காரை மாதாவின் தவப் புதல்வன் கார்த்திகேயப் புலவரின் சைவத் தமிழ்ப் பணிகள் நினைவு கூரப்பட்ட ‘கார்த்திகேயப் புலவர் மலர்’ நூல் வெளியீட்டு வைபவம்.

காரை மாதாவின் தவப் புதல்வன் கார்த்திகேயப் புலவரின் சைவத் தமிழ்ப் பணிகள் நினைவு கூரப்பட்ட ‘கார்த்திகேயப் புலவர் மலர்’ நூல் வெளியீட்டு வைபவம்.

நேற்றைய தினம்(31-05-2019) மிசிசாகா தமிழ் கூட்டுறவு இல்லத்தில் கார்த்திகேயப் புலவர் மலர்’ நூல் வெளியீட்டு வைபவம் கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் ஆதரவில் அம்மன்றத்தின் தலைவர் சிவநெறிச்செல்வர் தி.விசுவலிங்கம் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது. புலவரின் வாழ்க்கை வரலாறு முதன்மைப்படுத்தப்பட்டு பதிவிடப்பட்டிருந்த இந்நூலில் புலவர் குறித்து பல்வேறு அறிஞர்களினால் எழுதப்பெற்று அவ்வப்போது வெளிவந்த கட்டுரைகளும் இணைக்கப்பட்டு கனடா சைவ சித்தாந்த மன்றத்தினால் பதிப்பிக்கப்பெற்று காரை மண்ணில் சைவசமய வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றி மறைந்த தத்துவகலாநிதி க.வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களுக்கு காணிக்கையாக்கி வெளியிடப்பெற்றிருந்தது. இந்நூலில் இடம்பெற்றுள்ள புலவரின் வரலாறானது புலவரின் கனிஸ்ட புதல்வனான சிவசிதம்பர ஐயர் அவர்களால் எழுதப்பட்டு 2வது புதல்வனான நடராஜ ஐயர் அவர்களினால் பதிப்பித்து 1908ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

சைவ சமய உணர்வாளரான கலாநிதி தம்பிராசா ரவிச்சந்திரன் அவர்கள் நூலின் வெளியீட்டுரையை விரிவானமுறையில் சிறப்பாக நிகழ்த்தியிருந்ததுடன் கனடா-காரை கலாசார மன்றத்தின் முன்னாள் செயலாளரும், முன்னாள் ஆசிரியையுமாகிய திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன், காரைநகர் மணிவாசகர் சபையின் முன்னாள் செயலாளர் கனக சிவகுமாரன் ஆகியோர் புலவரின் மகத்தான சைவத் தமிழ் இலக்கியப் பணிகள் குறித்து உரையாற்றியிருந்தனர். இந்நூலின் வெளியீட்டினை ஸ்காபுரோ நகரிலும் ஏற்பாடுசெய்யப்படவேண்டியதன் அவசியத்தினை இவ்வைபவத்தில் உரையாற்றியவர்கள் வலியுறித்தியிருந்ததுடன் இதன்மூலமாக அதிக அளவிலான காரைநகர் மக்கள் கலந்துகொண்டு பயனடையக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டனர். ஸ்காபுரோ நகரில் இந்நூலின் வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்பட்டு அறியத்தரப்படும் என தலைவர் சிவநெறிச்செல்வர் விசுவலிங்கம் அவர்கள் தமது நிறைவுரையில் குறிப்பிட்டிருந்தமை அனைவருக்கும் மகிழ்ச்சியளிப்பதாகவிருந்தது.

இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்களை கீழே பார்வையிடலாம்: