காரை வசந்தம் 2018 மலருக்காக எடுத்து வரப்பட்ட காரைநகரில் இடம்பெற்ற முக்கியமான நிகழ்வுகளின் செய்தி தொகுப்பு விபரம்!

 

காரைநகர் செய்திகளும் நிகழ்வுகளும் -2018

ஓகஸ்ட் 14

காரைநகரில் வீசிய கடும் சுழல் காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் பனை மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளது.

ஓகஸ்ட் 14 மாலை 6.30 மணியளவில் திடீரென கடும் காற்றுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. இவ்வேளையில் காரைநகர் கல்லந்தாழ்வு, பெரியமதவடி ஆகிய கிராமங்களில் உள்ள ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றினால் பிடுங்கி வீசப்பட்டு வீடுகள் சேதமடைந்தள்ளன. தெய்வாதீனமாக வீடுகளில் இருந்தவர்கள் காயங்கள் எதுவுமின்றித் தப்பிக்கொண்டனர்.

அத்துடன் பல பகுதிகளில் பனை மரங்களும் முறிந்து வீழ்ந்தள்ளன.

கூரைகள் தூக்கி வீசப்பட்ட வீடுகளில் இருந்த தொலைக்காட்சி,கணனி உள்ளிட்ட இலத்திரனியல் சாதனங்கள் சேதமடைந்ததுடன் மின்சார வயர்கள் அறுபட்டு ஆபத்தான நிலை காணப்பட்டதாகவும் இது தொடர்பாக மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டு நீண்ட நேரத்திற்குப் பின்னரே சம்பவ இடத்திற்கு வருகைதந்து மின்சார இணைப்புக்களைத் துண்டித்ததாகவும் அதன் பின்னரே குறித்த வீட்டில் உள்ளவர்கள் வீடுகளுக்குள் சென்று தமது உடமைகளை மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

……………………………………………………………………………………………………………………………..

ஓகஸ்ட்,09

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா ஓகஸ்ட் 9ம் திகதி காலை 8.30 மணிக்கு பாலர் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை தலைமையில இடம்பெற்றது.

இந்த விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச சபைத் தவிசாளர் விஜயதர்மா கேதீஸ்வரதாசன் கலந்து சிறப்பித்தார்.

………………………………………………………………………………………………………………………………

 

சமுர்த்தி வங்கிகளின் ஊடாக வழங்கப்படும் கடன் தொகையினை பத்து இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி வலுவூட்டல் அமைச்சர் கரிசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதேச செயலர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை யூலை22 இல் யாழ்ப்பாணத்தில் சந்தித்து யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்ட போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகன் தலைமையில் யாழ் நீராவியடியில் உள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி அரங்கில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்

இதுவரை காலமும் ஜந்த இலட்சம் ரூபா வரையிலான கடன் தொகைகளே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி சுயதொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக பத்து இலட்சம் ரூபா வரை கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதற் கட்டமாக ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் தலா பத்துப் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் இந்தக் கடன் தொகை வழங்கப்பட்டு அவர்களின் தொழில் முயற்சிகள் ஊக்கவிக்கப்பட உள்ளது.

காரைநகரில் 1786 குடும்பங்கள் சமுர்த்தி முத்திரைக் கொடுப்பனவினைப் பெற்றக்கொண்டுள்ளதுடன், சுமார் 1350 வரையிலான பயனாளிகள் ஏறத்தாள பத்துக் கோடி ருபா வரை கடனாகப் பெற்று சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டது.

…………………………………………………………………………………………………………………………………..

ஜீலை 22

எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்திலிருந்து புதிய பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக சமுர்த்தி வலுவூட்டல் அமைச்சர் கரிசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படும் சமுர்த்தி திட்டம் தொடர்பான முன்னேற்றம் தொடர்பாக ஆராய்ந்தார் அங்கு அவர் தெரிவித்ததாவது யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் மாவட்டத்தில் மேலதிகமாக எட்டாயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுள்ளார். கூடிய வரையில் அவர்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்க முயற்சிப்போம்.

புதிதாக நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டியவர்களது விபரங்களை அடுத்த மாதம் 15ம் திகதிக்கு முன்னர் சமுர்த்தி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கமாறும் ஒக்ரோபர் மாதம் தொடக்கம் அவர்களுக்கு சமுர்த்தி நிவாரணக் கொடுப்பனவினை வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

…………………………………………………………………………………………………………………………………….

யூன், 18

காரைநகர் கிழவன் காடு கலாமன்றம் நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு யூன் 18 திங்கட்கிழமை கலாமன்ற மணோன்மணி மண்டப வைத்தீசுவரக்குருக்கள் அரங்கில் இடம்பெற்றது.

மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகனின் திருவாசகம் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவும் கலா மன்ற ஆசிரியர்களின் திருவாசக இன்னிசை விருந்தும் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையிலான பட்டிமண்டபமும் இடம்பெற்றன.

…………………………………………………………………………………………………………………………..

யூலை 02

காரைநகரில் வியாவில் ஜயனார் ஆலய வருடாந்த மகோற்சவம் யூலை 02 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்றது.

இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா யூலை 10ம் திகதி வெள்ளிக்கிழமையும் தீர்த்தத் திருவிழா ஆடி அமவாசை தினமான 11ம் திகதி சனிக்கிழமையும் இடம்பெற்றது.

……………………………………………………………………………………………………………………………….

 

 

ஓக 04

காரைநகரில் ஈழத்துச் சிதம்பர வருடாந்த தேவி மகோற்சவம்; ஓகஸ்ட் 04 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்த பத்துத் தினங்கள் சிறப்பாக இடம்பெற்றது.

இம் மகோற்சவத்தின் தேர்த் திருவிழா ஓகஸ்ட் 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் தீர்த்தத் திருவிழா ஆடிப்பூர தினமான 13ம் திகதி திங்கட்க்கிழமையும் இடம்பெற்றது.

