கனடா காரை கலாச்சார மன்றம் கலந்துரையாடலும் விருந்துபசாரமும்…!

கனடா-காரை கலாச்சார மன்றம் தயாகத்திலிருந்து கனடாவிற்கு விடுமுறையில் வந்திருந்த காரைநகர் தொழிலதிபரும், சமூக சேவையாளரும், முன்னாள் இந்து கலாச்சார அமைச்சர் மண்ணின் மைந்தன் தியாகராசா மகேஸ்வரனின் அன்புத் தம்பியுமான திரு.தியாகராசா பரமேஸ்வரன் அவர்களை வரவேற்று 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் கலந்துரையாடல் ஒன்றினை நிர்வாக சபை உறுப்பினர்களுடன் ஒழுங்கு செய்திருந்தது.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவர் வரவேற்கவும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனுசரணையாளரும், திரு.தி.பரமேஸ்வரனின் நீண்டகால நண்பருமான திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவன் அவர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவிக்கவும் நிகழ்வுகள் ஆரம்பமானது. கனடாவிற்கு வருகை தரும் காரைநகர் சேவையாளர்களை கனடா காரை கலாச்சார மன்றம் கடந்த காலங்களிலும் இப்போதும் கௌரவித்து வருவதையும் அதற்கான காரணங்களையும் மன்றத்தின் பதில் செயலாளர் காரணங்களுடன் விளக்கியதுடன், திரு.தியாகராசா பரமேஸ்வரன் முன்னாள் அமைச்சர் தியாகராசா மகேஸ்வரன் விட்டுச்சென்ற பணிகளில் ஒன்றான சிவப்பணியினை முன்னின்று செயற்படுத்தி வருவதும், காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் இறுதியாக நடைபெற்ற கும்பாபிஷேக செலவுகளான 35 இலட்சத்திற்கு மேற்பட்ட நிதியினை காரைநகர் வர்த்தகர்களை ஒன்றிணைத்து அதன் மூலம் நிவர்த்தி செய்தமையினையும், அடியார் சபை, திருப்பணி சபை பிணக்குகளின் போது இலட்சக்கணக்கான நிதியினை நீதி மன்ற வழக்குகளிற்காக செலவு செய்தமையினையும் சுட்டிக்காட்டிதுடன், கடந்த காலங்களில் காரைநகர் சேவை அமைப்புக்களில் ஏற்பட்ட பிணக்குகளை சுமூகமான முறையில் தீர்த்து வைக்க எடுத்த நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியதுடன், காரைநகர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கும், காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலக திட்டத்திற்கு காரைநகர் வர்;த்தகர்களின் உதவியினை பெற்று வழங்குவதற்கும் திரு.தியாகராசா பரமேஸ்வரன் முயற்சிகளை வழங்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

திரு.தியாகராசா பரமேஸ்வரன் தனது உரையில் காரைநகர் மக்களின் ஒற்றுமையினை முன்னிறுத்தி உரை நிகழ்த்தியிருந்தார். வெளிநாடுகளில் ஒவ்வொரு நாடுகளிலும் காரைநகர் மண்ணின் பெயரால் ஒரே ஒரு அமைப்பு மட்டுமே இயங்க வேண்டும் என்றும், அந்த அமைப்பினை வலுப்படுத்த அனைத்து இடம் பெயர்ந்த மக்களும் முன்வந்து உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அது மட்டுமல்லாது இடம் பெயர்ந்த நாடுகளில் உள்ள காரை மன்றங்கள் காரைநகரில் செயற்படுத்தும் திட்டங்களை காரைநகர் அபிவிருத்தி சபை ஊடாக மட்டுமே நிறைவேற்ற முன்வர வேண்டும் எனவும் ஆளாளுக்கு ஒவ்வொரு திட்டங்களாக செயற்படுத்த முனைந்து பல திட்டங்கள் முற்றுப்பெறாமல் இருப்பதற்கான காரணம் இதுவே என்றும் தெரிவித்தார்.

அத்துடன் காரைநகர் ஈழத்து சிதம்பரம் நித்திய பூசைகளிற்காக கனடா காரை கலாச்சார மன்றம் கனடவில் காரைநகர் மக்களை ஒன்று திரட்டி தினம் ஒரு அடியவராக 300 அடியவர்களை ஈழத்து சிதம்பர ஆதீனகர்தாக்களுடன் நேரடியாக தொடர்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் எனவும் தனது வேண்டுகோளினை முன்வைத்திருந்தார்.

