Tag: களபூமி தன்னைப் பிள்ளையார்

தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் 13.04.2016 இடம்பெற்ற தமிழ் சித்திரைப் புத்தாண்டு பூஜை நிகழ்வு

IMG_3905 (Copy) IMG_3906 (Copy) IMG_3907 (Copy) IMG_3908 (Copy) IMG_3909 (Copy) IMG_3910 (Copy) IMG_3911 (Copy) IMG_3912 (Copy) IMG_3913 (Copy) IMG_3914 (Copy) IMG_3915 (Copy) IMG_3916 (Copy) IMG_3917 (Copy)

களபூமி தன்னையம்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில்

                                  களபூமி தன்னையம்பதி

                      ஸ்ரீ சித்தி  விநாயகர் கோவில்

ஈழமணித் திருநாட்டின் சிரசென மிளிரும் யாழ்நகரின் வடமேல் 23 கிலோ மீற்றர் தொலைவில் கற்றவரும், வணிகர்களும், வாரி வழங்கும் வள்ளல்களும் நீறணிந்த பெருமானை திருநீறணிந்து வழிபடும் வழிபாட்டாளர்களும் வாழ்ந்து வருகின்ற கிராமம் காரைநகராகும்.

     இக் காரைநகர் கிராமத்தில் உள்ள பிரதான குறிச்சிகளில் களபூமியும் ஒன்றாகும். களபூமி எனும் இக்குறிச்சியானது கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே தன் வரலாற்றை பறை சாற்றி உள்ளதையும் பல களங்களை கண்ட பூமி ஆகையால் களபூமி ஆகவும் பெயர் பெற்றது என்பதையும் காரைநகர் ஏடுகளில் காணலாம்.

களபூமி பல சிறு குறிச்சிகளைக் கொண்ட காரைநகரின் கிழக்குப் பகுதியாகும். இப் பகுதியில் உள்ள ஒரு இடமே "தன்னை" ஆகும். இத் தன்னை எனும் இடத்தில் கோவில் கொண்டு எழுந்தருளி இருக்கும்  ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் பற்றியே இக் கட்டுரைத் தொடர் விளைகின்றது.

        தன்னை என்றால் பழமை என்பது கருத்தாகும். தொன்மை என்றாலும் பழமை என்றே கருத்துக் கொள்ளப்படும். இந்த தொன்மை என்ற பதமே மருவி தன்னை என்றாகியது எனவும் சிலர் கூறுவர். தொன்மை என்ற பதத்திற்கு இணங்க காரைநகரில் உள்ள கோவில்களில் காலவரையறை அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு பழமை வாய்ந்த ஆலயமே தன்னை ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலாகும்.

    இராமேஸ்வரத்தில் கணபதித்திட்டு எனும் குக்கிராமத்திலிருந்து இலங்கைக்கு வந்த அந்தண குடும்பத்தினராலேயே இவ்வாலயம் தொடங்கப்பட்டது. இக் குடும்பம் இரண்டு சிறு வள்ளங்கள் மூலம் இராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டனர். ஒரு வள்ளத்தில் அந்தணர் குடும்பமும் மற்றைய வள்ளத்தில் மிகப் பெரியதும் பாரம் கொண்டதுமான விநாயகர் சிலையும் பயணத்தை தொடங்கின. வரும் வழியில் இரு வள்ளங்களும் விபத்துக்குள்ளாகின. இரண்டு வள்ளங்களும் திசை மாறிச் செல்லத் தொடங்கின. அந்தண குடும்பம் வந்து கொண்டிருந்த வள்ளம் திக்குத் தெரியாமல் தடுமாறி இன்று "திருவடி நிலை" என்று அழைக்கப்படும் இடத்தில் கரையை அடைந்தது. இக்கரையிற்றான் ஸ்ரீராமருடைய திருப்பாதம் பட்டதனால் திருவடி நிலை என்ற பெயர் ஏற்பட்டது என்பர். இங்கு தான் பொன்னாலை ஸ்ரீ வரதராசப் பெருமாள் தீர்த்த உற்சவத்திற்கு எழுந்தருளுவார். அவ்விடங்களைத் தரிசிக்கும் புண்ணியம் இந்த அந்தணர் குடும்பத்திற்கு இருந்தமையால் தான் என்னவோ இக் கரையில் அவ்வள்ளம் கரை சேர்ந்தது. கரையில் இறங்கிய அந்தண குடும்பம் பற்றைக் காடுகளின் ஊடாக சங்கானை, மானிப்பாய் ஆகிய இடங்களைத் தாண்டி உடுவிலை அடைந்தனர். அங்குள்ள மீனாட்சி அம்பாள் கோவிலில் தங்கினர்.

