சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும் “தியாகத் திறன் வேள்வி 2016” மாணவர் போட்டிகளுக்கான அறிவித்தலும் விண்ணப்பங்கள் கோரலும்

                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை நடாத்தும்

                          "தியாகத் திறன் வேள்வி 2016"

                           மாணவர் போட்டிகளுக்கான

               அறிவித்தலும் விண்ணப்பங்கள் கோரலும்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகிற கட்டுரைப் போட்டி விரிவாக்கம் செய்யப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் வேண்டுகோள்களுக்கு இணங்க இவ்வருடத்தில் இருந்து இப்போட்டிகள் பல்வேறு திறன்களை உள்ளடக்கியதாக விரிவாக்கம் பெற்றுள்ளன என்பதை மிகுந்த மகிழ்வுடன் அறியத்தருகிறோம்.

இந்த ஆண்டிலிருந்து வருடந்தோறும் மாணவர் திறன் வளர்க்கும் போட்டிகளை காரைநகரின் கல்விப் புரட்சியின் தந்தை கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் நினைவாக 'தியாகத் திறன் வேள்வி' என்ற நிகழ்வாக 'ஆளுயுர்வே ஊருயர்வு' என்ற மகுட வாசகத்துடன் நடாத்தத் தீர்மானித்துள்ளோம். கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கர்நாடக சங்கீதப் போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி என ஐந்து வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளில் நடாத்தப்படும்.

பிரிவுகள்:

அ. பிரிவு – ஆண்டு 6, 7, 8 மாணாக்கர்

ஆ.  பிரிவு – ஆண்டு 9, 10, 11 மாணாக்கர்

இ. பிரிவு – ஆண்டு 12, 13 மற்றும் கடந்த 2016 இல் பாடசாலை மூலம் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணாக்கர்.

பொது விதிகள்

1.    போட்டிக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் காரைநகரைப் பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் (பீட்டன் – பீட்டி, பெயரன் – பெயர்த்தி வரையான தொடர்பு). தேவை ஏற்படின் அதை ஏற்பாட்டாளர்களுக்கு உறுதிப்படுத்தல் வேண்டும். தவறின் போட்டியில் பங்குபற்றிய பின்னரும்கூட அவரின் பங்குபற்றலுக்கான தகைமை நீக்கப்படும்.

2.    ஒரு மாணாக்கர் விரும்பினால் அதிகம் மூன்று போட்டிகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.

3.    பங்குபற்றும் மாணாக்கரின் பிரிவு வாரியான விபரங்களை இலங்கையில் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் காரைநகர்ப் பொது அமைப்புக்களின் செயலாளர்கள் எதிர்வரும் 20 – 09 – 2016 பிற்பகல் 12 மணிக்கு முன்பதாக swisskarai2004@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் காரைநகர் அபிவிருத்திச் சபை, சிவன் கோவில் வீதி, காரைநகர் என்ற முகவரிக்கும் அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம். 

4.    மேற்கூறியபடி மென்பிரதி மின்னஞ்சலுக்கும், காகிதப்பிரதி கா. அ. சபை முகவரிக்கும் அனுப்புதல் அவசியமானது. திருத்தப்பட்ட விண்ணப்பங்கள் அல்லது மேலதிக தகவல்கள் என்பனவும் குறித்த திகதிக்கு முன்பதாகவே அனுப்பப்பட வேண்டும். புலம்பெயர்;ந்தோர் விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலம் மட்டும் அனுப்பினால் போதுமானதாகும்.

5.    வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களும், பெறுமதியான பரிசில்களும் திருவெம்பாவை உற்சவத்தை ஒட்டிய நாட்களில் (2017 தை மாதம் 05 இலிருந்து 12 இற்குள்) நடாத்தப்படும் முப்பெரும் விழாவில் வழங்கப்படும்.

                                                     ஒன்று – கட்டுரைப் போட்டி

காலம் மற்றும் இடம்

இலங்கையின் எப்பாகத்திலுமுள்ள காரைநகரைச் சேர்;ந்த பாடசாலை மாணவர்களும் பங்கு கொள்ளலாம். கட்டுரைப் போட்டி மூன்று பிரிவுகளுக்கும் ஆங்கிலப் புரட்டாதி மாதம் 24ம் திகதி சனிக்கிழமை இலங்கை நேரம் பிற்பகல் 3 மணியிலிருந்து 4 மணி வரை இடம் பெறும். ஐரோப்பிய (இலண்டன் மு.ப. 10.30 -11.30, பிரான்ஸ், சுவிஸ் மு.ப. 11.30- 12.30) நேரங்களைக் கவனத்தில் கொண்டு இந்நேரம் முடிவு செய்யப்படுகிறது. கனடாவிலிருந்து மாணாக்கர் பங்குபற்ற விரும்பினால் காரைநகர் சார்ந்த பொது அமைப்புக்களின் ஊடாக சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினருடன் தொடர்பு கொள்ளவும். கனடா மாணவர்களுக்கும் வசதியாக நேரமாற்றம் செய்யப்படும். 

