“தியாகச் சுடர” நினைவுத் தொகுப்புக் கட்டுரைகள் இணையத்தில் தொடராக வெளிவர இருக்கின்றன

                      “தியாகச் சுடர” நினைவுத் தொகுப்புக்

                     கட்டுரைகள் இணையத்தில் தொடராக

                                  வெளிவர இருக்கின்றன

அன்புடையீர்!


கடந்த வருடம் அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் நூற்றாண்டையொட்டி விழாக்கள் தாயகத்திலும் உலகின் பலபாகங்களிலும் இடம்பெற்றன. சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினராகிய நாமும் கடந்த 17 – 07 – 2016 அன்று அன்னாரின் நூற்றாண்டு விழாவை சூரிக் நகரில் நடாத்தியிருந்தோம்.  பிரித்தானியாவில் இருந்து ஊடகவியலாளர் திரு.இளையதம்பி தயானந்தா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


அவ்விழாவின் போது அன்னாரின் நினைவாக ஒரு நினைவு நூலை மிகக்குறுகிய கால அவகாசத்தில் வெளியிட்டோம். முன்னுரை நீங்கலாக மொத்தமாக 30 கட்டுரைகளைத் தாங்கி அந்நூல் வெளிவந்தது. அன்னாரின் மாணாக்கரும் அவரை அறிந்தவர்களும் அவரைப்பற்றிய தமது மனப்பதிவுகளையும் அபிப்பிராயங்களையும் எழுத்தில் வடித்திருந்தனர். 


இதற்கு முன்னரும் தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. மலர்விழி கனகசபை அவர்கள் தொகுத்த சங்கீத பாடநூலொன்றையும் காரை அபிவிருத்திச் சபையூடாக 26.06.2013இல்  வெளியிட்டு மாணவர்களுக்கு இலவசமாக விநியோகம் செய்திருந்தோம்.
 

தொடர்ந்து எமது சபையின் பத்தாம் ஆண்டு நிறைவையொட்டி 08 -06 -2014 அன்று “காரை நிலா” என்னும் கட்டுரைகள் கவிதைகள் உள்ளடங்கிய மலரையும் வெளியிட்டோம். தாயகத்திலும் அந்நூலை அறிமுகம் செய்யவேண்டிய அவசியம் கருதி 07 – 09 – 2014 அன்று காரைநகர் இந்துக் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் “காரை நிலா” நூல் அறிமுக விழாவை ஏற்பாடு செய்திருந்தோம்.

 

கடந்த 09 – 01 2017 இல் திருவாதிரையையொட்டி யாழ்ற்றன் கல்லூரியில் நடாத்தப்பட்ட முப்பெரும் விழாவில் “தியாகச் சுடர்” நூல் காரை மக்களுக்காக அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பிரதிகள் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டன. இதற்கான செலவு முழுவதையும் அறக்கொடை அரசு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்கள் ஏற்றிருந்தார் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

நூல்கள் குடத்தில் வைத்த விளக்காக அன்றி வாசகர்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக “தியாகச் சுடர்” நூலின் பதிவுகளை ஒவ்வொன்றாக இணையங்களில் வெளியிட எமது மொழிää கல்விää கலை மேம்பாட்டுக் குழு கருதுகிறது.


முதலாவது பதிவாக காரைநகர் சின்னாலடியைச் சேர்ந்த முன்னாள் பிரபல ஆசிரியை புலவர். பூரணம் ஏனாதிநாதன் அவர்களுடைய கட்டுரை இணையதள வாசகர்களின் வசதிகருதிப் பதிவிடப்படுகிறது.


                                                      “ஆளுயர்வே ஊருயர்வு”
                            “நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”


                                                                                                             இங்ஙனம்
                                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                                             செயற்குழு உறுப்பினர்கள்
                                                                                               சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                   மொழி, கல்வி,கலை மேம்பாட்டுக் குழு
                                                                                                            04 – 02 – 2017

 


                  தியாக சீலர் அமரர் கலாநிதி தியாகராஜா

 

 

 பூரணம்  ஏனாதிநாதன்  புலவர் & பி.ஒ.எல்


காரை மண்ணில் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராஜா தலைசிறந்த கல்லூரி அதிபராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக வீறுநடை போட்டார் தீர்க்க தரிசியான அவர் தாயக மண்னை பொருளாதார அபிவிருத்தியே நிமிரச் செய்யும் என்னும் தாரக மந்திரத்துடன் கட்சி பேதமின்றி கண்ணியமாகச் செயற்பட்டார். நாட்டில் பசியும், பிணியும் நீங்கி வசியும் வளனும் சுரக்க அமைதியான பசுமை புரட்சி செய்தார். ஆளுமையும், ஆற்றலும், அர்ப்ணிப்பும், தியாக மனப்பான்மையும் ஆழமான நாட்டுப் பற்றும் மிக்க மாமேதை அமரர் தியாகராஜாவின் பொன்னான பணிகள் தொடரக் குறக்கீடுகள் வந்தமை தமிழ் மக்களது குறைத்தவமேயாகும்.