       இவ்வாறு கரை சேர்ந்த அந்தணர் குடும்பம் தாங்கள் கொண்டு வந்த விநாயகர் சிலையை எண்ணி வருந்திக் கொண்டிருந்தனர். இறைவன் திருவுளக் கருணையினால் வள்ளம் கரைசேர்ந்த இடம் பற்றி அந்தணருக்கு கனவு மூலம் தெரியவந்தது. விநாயகர் வந்த வள்ளம் காரைநகர் கிழக்குக் கடற்கரையில் இருப்பதாக அறிந்த அந்தணர் அன்பர்களின் உதவியுடன் தேடுதல் செய்து சிலையைக் கண்டனர். மிகப் பெரியதும், பாரமானதுமான சிலைiயானதால் சிரமப்பட்டு இன்று ஆலயம் இருக்குமிடம் வரை கொண்டு வந்து சேர்க்கப்பட்டது.

       பின் அவ்விடத்திலிருந்து அச்சிலையை எடுக்க முயன்றபோது முடியாமற் போகவே அவ்விடத்திலேயே கோவிலை அமைத்தனர். சிலையும் பீடமும் ஒரே கல்லால் ஆனவை. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போது பீடத்தின் அடியில் உள்ள துவாரம் வழியாக அபிஷேகமான திரவியங்கள், பால், நீர் என்பன செல்வதைக் காணலாம். இக் கோவிலில் பூசை செய்து வந்த அந்தண குடும்பத்திற்கு ஆண் வாரிசு இல்லாமையால் பெண்வழி வந்த குமாரவாமி ஜயர் பூசைப் பொறுப்புக்களை பொறுப்பேற்று நடாத்தி வந்தார். இவர் இக்கோவிலின் வரலாற்றில் ஜந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவராவார். இக் கோவிலின் வழிபாட்டில் ஏற்பட்ட சச்சரவு காரணமாகச் சிலர் பிரிந்து சென்று இன்று திக்கரையில் பிரசித்தமாக இருக்கும் முருகன் கோவிலை ஆரம்பித்தனர் என அறியக்கிடக்கின்றது. காரைநகர் கோவளம் வெளிச்ச வீட்டின் பக்கத்தே முருகேசு சுவாமிகள் ஆச்சிரமம் ஒன்றை அமைத்து இருந்தார். இவர் பத்திரிகை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். யோகர் சுவாமிகள் போன்று ஞானியாகத் திகழ்ந்தவர். இவரை பேப்பர் சாமியார் என்றழைப்பர். இவர் இக்கோவிலைப் பற்றிக் கூறும் போது காரைநகரின் முதற் கோவில் தன்னைப் பிள்ளையார் கோவில் என்றும், அதீத சக்தி வாய்ந்தது என்றும் கூறியுள்ளார். தனது சிஷயர்களை இப்பிள்ளையாரை வழிபாடு செய்யத் தவறாதீர்கள் என்றும் அவர் கூறுவார். அவரின் சீடர்களில் சிலர் இன்றும் ஆலயக் கடமைகளில் முன் நிற்கின்றனர்.