……………………………………………………………………………………………………………………………

ஓக 03

நாங்கள் செயற்பாட்டு வலையமைப்பின் ஏற்பாட்டில் அமரர் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்களின் ஞாபகார்த்தமாக காரைநகர் மாணவர்களுக்கான பாடசாலைப் பொதி வழங்கும் நிகழ்வு ஓக 03 வெள்ளிக்கிழமை காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தியும் சிறப்பு விருந்தினராக அமரர் பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கெனடி அவர்களின் சகோதரியும் யாழ் பல்கலைக் கழக ஆங்கிலத்துறை சிரேஸ்ட விரிவுரையாளருமான கலாநிதி வீரமங்கை யோகரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டு வறுமைக் கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலைப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

இதற்கான நிதியினைப் பேராசிரியரின் நண்பர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

………………………………………………………………………………………………………………………………..

ஓக 03

காரைநகரில் பத்து இலட்சம் ரூபா செலவில் வீதி மின்விளக்குகள் பொருத்தும் பணி இடம்பெபற்று வருகின்றது.

வலந்iலைச் சந்தியில் 09 மின்விளக்ககளும் பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரும் தெரிவு செய்த தலா 11 மன்விளக்ககள் வீதமும் 130 மன்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றது.

இதற்கான நிதியினை வடமாகாண சபை வழங்கியிருந்தது.

……………………………………………………………………………………………………………………

ஓக 01

காரைநகரில் புதிதாக அமைய உள்ள சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை கட்டடம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்த காரைநகர் பிரதேசத்திற்கு தற்போது தனியான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக காரைநகர் வேம்படிப் பகுதியில்; 6.5 பரப்பக் காணி அறக்கொடைச் செம்மல் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களினால் கொள்வனவு செய்யப்பட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காணி கையளிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற போது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியக் கலாநிதி கனகராஜா நந்தகுமாரிடம் அறக்கொடைச் செம்மல் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் காணிக்கான உறுதியினைக் கையளித்தார். இந் நிகழ்வில் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வுநிலை வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன், காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கான கட்டடம் அமைக்கும் பணி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

………………………………………………………………………………………………………

யூலை 27

அரசடிக்காடு கதிர்வேலாயுதசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவத் தேர்த்திருவிழா யூலை 27 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

மகோற்சவத் தீர்த்தத் திருவிழா யூலை 28 சனிக்கிழமையும் இடம்பெற்றது. அன்று மாலை 5.00 மணியளவில் ஆலய முன்றலில் தீமிதிப்பு இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………….

யூலை 25

தேசிய சேமிப்பு வங்கி காரைநகர் கிளையினால் நடாத்தப்பட்ட கப்பன் புலமைப்பரிசில் கௌரவிப்பு யூலை 25 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் தேசிய சேமிப்பு வங்கி காரைநகர் கிளையில் இடம்பெற்றது.

முகாமையாளர் தி.மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தேசிய சேமிப்பு வங்கியின் வடபிராந்திய முகாமையாளர் ந.பகீரதனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி, யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் தி.மதிவதனன், ஊர்காவற்றுறை தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர் வி.சுதாகர், வர்த்தகர் சு.செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 2016ம், 2017ம் ஆண்டுகளில் தரம் ஜந்துப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த காரைநகர் தேசிய சேமிப்பு வங்கியில் சிறுவர் கணக்கினையுடைய மாணவர்கள் இந்தக் கௌரவிப்பு விழாவில் பதக்கம் அணிவித்துப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

……………………………………………………………………………………………………………………………

யூலை 28

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் நடாத்தும் காரைநகர் இலகடியைச் சேர்ந்த கவிஞர் வடிவழகையனின் ‘முகிலெனக்குத் துகிலாகும்’ கவிதை நூல் வெளியீட்டு விழா யூலை 28 சனிக்கிழமை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிகபீட பீடாதிபதி பேராசிரியர் தி .வேல்நம்பி தலைமையில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெற இவ் விழாவில் ஆசியுரையை கலாநிதி ஆறு.திருமுருகனும்

வரவேற்புரையை சமூகசேவை உத்தியோகத்தர் வே.தபேந்திரனும் வாழ்;த்துரையை  கவிஞர் சோ.பத்மநாதனும்

வெளியீட்டுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வராவும் நூல் நயப்புரையை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் வ.மகேஸ்வரனும் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் சொல்லருவி ச.லலீசனும் தோழமையுரையினை சமூக சேவை உத்தியோகத்தர் வரணியூர் வே.சிவராசாவும் பதிலுரையினை நூலாசிரியரும் கிராமசேவையாளருமான வ.வடிவழகையனும் நிகழ்த்தினர்.

ஞாலச் சுழலுக்குள் நாங்களகப்பட்டோமா? காலச் சுழிக்குள்ளே காலைவிட்டுக் கொண்டோமா? என்ற தலைப்பில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா தலைமையில் சிறப்புக் கவியரங்கமும் இடம்பெறது..இதில் கவிஞர்கள் இ.பிரகலாதன், ஜீவா சஜீவன், ச.முகுந்தன் ஆகியோர் பங்குபற்றினர்.

……………………………………………………………………………………………………………………………

யூலை 21

யாழ் மாவட்டச் செயலக மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் மாபெரும் தொழிற் சந்தை யூலை 21ம் திகதி சனிக்கிழமை யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் இடம்பெற்றது.

காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 மணிவரை இடம்பெற்ற இச் சந்தையில் ஆடைத் தொழிற்சாலை,தனியார் உற்பத்தி நிறுவனங்கள்,பாதுகாப்புச் சேவை,சந்தைப்படுத்தல்,கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, பொலிஸ் சேவை,தாதியர்,குழந்தைப்பராமரிப்பாளர்,சுத்திகரிப்பாளர்,மற்றும் கோட்டல் முகாமைத்தவ வேலைவாய்ப்புக்கள் போன்ற தொழில் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்த்தல்,மற்றும்

கோட்டல் முகாமைத்துவம்,கணனித்துறைப் பயிற்சிகள்,தாதியர் பயிற்சிகள்,கப்பல்த்துறை தொடர்பான பயிற்சிநெறி,ஏனைய தொழில் பயிற்சி நெறிகள்,உள்ளிட்ட தொழிற் பயிற்சி பாநெறிகள் பற்றிய தகவல்கள்,மற்றும் சுயதொழிலுக்கான உபகரணக் காட்சிப் படுத்தல் என்பன இங்கு இடம்பெற்றது.