அமரர் காட்சிக்கு எளியவராக, கடும்சொல் இல்லாதவராக அன்பும் பணிவும் இன்சொல்லும் மிக்கவராகத் திகழ்ந்தார். சமய நெறியில் ஒழுக்க சீலராக ஆசாரமாக வாழ்ந்த அவர் செந்தமிழ் பற்று மிக்கவர். அமரர். ஆ.தியாகராஜா பாடசாலை அதிபரான போது நாட்டில் இலவசக் கல்வி அமுல் செய்யப்பட்டது. கல்வியை இடை நிறுத்திய மாணவர்கள் பலர் உயர் வகுப்பு வரை உள்ள சயம்பு பள்ளிக் கூடத்தை நாடினர். இதனால் வகுப்புக்கள் தொடர பல நெருக்கடிகள் ஏற்பட்டன அதிபர் கூரிய மதிநுட்பத்தாலும் தூய சிந்தனையாலும் வெற்றிகண்டார். பிரபலமான கல்விமான்களை உறுதுணையாக தன்னனச் சுற்றி அமைத்துக் கொண்டார். சயம்பு பள்ளிக்கூடம் நாளொரு வண்ணமும் பொழுதுதொரு மேனியுமாக வளர்ச்சி பெற்றது.


பாடசாலையின் பெருவளர்ச்சிக்கு பெரும் திட்டங்களை அதிபர் தீட்டிச் செயற்படுத்தினார். பௌதீகவளவிருத்தி, இணைபாட விதான அபிவிருத்தி, விஞ்ஞான ஆய்வுகூடம், நூலகம் மனையியல்கூடம், நடராசா ஞாபகார்த்த மண்டபம், சயம்பு மண்டபம், விளையாட்டு மைதானம் எனப் பாடசாலைப் பணிகள் பன்முகப் படுத்தப்பட்டன. இராசாயன ஆய்வுகூடம், பௌதீக ஆய்வுகூடம், உயிரியல் ஆய்வுகூடம், விலங்கியல் ஆய்வுகூடம் எனத் தனித்தனியாக ஆய்வு கூடங்கள் நிர்மணிக்கப்பட்டன.


மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றலைத், திறமைகளை வெளிக்கொணர பாடசாலையில் சஞ்சிகை வெளியிடப்பட்டது. 1948இல் "இந்துக் கல்லூரி" என்ற பெயரிலும், 1953,1956, 1959 ஆம் ஆண்டுகளில் "சயம்பு" என்ற பெயரிலும் சஞ்சிகை வெளியிடப்பட்டது. 1950 ஆகஸ்ட் 19முதல் 21மஆம் திகதிவரை முன்று நாட்கள் கல்லூரி வைரவிழா கொண்டாடப்பட்டது. 1963ல் பவளவிழாவும் 1968ல் முத்து விழாவும் சிறப்பாக நடைபெற்றன.


அதிபர் பொருத்தமான தம் பெயருக்கு பொருந்தத் தியாக உள்ளத்துடன் இந்துக் கல்லூரி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியன. பாட்டுக்கொரு புலவன் பாரதியின் வரிகள்


      மனதி லுறுதி வேண்டும்
      வாக்கினி லேயினிமை வேண்டும்
      நினைவு நல்லது வேண்டும்
      கண் திறந்திட வேண்டும்
      காரியத்தில் உறுதி வேண்டும்.
அதிபர் பணியில் ஒலித்தன.
இதனையே பொய்யா மொழிப் புலவரும் "எண்ணித் துணிக கருமம்" என்றும்

 "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
 திண்ணியர் ஆகப்பெறின்"

என அதிபரின் திட்ப நுட்ப பணிக்கு வலுச் சேர்கிறார்.

        "கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடு அல்ல மற்றயவை"

அதிபரின் மகத்தான சாதனையால் உருவான கேடில் விழுச் செல்வமான கல்வியை காரைநகர் மாணவர்கள் மட்டுமன்றி அயலூரில் உள்ள மாணவர்களும் வந்து  இக் கல்லூரியில் கற்று தேர்ச்சி பெற்றனர். அவர்கள் வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, கணக்காளர்களாக, வர்த்தகர்களாக, விவசாயிகளாக, பலதுறைகளிலும் பணியாற்றுகின்றனர். உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் பணிசெய்யும் அவர்கள் வீட்டிற்கும், சமூகத்திற்கும், பிறந்தகத்திற்கும் பேருதவி செய்கின்றனர்.

