கனடா வாழ் காரை உறவுகளிற்கும் உறுப்பினர்களிற்கும் கனடா-காரை கலாசார மன்றம் விடுக்கும் அறிவித்தல்.

கனடா வாழ் காரை உறவுகளிற்கும் உறுப்பினர்களிற்கும்

கனடா-காரை கலாசார மன்றம்

விடுக்கும் அறிவித்தல்.

கனடா-காரை கலாசார மன்றத்திற்கும் அதன் செயற்பாட்டாளர்களிற்கும் எதிராகத் தொடரப்பட்டு ஒன்ராறியோ உயர்நீதிமன்றில் நடந்துவரும் வழக்குத் தொடர்பில் ஒரு சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக எவ்வித அடிப்படையும் ஆதாரமற்ற முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுக்களை மன்ற நிர்வாகத்தின் மீது முன்வைத்து வருவதுடன் கட்டமைக்கப்பட்ட மன்றத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கமற்ற வகையில் அர்த்தமற்ற விமர்சனங்களை பதிவிட்டு மக்களை தவறான வழியில் நடாத்த முற்பட்டு வருவது மன்ற நலன் விரும்பிகளுக்கும் மண்ணின் பற்றாளர்களுக்கும் கவலையளிப்பதாகவுள்ளது.

மன்றத்தின் பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும், கரிசனைகளையும் முன்வைப்பதையோ அல்லது பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட யாப்பு விதிகளிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய நேரிய வழிகளைப் பின்பற்றி அவற்றிற்குத் தீர்வு காண்பதையோ தவிர்த்து சமூக ஊடகங்கள் வாயிலாக எதேச்சையான முறையில் பதிவிட்டு வருவது விதி மீறல் என்பதுடன் சமூகப் பொறுப்பற்ற செயலாகவும் பார்ப்பதுடன் அவர்களது முறையற்ற இந்நடவடிக்கைகள் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. கருத்துக்களையும், கரிசனைகளையும் முன்வைக்கின்ற உரிமையினை நாம் மறுக்கவில்லையானாலும் அவற்றினை மன்றத்தின் உரிய விதிகளுக்கமைய பொதுக்கூட்டத்திலோ அன்றி மன்றத்தின் உத்தியோகபூர்வமான மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொண்டோ தெரியப்படுத்தினால் அவற்றினை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் நிர்வாகத்துக்கு உண்டு. நிர்வாகத்தின் பதிலில் அல்லது நடவடிக்கைகளில் திருப்திப்படாதவிடத்து மன்றத்தின் யாப்பு விதிகளில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக திட்டமிடல் போசகர் சபைக்கு மேன்முறையீடு செய்து தீர்வுகாண முயற்சிப்பதை விடுத்து மன்றத்தின் விதிமுறைகளைத் தாண்டி முற்றிலும் முரணான வகையில் செயற்படுவது என்பது மன்ற நலனிற்கும் அதன் வளர்ச்சிக்கும் குந்தகத்தினை ஏற்படுத்துவதாகவே அமையும் என்பதை கருத்திற்கொண்டு இதுபோன்ற முறையற்ற சமூகப் பொறுப்பில்லாத செயற்பாடுகளைத் தவிர்த்து, உரிய வழிமுறைகளில் அணுகுமாறு சம்பந்தப்பட்டவர்களை கனடா-காரை கலாசார மன்றம் கேட்டுக்கொள்கின்றது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் தற்போதய நிர்வாகம் அமைந்த நாள் முதலாக குறித்த வழக்கினை சமாதானமான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வத்துடன் முயற்சி செய்து வந்துள்ளதை சம்பந்தப்பட்டவர்கள் நன்கறிவர். மன்ற நிர்வாகத்தின் இடைவிடாத முயற்சியின் பயனாக வழக்காளியும், பிரதிவாதிகளும் சுமுகமான முறையில் வழக்கினை முடிவுறுத்துவதற்கு சென்ற யூலை மாதத்தில் இணக்கம் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் நியாயமானதும் கௌரவமானதுமான சமாதானத் தீர்வினை எட்டும் வகையிலான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு திரு.சிவசம்பு சிவநாதன் (மன்றத்தின் தலைவர்), திரு.சோமசுந்தரம் கணேசபிள்ளை (மன்றத்தின் போசகர்), திரு.சிவசுப்பிரமணியம் குகநேசபவான் (மன்றத்தின் முன்னாள் போசகர்) ஆகியோரை உள்ளடக்கிய குழு வழக்காளி, பிரதிவாதிகள் ஆகியோரின் சம்மதத்துடன் நியமிக்கப்பட்டுள்ளது. நாம் எப்போதும் சமாதானத்தையே விரும்புவபர்கள். சமாதானக் குழு உறுப்பினர்கள் மூவரும் வழக்காளியைச் சந்தித்துப் பேசுவதற்கான முதலாவது கூட்டத்துக்கான அழைப்பு மின்னஞ்சல் ஊடாக தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கிற்கு ஏற்பட்டுவருகின்ற சட்டவாளர்களிற்கான செலவுகளை சமூக அக்கறையும், ஊர்ப்பற்றும் கொண்ட எம்மண்ணின் மக்களினால் மன்றத்தையும் அதன் செயற்பாட்டாளர்களையும் பாதுகாக்கவேண்டும் என்ற நன்நோக்குடன் வழங்கப்பட்டு வருகின்ற நிதியும், பிரதிவாதிகளினால் வழங்கப்பட்டுள்ள நிதியுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பிட்டவர்கள் தெரிவிப்பது போன்று இவ்வழக்கிற்கு மன்றத்தின் நலன்புரித் திட்டங்களுக்காக மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட பணம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அதேவேளை நீதி மன்றத்தில் உள்ள ஒரு வழக்குத் தொடர்பிலான அனைத்து விபரங்களையும் பகிர்ந்து கொள்வது என்பது பிரதிவாதிகளின் நலன்களுக்கு பாதகமானதாக அமைந்து விடக்கூடியது என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