தொழில் தேடும்; காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் தங்கள் சுயவிபரக் கோவைகளுடன் வருகைதந்து பயன் பெற்றனர்.

………………………………………………………………………………………………………………………..

யூலை 07

காரைநகர் அபிவிருத்திச் சபையும்,சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையும் இணைந்து நடாத்திய பேராசிரியர் கென்னடி விஜயரத்தினம் ஞாபகார்த்த சைக்கிளோட்டப் போட்டி யூலை 07 சனிக்கிழமை காரைநகரில் இடம்பெற்றது.

பேராசிரியர் கென்னடி விஜயரத்தினத்தின் ஆறாம் மாத நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்பட்ட இப் போட்டிகள் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகியது. 18 வயதிற்க மேற்பட்ட ஆண்,பெண் இருபாலாருக்குமான போட்;டிகளில் இளைஞர்,யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

சபையின் தலைவரும் ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலருமான ப.விக்னேஸ்வரன்,மற்றும் பேராசிரியர் கென்னடி விஜயரத்தினத்தின் குடும்பத்தினர் போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர்.

பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் முறையே ம.ரோஸி,இ.விதுஷா, செ.தேனுசா,மோ.துர்ஷிகா,தி.நிதர்சனா ஆகியோர் முதல் ஜந்து இடங்களையும் பெற்றுக்கொண்டனர்.

முதலில் ஆரம்பமான பெண்களுக்கான சைக்கிளோட்டம் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பமாகி 12 கிலோமீற்றர் காரைநகரைச் சுற்றி மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தது.அடுத்து ஆரம்பமான ஆண்களுக்கான சைக்கிளோட்டம் காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பமாகி 24 கிலோமீற்றர் காரைநகரைச் சுற்றி இரு தடவைகள் சுற்றி மீண்டும் தொடக்க இடத்தை வந்தடைந்தது.

இப்போட்டிகளை வீதிகளின் இருமருங்கிலும் குழுமிய பலநூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க உற்சாகமாகப் போட்டிகள் இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………

யூன் 30

வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் காரைநகர் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய கலைஞர்கள்,எழுத்தாளர் ஒன்றுகூடல் யூன் 30  சனிக்கிழமை காரைநகர் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்;றது.

காரைநகர் பிரதேச செயலரும் கலாசாரப் பேரவையின் தலைவருமான திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற  இந்த ஒன்றுகூடலில் காரைநகர் பிரதேச கலாசார உத்தியோகத்தர் ச.தனுசன் வரவேற்புவை நிகழ்த்தியதுடன் தொடர்ந்து விசேட நிகழ்வுகளாக பிரதேச கலாசார அபிவிருத்தி தொடர்பான கருத்துப் பரிமாற்றமும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.நன்றி உரையினை கலாசாரப் பேரவை உப தலைவர் க.ஜெகதீசன் நிகழ்த்தினார் இந்நிகழ்வில் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த கலைஞர்கள்,எழுத்தாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையுரையாற்றினார் காரைநகர் அபிவிருத்திச் சபையின் கௌரவ செயலரும் கலைஞருமான கை.நாகராசா, நாடகக் கலைஞர் கே.சி.கந்தசாமி,எழுத்தாளர் தவராசா உள்ளிட்ட கலைஞர்கள் பலர் காரைநகர் பிரதேச கலாசார அபிவிருத்தி தொடர்பாக உரையாற்றினர

கலைஞர் இ.ஜெயராமன் மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் காரைநகர் அபிவிருத்திச் சபையின் கௌரவ செயலரும் கலைஞருமான க.நாகராசா காரைநகர் பிரதேச கலாசார அபிவிருத்தி தொடர்பாக உரையாற்றினார்.

……………………………………………………………………………………………………………………

யூன் 06

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா யூன் 06 புதன்கிழமை கல்லூரி அதிபர் தி.மதிவதனன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

விழாவில் விருந்தினர்கள் அழைத்து வரப்படுவதனையும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச்செயலர் ப.விக்னேஸ்வரன் மங்களவிளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தார். பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மாணவனுக்குப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தார்.

………………………………………………………………………………………………………………………..

 

யூன் 12

போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு ஊர்வலமும் பிரசாரக் கூட்டமும் யூன் 12 செவ்வாய்க்கிழமை காரைநகரில் இடம்பெற்றது.

காரைநகர் பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊர்வலத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,காரைநகர் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

காலை 9.00 மணியளவில் காரைநகர் பிரதேச செயலகத்திலிருந்து ஆரம்பமான இந்த ஊர்வலம் காரைநகர் பிரதான வீதிவழியாகச் சென்று காரைநகர் கதிர்வேலாயுதசுவாமி கோவில் முன்றலைச் சென்றடைந்து அங்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வுக் கூட்டம் இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் காரைநகர் பிரதேச செயலகத் திட்டமிடல்ப் பணிப்பாளர்,பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்,ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் தற்போது இடம்பெற்று வரும் போதைப் பொருள் பாவனை அதனைத் தடுக்கும் வழிவகைகள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உரையாற்றியதுடன்

சட்டவிரோத போதைப் பொருள் பாவனை தொடர்பாக பிரதேச செயலக மற்றும் பொலிஸாரினால் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருள் தடுப்புக் குழுவினருக்கு அறிவிக்குமாறும் அறிவிப்பவர்கள் தொடர்பான இரகசியம் பாதுகாக்கப்படுவதுடன் இது தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலக மற்றும் பொலிஸ் அதிகாரிகளினால் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

……………………………………………………………………………………………………….

