மகான் சிவத்திரு ச.அருணாசலம் அவர்களின் புகழ் எண்திசையும் ஒலிக்க காரை இந்துவின் வாழ்த்துக்கள்

Vasuki.T

புண்ணிய பூமியாம் காரையம்பதியின் மைந்தனாகவும், சைவத்தின் விடி வெள்ளியாகவும் இற்றைக்கு நூற்றைம்பது ஆண்டுகள் முன் அவதரித்த அருணாசல உபாத்தியாயர் (1864) அவர்கள் சைவத்திற்கும், தமிழிற்கும் ஆற்றிய பணி மகத்தானது என்பதற்கு இன்றும் அவரது சேவை மக்களால் மதிக்கப்படுகின்றது, போற்றப்படுகின்றது என்பது மட்டுமன்றி அவரது பணி காலத்தால் மறையாத அளப்பெரும் சேவையாகக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றையும், மாண்புமிகு சேவைகளின் பெருமைகளையும் தாங்கிய அல்வாய் திரு. சி. கணபதிப்பிள்ளை ஐயர் அவர்கள் எழுதிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு. ச அருணாசலம் அவர்கள்” எனும் நூலின் இரண்டாம் பதிப்பை புலம்பெயர் தேசங்களில் வாழும் காரை மக்கள் ஒன்று கூடி கனடா சைவ சித்தாந்த மன்றத்தால் வெளியிடுவதனூடாக அறியக் கூடியதாக உள்ளது.

இன்று எமது சைவமும் தமிழும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தென்றால் எம் மக்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த நாவலர் பெருமானின் மகத்தான சேவையாகக் கருதலாம். அதனால் சமயகுரவர்கள் நால்வர்களுக்கு மேலாக ஜந்தாவது குரவராக நாவலர் பெருமான் போற்றப்படுகின்றார். அவ்வகையில் நாவலர் பெருமானின் வாழ்வியல் நெறிப்படுத்தலினாலும், அவரின் மேற்கொண்டுள்ள அளவிலாப் பக்தியினாலும் கவரப்பெற்ற காரையூர் அருணாசல உபாத்தியாயர் நாவலரின் பணியை தன்வாழ்நாளில் தொடர்ந்தார். தனது இளம் வயதிலேயே (இருபதுகளில்) தன்னலம் கருதாது சைவத்திற்கும், தமிழிற்கும் ஏற்படும் பாதிப்பு கண்டு விழித்தெழுந்தார். அந்நியராட்சிக் காலத்தில் மக்கள் ஆங்கிலக் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக் காரணமாக மதம் மாற்றப்படுவதை எதிர்த்தார். தாய் மொழியாம் செம்மொழியாகிய தமிழிற்கு ஏற்படும் அநீதி கண்டு மனம் கொதித்தார்.

அருணாசல உபாத்தியாயர் என்ற மாமனிதரின் அன்றைய விழிப்பு, பல பிரதேசங்களிலும் சைவப் பாடசாலைகள் தோற்றம் பெறுவதற்கு காரணமாக அமைந்ததுடன், சைவம் தழைத்தோங்கவும் வழிசமைத்தது எனலாம். இதற்காக அவர் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தார். கால் நடையாக ஊர் ஊராகச் சென்று கிராமங்கள் தோறும் சைவப் பள்ளிகளைத் தோற்றுவிப்பதிலும், சைவ ஆசிரியர்களை உருவாக்குவதற்காக ஆசிரிய கலாசாலையை நிறுவுவதிலும் தனது முழுக் கவனத்தையும் செலுத்தினார். அவர் பெரும் பொருள் படைத்த செல்வந்தர் அல்ல. அவருடைய மனஉறுதி, விடாமுயற்சி, அர்ப்பணிப்பு என்பன, தான் கொண்ட குறிக்கோளை அடைவதற்கு காரணமாகியது.

அவரது மகத்தான சேவைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பல சைவப் பாடசாலைகளில் எம் கிராமத்தின் மத்தியில் நூற்றாண்டுகள் கடந்து தலைநிமிர்ந்து நிற்கும் பாடசாலைகளைக் குறிப்பிடலாம். வியாவில் சைவ வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியன சைவத்தையும், தமிழையும் போதிக்கும் பாடசாலைகளாகவும், திருஞானசம்பந்தர் வித்தியாலயம் என அழைக்கப்பட்ட இன்றைய கலாநிதி ஆ. தியாகராசா ம.ம.வி.(காரைநகர் இந்துக் கல்லூரி) சைவத்தையும், ஆங்கிலக் கல்வியையும் போதிக்கும் பாடசாலையாகவும் உருப்பெற்றது.

இத்தகைய மகத்தான சேவையாளன் காரை மண்ணின் மைந்தனாக அவதரித்தமை எமது மண்ணிற்கு பெருமை சேர்க்கின்றது. 1864-1920 காலப்பகுதியில் வாழ்ந்த இவரது சேவைகளைப் போற்றி எமது மக்கள் இரண்டாம் பதிப்பாக இந்நூலை வெளியிடுவது கண்டு மனமகிழ்வடைகின்றேன். ஒருவர் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்பது முக்கியமல்ல அவர் எப்படி வாழ்ந்தார், அவர் சமூகத்திற்கு விட்டுச் சென்றவை எவை என சிந்திக்கும் போது மகான் அருணாசலம் அவர்களின் சேவை ஞாலத்தில் மாணப் பெரிது என்பதைப் பறைசாற்றுவதாக இந்நூல் வெளியீடு அமைந்துள்ளது. இந்ந}ல் வெளியீடானது அவருடைய சேவையைப் போற்றுவது மட்டுமன்றி, இன்றைய சமூகத்தினருக்கு வாழும் வழியைக் காட்டும் மகத்தான நூலாகக் கருதுகின்றேன். 

அவ்வகையில் இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூல் சிறப்புற வாழ்த்துகின்றேன். இந்நூலை வெளியிட சிந்தித்த கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் சிந்தனை, செயல்வடிவம் போற்றுதற்குரியது. இந்நூல் வெளியீட்டினூடாக பெருமகன் அருணாசலம் அவர்கள் இன்றும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் என்பதை உணர வைத்துள்ளது. அவ்வகையில் சைவ சித்தாந்த மன்றத்தினருக்கு மாமனிதர் சிவத்திரு.அருணாசலம் அவர்களின் எண்ணக்கருவுலத்தினூடாகத் தோற்றம் பெற்ற பாடசாலையான காரை இந்துக் கல்லூரியின் அதிபர் என்ற வகையில் மன நிறைவான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன். இந்நூல் வெளியீடு சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர தில்லைக் கூத்தனின் அருளாசியை வேண்டி வாழ்த்துகின்றேன்.


                                                                            நன்றி

திருமதி வா.தவபாலன்

அதிபர்

யா/கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்