பலதரப்பட்ட சவால்களையும் சோதனைகளையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி காரை.உறவுகளின் நலன்பேணும் செயற்பாடுகளுக்கு உதவுவதில் உண்மையாகவும் உணர்வோடும் உழைத்து வருகின்ற கனடா-காரை கலாசார மன்றத்திற்கு நீங்கள் அனைவரும் வழங்கி வருகின்ற பேராதரவு காரணமாக மண்ணின் உறவுகளிற்கான நலன்புரித் திட்டங்களை வகுத்து சிறந்த முறையில் நிறைவேற்றி வருகின்ற அதேவேளை கனடா வாழ் காரை உறவுகளை ஒன்றிணைத்து அவர்களுக்கான நலன்புரித் திட்டங்களாக வருடாந்த நிகழ்ச்சிகளையும் அனைவரும் பாராட்டும்படியாக செயற்படுத்தி வருவதையிட்டு மகிழ்வடைகின்றோம். இளையோரை ஒன்று திரட்டி இளையோர் அமைப்பினை ஏற்படுத்தி அவர்களையும் மன்றப் பணிகளில் ஈடுபடவைப்பதன் ஊடாக எதிர்காலச் சந்ததி மன்ற நிர்வாகத்தினை பொறுப்பேற்று செயற்படக்கூடிய நிலையினை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எமது நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஊர்ப் பற்றும் சமூக அக்கறையும் கொண்டு கடந்த நிர்வாகங்களில் அங்கம் வகித்த சேவையாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பினால் 33 ஆண்டுகளுக்கு மேலாகக் ஒற்றுமையோடு கட்டி வளர்க்கப்பட்ட கனடா-காரை கலாசார மன்றத்தின் பணிகளை இளையோர் அமைப்பு பொறுப்பேற்றுக்கொள்ளும் வரை வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு உழைக்க முன்வருமாறு கனடா வாழ் காரையின் உறவுகளை அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.

                    நிர்வாகம்
கனடா-காரை கலாசார மன்றம்

1 comments

    • KANA SIVAPATHASUNDARAM on September 28, 2023 at 4:57 pm

    very good great

Comments have been disabled.