யூலை 04

காரைநகர் இந்துக் கல்லூரியின்; நிறுவுநர் தினமும் வருடாந்தப் பரிசளிப்பு விழாவும் யூலை 04 கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரி பதில் அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் விருந்தினர்களாக ஓய்வு நிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரதிச் செயலர் ப.விக்னேஸ்வரன், தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசில்களையும் பதக்கங்களையும் வழங்கினர்.மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

……………………………………………………………………………………………………………………

யூலை 11

காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா யூலை 11 இடம்பெற்றது.

இந்த உற்சவத்தில் மஞ்சத் திருவிழா யூலை 7ம் திகதி சனிக்கிழமையும் தேர்த்திருவிழா 11ம் திகதி புதன்கிழமையும் தீர்த்தத் திருவிழா 12ம் திகதி வியாழக்கிழமையும் இடம்பெற்றது.புதிய மஞ்ச வெள்ளோட்டம் யூலை 7ம் திகதி சனிக்கிழமை பகல் இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………

யூன் 30

ஈழத்துச் சிதம்பர சுற்றாடல் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. ஆலய இரண்டாம் வீதி,மூன்றாம் வீதி என்பன சமப்படுத்தப்பட்டு சீராக்கம் செய்யப்பட்டுள்ளதுடன்  பற்றைகள் வளர்ந்து பாழடைந்து காணப்பட்ட அம்மா மட சுற்றாடல் என்பனவும் துப்புரவு செய்யப்பட்டுகின்றது.

தியாகராசா பரமேஸ்வரனின் ஏற்பாட்டில் கனரக வாகனங்களின் உதவியுடன் ஆலய வீதிகள் சமச்சீராக்கப்பட்டு சீராக்கப்பட்டுள்ளதுடன் கோயில் குடியிருப்புக்கள் அமைக்கப்பட்டு வருகின்றது.

…………………………………………………………………………………………………………..

யூன் 20

காரைநகர் பண்டத்தரிப்பான் புலம் சிவகாமி அம்பாள் சமேத சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத் தேர்த் திருவிழா யூன் 20 புதன்கிழமை இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………………………………

யூன் 22

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் யூன் 21 வியாழக்கிழமை அதிகாலை ஆனி உத்தர நடேசர் அபிஸேகமும் மாலை 5.30 மணியளவில் நடேசர் உற்சவமும் இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………………………..

யூன் 11

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்;யு விழா யூன் 11ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 9.00 மணிக்கு இடம்பெற்றது.

கல்லூரி திறந்த வெளியரங்கில் அதிபர் தி.மதிவதனன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் இ.இளங்கோவனும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் ஓய்வு நிலைப் பிரதிச் செயலர் ப.விக்கினேஸ்வரனும்

கௌரவ விருந்தினர்களாக தி.ஏகாம்பரநாதன், சத்தி கல்வி மேம்பாட்டுக்கழக இயக்குநர் நா.இந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

…………………………………………………………………………………………………………..

யூன் 08

பிரித்தானிய-யாழ் தீவக ஒன்றியத்தினால் ஆளவாழ்தல் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் ‘தீவகம்’ எனும் சப்ததீவுகளின் வரலாற்று நூல் வெளியீடு விழா யூலை 08 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்களின் படைப்பான இந்நூலின் வெளியீட்டு விழா  ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.

வரவேற்புரையினை யாழ்ப்பாணம் சமுர்த்தி வங்கி சங்க உத்தியோகத்தர் ப.ஜங்கரனும் நூலாசிரியர் அறிமுக உரையினை வடமாகாணக் கல்வி அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் என்.ஆனந்தராஜ்யும் நூல் ஆய்வுரையை ஊடகவியலாளர் இளையதம்பி தயானந்தா, பேராசிரியர் கா.குகபாலன், ம.நித்தியானந்தன், ந.விஜயசுந்தரம், நெடுந்தீவு மகேஸ் ஆகியோரும்

கருத்துரைகளை வடமாகாண ஆளுநரின் உதவிச் செயலர் ஜே.எக்ஸ்.செல்வநாயகம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலர் கி.சத்தியசீலன், மருத்துவர் வை.யதுநந்தனன், உடுத்துறை மகா வித்தியாலய அதிபர் வே.புவனேந்திரன், பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை, நடா.சிவராசா, எஸ்.பி.சாமி ஆகியோர் வழங்கினர்.

விசேட பிரதிகளை பிரபல வர்த்தகர்கள் ஈ.எஸ்.பி.நாகரத்தினம்,கலைமாடக்கோண் ச.சிவஞானம், ஆர்.ஜெயராசா உள்ளிட்ட பலர் பெற்றுக்கொண்டனர்.

……………………………………………………………………………………………………………………………..

யூன் 05

காரைநகர் மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா   யூன் 05 செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

………………………………………………………………..

ஏப்ரல் 04

வியாவில் சைவ வித்தியாலய அதிபர் கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களின் சேவை நயப்பும் அகவை அறுபது பூர்த்தி விழாவும் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

பாடசாலையின் சிரேஷ்ட ஆசிரியர் பா.இராமகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற இவ் விழாவில் பிரதம விருந்தினராக தீவக வலய முன்னாள் கல்விப் பணிப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளருமான தி.ஜோன்குயின்ரஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்

……………………………………………………………………………………………………………………………

யூன் 10

காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடம் ஒன்றினை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த  சனிக்கிழமை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெறது.இக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்.

சிறந்த பாடசாலை அண்மித்த பாடசாலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும்  ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் காரைநகர் இந்துக் கல்லூரியம் தெரிவு செய்யப்பட்ட போதிலும் அதற்குரிய பணிகள் முன்னெடுப்பது தாமதமாகி வருகின்றது.

