எமது கிராமமும் சுவிஸ் வாழ் காரை மக்களும்

         skdb-logo          

                                                                   உ
                                              சிவமயம்

              நன்றி மறப்பது நன்றன்று: நன்று அல்லது
                      அன்றே மறப்பது நன்று- குறள்

எமது கிராமமும் சுவிஸ் வாழ் காரை மக்களும்

அன்புடையீர் வணக்கம்.

"பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே" என்ற கூற்றிற்கு இணங்க தங்களின் பங்களிப்பின் மூலம் 2004ஆம் ஆண்டில் இருந்து நாம்  எமது தாய் சங்கமான  காரைநகர் அபிவிருத்திச்சபையுடன் இணைந்து பல பணிகளும், சேவைகளும் ஆற்றிவருகின்றமை யாவரும் அறிந்ததே!

சுவிற்சர்லாந்து வாழ் அன்பான காரைநகரின் உறவுகளின் உதவிக்கரத்தால் நாம் எமது கிராமத்துச் சிறார்களின் கல்வி மேம்பாட்டிற்கான உதவிகள், மருத்துவ உதவிகள், தொழில்சார் ஊக்கிவிப்புக்கள், சான்றோர்கள், பெரியோர்கள், கலைஞர்கள் மதிப்பளிப்புக்கள், மன்றத்திற்கான கீத இறுவெட்டு, புத்தகங்கள், நாட்காட்டிகள், வெளியீடுகள், காரைத்தென்றல், காரைநிலா அறிமுகவிழா, முப்பெரும்விழாக்கள், மக்கள் சந்திப்புக்கள். காரை மண்ணின் மாணவர்களின் ஆளுமை விருத்திக்காக நடாத்தப்படும் போட்டிகள், எமது சகோதர அமைப்புக்களான லண்டன், பிரான்ஸ் நலன்புரிச்சங்களின் ஆண்டு விழாக்களில் கலந்து சுவிஸ் வாழ் காரை இளையோரின் கலைத் திறன்களை வெளிப்படுத்தி ஊக்குவித்தல் என எமது சேவைகளும் பணிகளும் விரிவடைந்து செல்கின்றன. இச் செயற்திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணiயாகவும் ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை சபையின் வளர்ச்சிக்கும் சந்தாப் பணமாகவும், அன்பளிப்பாகவும் பேருதவிகள் வழங்கிய அனைத்து சுவிஸ் வாழ் காரைநகர் மக்களுக்கும், முதற்கண் சபையின் மனமார்ந்த சிரந்தாழ்ந்த நன்றிகள் பல கோடி.

அன்பான சுவிஸ் வாழ் காரை உறவுகளே! 

15.05.2016இல் எமது ஆண்டு விழாவான காரைத்தென்றல் நிகழ்வுகளுக்காக தங்களுடன் கடிதத் தொடர்பிணை ஏற்படுத்தியிருந்தோம்.   காரைத்தென்றல்-2016 சிறப்புற நடைபெற  நாம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது பணமாகவும் பொருளாகவும் தந்து உதவியோருக்கும், நேரம்பாராது தொண்டாற்றி உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கலந்த பாராட்டுதல்கள்.

சுவிஸ் காரைத்தென்றல், பிரான்ஸ் காரைஸ்வரங்கள், லண்டன் காரைக்கதம்பம் -2016 ஆகியவற்றுக்கு கலை நிகழ்வுகள் வழங்கிய மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள்  அனைவருக்கும் எமது நன்றிகள். 

 17.07.2016இல் எமது சபையின் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு மிக மிகக்குறுகிய காலத்தில் அமரர். கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு விழாவின் நிறைவையொட்டிய  "தியாகச்சுடர்" நினைவுத் தொகுப்பினை வெளியிட முடிவு செய்த போது அதற்குப் பூரண அதரவு தந்து அணுசரனை வழங்கிய S.K.T நாதன்கடை உரிமையாளர் "அறக்கொடை அரசு" திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு முதற்கண் நன்றி கூறவேண்டியவர்களாக காரைநகர் மக்களாகிய நாம் உள்ளோம்.
 அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா நூற்றாண்டில் அவருடைய தனிப்பட்ட மற்றும் சமூக சேவைகளின் பதிவுகளை இன்றைய இளம் சமுதாயத்தினர்க்கு எடுத்துரைக்கும் சாதனமாக "தியாகச் சுடர்" நினைவுத் தொகுப்பு நூல் உங்கள் கைகளில் மலர அதரவுக் கரம் நீட்டிய திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களை காரைநகர் மக்கள் மறக்க மாட்டார்கள். ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் அடுத்த தலைமுறையினர் எமது கிராமத்தை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு இந் நூல் உதவி புரியும் என்பதில் ஐயமில்லை.

 காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளிவிழா அதிபரான அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா செய்யும் கருமத்தில் எப்போதும் செம்மை கண்டவர். கடமையே பெரிதென்று காலம் பார்காது உழைத்த மகான். அவரது தன்னலமற்ற ஆசிரிய சமூக சேவையை பாராட்டி எடுக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புற நடைபெற உழைத்த, பல வழிகளிலும் உதவி புரிந்த அன்பர்கள் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றோம்.


                                     காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
                                                  ஞாலத்தின் மாணப் பெரிது
                                                                                                       -குறள்

சுவிஸ் காரை அபிவிருத்திசபையின் வளர்ச்சிக்கு வித்திட்ட அன்பான உறவுகளே! 

எமது சபையின் செயற்திட்டம் பற்றிய பொருளடக்கம் நாம் கடந்த காலங்களில் நூல்வடிவில் வெளியிட்டு இருக்கின்றோம். அதற்கமைய 2007இல் வரவு,செலவு அறிக்கை, 23.11.2011 தொடக்கம் 31.12.2012 வரை வரவு,செலவு அறிக்கை, சபையின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு காரைநிலா நூல் வெளியீடு, 01.01.2013 தொடக்கம் 31.12.2015 வரை வரவு,செலவு அறிக்கை இவைகளின் ஊடாக எமது பணிகள், சேவைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

அன்பான உறவுகளே! 

15.05.2016இல் நடைபெற்ற ஆண்டு விழாவான காரைத்தென்றல் நிகழ்வில் 01.01.2013 தொடக்கம் 31.12.2015 வரை வரவு,செலவு அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருந்தோம். அதில் ஒருசில அன்பர்களது பங்களிப்புக்கள் இடம்பெறவில்லை தவறுதலுக்கு வருந்துகின்றோம். இந்த அறிக்கையினை திருத்தி உங்களிடம் சமர்பிக்கின்றோம். சுவிற்சர்லாந்தில்  எமது கிராமத்தைச் சேர்ந்த 103 குடும்ப அங்தத்தவர்கள் உள்ளனர், அவர்களில் எமது சபைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் 70பேர் தங்களால் முடிந்த பங்களிப்பை செய்துள்ளார்கள். அவர்களுக்கான கணக்கிணையும் பற்றுச்சீட்டிணையும் இதனுடன் இணைத்து அனுப்புகின்றோம்.

                                                          பற்றுச்சீட்டு இலக்கம்

                      விபரம்                                                                   இல       2013    2014    2015
சபைக்கு சந்தாவாக செலுத்தியது.                
காரைத்தென்றல் பங்களிப்பு                
நாட்காட்டி ,இறுவெட்டு                
காரைநிலா நூல் வெளியீடு                
ஆயுள் வேத மருத்துவ மனைக்கு                
பிரத்தியேக அன்பளிப்புக்கள்                
மொத்தம்                

ஆண்டு தோறும் எமது சபையால் நடாத்தப்படும்  காரைத்தென்றல் நிகழ்வில் இலங்கைக்கு சென்றுவருவதற்கான விமானச்சீட்டினை அன்பளிப்பாக வழங்கும் Siva Travel உரிமையாளர் திரு. கனகசுந்தரம் சிவனேயன் அவர்களுக்கும், விமானசிட்டு அதிஸ்டம் பெற்றும் அதனை சபைக்கு திருப்பி அன்பளிப்புச்செய்த அன்பர்களான திரு. நடராசா ரவிந்திரன் (2013ஆம் ஆண்டு, லண்டன்), திரு. கனகசபை சிவபாலன் (2014 ஆம் ஆண்டு), திரு. கந்தசாமி சிவபாலன் (2015ஆம் ஆண்டு) ஆகியோருக்கு எமது நன்றிகளும் பாராட்டுதல்களும்.
காரைநகர் விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்களுக்கு 1200 ஊர்கு  பணத்தினை அன்பளிப்பு செய்த திரு.தம்பையா தயாபரன் அவர்களுக்கு எமது நன்றிகளும் பாராட்டுதல்களும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் இவ் ஆண்டு நலிவுற்றோருக்கான கண்படர் அகற்றல் அறுவைச் சிகிச்சையினை உங்களின் உதவிக்கரத்தினால் நிறைவேற்றியுள்ளது.

