“தியாகசொரூபி அருணாசலம்” – புலவர் திருமதி.பூரணம் ஏனாதிநாதன்

Pooranam Teacher

நூல் வெளியீடு வாழ்த்துச் செய்தி

கனடா சைவ சித்தாந்த மன்றம் 25.07.2015 சனிக்கிழமை “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட உள்ளது. இப்பெரும்பணி பாராட்டிற்கு உரியது. செந்தமிழும் சிவநெறியும் தழைத்து ஓங்க தளராது பணி ஆற்றிய இப்பெரியாரின் செயற்கரிய செயலை சைவ உலகம் அறிய இப்பதிப்பு வகை செய்யும்.

முல்லை, மருதம், நெய்தல் சூழு;ந்த இயற்கை வளம் கொழிக்கும் காரைநகரில் வேதநெறி தழைத்தோங்க, மிகுசைவத்துறை விளங்க சரித்திர நாயகன் அருணாசலம் தோன்றினார். தோன்றின் புகழொடு தோன்றிய அருணாசலப் பெரியார் நாவலரின் பரந்து பட்ட ஆளுமையினால் ஈர்க்கப்பட்டார். நாவலர் வழி நின்று அவரது மரபு வழுவாத சமயக் கொள்கைகளையும், பணிகளையும் பேணும் கடமையில் ஈடுபட்டார். நாவலரது இலட்சியங்களை பூர்த்தி செய்வதில் அயராது உழைத்தார். “ஈழத்திருநாட்டில் சைவத்தமிழ் பாடசாலைகளை நிறுவினார். தான் பிறந்த காரைநகராம் பொன்னாட்டில் சைவப் பெரியோரின் உதவியுடன் சுப்பிரமணிய பாடசாலை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை, வியாவில் சைவபரிபாலன சபை வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளை நிறுவினார்.

“எழுத்தறிவித்தவன் இறைவன்” எனவும் “எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” எனப் போற்றப்படும் கல்விச் செல்வத்தை வாரி வழங்க பாடசாலைகளையும் ஆசிரியர்களையும் உருவாக்கினார். சைவத்தமிழ் வாழ உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தியாக சொரூபி அருணாசலம் உபாத்தியாயரின் பொதுநலப் பணிகள் “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலைப் படித்து அறிந்து கொள்வோம். 
இந்நூலின் இரண்டாம் பதிப்பு வெளியீடு சிறப்பாக நடைபெற இறை ஆசி வேண்டி வாழ்த்துகிறேன்.

புலவர் திருமதி.பூரணம் ஏனாதிநாதன்
சின்னாலடி, காரைநகர்