வியாவில் ஐயனார் கோயில் பசுப் பண்ணையில் இடம்பெற்ற பட்டிப் பொங்கல் !!!

தொன்மைமிகு நீண்ட வரலாறுடைய பழம்பெரும் ஐயனார் கோயில் காரைநகர் மேற்கு வீதியில் அமைந்துள்ள வியாவில் ஐயனார் கோயில் ஆகும். இக்கோயில் வளாகத்தில் உள்ள பசுப் பண்ணையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(17.01.2016) அன்று காலை பட்டிப் பொங்கல் ஐயனார் கோயில் அறங்காவலர் சிவத்திரு.க.சோமசேகரம் (மகாராணி) அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
பட்டிப் பொங்கலுக்கு முன்பதாக கோமாதாக்களை நீராட்டி மலர்மாலை, பட்டுக்கள் அணிவித்து வீபூதி, சந்தனம், குங்கும திலகம் இட்டு அலங்கரிக்கப்பட்டன. பட்டிப் பொங்கலைத் தொடர்ந்து கோமாதா பூசை இடம்பெற்றது. 
பத்துக்கு மேற்பட்ட பால்தரும் பசுக்கள் இப்பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த இப்பசுக்கள் பண்ணையின் தொழுவங்களில் ஆற அமர்ந்து அசை போட்டு மகிழ்வுடன் ஓய்வெடுக்கும் காட்சி அற்புதமானது. 
இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஐயனார் கோயில் வளாகத்தில் வளர்க்கப்படும் பசுக்களின் சாணத்தில் இருந்து தூய வீபூதி தயாரிக்கப்பட்டு ஏனைய கோயில்களுக்கும் வழங்குவது இந்த கோயில் நிர்வாகத்தின் சிறப்பு மிக்க பணியாகும். 
பட்டிப் பொங்கலில் கலந்து கொண்ட ஆர்வலர்கள் இப்பணியை பாராட்டியதுடன் இப்பணியை ஏனைய சைவ சமய ஆர்வலர்களும் எடுத்துக்காட்டாக ஏன் கொள்ளக் கூடாது எனும் வினாவுடன் பண்ணையை விட்டு சென்றதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 
பட்டிப் பொங்கலின்போது எடுக்கப்பட்ட படங்கள் சிலவற்றைக் கீழே காணலாம். 

mp0

MPMP1 MP2 MP3 MP4 MP8 MP9MP10 MP11 MP12