எமது தாய் சங்கமான காரை அபிவிருத்திச் சபையின் முயற்சியின் பயனாக வறிய மக்களுக்கான கண் அறுவைச்சிகிச்சைக்காக தெரிவுசெய்யப்பட்ட 40 பயனாளர்களுக்கு உதவும் பொருட்டு 18.03.2016இல் காரை அபிவிருத்திச் சபையினரால் பயனாளிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு 25.03.2016இல் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் முதற்கட்ட பரிசோதனைகள் நடைபெற்றது.

காரை அபிவிருத்தி சபையின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 31 பயனாளிகளில் முதற்கட்டமாக பத்துப்பேருக்கு 31.03.2016இலும், இதுவரை மொத்தமாக 27 பேருக்கு மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 4பேருக்கு மூக்குகண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. மிகுதிப்பேருக்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெறும் என்பதனையும், 31 பயனாளிகளுக்கான செலவுத்தொகை 567210.00 ரூபாய்கள் என அறியத்தருகின்றோம்.


சுவிஸ காரை அபிவிருத்திச் சபையானது இவ்வாண்டு மேலும் இரு பெரும் பணிகளை நிறைவேற்ற தீர்மானித்துள்ளது.

முதலாவது பணி

"தியாகத் திறன் வேள்வி"-2016இல் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல்.

எமது  கிராமத்தின்  எதிர்கால அறிஞர்களை உருவாக்கும் நோக்குடனும் புலத்திலும் தாயகத்திலும் கல்வி பயிலும் மாணவ,மாணவிகளை ஒன்றிணைக்கும் வண்ணமும் 2014 ஆம் ஆண்டு எமது சபையால் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு உருவாக்கப்பட்டு மாணக்கர்களுக்கிடையில்  இலத்திரனியல் மூலமான கட்டுரைப் போட்டியை நடாத்தி ஈழத்து சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரையின் போது பரிசில்களையும் சான்றிதள்களையும் வழங்கியிருந்தது. மேலும் அது விரிவாக்கம் பெற்று அ) கீழ்ப்பிரிவு, ஆ) மத்தியபிரிவு, இ)மேற்ப்பிரிவு மாணவர்களுக்கிடையில் கட்டுரைப்போட்டி நடாத்தப்பட்டு காரைநகர் ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் 24.12.2015 வியாழக்கிழமை அன்று சான்றோர், கலைஞர்கள் மாணவர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஆண்டிலிருந்து வருடந்தோறும் மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு நினைவாக "தியாகத் திறன் வேள்வி" என்ற நிகழ்வாக "ஆளுயர்வே ஊருயர்வு" என்ற மகுட வாசகத்துடன் நடாத்தத் தீர்மானித்தோம். அதன்படி கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி,  இசைப் போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி என ஐந்து வகையான போட்டிகளைச் மூன்று பிரிவுகளில் நடாத்தி முடித்துள்ளோம். மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மார்கழி திருவாதிரை நாளின் போது வழங்க தீர்மானித்துள்ளோம். அ, ஆ, இ பிரிவுகளில் பங்குபற்றிய நூற்றுக்கணக்கான மாணவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 50க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கவுள்ளோம். அன்பான சுவிஸ் வாழ் உறவுகளே! இப் பணிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


இரண்டாவது பணி

காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இ.போ.சபையின் பொன்விழாவுக்கான நிதியுதவி.

இலங்கை போக்குவரத்துச் சபையின் காரைநகர் சாலையின் புனரமைப்புப் பணிகளுக்கு உதவுமாறு காரைநகர் அபிவிருத்திச் சபையிடம் காரைநகர் சாலை அபிவிருத்திக் குழுவினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