        மேலும் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்ற மக்களின் வரலாறு  "கத்தரை" முறை பேணல் மூலம் தற்போதும் பாதுகாக்கப்படுகின்றது. அதாவது தற்போதுள்ள தலைமுறையிலிருந்து பின்னோக்கி ஒன்பதிற்கும் மேற்பட்ட தலைமுறைப் பெயர்களைக் கொண்டவர்களாக உள்ளனர். இக் "கத்தரை" முறைகளில் இரு மரபால் உயர்ந்த, இருமரபும் சிறந்த, கன உடையார், இராம உடையார், முதலியார் வம்சம் எனப் பல பெயர்களைக் கொண்ட வழித்தோன்றல்கள் தற்போதும் அதனைப் பேணி வருகின்றனர். தத்தம் "கத்தரைகளை" சேர்ந்தவர்கள் தங்கள் "கத்தரைகளிலுள்ள" உறவுக்காரர்கள் இல்லங்களில் நிகழும் மங்கல, அமங்கல நிகழ்வுகளில் முன்னிறுத்தப்படுவது தற்போதும் நடைமுறையில் உள்ளது. இதில் "துடக்கு காத்தல்" (ஆசூசம்) என்பது  கடல் கடந்து, பிரதேசம் மாறி, நாடு மாறி, கண்டம் மாறி வாழ்ந்து வந்த போதும் "எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி வாழ்ந்ததும் இந்நாடே" என்ற பாரதியார் பாடல்களை நியமாக்கி தொடர்ந்தும் "மரபுளோர் கொடுக்க வாங்கி" என்ற கம்பன் வரியையும் வாழ்வாக்கி மரபு பேணுகின்ற தன்மை இப்போதும் பேணப்பட்டே வருகின்றது. 

      தன்னைப்பிள்ளையார் கோவிலை இருமரபுஞ்சிறந்த மானாமுதலி வம்சத்தினர் ஆதரித்து வழிபட்டு வந்தனர். இக்கோயிற் சூழலில் வாழ்ந்து வந்த முதலியார் மரபினைச் சேர்ந்த விநாசித்தம்பி சந்ததியினரும் தன்னைப் பெருமானை வழிபட்டு வந்தார்கள். 

      இருமரபுஞ்சிறந்த மானாமுதலி வம்சத்தினரைச் சேர்ந்தவர்களால் தன்னைப் பிள்ளையாருக்கு நித்திபூசை சிறப்பாக நடைபெறுவதற்காகத் தங்களுக்குச் சொந்தமான நெல் வயல்களைக் கோயிலுக்கு உரிமையாக்கியதுடன் அந்தணப்பெருமக்களுக்கு ஆதரவு நல்கியும் வந்தனர்.

       இம்மரபில் வந்த வேலாயுதர் சின்னக்குட்டி தம்பதியினர் பல ஆண்டுகளாகத் தங்களுக்கு ஆண் சந்ததி இல்லாத குறை நீங்குவதற்காக வரம் வேண்டித் தமது குல தெய்வமான பிள்ளையாரைப் பக்தி சிரத்தையுடன்  வழிபட்டு வந்தார்கள். இதன் பயனாக ஏழு புதல்வர்கள் தோன்றினார்கள். வேலாயுதர் மகன் சிற்றம்பலமும் அவர் மனைவியாராகிய அபிராமிப்பிள்ளையும் பத்து ஆண்டுகள் வரை பிள்ளைப்பாக்கியம் இல்லாது மிக வருந்தி தங்கள் குல தெய்வமான தன்னைப் பிள்ளையாரிடம் வரம் வேண்டியும் சந்தானகோபாலரைப் பிரதிட்டை செய்தும் வணங்கி ஆண்மகவு ஒன்றைப் பெற்று மனநிறைவுற்;றனர். தொடர்ந்தும் ஜந்து பிள்ளைகளைப் பெற்று மனமகிழ்சி அடைந்தனர்கள்.  தன்னைப் பதியில் வீற்றிருந்து வேண்டுவர்க்கு வேண்டிய வரங்களை வழங்கி அற்புதங்கள் பல நிகழ்த்தும் விநாயக பெருமானை வணங்கி அப்பகுதி மக்கள் பல சிறப்புக்களுடன் வாழ்ந்து வந்தனர்.  அப்பகுகியில் வாழ்ந்த பண்டாரி முருகர் தம்பிப்பிள்ளை தம்பதியினர். பிள்ளையாரை வரம் வேண்டி வணங்கிப் பெற்ற ஆண்மகன் கல்வியிற் சிறந்து விளங்கிப் புகழ் பெற்ற நியாயதுரந்தரராக (அப்புக்காத்து) விளங்கியமையும் இராமு உடையார் வம்சத்தைச் சேர்ந்த வெற்றிவேலு கந்தையா ஆசிரியரும் மனைவியாரும் தன்னைப் பெருமானை வரம் சேண்டிப் பிரார்த்தித்தும் பெற்ற புதல்வன் அமரர் கனகரத்தினம் நன்கு கற்ற பிரபல மருத்துவ கலாநிதியாக விளங்கியமையும் குறிப்பிடத்தக்கன.

