சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்   “காரைக் கதம்பம் -2019”  நிகழ்வுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்   “காரைக் கதம்பம் -2019” 

நிகழ்வுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தி

 

சிவமயம்

 

தலைவர் / செயலாளர் / நிர்வாகசபை

காரை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா

 

“வாழ்த்துச் செய்தி”

அன்புடையீர் வணக்கம்!

“பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே” என்ற கூற்றிற்கிணங்க காரைமாதாவின் வளர்ச்சிக்காகவும், இங்குள்ள இளையோரின் தமிழறிவு, கலையுணர்வுகளை வளர்க்கவும் காரை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா தனது வருடாந்த நிகழ்வான  “காரைக் கதம்பம் -2019” நிகழ்வினை 26-01-2019 சனிக்கிழமை அன்று கொண்டாப்படுவதையிட்டு பெரு மகிழ்வடைகின்றோம்.

காரை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா கடந்த கால்நூற்றாண்டுக்கு மேலாக ‘வெளியூர்கள் போனாலும் வெற்றிபல காண்பார் களியூரில் வாழ்ந்தும் கவினூர் துளியும் மறவார்’  என காரை வாழ் மக்களின் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் போன்ற விடயங்களில்  அக்கறை கொண்டு அவற்றின் அபிவிருத்திப் பணிகளுக்காகவும் பெருமளவு நிதியைவாரி வழங்கிவருகின்றார்கள். அவர்களின் பணிகளும், சேவைகளும் மேலும் விரிவாக்கம் அடைய வாழ்த்துகின்றோம்.

ஒரு கிராமத்தின் வளர்ச்சி என்பது சமூகத்தின் அறிவு, மொழி மற்றும் கலை சார்ந்த விடயங்களை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்வதின் மூலம் தான் வலுப்பெறுகின்றது. தாம் பிறந்த மண்ணிற்கும்  இனத்திற்கும்  மொழிக்கும் பெருமை சேர்ப்பதுடன் மட்டும் நின்றுவிடாது, தொடர்ந்து இளையோருக்கு அவற்றை எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு புலபெயர் அமைப்புகளுக்கு இருக்கின்றது. அந்தவகையில் “காரைக் கதம்பம் -2019” இல் பிரித்தானியா வாழ் காரை இளம் சான்றோர்களை உருவாக்ககூடிய விழாவாக அமைய வாழ்த்துகின்றோம்.

எமது இலங்கையின் எல்லா பிரதேசங்களைக் காட்டிலும் காரைநகர் முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் காணப்படுகிறது. தனக்கே உரித்தான கட்டுப்பாட்டுடன் கூடிய ஆன்மீக சிந்தனையில் சிறப்புற்றவர்கள் முன்மாதிரியான தர்ம செயல் வள்ளல்கள், வர்த்தக பெருந்தகைகள், சமூக ஆர்வலர்கள், கல்வி ஆர்வலர்கள், தேசப்பற்றாளர்கள், பேச்சாளர்கள், தியாகிகள் என நம்மூர்ருக்கு மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்று. நாம் பேசும் மொழி தமிழ். எமது அடையாளம் தமிழ், சைவம் இவை அனைத்தையும் முன்னிலைப்படுத்தி காரை நலன்புரிச் சங்கம் பிரித்தானியா முன்னெடுக்கும் “காரைக் கதம்பம் -2019” சிறப்புற்று விளங்க வாழ்த்துகின்றோம்.

பிரித்தானியா  காரை நலன்புரிச் சங்கம் தனது காரைக் கதம்பம் விழாவின் ஊடாக தனது வரலாற்று கடமையை இடைவிடாது, தளராது சோர்ந்திருக்காமல் வீறுநடை போட வேண்டும் என்ப தோடு தங்களின் கதம்ப விழா புதுப்புது வசந்தங்களோடு, சொந்தங்களையும், உறவுகளையும். நண்பர்களையும் ஒன்றிணைத்து செயல்படவும், “காரைக் கதம்பம் -2019” சிறப்புற்று வெற்றி விழாவாக அமைய ஈழத்து சிதம்பர சௌந்தராம்பிகை சமேத சுந்தரப்பெருமானை வணங்கி வாழ்த்துகின்றோம்.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

               செயற்குழு உறுப்பினர்கள்

  மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

26.01.2019

 

 

london karai 2019