போட்டி மேற்குறித்த தினம் காரைநகரில் உள்ள இருபெரும் உயர்தரப் பாடசாலைகளில் ஒன்றில் இடம் பெறும். சரியான இடம் பற்றிய அறிவித்தல்  பின்னர் இதே இணையதளங்களில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் அனுப்பிய பாடசாலை அதிபர்களுக்கும் தகவல் அனுப்பப்படும். புலம்பெயர் நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் சபையினரின் தீர்மானத்திற்கு அமைய அண்மித்த நகரங்களில் போட்டி மண்டபங்கள் பற்றிய அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படும்.

தயார்ப் படுத்தலுக்கான அண்ணளவான பெருவெட்டான துறைகள் மற்றும் பகுதிகள்  

மூன்று பிரிவினரும் தமக்குரிய பின்வரும் துறைகள், பிரிவுகள், தலைப்புக்களில் தங்களைத் தயார் செய்து கொள்ளலாம். இறுதிப் போட்டியில் வரும் கட்டுரைக்கான தலைப்புக்கள் நேரடியாகப் பின்வருமாறு அமையா. ஆனால் பின்வரும் ஆறு பகுதிகளில் குறைந்தது நான்கினை உள்ளடக்கியதாக அல்லது அவற்றுடன் தொடர்புடையனவாக அமையும். மாணாக்கர் பரந்து பட்ட அளவில் வாசித்து தம்மைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதே எமது நோக்கம். இரண்டு மூன்று பகுதிகளைத் தேர்ந்தெடுத்துத் தயார் செய்தல் சிறந்தது. தாங்கள் எதிர்பார்த்தபடி அல்லது தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இறுதிப் போட்டித் தலைப்புக்கள் அமையாவிடின் குழு அதற்குப் பொறுப்பல்ல.  

அ. பிரிவு

1.    பாரதியார், பாரதிதாசன், காரைக்கால் அம்மையார் ஆகியோரில் ஒருவர். 
2.    கல்வி பற்றி வள்ளுவரின் கருத்துக்கள்.
3.    காரைநகர்ப் பெரியார்களில் ஒருவர்.
4.    தமிழ் மொழியின் சிறப்புக்கள்.
5.    எதிர்காலத்தில் சிறந்து விளங்கச் சிறார்கள் செய்ய வேண்டியன.
6.    விளையாட்டின் முக்கியத்துவம்.


ஆ. பிரிவு

1.    சமூக வளர்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம்.
2.    காரைநகரின் பொருளாதார அபிவிருத்தி நேற்று இன்று நாளை (புள்ளி விபரங்கள் முக்கியம்).
3.    அறிவியலும் ஆன்மீகமும். 
4.    தமிழர் கலைகள்.
5.    காரைநகரில் விளையாட்டுத் துறை. 
6.    ஆண்டாள் அல்லது நவாலியூர் சோமசுந்தரப் புலவர். 


இ. பிரிவு

1.    பக்தி இலக்கியங்கள். 
2.    சமூக மேம்பாட்டில் அறிவியலின் பங்கு.
3.    கலாநிதி. ஆ. தியாகராசா அவர்களின் வாழ்க்கை வரலாறு, கல்வித் தொண்டு, சமூக சேவை, பொருளாதார அபிவிருத்திப் பணிகள். 
4.    சங்ககால ஒளவை அல்லது சிலப்பதிகாரம்.
5.    ஊர் அபிவிருத்தி என்பது தொடர்பான வரையறை, தத்துவம், கருத்தியல் மற்றும் நடைமுறை சார்ந்த தெளிவு. காரைநகரில் நாம் இவை தொடர்பாகச் சரியாகச் செல்கிறோமா? என்பது தொடர்பாக.
6.    சமூகப் பணியில் விட்டுக்கொடுப்பு, பெருந்தன்மை, ஒற்றுமை என்பவற்றின் அவசியம்.  

