அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–2

Dr_A_Thiyagarajah-287x397         

அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–2

காரை மாதாவின் மைந்தர்களில் மாணிக்கமாகத் திகழ்பவரும், புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகத் தான் சேவையாற்றிய பாடசாலையாகிய காரைநகர் இந்துக் கல்லூரியை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியும் தணியாத ஊர்ப்பற்றுடன் தீர்க்க தரிசனச் சிந்தனையுடன் அரசியல் என்னும் ஆயுதம் கொண்டு தன் உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து காரை மண்ணில் அளப்பரிய அபிவிருத்தி செய்தவருமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும்.
 
தான் சேவை செய்த கல்லூரியின் காலத்தை மட்டுமல்ல தன் ஊரின் காலத்தையும் பொற்காலமாக்கிய காலத்தால் அழிக்கப்பட முடியாத தியாகச் செம்மல் அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து வாழ்த்தி வணங்க வேண்டியது காரைநகர் மக்களின் கடமையாகும்.  

அந்தவகையில், இந்நாளையொட்டி "நானறிந்த காரைநகர்ப் பெரியார் கலாநிதி.ஆ.தியாகராசா ஆவார்" என்ற கட்டுரை இங்கே எடுத்துவரப்படுகின்றது.  

செல்வி.டிலானி கார்த்திகேசு எழுதிய இக்கட்டுரை 2014ம் ஆண்டில் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் காரைச் சிறார்களிடையே நடத்தப்பட்ட அனைத்துலகக் கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

   

                   “நானறிந்த காரைநகர் பெரியோர்

                 கலாநிதி ஆ.தியாகராசா”ஆக்கம் 02 

 

இலங்கை திரு நாட்டிலே வட மாகாணத்திலே யாழ்ப்பாணத்திலே எண்திசை புகழும் அருளின் நிறைந்த காரைநகரிலே வலந்தலை சுட்டில் அறிவுக் கண்ணை திறக்கும் அறிவுக் கூடமாக யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் உள்ளது. இன்று அப் பாடசாலையானது தனது காரைநகர் இந்துக்கல்லூரி என்னும் பெயரை யா/கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என மாற்றியமைக்கு காரணம் திரு.ஆ.தியாகராசா அவர்களினால் ஆற்றப்பட்ட தன்னலம் அற்ற சேவையே ஆகும். தற்போதும் இவரது மகள் திருஆ..தியாகராசா அவர்களின் நினைவாக காரைநகரில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உதவி பணம் வழங்குவது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவ்வாறான புகழும் பெருமையும் கொண்ட திருஆ..தியாகராசா அவர்கள் மலேசியாவில் புகையிரத இலாகாவில் கடமை ஆற்றிய திரு.ச.ஆறுமுகம் அமிர்தவல்லி தம்பதியாரின் செல்வப்புத்திரனாக 1916ஆம் ஆண்டு சித்திரை மாதம் 17ஆந் திகதி மலேசியாவில் பிறந்தார். "இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்பதற்கினங்க ஆரம்பக் கல்வியை மலேசியாவில் ஆரம்பித்து எட'டு வயது வரை மலேசியாவிலேயே கற்றார். பின்னர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது பேரன் பேத்தியுடன் இருந்து இரண்டு ஆண்டுகள் கல்வி கற்றார்.

தியாகராசா பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே இந்தியாவில் உள்ள கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் சாந்திநிகேதனில் நிறுவிய விஸ்பாரதி பல்கலைகழகத்தில் கல்வி கற்பதற்கு வயது குறைவாக காணப்பட்டமையால் சென்னை அடையாறு கலாசேத்திரத்தில் சேர்க்கப்பட்டு கல்வி கற்றார். தனது பதினாறாவது  வயதில் அதாவது 1932இல் சீனியர் பரீட்சையிலும் பதினெட்டாவது  வயதில் அதாவது 1934இல் இன்ரர்சயன்ஸ் பரீட்சையிலும் இருபதாவது  வயதில் அதாவது 1936 இல் பீ.எ பரீட்சையிலும் 22ஆவது வயதில் அதாவது 1938இல் எம்.ஏ பட்டமும் பெற்றதன் பின்னர் 1940வரை சிங்கப்புர் மருத்துவக்கல்லூரியில் கல்வி பயின்றார் 1941இல் அதாவது 25ஆவது வயதில் எம்.லிற் பட்டத்தை பெற்றார். பின்னர் இலங்கை திரும்பிய தியாகராசா அவர்கள் காரைநகரில் உள்ள இந்துக்கல்லூரி அதாவது தற்போது கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என அழைக்கப்படும் பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றினார். இவர் இக் கல்லூரி கடமையாற்றிய காலம் "பொற்காலம்" என அழைக்கப்படுகின்றது. இவர் கல்வி பயிலும் காலத்தில் ஹாக்கி அணிவீரர் மற்றும் சங்கீதக் கலையிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