இதனால் காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த உயர்தரம் கற்கும் பெருமளவு மாணவர்கள் தொழில்நுட்பக் கற்கைக்காக யாழ் நகரப் பாடசாலைகளுக்கே செல்லவேண்டி உள்ளது.எனவே காரைநகர் இந்துக் கல்லூரியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் விரைவில் தொழில் நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

இதற்குப் பதில் அளித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வட்டுக்கோட்டை இந்தக் கல்லூரியில் இந்த மாணவர்களை இணைத்து கற்பிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

எனினும் இப் பாடசாலைக்கு மாணவர்கள் இரு பஸ்களில் சென்றே கற்கமுடியும் இது மாணவர்களுக்குக் கடினமானதாக அமையும் எனச் சுட்டிக்காட்டியதை அடுத்து காரைநகர் இந்துக் கல்லூரியில் தொழில்நுட்ப பீடத்தினை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

அத்துடன் காரைநகர் ஊரி அ.மி.த.க. பாடசாலையினைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே தற்போது நடைபெற்று வருகின்றது. இங்கு 120 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் வருடாந்தம் 30 மாணவர்கள் தரம் ஆறுக்காக வெளியேறுகின்றனர்.

வெளியேறும் மாணவர்கள் நீண்ட தூரம் சென்றே தரம் ஆறில் கற்க வேண்டி உள்ளது. வேறு பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்றி இருப்பதுடன் வீதிகளும் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வறுமைப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் கல்வியில் ஆர்வம் காட்டப் பின்னடிக்கினறனர்.எனவே இப்பாடசாலையில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இது தொடர்பில் மேலிடத்தில் ஆராயப்படும் என அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

……………………………………………………………………………………………………………..

யூன் 03

காரைநகர் அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் 12 பேருக்கான கற்றாக்குக்கான சத்திர சிகிச்சை யூன்; 03 இல் யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

மே மாதம் கண்படர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்வதற்கான பரிசோதனை காரைநகர் அபிவிருத்திச் சபையின் எற்பாட்டில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

அதில் 25 பேருக்கான கற்றாக்குக்கான சத்திர சிகிச்சை எதிர்வரும் 1ம் திகதி மேற்கொள்வதற்கு சபை ஏற்பாடு செய்திருந்தது. அதன் அடிப்படையில் 12 பேருக்கான அறுவைச் சிகிச்சை இடம்பெற்றதுடன் ஏனையவர்களுக்கான சிகிச்சை விரைவில்; இடம்பெற உள்ளது.

வைத்தியர்களால் மூக்குக் கண்ணாடி வழங்க சிகபர்சு செய்த 11 பேருக்கும் கடந்த மே 24 இல்  மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

……………………………………………………………………………………………………………………………

யூன் 10

கடற்படையினரால் காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் அமைத்து வரும் முகாமினை அகற்றி அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என நேற்று நடைபெற்ற காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திர்மானம் நிறைவேற்றப்பட்து.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள் ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெறது.

இக் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கொண்டுவர அதனை ஏகமனதாக அங்கீகரித்ததுடன் உடனடியாக வடமாகாணக் கட்டளைத் தளபதிக்கும் பிரதமருக்கும் எழுத்துமூலம் அனுப்புமாறு பிரதேச செயலருக்குப் பணிப்புரை விடுத்தார்.

பாடசாலை வளாகத்திற்குள் கடற்படையினர் முகாம் அமைக்க அனுமதிக்க முடியாது எனவே அவர்கள் உடனடியாக வெளியேறவேண்டும் இதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றார்.

இது தொடர்பாக காரைநகர் பிரதேச சபை உப தவிசாளர் க.பாலச்சந்திரன் கருத்துத் தெரிவிக்கையில் பாடசாலைக்குச் சொந்தமான காணியினைப் பாடசாலைக்கு மீள வழங்க வேண்டும் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் காரைநகரில் பொலிஸ் நிலையம் அமைக்க முடியுமே தவிரக் கடற்படை முகாம் அமைக்க முடியாது எனவே கடற்படையினரை வெளியேற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எள்றார்.

காரைநகர் மடத்துவெளிப் பகுதியில் வாழ்ந்த 40 குடும்பங்கள் அகதிகளாக உள்ளன அவர்களது காணிகள் கடற்படை வசம் உள்ளது அதனையும் மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதிப் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.

மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனும் வடகடல் நிறுவனத் தலைவர் தியாகராசா பரமேஸ்வரனும் எமது பகுதிக்கு வருகைதந்த போது இப்பகுதியை உடனடியாக விடுவித்துத் தருவதாக வாக்குறுதி வழங்கினார்கள்.இச் செய்தி பத்திரிகைகளிலும் வந்தது ஆனால் இதுவரை எமது பகுதி விடுவிக்கப்படாமையால் தொடர்ந்தம் 40 குடும்பங்கள் ஏதிலிகளாக வாழவேண்டிய அவல நிலை காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டினார்கள்.

காரைநகர் பிரதேசத்தில் உள்ள நன்னீர்க் கிணறுகளில் இருந்து கடற்படையினர் தண்ணீர் எடுப்பதைத் தடைசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் போது இணைத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்த போது இங்குள்ள கிணறுகளில் எவளவு அளவு நீரினைப் பெற்றுக் கொள்ள முடியும் என ஆய்வு செய்து அறிக்கை தருமாறு நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையிடம் கேட்டுக் கொண்டனர்.அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

இதன் போது கருத்துத் தெரிவித்த காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவரும் ஓய்வு நிலை மாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்னேஸ்வரன் 90 களிற்கு முன்னர் காரைநகரில் நாற்பதாயிரம் மக்கள் வாழ்ந்தனர் அப்போது குடிநீர்ப் பிரச்சினை வரவில்லை தற்போது நிலத்தடி நீர் வகை தொகையின்றி எடுக்கப்படுவதால் தற்போது வசிக்கும் பத்தாயிரம் மக்களுக்கே குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

காரைநகர் அபிவிருத்திச் சபை பவுஸர்கள் உட்பட இன்று 6 பவுசர்கள் வெளியிடங்களில் இருந்து குடிநீரினை எடுத்து வந்து மக்களுக்கு விநியோகிக்கின்றது. மக்கள் குடிநீரினைப் பெறுவதற்குப் பெருந் தொகைப் பணத்தினைச் செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது. எனவே இங்குள்ள குடிநீரினை எமது மக்கள் பாவிப்பதற்கு ஏற்ற ஒழுங்குகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஊர்காவற்றுறையில் கடற்படையினரால் கடல் நீர் நன்னீராக்கப்பட்டு தமது தேவைக்கு மாத்திரமன்றி மக்களுக்கும் வழங்குகின்றனர் ஆனால் இங்கு மக்களின் தண்ணீரை அபகரிக்கின்றனர் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

……………………………………………………………………………………………………………………………….