தகவல்கள் மேற்கோள்கள், தனித்துவமான பார்வை, தனித்தமிழ் மொழிநடை என்பன எதிர்பார்க்கப்படுகின்றன.

விதிகளும் ஏனைய தகவல்களும்

தரப்படும் தலைப்புக்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கட்டுரை வரையலாம். விடைத்தாள்கள் மண்டபத்தில் வழங்கப்படும்;. மூன்று பிரிவுகளுக்குமான குறைந்தபட்சப் பக்கங்களாவன: மண்டபத்தில் தரப்படும் ஏ. நான்கு தாள்களில் சாதாரண கையெழுத்தில் முறையே இரண்டு, நான்கு, ஆறு என அமைய வேண்டும். போட்டிக்கான இறுதித் தலைப்புக்கள் மண்டபத்திலேயே அறிவிக்கப்படும். பிரிவு வாரியாகப் பதிவுசெய்தல் குழுப் புகைப்படம் எடுத்தல் என்பவை உள்ளதால் பங்கு கொள்ளும் மாணாக்கர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்பதாகச் சமுகம் தரவும். பாடசாலைச் சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


                                                           இரண்டு – பேச்சுப் போட்டி

காலம் மற்றும் இடம்

இலங்கையின் எப்பாகத்திலுமுள்ள காரைநகரைச் சேர்;ந்த பாடசாலை மாணவர்களும் பங்கு கொள்ளலாம். பேச்சுப் போட்டி மூன்று பிரிவுகளுக்கும் ஆங்கிலப் புரட்டாதி மாதம் 24 திகதி இலங்கை நேரம் காலை 9 மணியிலிருந்து இடம் பெறும். அதிகளவு போட்டியாளர்கள் பங்கேற்கும்; பட்சத்தில் 25ம் திகதி ஞாயிறு காலை 9 மணிக்கு மீண்டும் தொடரும் 

போட்டி மேற்குறித்த தினம் காரைநகரில் உள்ள இருபெரும் உயர்தரப் பாடசாலைகளில் ஒன்றில் இடம் பெறும். சரியான இடம் பற்றிய அறிவித்தல்  பின்னர் இதே இணையதளங்களில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் அனுப்பிய பாடசாலை அதிபர்களுக்கும் தகவல் அனுப்பப்படும். புலம்பெயர் நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதுபற்றி வளங்கள் வசதிகளின் அடிப்படையில் சபையினரும் குழுவும் தீர்மானிப்பர். அதற்கமைய அண்மித்த நகரங்களில் போட்டி மண்டபங்கள் பற்றிய அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படும்.

தயார்ப் படுத்தலுக்கான அண்ணளவான பெருவெட்டான துறைகள் மற்றும் பகுதிகள்

இப்போட்டியின் நோக்கம் மாணாக்கரின் இயல்பான அறிவு மற்றும் பேச்சாற்றல் சாரந்த திறன்களை வளர்த்தலும் அடையாளங்கண்டு ஊக்குவிப்பதுமாகும். 

அ. பிரிவு மாணாக்கர் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

1. மகாகவி பாரதியார்
2. ஆத்திசூடி
3. கொன்றை வேந்தன் 

ஆ. பிரிவு மாணாக்கர் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

1. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்
2. பொய்யாமொழிப் புலவன் 

இ. பிரிவு மாணாக்கர் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

1.    கலாநிதி. ஆ. தியாகராசாவின் பொருளாதாரச் சேவைகள்.
2.    கலாநிதி ஆ. தியாகராசாவின் கல்விச் சேவைகள்.
3.    கலாநிதி ஆ. தியாகராசாவின் அரசியற் சேவைகள்
4.    கலாநிதி ஆ. தியாகராசாவின் கலைத்துறை மற்றும் விளையாட்டுத் துறைச் சேவைகள்.
5.    கலாநிதி ஆ. தியாகராசாவின் ஆராய்ச்சியும் நூல்களும் அவை வழிவந்த சிந்தனைகளும்

ஆற்றுகையின் போது குறிப்புகளைப் பார்வையிடலாம் ஆனால் தொடர்ந்து வாசிப்பு அனுமதிக்கப்படமாட்டாது.

விதிகளும் ஏனைய தகவல்களும் 

நேர அளவு அ, ஆ, இ பிரிவுகளுக்கு முறையே 3 – 5, 5 – 7, 6 – 8 நிமிடங்களாக அமையலாம். 

