ஆறுமுகநாவலரின் சைவசமயப் பேரெழுச்சியை காரை.மண்ணில் முன்னெடுக்க உழைத்தவர் கார்த்திகேயப் புலவர்.

 

ஆறுமுகநாவலரின் சைவசமயப் பேரெழுச்சியை

காரை.மண்ணில் முன்னெடுக்க உழைத்தவர்

கார்த்திகேயப் புலவர்.

“கார்த்திகேயப் புலவர் மலர்” நூல் அறிமுக விழாவில் பேராசிரியர் கலாநிதி சுப்பிரமணியன் உரை.

19ஆம் நூற்றாண்டில் காரைநகரில் வாழ்ந்து காரைநகரின் சைவ மரபினைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் தம்மை ஈடுபடுத்தி வந்ததுடன் பிறந்தகத்தின் பெருமையையும், தாம் வழிபாடாற்றிய இறைவனின் தெய்வீகச் சிறப்புக்களையும் உலகறியச் செய்ய உழைத்த பேரறிஞரான கார்த்திகேயப் புலவர் அவர்களின் வரலாற்றினைத் தெரிவிக்கின்ற “கார்த்திகேயப் புலவர் மலர்” நூலின் அறிமுக விழா 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு ஸ்காபுரோ Civic Centreஇல் கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றிருந்தது. சைவசமய மரபினைப் பேணிப் பாதுகாக்க உழைத்த ஒரு புலவனின் மகத்தான பணிகளைப் பகிர்ந்துகொண்ட இவ்விழாவிற்கு, திரளான காரைநகர் மக்களின் வருகையினால் விழா நிகழ்விடத்தின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டிருந்தமையானது காரைநகர் மக்களின் ஆழமான சைவசமய ஈடுபாட்டிற்கும், மண்ணின்; சேவையாளர்களை நன்றியுடன் நினைவுகூருபவர்கள் என்பதற்கும் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.

முதல் நிகழ்வாக கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் இசை ஆசிரியையான திருமதி சறோ ஜெகநாதன் அவர்கள் திருமுறைப் பாடல்களை இசைத்ததுடன் திண்ணபுர அந்தாதி, தன்னையமக அந்தாதி ஆகிய நூல்களிலிருந்து சில பாடல்களையும் பாடினார். இதனையடுத்து சிவநெறிச்செலவ்ர் தி.விசுவலிங்கம் அவர்கள் தமது தலைமையுரையில் புலவரின் அளப்பரிய பணிகளை விரிவாக எடுத்துக்கூறியிருந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரான பேராசிரியர் கலாநிதி; நா.சுப்பிரமணியன் அவர்கள் நூல் குறித்த சிறப்பான அறிமுக உரையினை நிகழ்த்தியிருந்தமை சபையினரை வெகுவாகக் கவர்ந்திருந்தது. புலவர் அவர்கள் வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டு ஈழத்து சைவத்தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமான காலகட்டம் எனக் குறிப்பிட்ட இவர் சமயம் வளர்த்த ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்ற சைவ அறிஞர்கள் இக்காலத்திலேயே வாழ்ந்து சைவத்தமிழ் பண்பாட்டினை பேணி வளர்க்க உழைத்தனர். இந்தப் பின்னணியிலேயே கார்த்திகேயப் புலவரின் மகத்தான பணிகளை நோக்கமுடியும் என்பதுடன் ஆறுமுகநாவலரினால் மதமாற்ற முயற்சிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட சைவசமயப் பேரெழுச்சியை காரை மண்ணில் முன்னெடுத்ததுடன் மட்டுமல்லாது மத மாற்றத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடிய சைவசமய காவலராக கார்த்திகேயப் புலவர் திகழ்ந்தார்.புலவரால் இயற்றப்பட்ட ஆக்கங்களில் காரைநகரின் சைவப்பண்பாட்டு நிலையுடன் சமூகப் பண்பாட்டு நிலையும் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்ட பேராசிரியர் சுப்பிரமணியன், புலவர் அவர்களின் சமூகப் பண்பாட்டு நிலை குறித்த பதிவில் காரைநகர் மக்களின் வள்ளல் தன்மை பற்றிக் குறிப்பிட்டிருந்தமை சிறப்பாக நோக்கத்தக்கதாகும் எனத் தெரிவித்தார். அக்காலகட்டத்தில் மட்டுமல்லாது இன்றும் காரைநகர் மக்கள் தமது பொருள்களை வாரி வழங்கி ஆலயங்களின் திருப்பணி, கும்பாபிசேகம், திருவிழாக்கள் என்பவற்றை முறையாக முன்னெடுத்து ஆலயங்களின் வளர்ச்சி ஊடாக சைவப் பண்பாட்டினை வளம்படுத்தி வருபவர்கள். அது மட்டுமல்லாது சைவ அறிஞர்களுக்கு மதிப்பளித்து உயர்த்தி விட்டதில் காரைநகர் மக்களின் பங்களிப்பு குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகும். சிறப்பாக “சிவத்தமிழ்ச்செல்வி” தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் வளர்ச்சிக்கு இவர்களே மூலகாரணமாக இருந்துள்ளாhர்கள் என்பதையிட்டு காரை.மக்கள் பெருமையடையமுடியும் எனவும் பேராசியர் குறிப்பிட்டதுடன் சிறந்த கவிஞராக – இலக்கிய கர்த்தாவாக – நாடக ஆசிரியராக – சோதிட வல்லுனராக – சிறந்த மருத்துவராக – நல்லாசானாக – சிறந்த பதிப்பாசிரியராக – அருளாளராக – சைவசமய பாதுகாவலாராக என பல்துறை ஆற்றல் பெற்றவராக விளங்கிய பேரறிஞர் கார்த்திகேயப் புலவரின் வரலாற்றினைத் தெரிவிக்கின்ற நூலினை பதிப்பித்து வெளியீடுசெய்கின்ற கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களைப் பாராட்டி நன்றியினையும் தெரிவித்துக்கொண்டார்.

