காரை மண் பெற்றெடுத்த பிரபல இசைக்கலைஞர் இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் கனடாவிற்கு வருகைதரவுள்ளார்.

Parameswary.Kகலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அழைப்பினை ஏற்று யாழ் பல்கலைக்கழக இசைத் துறை மூத்த விரிவுரையாளரும் தமிழ் இசையுலகின் பிரபல வாய்ப்பாட்டுக் கலைஞருமாகிய இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் இம்மாத இறுதியில் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். 

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவியான செல்வி பரமேஸ்வரி பாடசாலையின் மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் யூன் மாதம் 27ஆம் திகதி நடத்தப்படவுள்ள நிகழ்வில் கலந்துகொண்டு இசைக்கச்சேரி நிகழ்த்தவுள்ளார். 

தமது இசைத்திறமையினால் காரை மண்ணிற்கு பெருமை சேர்த்த நாதஸ்வரக் கலைஞர் அமரர் காரையம்பதி N.K.கணேசனின் புதல்வியான செல்வி பரமேஸ்வரி சுவிற்சலாந்து ஜேர்மனி பிரான்ஸ் பின்லண்ட் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிற்கு கலைப் பயணங்களை மேற்கொண்டிருந்தவர் என்பதுடன் கர்நாடக இசையில் M.A., M.Phil.  ஆகிய பட்டங்களைப் பெற்றுக்கொண்டவர். 

ஈழத்துச் சிதம்பரத்தில் நீண்டகாலம் ஆஸ்த்தான வித்துவானாக (நாதஸ்வரம்) பணியாற்றி காரைநகர் மக்களின் அன்பையும் நன்மதிப்பினையும் பெற்ற கயிலாயக்கம்பரினதும் மற்றொரு நாதஸ்வர வித்துவான் சுப்பையாக்கம்பரினதும் பேத்தியே செல்வி பரமேஸ்வரி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

இரண்டு வாரங்கள் கனடாவில் தங்கியிருக்கும் செல்வி பரமேஸ்வரி நிகழ்த்தவுள்ள இசைக்கச்சேரி கனடாவாழ் காரைநகர் மக்களிற்கும் மற்றும் கர்நாடக இசை இரசிகர்களிற்கும் பெருவாய்ப்;பாக அமையும் என தெரிவித்த பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை நிர்வாகம் இவர் மூலமாக கனடாவில் கர்நாடக இசை பயிலும் மாணவர்கள் பயன்பெறும்வகையில் பயிற்சிப்பட்டறை ஒன்றையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.