பிறமொழிக் கலப்புத் தவிற்கப்பட வேண்டும். தொனி, குரல் ஏற்றத்தாழ்வுகள், முகபாவம், தெளிவான உச்சரிப்பு, தரவுகள், கருத்துச் செறிவு, கருத்துநிலை என்பன குறித்துக் கவனம் கொள்ளவும்.

பிரிவு வாரியாகப் பதிவுசெய்தல் குழுப் புகைப்படம் எடுத்தல் என்பவை உள்ளதால் பங்கு கொள்ளும் மாணாக்கர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்பதாக சமுகம் தரவும். பாடசாலைச் சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.


                                          மூன்று: திருக்குறள் மனனப் போட்டி

இப் போட்டி எதிர்வரும் 01 – 10 – 2016 சனிக்கிழமை காலை 9 மணிக்கு காரைநகரில் உள்ள இருபெரும் உயர்தரப் பாடசாலைகளில் ஒன்றில் இடம் பெறும். விண்ணப்பங்கள் அனுப்பிய பாடசாலை அதிபர்களுக்கும் தகவல் அனுப்பப்படும். புலம்பெயர் நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதுபற்றி வளங்கள் வசதிகளின் அடிப்படையில் சபையினரும் குழுவும் தீர்மானிப்பர். அதற்கமைய அண்மித்த நகரங்களில் போட்டி மண்டபங்கள் பற்றிய அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படும்.

 தயார்ப் படுத்தலுக்கான பிரிவுவாரியான குறள் அதிகாரங்கள்

இப்போட்டியில் கீழே தரப்பட்ட தமது பிரிவுக்கான அதிகாரங்களிலுள்ள குறள்களை மனனம் செய்து முறையான உச்சரிப்போடு ஓதுதலும் நடுவர்களால் கேட்கப்படும் எதாவது மூன்று குறள்களுக்குப் பொருள் சொல்லுவதும் அடங்கும். பிரிவு வாரியாக மனனம் செய்ய வேண்டிய அதிகாரங்கள் பின்வருமாறு.

அ. பிரிவு

முதல் ஐந்து அதிகாரங்கள் 

ஆ. பிரிவு

முதல் பத்து அதிகாரங்கள் 

இ. பிரிவு

முதல் பதினைந்து அதிகாரங்கள்


புலம்பெயர் நாடுகளில் உள்ள மாணவர்களுக்கு 

அ. பிரிவு – அன்புடைமை

ஆ. பிரிவு – இனியவை கூறல், வாய்மை

இ. பிரிவு – ஈகை, மெய்யுணர்தல், கல்வி

விதிகளும் ஏனைய தகவல்களும்

பிரிவு வாரியாகப் பதிவுசெய்தல் குழுப் புகைப்படம் எடுத்தல் என்பவை உள்ளதால் பங்கு கொள்ளும் மாணாக்கர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்பதாக சமுகம் தரவும். பாடசாலைச் சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

                                                                     
                                                       நான்கு: இசைப் போட்டி

இப்போட்டி 02 – 10 – 2016 ஞாயிறு காலை 9 மணி முதல் காரைநகரில் உள்ள இருபெரும் உயர்தரப் பாடசாலைகளில் ஒன்றில் இடம் பெறும். விண்ணப்பங்கள் அனுப்பிய பாடசாலை அதிபர்களுக்கும் தகவல் அனுப்பப்படும். புலம்பெயர் நாடுகளிலிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதுபற்றி வளங்கள் வசதிகளின் அடிப்படையில் சபையினரும் குழுவும் தீர்மானிப்பர். அதற்கமைய அண்மித்த நகரங்களில் போட்டி மண்டபங்கள் பற்றிய அறிவித்தல்கள் பின்னர் வெளியிடப்படும். பண்ணிசை மற்றும் நாட்டார் பாடல்கள் என இசைப் போட்டி இருவகைகளாக மூன்று பிரிவினருக்கும் நடாத்தப்படும். 

  தயார்ப் படுத்தலுக்கான பிரிவுவாரியான தகவல்கள்: பண்ணிசைப் போட்டி

அ. பிரிவு

மூவர் தேவாரங்களில் இரண்டு, பெரிய புராணம் இரண்டு

ஆ. பிரிவு

பண் முறைப்படி பஞ்ச புராணமும், திருவாசகம் ஒன்று பண் முறைப்படியும் விருத்தமாகவும் பாடுதல் வேண்டும்.