தியாகராசா அவர்கள் இந்தியாவில் கல்வி கற்ற காலத்தில் இந்திய தேசத்திற்கான விடுதலைக்கான அண்ணல் காந்திஜி தலைமையில் அணிவகுத்து போராடியவர். இவர் இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் தன்னலம் துறந்து புசல்களை விடுத்து மக்களும் தேசபக்தர்களும் தேசவிடுதலைக்காக போராடி பெற்ற அனுபவங்களைக் கொண்டு தன் கிராமத்து மக்களைத் தரிசித்தார்.

1942ம் ஆண்டு தனது 26ஆவது வயதில் ஆடம்பரமும் நவநாகரீகமும் துளியும் கிடையாத திரு.சிவகுநாதன் அவர்களின் மகள் மகேஸ்வரியை வாழ்க்கை துணையாக கொண்டவர். தியாகராசா அவர்களின் வெற்றிக்கு மிக பக்கபலமாக காணப்பட்டதுடன் தியாகராசா அவர்களின் கருத்தறிந்து நடந்து கொண்டார்.

காரைநகர் இந்துக்கல்லூரியில் அதிபராக இருந்த திரு.கனகசபை அவர்கள் 1945இல் ஓய்வு பெற திருஆ.தியாகராசா அவர்கள் 16.04.1946 இல் அதிபராக கடமையேற்ற காலத்தில் பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. காரைநகரில் சிரேஷட பாடசாலையாக காரைநகர் இந்துக் கல்லூரி மட்டுமே திகழ்ந்தது. இதனால் ஏனைய பாடசாலையில் தரம் 5ம் வகுப்புடன் இடைநிறுத்திய மாணவர்கள் அனைவரும் காரைநகர் இந்துகல்லூரியில் அனுமதி கோரினர். 1915இல் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கன்மிஷன் ஆங்கிலப்பாடசாலையில் மாணவர்தொகை வெகுவாகக் குறைவடைந்தமையால் 1945இல் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. மற்றும் காரைநகரில் உள்ள மேற்கு பிரதேச மாணவர்களும் இந்துக்கல்லூரிக்கு அனுமதிகோரி வந்திருந்தனர். இக் காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் அணுமதி கோரியமை பெரும் சவாலாக காணப்பட்டது. மாணவர்களுக்கு கல்வி கற்பிற்பதற்கு ஆசிரியர்களோ வாங்கு மேசைகளோ இடவசதியோ இல்லை இதனால் உடனடியாக ஆறு அறைகளைக் கொண்ட கட்டடத்தைக் கட்டினார். மாணவர்களுக்கு தேவையான வாங்குமேசைகளை பெற்றோர்களிடமும் அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை இந்துக்கல்லூரி சபையின் அனுசரனையுடன் பெற்று மாணவர்களுக்கு கல்வியை வழங்கினார்.

