அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) அவர்களின் நினைவேந்தல்.

அமரர்  ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) அவர்களின் நினைவேந்தல்.

யாழ் காரைநகர் களபூமி வளுப்போடையைப் பிறப்பிடமாகவும் பிரித்தானியா (லண்டன்) வதிப்பிடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற மொழி பெயர்ப்பாளர் (இலங்கை துறைமுக அதிகாரசபை) தமிழ் தொழிற்சங்க கூட்டணியின் முன்னாள் செயலாளரும், தமிழ் ஆர்வலரும், உலக சமாதான சபையின் முன்னாள்  செயலாளருமான  அமரர்  ஐயாத்துரை  சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) அவர்களின் மறைவு குறித்த நினைவு அஞ்சலிக் கூட்டம் 15.05.2022 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு துர்க்கா திருமண மண்டபம்  (Edikerstrasse 24, 8635 Dürnten, Zürich) என்ற முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் செயற்குழு உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  கூட்டத்தினை சபையின்  போஷகர் தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ. சுவாமி த.சரஹணபவானந்தா தலைமையில் நினைவு அஞ்சலிக் கூட்டம் ஆரம்பமானது. அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) திருவுருவப்படத்திற்கு அமரரது உறவினர்களான திரு முருகேசு சற்குணராஜா  (Zürich) அவர்கள் ஈகைச்சுடரினையும், திரு. நடராஜா சிவலோகநாதன் (Basel) அவர்கள் சந்தனமாலையை அணிவித்தும், தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ. சுவாமி த.சரஹணபவானந்தா ஐயா அவர்கள் தீபாஞ்சலி செலுத்தியும், அதனைத்தொடர்ந்து புலம்பெயர் நாடுகளில் உள்ள காரைநகர் அமைப்புக்களின் பங்களிப்புடன் காரைநகரில் உள்ள காரை அபிவிருத்தி சபை ஊடாக காரைநகர் மக்களின் கல்வி,குடிநீர்பிரச்சனை, வாழ்வாதாரம்  என பல்வேறு தளங்களின் ஊடாக எமது ஊரின் வளர்சிக்கு முக்கிய தொண்டாற்றி எல்லோர் மனதிலும் நீங்கா இடம்பிடித்த அமரர் திருநாவுக்கரசு சிவாமகேசன் ஆகிய இருவருக்கும்        இரு நிமிட அக வணக்கம் செலுத்தியும், நினைவு அஞ்சலிக் கூட்டத்திற்கு வருகைதந்தோர்கள்  திருவுருவப்படத்திற்கு  மலர்தூவி வணக்கம் செலுத்தியும் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

ஐ.தி சம்பந்தன் ஐயா அவர்கள் கால் பதித்த இடங்கள் ஏராளம், ஆரம்ப காலத்தில் தமிழரசுக்கட்சி பின் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் அங்கமாக செயல்பட்டு அன்றைக்கே விடுதலைக்கு குரல்கொடுத்த தன்னலமறற  தொண்டராவர். அதன் பின்னர் இலங்கை எழுதுவினைஞர் சங்கத் தலைவராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் செயல்பட்டு வந்ததோடு மட்டும் இல்லாமல் சுடரொளி வெளியீட்டுப்பிரிவை உருவாக்கி பல நூல்களை வரலாற்றுப்பதிவுகளாக பிரசவித்த வரலாறும் உங்களைச்சாரும். பன்முக ஆளுமையும், உயர்ந்த பல அனுபவங்களையும் ஊர்சார்ந்த சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்ட ஐ.தி சம்பந்தன் ஐயா அவர்களின் இரங்கல் உரையை சபையின் செயலாளர் திரு. முருகேசு பாலசுந்தரம் அவர்களும், நினைவுரைகளை சபையின்  போஷகர் தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ. சுவாமி த.சரஹணபவானந்தா அவர்களும், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் முன்னைநாள் தலைவர்களான திரு. நல்லதம்பி சரவணப்பெருமாள், திரு. ஆறுமுகம் செந்தில்நாதன், மற்றும் திரு. நடராஜா சிவலோகநாதன்,                    திரு. தர்மரத்தினம் லோகேஸ்வரன் ஆகியோர்கள் உணர்வு பூர்வமாக நினைவுரைகளை ஆற்றியிருந்தார்கள்.

அமரர் ஐயாத்துரை சோமஸ்கந்தமூர்த்தி (ஐ.தி சம்பந்தன்) அவர்களின் வணக்க நிகழ்வுக்கு சமூகமளித்தோருக்கு சுவிஸ் காரை அபிவிருத்திச்சபையின் போஷகர் தவத்திரு. ஸ்ரீலஸ்ரீ. சுவாமி த.சரஹணபவானந்தா அவர்களின் நன்றியுரையுடனும்,வருகை தந்தோருக்கு சிற்றுண்டிகள் வழங்கியும் நினைவுக் கூட்டம் 17.30 மணிக்கு நிறைவுபெற்றது.

ஓம் சாந்தி!   ஓம் சாந்தி!!   ஓம் சாந்தி!!!

இங்ஙனம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை,

செயற்குழு உறுப்பினர்கள்,

மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக்குழு,

சுவிஸ் வாழ் காரை மக்கள்.

18.05.2022