மனித மேம்பாட்டுக் கல்வி திறனாய்வு நிகழ்வும் விருதுகள் தினமும்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) அண்மையில் மனித மேம்பாட்டுக் கல்வி திறனாய்வு நிகழ்வும் விருதுகள் தினமும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடாராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடபிராந்திய சத்தியசாயி இணைப்புக் குழுவின் ஆலோசகர் மருத்துவகலாநிதி இ.கணேசமூர்த்தி அவர்களும், மனித மேம்பாட்டுக் கல்வி இணைப்பாளர் திரு.வி.சிவனேசன் அவர்களும், பலவிகாஷ் கல்வி இணைப்பாளர் திருமதி.க.மேகநாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

கல்லூரியின் முன்னாள் கணித ஆசிரியை திருமதி.பாலாம்பிகை இராசநாயகம், பிருத்தானியாவிலிருந்து கல்லூரியின் பழைய மாணவர்களான திரு.சுப்பிரமணியம் சர்வானந்தன், திருமதி.சித்திரா சர்வானந்தன் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கலை நிகழ்வுகளில் மனித மேம்பாட்டுப் பாடல்கள் குழுக்களாகவும், “சேவை ஒரு யோகம்” என்னும் நாடகமும், பேச்சு, கதைகூறல், மற்றும் மாணவர்களின் அநுபவப்பகிர்வும் இடம்பெற்றிருந்தன.

அதிபர் உரை, விருந்தினர்களின் உரையைத் தொடர்ந்து பிரதேசக் கலைஞர்களை கௌரவிக்கும் பொருட்டு மேற்கொண்ட ஆய்வினூடாக இனங்காணப்பட்ட பிரதேச மிருதங்கக் கலைஞர் என்ற வகையில் ஓய்வுநிலை கிராம சேவையாளர் கலாபூசணம் திரு.தி. சண்முகசுந்தரம் அவர்களை ஓய்வுநிலை உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.த.மேகநாதன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விருதுகள் வழங்கும் நிகழ்வில் சுற்றாடல் முன்னோடிக்குழு 1, குழு 11 ஆகியனவற்றிற்கு முறையே பச்சை, மஞ்சள் வர்ணப் பதக்கங்களும், சாரணர்களுக்கான பதக்கங்களும் அணிவிக்கபட்டன. சாரணர்கள், St. Johns Ambulance படையணியினர், மற்றும் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைப்புக் குழு, சுகாதாரக்குழு, உற்பத்தித் திறன் விருத்திக் குழு ஆகியனவற்றிற்கான சீருடைகளும் வழங்கப்பட்டன.
மேற்படி விருதுகள் தின நிகழ்வுகளை ஆசிரியர் திரு.இ.இராஜகோபால் சிறப்பாக ஒருங்கமைத்திருந்தார்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.