அமெரிக்கன் மிஷன் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக காரைநகரில் மேற்குபகுதியில் உள்ள மாணவர்கள் அணைவரும் இந்துக் கல்லூரிக்கு வந்து கல்வி கற்பதனால் ஏற்படும் துன்பங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை நிறுவவேண்டும் என காரைநகர் மேற்கைசேர்ந்த பெற்றோர்களும் கல்விமான்களும் தீர்மானித்தனர். இப் பாடசாலையை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் திரு.தியாகராசாவின் வீட்டிலே நடைபெற்றது குறிப்பிடதக்கது. இப் பாடசாலைக்கு அதிபராக கடைமையாற்றுவதற்கு திரு க.கனகசபை அவர்களும் ஆசிரியர்களாக கடைமையாற்ற திருவாளர் கு.பொன்னம்பலம்  மு.சீவரத்தினம் ஆகிய மூவரையும் காரைநகர் இந்துக் கல்லூரியில் இருந்து புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைக்கு கடைமையாற்ற விடுவிக்கப்பட்டார். திரு தியாகராசா அவர்களை யாழ்ற்ரன் கல்லூரிக்கு அதிபராக கடைமை ஏற்குமாறு காரைநகர் மேற்கை சேர்ந்த பல வற்புறுத்தியும் தான் பொறுப்பேற்ற காரைநகர் இந்துக் கல்லூரி முன்நிலை எய்ய வேண்டும் என்பதற்காக அக் கோரிக்கையை நிராகரித்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதி உயர்திரு ந.நடராஜா K.C அவர்களின் திடிர் மரணத்தின் பின்னர் அவரின் பாரியார் திருமதி தங்கம்மா நடராஜா அவர்களால் அறுபத்தையாயிரம் செலவில் நடராசா ஞாபகார்த்த மண்டபம் அமைத்தார். இம் மண்டபம் அமைக்கும் பணியில் தீவிரமாக செயற்பட்டார்.  "கோபுரம் இல்லாத கோயில் தான் பாடசாலை" அதற்கினங்க மண்டபத்திற்கு தேவையான ஓடுகள் இல்லாதவிடத்து "தனது வீட்டு ஓட்டினை எடுத்துவந்து கட்டினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க விடையமாகும்." இம் மண்டபத்தை கட்டுவிக்க திரு.ஆதியாகராசா அவர்களுடன் இனைந்து மிகவும் உழைத்த ஒருவர்தான் திரு.வீ.தம்பிப்பிள்ளை ஆவார். இவர்களால் கட்டப்பட்ட நடராஜா ஞாபகார்த்த மண்டபமானது யாழ்ப்பாணத்திலேயே மிகவும் பெரிய அகலமான மண்டபம் என கூறுகின்றனர். 19.08.1950இல் கௌரவ நீதிஅமைச்சர் DR.L.A.ராஜபக்ஸ அவர்களால் நடராஜா ஞாபகார்த்த மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. மண்டபத்திற்கு பின்புறமாக உள்ள காணியை தர்மஆதாரமாக பெற்று பாடசாலைக்கு மைதானம் அமைத்தார்.

உயர்தரத்தில் பேணப்பட்டு செயற்படும் ஆய்வுகூடங்களாக இரசாயனம் பௌதீகம் விலங்கியல் உயிரியல் மற்றும் மனையியல் ஆகிய பாடங்களுக்கான தனித்தனி ஆய்வுகூடங்களை அமைத்ததோடு புவியியல் நூலகம் என்பவற்றுக்கு அறைகளைக்கட்டுவித்தார்.

பாடசாலை வரலாற்றுச்சான்றாக அமையும் காரைநகர் இந்துக்கல்லூரி எனும் சஞ்சிகை 1948இல் வெளியிடப்பட்டது. மற்றும் 1953, 1957, 1959ம் ஆண்டுகளில் "சயம்பு" எனும் கல்லூரி சஞ்சிகை வெளியிடப்பட்டது. எமது பாடசாலையின் வரலாற்றுச்சுவடுகளாக இச் சஞ்சிகை காணப்படுகின்றன. மற்றும் வைரவிழா பவளவிழா முத்துவிழா என விழாக்களும் இவரது காலங்களில் கொண்டாடப்பட்டவையாகும்.

திரு.தியாகராசா அவர்கள் மலேசியா சென்று பழையமாணவர்களிடம் நிதி சேர்த்து "சயம்பு ஞாபகார்த்த" கட்டடத்தை அமைத்து கீழ்மாடியில் வகுப்பறையையும் மேல்மாடியில் நூலகத்தையும் அமைத்தார். இம்மண்டப அமைப்பு பணியில் ஆ.தியாகராசாவுடன் திரு.த.அருளையா அவர்களும் ஈடுபட்டார்.