 

யூன் 05

பிரதேசத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டே பிரதேச அபிவிருத்திக் கூட்டங்கள் நடாத்தப்படுகின்றன. இக் கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் உடனடியாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இக் கூட்டத்திற்கு வருகைதந்து தமது திணைக்களப் பிரச்சினைகளை முன்வைப்பது கட்டாயமானது. எனவே இக் கூட்டத்திற்கு வருகை தரவேண்டிய தீவக வலயக் கல்வி அதிகாரிகள் வருகை தரவில்லை கடந்த கூட்டத்திற்கும் வருகைதரவில்லை எனவே இதற்கான நடவடிக்கையை உடன் எடுக்குமாறு வலியுறுத்தினார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்

இது தொடர்பாக கல்வி அமைச்சருக்கும் உரிய அதிகாரிகளுக்கும் எழுத்துமூலம் அறிவிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினரகள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெறது.

இக் கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையினை விடுத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்.

பிரதேச அபிவிருத்தியில் கல்விக்கான இடம் மிக முக்கியமானது அது தொடர்பாக ஆராய்வதற்கும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும் கல்வி அதிகாரிகள் இங்கு சமூகம் கொடுக்க வேண்டும் என்றார்.

காரைநகர் ஊரி அ.மி.த.க. பாடசாலையினைத் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இப் பாடசாலையில் தரம் 5 வரையான வகுப்புக்களே தற்போது நடைபெற்று வருகின்றது. இங்கு 120 இற்கம் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களில் வருடாந்தம் 30 மாணவர்கள் தரம் ஆறுக்காக வெளியேறுகின்றனர்.வெளியேறும் மாணவர்கள் நீண்ட தூரம் சென்றே தரம் ஆறில் கற்க வேண்டி உள்ளது. வேறு பாடசாலைக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் சீரின்மை மற்றும் வீதிகள் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளது.இதனால் இங்குள்ள வறுமைப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பல இன்னல்களை அனுபவிப்பதுடன் கல்வியில் ஆர்வம் காட்டப் பின்னடிக்கினறனர்.எனவே இப்பாடசாலையில் தரம் 6 தொடக்கம் வகுப்புக்களை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

எனினும் கூட்டம் முடிவுறும் தறுவாயில் தீவக வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எதுவித ஆயத்தமும் இன்றி கூட்டத்திற்குச் சமூகமளித்திருந்தார் அதனால் அவரால் உரிய பதில்கள் மற்றும் தரவுகளை சமர்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

…………………………………………………………………………………………………………………………..

யூன் 10

காரைநகர் பிரதேசத்திற்கான குழாய் நீர் விநியோகம் 2020 இல் ஆரம்பிக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரி.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள்; ஈ.சரவணபவன், அங்கஜன் ராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்து

இக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் குழாய் நீர் விநியோகத்திற்கான நடவடிக்கைகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றது. அதற்கான வேலைத்திட்டத்தில் 80 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளது. பிரதான வீதிகள் ஊடாக குழாய்கள் பொருத்தும் பணிகளும் தண்ணீர் தாங்கி அமைக்கும் பணிகளும் நிறைவுக்கு வருகின்றது.

உள்ளக வீதிகளில் குழாய் பொருத்துவதற்காகக் கேள்வி கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனவே விரைவில் அப்பணியும் ஆரம்பிக்கப்படும் தாளையடியில் இருந்து கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

………………………………………………………………………………………………………………………………

மே 25

காரைநகர் இந்துக் கல்லூரி வளாகத்தில் கடற்படையினரால் முகாம் அமைப்பதை நிறத்தமாறு பாடசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்தும் செவிமடுக்காத கடற்படையினர் முகாம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

கடற்படையினர் பாடசாலைக் காணிக்குள் முகாம் அமைக்கும் நோக்குடன் பாடசாலைக் காணியைப் புல்டோசர் மூலம் துப்புரவு செய்தபோது பாடசாலை நிர்வாகம் காரைநகர் பிரதேச சபைத் தலைவர், உப தலைவர் ஆகியோரை அழைத்துக்கொண்டு சென்று இது பாடசாலைக்குரிய காணி இதில் முகாம் அமைப்பதை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தது.

மறுதினம் சாதகமான பதிலைத் தருவதாகக் கூறிய கடற்படையினர் இரவோடு இரவாக பாடசாலைக் காணியின் குறிப்பிட்டளவு நிலப்பரப்பினைக் கையகப் படுத்தி முட்கம்பி வேலி அமைத்து முகாம் அமைக்கும் பணியினைத் தொடர்கின்றனர்.

…………………………………………………………………………………………………………………….

 

காரைநகர் இந்துக் கல்லூரிக்காக கல்லூரிக்கு அருகிலிருந்த காணி கனடா பழைய மாணவர் சங்க நதி உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

…………………………………………………………………………………………………

மார்ச் 10

காரைநகர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் பிரதித் தவிசாளராக அதே கட்சியைச் சேர்ந்த  கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் பிரதேச சபையின் முதலாவது அமர்வு இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பற்றிக்நிறைஞ்சன் தலைமையில் கூடியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பு தவிசாளராக விஜயதர்மா கேதீஸ்வரதாஸை பிரேரித்தது மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு சார்பாக மயிலன் அப்புத்துரை பிரேரிக்கப்பட்டார்.