மாபெரும் மேதையாகக் கல்வியாளராக பாடசாலையை உச்சநிலைக்கு கொண்டு சென்ற அமரர் கலாநிதி ஐம்பத்தேழு வயதில் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசியலில் இறங்கினார். வட்டுக் கோட்டை அபேட்சகராக 1970ல் தேர்தலில் வெற்றிபெற்றார். தபாற் கந்தோரில் புதிய கட்டிடம், கிராமியவங்கி, காரைநகர் பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்கள், காரைநகர் பேருந்து சாலை, சிவன் கோவில்வீதி, கோவளவீதி விஸ்தரிக்கப்பட்டு பஸ் சேவை இடம் பெற்றமை, இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு என எண்ணற்ற உதவிகள் குறுகிய காலத்தில் பொருளாதார விற்பன்னரால் நிறைவேற்றப்படடன.

 

1977இல் பொருளியல் சாதனையாளர் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றதால் அவரது பணிகளை தொடர முடியவில்லை.  
     
               " தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
                 கற்றனைத்து ஊறும் அறிவு"

கல்விச் சாதனையாளர் மேலும் கல்வியில் கருத்தூன்றி கலாநிதிப் பட்டம் பெற இந்தியா சென்றார். "தென்னாசிய பொருளாதாரம்" என்ற ஆய்வு நூலை எழுதினார். புதுடெல்லிப் பல்கலைக்கழகம்  அவரை கௌரவித்து டாக்டர் (கலாநிதி) பட்டம் வழங்கியது.

 

ஓளிபடைத்த கண்ணினனாய் உறுதி கொண்ட நெஞ்சினனாய் கல்வியிலும், பொருளாதாரத்திலும் பட்டொளி வீசிப் பறந்த பெரும் சாதனையாளர். அமரர். ஆ.தியாகராஜா காலத்தில் அடியேனும் வாழக்கிடைத்தது பெரும்பேறாகும். அதிபருடன் கலந்துரையாட அவரது சிந்தனைகளைச் செவிமடுக்க பெரும் வாய்ப்புக்கள் கிடைத்தன. நன்றி மறவாத காரைநகர் மக்களும், கல்விச் சமூகமும் காரை. இந்துக்கல்லூரியை பெருவிருட்சமாக வளர்த்த மாமேதை பெயரில் இயங்க வைக்க விரும்பினர். கல்லூரியில் இதுதொடர்பான உரையாடல்கள் இடம்பெற்றன. நன்றி மறப்பது நன்றன்று, செய்நன்றி மறந்தால் உய்வில்லை என அப்பெயரிடலை ஆதரித்து நான் ஆணித்தரமாக வாதிடுவேன். ஆரியக் கூத்தாடினாலும் பாடசாலை வளர்ச்சியிலேயே சாம் துணையும் கண்ணும் கருத்துமாக இருந்த அதிபர் கலாநிதி அவர்கள் என்னிடம் "குதர்க்க வாதிகளுடன் வாதிடாதே"எனப் புத்திமதி கூறினார். மரணத்திரை இடுவதற்கு இரண்டு தினங்களுக்கு முதல் காலை வேளை பேரூந்தில் பாடசாலை சென்றேன். அதிபர் பெரிய ஆலடியில் பேரூந்தில் எறினார். பிரயாணிகளின் இருப்பிடம் நிறைந்து இருந்ததால் நான் எழுந்து அவரை இருக்கச் செய்ய விரும்பினேன், செந்தமிழ் சிற்பியாகிய அமரர். அகமும் முகமும் மலர்ந்து நகைச்சுவையுடன் "புலவரே அமரும், அடியேன் நிற்கின்றேன்" எனக் கூறினார் அவரது இன்னுரைகள் உள்ளத்தில் இன்றும் பசு மரத்தாணி போலப் பதிந்துள்ளன.

 

இவ்வளவு விரைவில் அதிபருக்கு பேரிடி விழும் என நாம் துளிகூட நினைக்கவில்லை. எனது வேலை நிமிர்த்தமாக வேம்படி மில்லிற்குச் சென்றேன். அங்கு ஒரு கொடுஞ்சொல் செவிகளைப் பிளந்தன! அதிபரை மாவடியில் சுட்டுவிட்டார்கள் என்றனர்.! அங்கு நின்றவர்கள் நிலை தடுமாறினார்கள். எல்லோரும் வெம்பி வெம்பி அழுதோம். காரைநகர் சோகமயமானது. வலந்தலை சந்திக்கு கிழக்கே நன்னீர்த் தேக்க பூமியில் இடம் பெற்ற இறுதிச் சடங்கில் காரைநகர் மக்கள் அனைவரும் சிறுவர், பெரியவர் என்ற வேறுபாடின்றி ஒன்றாகத் திரண்டு அன்னாருக்கு தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.

 

அவர் பணியைத் தியாகத்தை நினைவு கூர்ந்து நூற்றாண்டு விழா எடுக்கும் அனைவருக்கும் அன்னாரின் ஆன்மா ஆசி வழங்குகிறது.

 

 பார்வையிட தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும். 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2017/02/Thiagach-Chudar-internet-03.02.2017.pdf