காரைநகர் போக்குவரத்துச் சாலையின் பொன்விழாச்சபையினரால் காரைநகர் அபிவிருத்திச்சபைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் எமது காரைநகர் சாலை 1976ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.  1991 இல் இடம்பெற்ற யுத்தத்தினால்   இச் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை மீளவும் திருத்துவதற்கு இ.போ.சபையின் மான்புமிகு அமைச்சரிடம் நிதியுதவி கேட்டபோது திருத்துவதற்கான நிதி தங்களிடம் இல்லையென்று கூறிவிட்டார்கள். தற்போதும் எமது காரைநகர் சாலை தொடர்ந்தும் மிகமோசமாகப் பழுதடைந்தே காணப்படுகின்றது. எமது சாலையை அழியவிடாது மீளவும் புனரமைத்துத் தருவதற்கு காரைநகருக்கு வெளியேயும்  வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த காரைநகர் மக்கள் நிதியுதவி செய்து தருமாறு  சாலையின்   பொன்விழாவுக்கும், அபிவிருத்திக்குமான குழு சார்பில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கீழ்கானும் வேலைகள் மேற்கொள்ளப்படவேண்டி உள்ளன. காரைநகர் சாலையினுள் பஸ் வண்டிகள் செல்லும் பாதை புனரமைப்பு, பஸ் பழுதுபார்க்கும் ராம்ப், சுற்றுவேலி, வயறிங்வேலை, கட்டிடத்திருத்தம், என அண்ணளவாக முப்பது இலட்சம் ரூபாய்கள் திருத்தவேலைகளுக்கு தேவைப்படுவதாலும், பொன்விழா மார்கழி மாதம் நடுப்பகுதியில் நடைபெற இருப்பதாலும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்ற  மொழிக்கிணங்க எமது கிராமத்தின் மேற் கூறிய இரு பெரும் பணிகளை நிறைவேற்ற தங்களால் இயன்ற உதவியை  வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

1991ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் புலம்பெயர்வு இடம்பெற்றது. தற்பொழுது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையில் எமது கிராமத்து குடிப்பரம்பலை அதிகரிக்கச் செய்வதற்கும் நேரிய முறையில் காரை மண்ணின் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் தேவை.  எமது கிராமத்து உறவுகளின் பங்களிப்பைச் சிறுதுளி பெருவெள்ளம் போலப் பெற்று 2017ஆம் ஆண்டு எமது காரைத்தாயை ஈழ மண்ணின் முன்னுதாரணமான கிராமமாக மாற்ற அத்திவாரம் இடுவோம். பார்வையாளர்களாயிருந்தது போதும். பங்காளிகளாவோம் வாருங்கள். ஒன்றிணைந்து வாருங்கள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நிர்வாகத்தினரின் அன்பான வேண்டுகோள்!
எமது சபையால் Swiss Karai Development Board ,Swisskarai.org ஆகிய பெயர்களில் முகநூலும், இணையத்தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ் இலத்திரினியல் தளங்கள் மேலும் விரிவாக்கம் செய்து சிறந்த முறையில் தொழிற்படுவதற்கு அனுபவம் வாய்ந்த பெரியோர்கள், இளையோர்கள் தேவைப்படுவதால் சேர்ந்து பணியாற்ற வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

15.05.2016இல் எமது சபையால் நடாத்தப்பட்ட காரைத்தென்றல் நிகழ்வின் வீடியோ பிரதி தேவையானவர்கள் தமது பெயர்களை பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முக்கிய குறிப்பு:-  "தியாகத் திறன் வேள்வி"-2016இல் பங்குபற்றிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கலுக்கானதும், காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இ.போ.சபையின் பொன்விழாவுக்கானதுமான  தங்களின் பங்களிப்பினை இயன்றவரை இதனுடன் இணைக்கப்பட்ட படிவத்தை பூர்த்திசெய்து 30.11.2016க்கு முன்பதாக அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்

சுவிஸ் வாழ் காரைநகர் உறவுகள் அனைவருக்கும் இனிய நத்தார் புதுவருட நல்வாழ்த்துக்கள்.

                                                                      நன்றி
                            "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"

                                                                                               இங்ஙனம்.
                                                                      சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                           செயற்குழு உறுப்பினர்கள்
                                                                மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                            சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                               17.11.2016

 

[gview file=”http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/11/2013-2016swisskarai-development-board-account-1.xlsx”]