இ. பிரிவு

தமிழ்க் கீர்த்தனைகள்: 
விநாயக கீர்த்தனை ஒன்று
பிறிதோர் தமிழ்க் கீர்த்தனை (ராகம், பொருத்தமான இடத்தில் கற்பனா சுரம் பாடுதல் வேண்டும்)
விருத்தம் ஒன்று
 
  குழுநிலை நாட்டார் பாடல்கள்

எதாவது இரண்டு நாட்டார் பாடல்கள்: தொழிற்பாடல்கள், கும்மிப் பாடல்கள், கோலாட்டப் பாடல்கள், விளையாட்டுப் பாடல்கள், வசந்தன் பாடல்கள்.

விதிகளும் ஏனைய தகவல்களும்

10 இலிருந்து 12 வரையான மாணக்கர்கள் ஒரு குழுவில் இடம்பெறல் வேண்டும். நேரம் அண்ணளவாக அ. பிரிவு 5 – 7, ஆ. பிரிவு 6 – 8, இ. பிரிவு 8 – 10 நிமிடங்கள். இசைப் போட்டியில் தனி மற்றும் குழுநிலை நாட்டார் பாடல் போட்டிகள் இரண்டிலும் பங்குபற்றினாலும் அது ஒரு போட்டியில் பங்குபற்றியதாகவே கருதப்படும். அத்தகைய மாணாக்கர்கள் மேலும் இரண்டு போட்டிகளில் பங்குபற்றத் தகுதியுடையவர்களாவர்.  

பிரிவு வாரியாகப் பதிவுசெய்தல் குழுப் புகைப்படம் எடுத்தல் என்பவை உள்ளதால் பங்கு கொள்ளும் மாணாக்கர்கள் போட்டி நேரத்திற்கு 30 நிமிடங்கள் முன்பதாக சமுகம் தரவும். பாடசாலைச் சீருடையில் வருகை தருதல் விரும்பத்தக்கது. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

                                   ஐந்து: பொது அறிவு வினாடி வினாப் போட்டி

இப்போட்டி மிகவும் பரந்து பட்ட அறிவுத் தளங்களை உள்ளடக்கியதாக இருக்கும். காரைநகரைச் சேர்;ந்த பாடசாலை மாணவர்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். மூன்று பிரிவுகளுக்குமான இப்போட்டியின் தகுதிகாண் சுற்றும், இரண்டாம் சுற்றும் எதிர்வரும் 21ம் திகதியிலிருந்து 23ம் திகதி வரை நான்கு உயர்தரப் பாடசாலைகளிலும் இடம்பெறும். நேரம் பாடசாலை அதிபர்கள் மூலம் அறியத்தரப்படும்.  இறுதிச் சுற்று 25 – 09 – 2016 ஞாயிறு காலை 10 மணிமுதல் காரைநகரில் உள்ள இருபெரும் உயர்தரப் பாடசாலைகளில் ஒன்றில் இடம் பெறும். 

                                                  வேண்டுகோள்

இந்தப் போட்டிகளைக் காரைநகரிலும் முடிந்தவரை உலகெங்கிலும் காரைநகர் மாணவர்கள் செறிந்து வாழும் முக்கிய நகரங்களிலும் ஏற்பாடு செய்ய உள்ளோம். இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற எமது சகோதர புலம்பெயர் சங்கங்களின் உதவியை நாடி நிற்கிறோம். அதே போல் காரைநகரின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரது ஈடுபாடும் முயற்சியும் அவசியமானவை. கடந்த இரண்டாண்டுகளில் நீங்கள் காட்டிய ஊக்கமே எம்மை உற்சாகப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்தும் உங்கள் பலமான ஆதரவை எதிர்பார்க்கிறோம். 

மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மேற்கூறிய திட்டம் பற்றிய தமது ஆலோசனைகளைப் பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறோம். swisskarai2004@gmail.com

         "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்". "ஆளுயர்வே ஊருயர்வு".

                         
10 – 09 – 2016                                            சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
                                                                       செயற்குழு உறுப்பினர்கள் 
                                                             மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு 
                                                                     சுவிஸ் வாழ் காரைக் குடும்பம்.

 

 

                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் நடாத்தப்படும்
            உலகெங்கும் பரந்து வாழும் காரைநகர் மாணாக்கர்களுக்கான
                      "தியாகத் திறன் வேள்வி 2016"  போட்டிகளுக்கான
                                                 விண்ணப்பபடிவம்.

தயவுசெய்து கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்.

http://www.karainagar.com/pages/wpcontent/uploads/2016/09/kadduraipoddifrom-2016.pdf

 

http://www.karainagar.com/pages/wp-content/uploads/2016/09/Thiaga-Thiran-Velvi-notice-4.pdf