தெரிவுக்கான வாக்கெடுப்பு பகிரங்க வாக்கெடுப்பாக அமையவேண்டும் என்று  சுயேட்சைக் குழுவைத்தவிர ஏனையவர்கள் கேட்டுக்கொண்டனர்.தொடர்ந்து பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 03 உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனனாயகக் கட்சியின் 02 உறுப்பினர்களும் ஜக்கிய தேசியக் கட்சியின் இரு உறுப்பினர்களும் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் அவர்களுக்கு வாக்களி;தனர்.

சுயேட்சைக் குழு மூவரும் மயிலன் அப்புத்துரைக்க வாக்களித்தனர்.நான்கு பெரும்பான்மை வாக்ககளால் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தெரிவு செய்யப்பட்டார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னயின் ஒரு உறுப்பினர் நடுநிலை வகித்தார்.பெரும்பான்மை வாக்குகளால்; பிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்;பைச் சேர்ந்த  கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

…………………………………………………………………………………………………………………….

ஏப்ரல் 14

காரைநகர் வாரிவளவு கற்பக விநாகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா சித்திரைப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14 சனிக்கிழமை மதியம் இடம்பெறது. முற்பகல் 11.00 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப் பூசையை அடுத்து விநாயகர் தேரில் எழுந்தருளித் தேர்ப்பவனி இடம்பெற்றது.

மறுநான் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணியளவில் வியாவில் ஜயனார் ஆலய தீர்த்தக் கரையில் தீர்த்தோற்சவம் இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………….

 

ஏப்ரல் 05

காரைநகர் கல்விக் கோட்ட தமிழ் சிங்கள புத்தாண்டு விழா இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை மண்டபத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக காரைநகர் மணிவாசகர் சபையின் பொதுச் செயலாளர் சிவத்திரு வே.முருகமூர்த்தி அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களின் தமிழ் சிங்களப் பண்பாட்டுக் கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

……………………………………………………………………………………………………………………………..

ஏப்ரல் 08

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் இன்று 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியனவில்  நடைபெற்றது.

கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெறும் இக் கூட்டத்தில் பதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவராக பதவி வழியாக அதிபர் திருமதி சிவந்தினி வாகீசனும் செயலாளராக சுந்தரலிங்கம் அகிலனும் பொருளாளராக கணபதிப்பிள்ளை நிமலதாசனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உப தலைவராக மீண்டும் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளையும் உப செயலாளராக இ.திருப்புகழூர்சிங்கமும் உப பொருளானராக செ.அருட்செல்வமும் தெரிவாகி உள்ளதுடன்

நிர்வாக சபை உறுப்பினர்களாக ந.பாரதி, ந.யோகநாதன், த.சற்குணராசா, வி.கம்சன், வே.சபாலிங்கம், தெ.லிங்கேஸ்வரன், க.நாகராசா, திருமதி  அ.பத்மலீலா, திருமதி ந.யோகலட்சுமி, எஸ்.கலைச்செல்வி ஆகியோரும் கணக்காய்வாளராக லண்டன் இ.சிவசுப்பிரமணியமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

……………………………………………………………………………………………………………………

ஏப்ரல் 02

காரைநகர் ஊரிக் கிராமத்தில் அமைக்கப்பட்ட மீனவர் இளைப்பாற்று மண்டபம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகத்தின் தவிசாளருமான சந்திரிக்கா பாண்டாரநாயக்கா குமாரதுங்காவினால் திறந்துவைக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச செயலகத்தின் ஊடாக தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமான செயலணியின் நிதி உதவியுடன் இரு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  இம் மண்டபத் திறப்பு விழா காரைநகர் பிரதேச செயலர் திருமதி உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் மண்டபத்தினை நாடாவெட்டித் திறந்துவைத்தார்.

இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் றெஜினேட் கூரே,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ந.வேதநாயகன், காரைநகர் பிரதேச சபைத் தலைவர் விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள்,அரச உயர் அதிகாரிகள்,பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய திருமதி சந்திரிகா பண்டாரநாயக்கா அவர்கள் காரைநகர் உள்ளிட்ட யாழ்ப்பாணப் பிரதேசங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றது.இதனால்மக்கள்பாரிய கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர்.இதனைத் தீர்ப்பதற்கு பல வழிகளிலும் முயற்சிக்கின்றோம் அந்த வகையில் வடமாகாணத்தில் 120 குளங்களை அமைப்பதற்கும் புனரமைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டள்ளது.அந்தத் திட்டத்தில் இன்று அராலி உள்ளிட்ட இரண்டு இடங்களில் குளங்களை அமைத்து திறந்துவைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

…………………………………………………………………………………………………………………………..

மார்ச் 29

ஈழத்துச் சிதம்பர வருடாந்த மகோற்சவத் தேர்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெற்றது.

காலை 7.00 மணிக்கு இடம்பெறும் வசந்தமண்டபப் பூசையை அடுத்து சோமாஸ்கந்தர் தனது பரிவார மூர்த்திகளுடன் தேரில் எழுந்தருளிப் பஞ்சரத பவனி இடம்பெற்றது

மறுநாள் காலை 6.35 மணிக்கு நடேசர் உற்சவமும் பகல் 9.30 மணிக்கு தீர்த்தோற்சவமும் இரவு 7.30 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்று மறுநாள் சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………………..

மார்ச் 01

கிழவன்காடு கலா மன்ற ஸ்தாபக தினம் வியாழக்கிழமை கலா மன்ற மனோன்மனி கலையரங்கில் மன்றத்தின் ஸ்தாபகத் தலைவர் நடராசா சோதிநாதன் தலைமையில் இடம்பெற்றது.

கலா மன்றம் ஆரம்பிக்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான சிறப்புப் பட்டிமண்டபம் என்பன இடம்பெற்றதுடன்

மன்றத்தில் 17 வருடங்களாக இசை ஆசிரியராகப் பணியாற்றும் செல்வி லீலாவதி இராசரத்தினம் அவர்களுக்கு ‘திருவாசகக் குயில்’ சிறப்புப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. நிகழ்வில் பெருமளவானோர்  கலந்துகொண்டனர்.