       கோயிற் சூழலில் வாழ்ந்து வந்த முதலியார் வம்சத்தைச் சேர்ந்த விநாசித்தம்பி சந்ததியினரும் வேலுப்பிள்ளை சந்ததியினரும் விநாயகப் பெருமான் அருளால் வளங்கள் பல பெற்று இன்றும் சிறப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.  விநாசித்தம்பியின் இரண்டாவது மனைவி தாம் விதவையானபோது தன்னைப் பிள்iளையாரே தஞ்சமென்று பெருமான் அடியில் வீழ்ந்து வணங்கி அப்பெருமான் அருளால் தமது ஒரே மகனுடன் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தார்.

       தன்னைப் பெருமானை வணங்கி வாழ்ந்த மக்களின் உறவினர்கள் அனைவரும் அப்பெருமானின்அருளால் உலகெங்கும் பரந்து புகழுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.

      பிள்ளையாரை ஆதரித்து வந்த மானாமுதலி வம்சத்தினரும் தன்னைத் திருப்பதியில்  வாழ்ந்த பண்டாரி முருகர் சந்ததியினரும் தன்னைப் பிள்ளையாரின் நினைவாக மருதடி விநாயகர் ஆலயத்தை அமைத்தனர் என்று முதியோர் கூறுவர்.

      அண்மைக்காலத்தில் ஆலய அர்ச்சகராக இருந்து வேதாகம முறைப்படி பூசை செய்து எல்லோரதும் பெருமதிப்பைப் பெற்ற அசாரசீலர் சிவத்திரு குமாரசுவாமிக்குருக்கள் ஆவார். குருக்களின் பாரியாராகிய ஜீவரட்னசணியம்மா சைவ அனுட்டானம் உள்ளவர்.  வயதான காலத்திலும் கோயிற் தொண்டு செய்து வந்தவர். வுழிபாட்டுக்கு வரும் அடியார்களைத் தாயன்போடு உபசரித்து அனுப்பும் பெருமை உள்ளவர். அத்துடன் அவரது மகன் "பாப்பா" ஜயர் அவர்கள் பிரம்மச்சரியாக வாழ்ந்து தன் தாயாருடன் இறுதிக்காலம் வரை 1991ம் ஆண்டு சித்திரை மாதம் இடப்பெயர்வைக் காரைநகர் கண்டபோதும் தன் கடவுள், தன் தாய் ஆகியோருடன் அசையா மனவுறுதியுடன் வாழ்ந்த அந்தணரை இவ்விடத்தில் குறிப்பிடுவது சாலப்பொருத்தமானதாகும். மேலும் குமாரசாமிக்  குருக்கள் தம்பதியரின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அனைத்து செல்வங்களையும் பெற்று மிகச்சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்

       இக்கோவிலின் இன்னொரு சிறப்பு மிக்க விடயமாக குறிப்பிட்டுக் கூறக்கூடியது "தன்னை யமக அந்தாதி" ஆகும். இதனை பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலிருந்து வந்த முத்தமிழ் வித்தகராகிய முருகேசையர் இக் கோவிலில் பூசை செய்து வந்த காலப்பகுதியில் விநாயகப் பெருமானின் கருணையினால் தன்னை யமக அந்தாதி 70 செய்யுள்களாகப் பாடினார். இருப்பினும் இவ் அந்தாதி பூர்த்தி செய்யப்படாமல் இருந்தது. 1810ம் ஆண்டு பிறந்த முருகேசருடைய மகன் கார்த்திகேசு ஜயர் தம் தந்தையாரால் பாடப்பட்டு பூர்த்தி செய்யப்படாதிருந்த தன்னை யமக அந்தாதியைப் பூர்த்தி செய்து தமது புலமையை வெளிப்படுத்தினார். கங்காதர சாஸ்த்திரியாரால் இவருக்குப் "புலவர்" எனும் பட்டம் சூட்டப்பட்டது. அப்போது இவருக்கு வயது 18. அன்று தொடக்கம் இவரது பெயர் "கார்த்திகேசுப்புலவர்" என வழங்கப்பட்டது.

