காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் முருகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி

 

                  10ம் ஆண்டு நினைவஞ்சலி 
paramalingam

                                  அமரர் பரமலிங்கம் முருகேசு

 

பிறப்பு : 30 ஒக்ரோபர் 1938                                                 இறப்பு : 20 டிசெம்பர் 2006
    
திதி : 28 டிசெம்பர் 2016

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமலிங்கம் முருகேசு அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓர் பத்து ஆண்டுகள்! 
விழியோரம் வழியும் ஈரம் 
இன்னமும் காயவில்லை!! 
கன்னங்களில் காய்ந்த உப்பு 
இப்போதும் கரிக்கின்றது!!!

கடவுள் 
உனக்கு எல்லாச் செல்வத்தையும் 
அதிகமாகவே கொடுத்திருந்தான்! 
ஆனால் உன்னை எங்களிடம் இருந்து பிரித்துவிட்டான்!!

எங்கள் அறுவருக்கும் எமதன்னைக்கும்
தந்தையாய் தாயாய்
நண்பனாய் நல்லாசானாய் 
தலைவனாய் சேவகனாய் 
எல்லாமுமாய் இருந்தாய் நீ! 
பின் எதுவும் இல்லாமல் போனாய் 
உன் நினைவுகளை மட்டும் 
எங்களுக்குள் நிறைத்து விட்டு!

வறண்ட நிலத்திலும் வாழும் 
கற்பகதருக்கள் போல 
எங்களை வளர்த்து விட்டு 
உன் பேர் சொல்லும் பிள்ளைகளாய் 
நிமிர்த்தி நிறுத்திவிட்டு,
எங்களை தனியே விட்டு விட்டு போய் விட்டாய்

எங்கள் காரை மண்ணில் மட்டும் 
உப்பு அதிகம் இல்லை 
நீ போட்ட சோற்றில் 
நீ வளர்த்த வளர்ப்பில்
நீ காட்டிய உறவுகளில் 
எல்லாத்திலுமே அதனை 
அளவுக்கதிகமாகவே போட்டிருந்தாய்!

ஆதலினால் நன்றியுள்ள ஆறு ஜீவன்களாய் நிமிர்ந்திருக்கின்றோம்! 
அதற்கு மேல் அம்மா 
இன்று எங்களுக்கு அப்பாவுமாய்!

பாணந்துறையும், 
தங்கோடையும், 
பண்டத்தரிப்பும், 
இப்போதும் உன் பெயர் சொல்லும்.

வேறு என்னப்பா உங்களுக்கு சொல்லுவது? 
மறுபிறப்பு என்ற ஒன்று இருந்தால் 
பேரப்பிள்ளைகளை 
கல்லாப் பெட்டியில் உன் மடி மீது இருந்தி 
கன்டோஸ் சொக்கிலட் களவாக நீ கொடுக்க வேண்டும் 
அதை நாம் கண்டிக்க வேண்டும்!

உன் காரில் ஏற்றிக் கொண்டு 
பொன்னாலைப்பாலத்தின் அழகு நீ காட்டிவர வேண்டும்! 
மணக்காடு அம்மன் கோவில் வீதியில் அவர்களுடன் உலா வரவேண்டும்! 
வயலில் அரிவு வெட்டும் சூடு அடித்தாலும் காட்டிக்கொடுக்க வேண்டும். 
நாங்களும் அம்மாவும் அதனை பார்த்து மகிழ்ந்திருக்க வேண்டும்!

உங்கள் பிரிவால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்

தகவல்
குடும்பத்தினர்