திரு.தியாகராசாவின் சேவைக்காலத்தில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். அக்காலகட்டத்தில் சிறப்புத்தர அதிபர்கள் உள்ள பாடசாலைகளில் இந்துக் கல்லூரியும் ஒன்றாகும். கல்விதிணைக்களத்தால் உயர்பதவி வழங்கப்பட்ட போதிலும் தான் வளர்த்த நேசித்த பாடசாலையை சிறப்புத்தரத்திற்கு(1AB) உயத்தினார். யாழ் மாவட்டத்திற்கு புகழ் சேர்த்த பாடசாலைகள் வரிசையில் இந்துக்கல்லூரியை உயர்த்திய பெருமைக்குரியவர்.

திரு.தியாகராசா அர்பணிப்பு மிக்க ஆசிரியர்களை அரவணைத்து சென்றமை கல்லூரியின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்தது. கல்வி போதனையிலும் பண்புடனும் பணிவுடனும் செயற்பட ஒழுக்கம்மிக்க மாணவர்களை உருவாக்குவதிலும் அல்லும்பகலும் அமரர் தியாகராசாவின் உள்ளம் ஈடுபட்டிருந்தது. கல்வி திணைக்களகத்தில் காத்திரமான பணிகளைப்பெறுவதற்கு அதற்கு பொருத்தமான பெற்றோர்களை அனுப்பி கருமம் ஆற்றினார். கல்லூரி உள்ளக நிர்வாகத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகள் தலையிட எத்தனித்த சமயத்தில் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறு வேண்டிநின்றார்.

சமூகம் எதிர்பார்த்த கல்வியை வழங்கியமையால் நகர்புற பாடசாலையை நோக்கி மாணவர்கள் செல்வது அரிதாக காணப்பட்டது. கற்றல் கற்பித்தல் சுமுகமாக காணப்பட்டமையால் பிரத்தியோக வகுப்புக்கள் செல்லவேண்டிய தேவையிருக்கவில்லை. திரு.தியாகராசா அவர்கள் சிறப்புதர பதவியில் உயர்நிலை சம்பளம் ஓய்வூதியம் என்பவற்றுக்கு காத்திராது 02.04.1970இல் மாணாக்கர்களின் பணியை நிறைவேற்றி மக்கள் பணி ஆற்ற ஆரம்பித்தார்.

25ஆண்டுகள் அதிபராக கடைமையாற்றி பெற்ற அனுபவங்களைக் கொண்டு வட்டுகோட்டைதொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக கடைமையாற்றிய காலத்தில் வட்டுகோட்டைதொகுதியின் பாடசாலை அதிபர்களுடன் பகிர்ந்து தரமான கல்வி அபிவிருத்தியில் அக்கறை செலுத்தினார். அனைத்து நியமனங்களின் போதும் கிடைக்கவேண்டிய சலுகைகள் தவறாது கிடைக்க இடைவிடாது முயன்று பொருத்தமானவர்கள் நியமனம் பெற ஆவனம் செய்தார்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் செலவழிக்காத வருடத்தின் இறுதி மாத ஆரம்பத்தில் பெற்று வருடம் முடிவடைவதற்கு முன்னர் பல நிர்மாணிப்பு பணிகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடதக்க விடையமாகும். இவற்றை உரிய காலங்களில் நிறைவேற்றியமையால் அதிபர் திரு.K.K.நடராஜா யாழ்மாவட்ட 1AB பாடசாலை அதிபர்கள் சந்திப்பில் யாழ் மாவட்ட கல்விப் பணிப்பாளர் திரு.W.D.C.மகதந்தில்ல அவர்களால் பாரட்டப்பட்டார். இதுவே இவர் இந்துக் கல்லூரியில் இருந்து ஓய்வு பெற்றாலும் தனது பணியை தொடர்ந்து செய்தார் என்பதற்கு சான்றாக அமைகிறது. க.பொ.த(உ.த) வகுப்புக்களில் 150இற்கு மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி கற்றனர். வட்டுகோட்டை மூளாய் சுழிபுரம் மாவடி ஊர்காவற்றுறை போன்ற அயற்கிராம மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து கல்வி கற்றமை என்பது சிறப்பான விடையமாகும். அமரர் திரு.தியாகராசா அவர்கள் கல்வி மேல் கொண்ட பற்று உறுதிக்கு அதிபர் திரு. K.K.நடராஜா செயல் வடிவம் கொடுத்தார்.