பேராசிரியரின் அறிமுக உரையினைத் தொடர்ந்து நூலின் சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டதுடன் விழாவிற்கு சமூகமளித்தவர்கள் நூற் பிரதிகளை சிவநெறிச்செல்வர் விசுவலிங்கம் அவர்களிடமிருந்து ஆர்வத்துடன் பெற்றுச்சென்றனர்.

இவ்விழாவில் கருத்துரை வழங்கிய கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் காரைநகரில் பணியாற்றிய சைவ அறிஞர்கள் தொடர்புபட்ட வரலாற்று நூல்களை பதிப்பித்து வெளியிட்டு வருகின்ற கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் பணியினைப் பாராட்டி வாழ்த்தியதுடன் இம்மன்றத்தின் இத்தகைய முயற்சிகளுக்கு காரைநகர் மக்கள் ஆதரவளித்து ஊக்குவிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அதேவேளை “கார்த்திகேயப் புலவர் மலர்” நூலின் அறிமுக விழாவினை காரைநகரிலும் நடாத்துவதற்கு ஆர்வமுள்ளவர்கள் முன்வரவேண்டும் என வேண்டிக்கொண்டிருந்தார்.

லண்டன் சுடர் ஒளி வெளியீட்டுக் கழகத்தைச் சேர்ந்த சமய, சமூக உணர்வாளரான ஐ.தி.சம்பந்தன் அவர்கள் அனுப்பி வைத்திருந்த வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் தலைவர் திரு.வே.இராஜேந்திரம், கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் செயலாளர் திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன், காரைநகர் மணிவாசகர் சபையின் முன்னாள் செயலாளர் திரு.கனக சிவகுமாரன், சைவசமய உணர்வாளர் கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன் ஆகியோரும் இவ்விழாவில் கருத்துரை வழங்கியிருந்தனர்.

கார்த்திகேயப் புலவரின் வழித்தோன்றலான மூதறிஞர் கலாநிதி வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்கள் புலவரின் பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து காரைநகரில் சைவசமய மறுமலர்ச்சியை ஏற்படுத்த பணியாற்றியமை குறித்த விபரங்களை திரு.கனக சிவகுமாரன் தமது கருத்துரையின்போது தெரிவித்தார்.

புலவரின் பரம்பரை, அவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் வாழ்ந்த காலம், அவரது ஆக்கங்கள் என்பன குறித்து விளக்கமான உரையினை எறிகணையின் (Projector) உதவியுடன் கலாநிதி ரவிச்சந்திரன் நிகழ்த்தியிருந்தபோது சபையினர் ஆர்வத்தோடு அவரது உரையினை செவிமடுத்திருந்ததை அவதானிக்கமுடிந்தது.

காரைநகரில் வாழ்ந்த சைவ அறிஞர்கள் சார்ந்த ஆக்கங்களைப் பதிப்பித்து வெளியிட்டு வருகின்ற கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் தலைவரான சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்கள், கனடா-காரை கலாசார மன்றத்தின் தலைவர் திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்களினால் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டிருந்தார். விசுவலிங்கம் அவர்களின் பணிகளிற்கு உறுதுணையாகவிருந்து பணியாற்றி வருகின்ற அவரது துணைவியாரான திருமதி வடிவழகாம்பாள், ஓய்வுநிலை உப அதிபரும் சைவசமய உணர்வாளருமாகிய திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்களினால் பொன்னாடை அணிவித்து மதிப்பளிக்கப்பட்டிருந்தார்.

கணினி நூலகம் (noolagam.org) நிறவனத்தினர் அண்மைக் காலத்தில்; காரைநகரில் முன்னெடுத்து வருகின்ற ஆவணப்படுத்தலும், எண்ணிமப்படுத்தலும் (Digitizing)திட்டம் தொடர்பிலான விளக்கத்தினையும் அதன் தற்போதய முன்னேற்ற நிலை குறித்தான தகவல்களினையும் எறிகணையின் உதவியுடன் நூலக நிறுவனத்தின் கனடாப் பிரதிநிதியான நக்கீரன் அவர்கள் வழங்கியிருந்தார்.

சைவ சித்தாந்த மன்றத்தின் சார்பில் “அன்புநெறி” சஞ்சிகையின் ஆசிரியர் திருமதி வடிவழகாம்பாள் விசுவலிங்கம் நன்றி தெரிவித்து உரையாற்றியதைத் தொடர்ந்து நிறைவானதாக அமைந்திருந்த நூல் அறிமுக விழா நிறைவிற்கு வந்தது.