலையை ஏற்படுத்தினார். கல்வியின் பயன் கருதி பாடசாலைகளின் தரத்தை உயரச்செய்தார்; இவ்வாறு குறுகிய காலத்தில் நிறைந்த சேவை செய்து நன்றியுள்ளவர்களின் நெஞ்சத்தில் நிலைத்து நிற்கின்றார்கள்.

மரங்கள் மனிதர்களைப் பார்த்துக் கேட்டதாம் நாங்கள் எங்களிலிருந்து ஒரு சிலுவையை உருவாக்கினோம். நீங்கள் உங்களால் ஒரு யேசுவை உருவாக்க முடிந்ததா? என்று அது போல் எங்களால் ஒரு தியாகராஜாவை உருவாக்க முடியுமா?

                                                          "ஆளுயர்வே ஊருயர்வு"
                              "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்"


                                                                                                             இங்ஙனம்
                                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                            செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                              சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                 மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                          12 – 02 – 2017