பாராளுமன்றத்தில் கல்வி தொடர்பான விவாதங்களின் போது ஆக்கéர்வமான கருத்துக்களை முன்வைத்தார். கல்வி அமைச்சுடன் தொடர்பினை ஏற்படுத்தி கல்வியாளர் என்ற தகமையில் சிறப்புடன் பேணிவந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.

1979ம் ஆண்டு இந்தியா சென்று கலாநிதி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டு "இலங்கையும் தென் ஆசியாவின் பொருளாhதார ஒத்துழைப்பு" என்ற நூலை எழுதினார். பொருளாதார ஒத்துழைப்பிற்கான தென்ஆசியா சம்மேளனம் உதயமாவதந்கு முன் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நூலின் கருத்திற் கொள்ளப்பட்ட வைசார்க் அமைப்பு இலக்குகளாக இருப்பதனால் இந்நூல் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல்படி எனக் குறிப்பிடலாம். இந்தப் பின்னணியில் கலாநிதிஆ.தியாகராசாவின் ஆய்வு இருப்பதால் முக்கியத்துவம் பெருகின்றது. திருஆ..தியாகராசா அவர்கள் மிக்க கவனத்தையும் ஆக்க பூர்வமான பரிசீலனைகளையும் விடயங்களின் எல்லா அம்சங்களிலும் செலுத்தினார். கலாநிதிஆ.தியாகராசாவின் புலமைமிக்க அனுகுமுறையும்  அரசியல் அனுபவங்களுடன் இணைந்த செயற்பாடுமிக்க இந்நூல் "பொருளாதார வல்லுனர்களுக்கும் அரசியல் விஞ்ஞானிகளுக்கும் ஆர்வம் ஊட்டுவதாக அமையும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆடம்பரமற்ற தோற்றமும் கம்பீரமான நடையும் தூய்மையான நெஞ்சும் துணிவுகொண்ட எண்ணம் எடுத்ததை முடிக்கும்ஆற்றல் என்பவற்றை அணிகலனாக் கொண்டு "மக்கள் சேவையே மகேசன் சேவை" என பணியாற்றிய  திரு.தியாகராசா அவர்கள் 1981ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை வேட்பாளராக யாழ்.மாவட்ட சபை தேர்லில் போட்டியிட்டதால் அவரது உயிர் பறிக்கப்பட்டது. அன்னாரின் பூதவுடல் வலந்தலைச்சந்திக்கு கிழக்கே அன்னாரின் சிந்தனையில் உருவான வேணன் அணைக்கட்டுக்கு மேற்கே மழைநீர் ஏந்தி தேக்கும் பகுதியில் சிதை முடப்பட்டு அக்கினியுடன் சங்கமமானார். அப் பகுதியில் எந்தவோர் இடத்திலும் குறிப்பிடதக்க அளவிற்கு புற்கள் முளைத்திருக்கவில்லை ஆனால் அவர் தகனம் செய்யப்பட்ட இடத்தில் புற்கள் முளைத்திருக்கின்றமையை காரைநகர் பொன்னாலை தாம்போதிய வழியேசெல்லும் மக்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது. இது பூமாதேவி தன் உத்தம புத்திரனை நினைவில் வைத்திருக்கினறமைக்கு சான்றாகும்.

                               "சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
                                       சொல்லியவண்ணம் செயல்"

என்ற வள்ளுவரின் வாக்கிற்கு சவால் விடுத்து சொல்லவல்லவனும் சொன்னதைச் செய்பவனும் யான் என்பதை பறைசாத்தியவர் ஆவார். அமரர் தியாகராசா அவர்களை "வரலாற்று அதிபர்" எனவும் அழைக்கப்பட்டார். இன்றும் அவரது சேவையை நினைவுகூறும் முகமாகவும் பாராட்டும் முகமாகவும் நன்றிகூறும் முகமாகவும் அவரது கல்லூரிக்கு அவரது பெயரை அழைக்கின்றனர். அமரர் திரு.தியாகராசா அவர்கள் இறையடி சேர்ந்தாலும் அவர் எமது ஊருக்காக ஆற்றிய சேவை மறக்கமுடியாதவொன்றாகும்.