காரைநகர் மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வெளிநாடுகளில் உள்ள காரைநகர் மக்களினால் மட்டுமே அறிவும், திறமையும், ஊர்ப்பற்றும் நிறைந்த பொயியலாளர்களின் உதவிகளை பெற்று காரைநகர் மண்ணின் தன்மையும், நிலத்தடி நீரின் ஆழம், மற்றும் மழை வீழ்ச்சி, நீர் நிலைகளின் தன்மை என்பவற்றை ஆராய்ந்து திட்டம் தீட்டப்பட வேண்டும் எனவும் இந்த பாரிய முழுமையான திட்டத்தை வெளிநாடுகளில் இயங்கும் காரை அமைப்புக்கள் ஒன்றிணைந்து பொறியியலாளரை வரவழைத்து முழுமையான திட்டத்தை தயாரித்து வழங்கினால் அதனை தற்போது வடமாகாண சபையில் தமிழ் மக்களின் வோட்டுக்களைப் பெற்று பதவியில் அமர்ந்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக நிறைவேற்ற காரைநகர் வர்த்தகர்களுடன் இணைந்து முழுமையான முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் உறுதியளித்தார்.

அதுபோன்று காரைநகர் அபிவிருத்தி சபை மாணவர் நூலக திட்டத்திற்கு காரைநகர் வர்த்தகர்கள் நிச்சயமாக உதவ முன்வருவார்கள் எனவும் காரைநகர் மாணவர் நூலக திட்டத்தின் முழுமையான திட்டத்தினை வழங்குமாறும், காரைநகர் அபிவிருத்தி சபை காரைநகர் வர்த்தகர்களை நம்பி முழுமையாக அப்பணியினை வழங்கினால் காரைநகர் வர்த்தகர்களினால் தலா ஒருவர்க்கு 10 இலட்சம் வழங்கி ஆறுமாத காலத்தினுள் முழுமை பெற்ற மாணவர் நூலகமாக அமைத்துக் கொடுக்கலாம் எனவும், காரைநகர் கோயில்களிற்கு காரைநகர் வர்த்தகர்கள் பலர் 10 இலட்சத்திற்கும் அதிகமான தொகையினை வழங்கி வந்துள்ளார்கள் என்றும் நிச்சயமாக காரைநகர் பாடசாலை பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும் அமோக ஆதரவு வழங்குவார்கள் என்றும் ஆனாலும் காரைநகர் அபிவிருத்தி சபை இதுவரை முழுமையான திட்டங்களுடன் காரைநகர் வர்த்தகர்களை அனுகவில்லையெனவும் தெரிவித்தார்.

திரு.தியாகராசா பரமேஸ்வரன் அவர்கள் பிரான்ஸ், லண்டன், அமெரிக்கா, ஜேர்மனி போன்ற நாடுகளிற்கு நேரடியாக சென்று காரைநகர் மக்களின் வாழ்க்கை நிலமையினை நன்கு அறிந்து கொண்டவர். அந்த வகையில் வெளிநாடுகளில் வாழும் காரைநகர் மக்கள் தமது சொந்த வாழ்க்கைத் தரத்தினை சுமூகமாக கொண்டு செல்வதற்கே உழைத்து வரும் வேளையில் வேலைப்பழுவிற்கு மத்தியிலும் ஊர் நினைவுடன் தம்மால் சிறியளவு தொகையினையே வழங்க முடியும் என்பதனையும்  தான் அறிந்து கொண்டுள்ளதாகவும், ஆனாலும் காரைநகரின் அபிவிருத்தியும் புனரமைப்பும் வெளிநாடுகளில் வதியும் காநைரகர் மக்களின் ஒற்றுமையிலே தங்கியுள்ளதாகவும், வெளிநாடுகளில் வதியும் ஒவ்வொரு காரைநகர் மக்களும் சிறு தொகையாகினும் தம்மால் முடிந்த ஒரு டொலராகினும் பொது அமைப்புக்களுக்கு வழங்கினால் அவர்களது பங்களிப்பின் மூலம் ஒற்றுமையினை புலப்படுத்த முடியும் எனவும், உதாரணமாக கனடா காரை கலாச்சார மன்றத்தின் வரவு செலவு அறிக்கையில் கனடாவில் வதியும் அனைத்து காரைநகர் மக்களின் பெயர்களும் ஒரு டொலர் வழங்கினாலும் வரவேண்டும் எனவும் அதன் மூலமே கனடாவில் காரைநகர் மக்கள் ஒற்றுமையுடன் செயலாற்றுகின்றார்கள் என்ற கனடா வாழ் காரைநகர் மக்களின் ஒற்றுமை காரைநகர் மக்களிற்கும் காரைநகர் வர்த்தகர்களிற்கும் பலமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பயனுள்ள இக்கலந்துரையாடல் கனடா காரை கலாச்சார மன்றம் அடுத்து எடுக்கவுள்ள முயற்சிகளிலும், வெளிநாடுகளில் உள்ள காரை அமைப்புக்கள்  இக்கலந்துரையாடலின் மூலம் உள்வாங்கிக் கொள்ளும் செய்திகள் மூலமாகவும் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள முடியும்.
கலந்துரையாடலின் முடிவில் கனடா காரை கலாச்சார மன்றத்தின் நிர்வாக சபையினரால் இராப்போசன விருந்தும் வழங்கப்பட்டது.

IMG_2845 IMG_2846 IMG_2847 IMG_2849 IMG_2853 IMG_2857 IMG_2858 IMG_2859 IMG_2861 IMG_2862 IMG_2863