       அந்தாதி முற்றுப் பெற்றும் நீண்ட காலமாக ஏட்டுச்சுவடியாகவே இருந்தது. இதனை உரையுடன் வெளியிட வேண்டுமென்று கார்த்திகேசுப்புலவர் அவர்களின் வம்ச மரபு வழித்தோன்றலும் அகில இலங்கைச் சைவகுருமார் சபைத்தலைவராக இருந்து பெரும் பணியாற்றியவரும் ஈழத்து சிதம்பர தேவஸ்தான பிரதம குருவாக இருந்தவருமான வேதாகம கிரியா பூஷணம் சிவத்திரு ச.கணபதீஸ்வரக்குருக்கள் அவர்களின் புதல்வரான ஆழ்ந்த அகன்ற தமிழ்ப் புலமை படைத்தவரும், தமிழ்ப் பண்டிதரும் கலாநிதி சிவத்திரு க.வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் விழைந்தார்கள். உரை எழுதுவதற்குப் பேரறிஞரும் பெரும் புலவரும் பல நூல்களின் ஆசிரியருமான பண்டிதமணி க.மயில்வாகனனார் ஒப்புதலையும் பெற்று உதவினார்கள். பேருதவி புரிந்த குருக்கள் அவர்களினாலும் விநாயகர் ஆதரித்து வந்த மரபு வழித்தோன்ற பெருந் தவத்தினால் பிறந்த அமரர். சின்னத்தம்பி தம்பிராசா அவர்கள் 2004ஆம் ஆண்டு இந்நூலினை வெளியிட்டுள்ளார். 

       மேலே கூறப்பட்ட வரலாறும், பெருமைகளும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்ற தன்னையம்பதியில் வீற்றிருக்கும் விநாயகப்பெருமான் திருக்கோவில் தற்போது பாலஸ்தாபனம் செய்யப்பட்டு புனரமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாலயத்தில் இதுவரை காலமும் வருடம் முழுவதும் வருகின்ற முக்கிய விசேட தினங்கள், பிள்ளையார் கதை, திருவெம்பாவைப் பூசை, மாதப்பிறப்பு பூசை, சதுர்த்தி திதி போன்ற விழாக்கள் நடைபெற்று வந்தன. எனினும் நடைபெற இருக்கின்ற இக் கும்பாபிஷேத்தை தொடர்ந்து கொடியேற்றத் திருவிழா நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றது. எல்லாம் வல்ல விநாயகப்பெருமான் "வேண்டத்தக்கது" அறிவோனாக தன் அருளினை பாலித்து தன்னையம்பதியில் வீற்றிருக்கின்றான்.

           ஆலய பரிபாலன சபையினரின் அன்பான வேண்டுகோள்

    மேற்படி திருக்கோயில் பல ஆண்டுகளாக எவ்வித திருப்பணி வேலைகளும் நடைபெறாதமையால் தரை மட்டத்தில் இருந்து புனர்நிர்மாண வேலைகள் நடைபெற்று ஓரளவு பூர்த்தியாகும் நிலையில் உள்ளது. அன்பர்கள் அடியவர்களின் உதவியால் மிகுதி திருப்பணி வேலைகளையும் பூர்த்தி செய்து வெகு விரைவில் குடமுழுக்கு விழா நடைபெற தன்னை வரசித்தி விநாயகரின் திருவருள் கூடியுள்ளது. எனவே மேலும் அன்பர்களிடம் நிதியுதவியை வேண்டி நிற்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர். 

                     "தன்னையன் போடு துதிப்பாரகத்னிற்சார்ந்திடுநா
                      தன்னையன் போற்று தகர்வாகனற்குத் தனிப்பின்றிய 
                      தன்னையன் போத வுருவானவன் தமியேற்குத் துணை
                      தன்னையன் போர்புரி யங்குச பாசம் தரித்தவனே"

                                    –  தன்னை யமக அந்தாதி –

IMG_2213 (Copy) IMG_2225 (Copy) IMG_2238 (Copy) IMG_2243 (Copy) IMG_2244 (Copy) IMG_2256 (Copy) IMG_2260 (Copy) IMG_2262 (Copy) IMG_2264 (Copy) IMG_2271 (Copy) IMG_2272 (Copy) IMG_2274 (Copy) IMG_2280 (Copy) IMG_2281 (Copy) IMG_2282 (Copy) IMG_2285 (Copy) IMG_2309 (Copy) IMG_2310 (Copy)