2013ஆம் ஆண்டு தொடக்கம் 2015 வரையுள்ளதும், 2016ஆம் ஆண்டு காரைத்தென்றல் நிகழ்விற்கும் அன்பளிப்புச் செய்தோரின் விபரங்களும்.
A -2013  ஆம் ஆண்டு  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபைக்கு சந்தாவாக செலுத்தியோர்கள்.
B-2014  ஆம் ஆண்டு  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபைக்கு சந்தாவாக செலுத்தியேர்கள்.
C-2015  ஆம் ஆண்டு  சுவிஸ் காரை அபிவிருத்திச்சபைக்கு சந்தாவாக செலுத்தியோர்கள்
D-2013,2014,2015 நாட்காட்டி, இறுவெட்டிற்கு அன்பளிப்பாக பணம் செலுத்தியோர்கள்.
E-2014  காரைநிலா நூல் வெளியிட்டிற்கு அன்பளிப்பாக பணம் செலுத்தியோர்கள்.
F-2013 ஆயுள் வேத மருத்துவமனைக்கு அன்பளிப்பாக பணம் செலுத்தியோர்கள்.
G-2014 விளையாட்டுக் கழகத்திற்கான அன்பளிப்பு
H-2013, 2015, 2016 காரைத்தென்றல் விழாவிற்கு அன்பளிப்பாக பணம் செலுத்தியோர்கள்.
I-2016   1) 2016ஆம் ஆண்டு காரைத்தென்றல் விழா மேடைக்கு பனர்வடிவமைப்புக்கு             அனுசரனை வழங்கியோர்கள்.
 திரு.தம்பையா தயாபரன், திரு. அருளம்பலம் பரமசிவம், திரு. முருகேசு பாலசுந்தரம், திரு. சுப்பிரமணியம் அருணகிரிநாதன், திரு. அருணசலம் லிங்கேஸ்வரன். 
 2) கடந்த மூன்று ஆண்டுகளாக காரைத்தென்றல் விழா மேடையில் இலங்கை                  சென்று வருவதற்கான விமானச்சீட்டு அதிஸ்டம் பார்க்கப்பட்டு அதிஸ்டசாலிகளுக்கான விமானச்சீட்டுக்கு அனுசரனை வழங்கியவர்  திரு கனசுந்தரம் சிவநேயன். 
 3) இலங்கை சென்றவருவதற்கான விமானசீட்டு  அதிஸ்டம் பெற்றும் அதனை சபைக்கு திருப்பி அன்பளிப்புச்செய்த அன்பர்களான திரு. நடராசா ரவிந்திரன் (லண்டன்)  திரு.கனகசபை சிவபாலன், திரு. கந்தசாமி சிவபாலன் ஆகியோர்கள் விமானச்சீட்டின் தொகையினை சபையிடம் அன்பளிப்புச் செய்திருந்தார்கள்.

         சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆண்டு வரையானதும் 2016ஆம் ஆண்டு காரைத்தென்றல் நிகழ்வுக்கு அன்பளிப்பாக செலுத்தியோர்களது விபரம் மட்டும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அன்பான சுவிஸ் வாழ் காரை மக்களே! சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையானது உங்களுக்கானது. இச் சபையின் செயற்பாடுகளை நேரிய முறையில் தூய சிந்தனையில் சபை மேலும் சிறப்புற   "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்ற  மொழிக்கிணங்க இப் புனிதமான நற்பணிக்கு அனைவரதும் ஒத்துழைப்பும், முயற்சிகளும் வரவேற்கப்படுகின்றன.
     
அன்பான உறவுகளே!
1991ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் புலம்பெயர்வு இடம்பெற்றது. தற்பொழுது ஏற்பட்டுள்ள சாதகமான சூழ்நிலையில் எமது கிராமத்து குடிப்பரம்பலை அதிகரிக்கச் செய்வதற்கும் நேரிய முறையில் காரை மண்ணின் அபிவிருத்தியை மேற்கொள்ளவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது காலத்தின் தேவை.  எமது கிராமத்து உறவுகளின் பங்களிப்பைச் சிறுதுளி பெருவெள்ளம்போலப் பெற்று 2017ஆம் ஆண்டு எமது காரைத்தாயை ஈழ மண்ணின் முன்னுதாரணமான கிராமமாக மாற்ற அத்திவாரம் இடுவோம். பார்வையாளர்களாயிருந்தது போதும். பங்காளிகளாவோம் வாருங்கள். ஒன்றிணைந்து வாருங்கள்.
                                                                                        
                                                                     நன்றி
                               "நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்"                                 

                                                                                                இங்ஙனம்.
                                                                          சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                  செயற்குழு உறுப்பினர்கள்
                                                                    மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                 சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                 17.11.2016