…………………………………………………………………………………………………………………….

பெப்ரவரி 28

காரைநகர் மடத்துக்கரை முத்துமாரி அம்பாள் ஆலயத் தேர்த் திருவிழா பெப்ரவரி 28 புதன்கிழமை இடம்பெற்றது. பல நூற்றுக்கணக்கான பத்தர்களின் அரோகராக் கோஷம் ஒலிக்க அம்பாள் தேருக்கு எழுந்தருளி தேரில் ஆரோகணித்து அடியவர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.

…………………………………………………………………………………………………………………………

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழையாட்டு விழா ஜனவரி 26 இல் பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக முன்னாள் காரைநகர் பிரதேச செயலரும் யாழ் மாநகரசபை ஆணையாளருமான இ.த.ஜெயசீலனும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கம்,இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வே.புவனேந்திரராஜா ஆகியோரும் கௌரவ விருந்தினராக தி.பிரமேந்திரதீசனும் கலந்துகொண்டனர்.

………………………………………………………………………………………………………………………….

மார்ச் 07

கரைநகரில் வதியும் உயர் கல்வியினைக் கற்பதற்கான நிதி வசதி இன்றி சிரமப்படும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவியினை வழங்குவதற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவரும் ஓய்வு நிலை வடமாகாணக் கல்விப் பணிப்பாளருமான ப.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காரைநகரைத் தற்போது வசிப்பிடமாகக் கொண்டுள்ள வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த உயர்தரம் மற்றும் பல்கலைக் கழகக் கல்வியினைத் தொடர நிதி வசதியின்றி இடர்ப்படும் மாணவர்கள் தங்கள் சுய விபரங்களை தமது பாடசாலை அதிபர் மற்றும் கிராமசேவையாளரின் உறுதிப்படுத்தலுடன் காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும்

தகுதி உடையவர்கள் பரிசீலிக்கப்பட்டு நிதி உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

………………………………………………………………………………………………………………………

 

ஜனவரி 20

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று வெள்ளிக்கிழமை கல்லூரி அதிபர் சதா.நிமலன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

பிரதம விருந்தினராக கல்லூரியின் பழைய மாணவரும் பழைய மாணவர் சங்க ஜக்கியராச்சியக் கிளை உறுப்பினருமான லோகசிங்கம் பிரதாபன் கலந்துகொண்டார்.

பிரதம விருந்தினர் மற்றும் யாழ் மாநகரசபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கச் சான்றிதழ்களை வழங்கினர் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டம் மற்றும் தற்காப்பு கலையினை மாணவர்கள் நிகழ்த்தியமை சிறப்பாக இருந்தது.

………………………………………………………………………………………………….

பெப் 12

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மகா சிவராத்திரி விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

நான்கு சாமங்களும் விஷேட அபிஸேக ஆராதனைகளும் பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது. அதிகாலை தொடக்கம் மறுநாள் அதிகாலை வரை ‘ஓம் நமசிவாய சிவாய நம ஓம்’ என்னும் திருவைந்தெழுத்து மந்திரம் இருபத்து நான்கு மணிநேரம் ஓதும் அகண்டநாம வழிபாடும் அஷ்டோத்திர நாம அர்ச்சனை ஆகியனவும் அன்றைய நாள் முழுவதும் காரைநகர் மணிவாசகர் சபை எற்பாட்டில் நடாத்தப்பட்டது.

மறுநாள் புதன்கிழமை அதிகாலை இடம்பெறும் வசந்த மண்டபப் பூசையையடுத்து  சுவாமி துர்வாக சாகர சமுத்திரதீர்த்தத்திற்கு எழுந்தருளி தீர்த்தவாரி இடம்பெற்றது.

…………………………………………………………………………………………………………………………..

பெப் 10

இன்று நடைபெற்ற உள்ளு10ர் அதிகார சபைகள் தேர்தலில் காரைநகர் பிரதேச சபைக்கு இலங்கைத் தழிழரசுக் கட்சியிலிருந்;து மூவரும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மூவரும் ஜக்கிய தேசியக் கட்சி,ஈழமக்கள் ஜனனாயகக் கட்சி ஆகியவற்றிலிருந்து தலா இருவரும் காங்கிரசைச் சேர்ந்த ஒருவருமாக 1 உறுப்பினர்கள் தெரிவாகினர்.

இன்று அதிகாலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை இடம் பெற்ற வாக்குப் பதிவுகளின் அடிப்படையில் பிரதேச சபைக்கான 11 உறுப்பினர்கள் தெரிவாகினர்.

பத்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக எட்டுக் கட்சிகளைச் சேர்ந்த 104 பேர் காரைநகர் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டனர்.

இலங்கைத்தழிழரசுக்கட்சியில்1ம்வட்டாரத்தில்(தங்கோடை,பத்தர்கேணி,மருதபுரம்,செம்பாடு உள்ளிட்ட கிராமங்கள்) 314 வாக்குகளைப் பெற்று கணேசபிள்ளை பாலச்சந்திரன் தெரிவாகி உள்ளார். 2ம் வட்டாரத்தில் (காரை மத்தி,வேதரடைப்பு,மல்லிகை உள்ளிட்ட கிராமங்கள்) 479 வாக்குகளைப் பெற்று ஆண்டிஜயா விஜயராசா தெரிவாகி உள்ளார் .3ம் வட்டாரத்தில் (பெரியமணல்,மருதடி,சடையாளி,புதுறோட்,மாப்பாணவூரி,சயம்புவீதி உள்ளிட்ட கிராமங்கள்) 328 வாக்குகளைப் பெற்று விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் தெரிவாகி உள்ளார்.

மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 4ம் வட்டாரத்தில் (களபூமி,பாலாவோடை,விளானை,பொன்னாவளை,சத்திரந்தை,இடைப்பிட்டி,மொந்திபுலம்,வலந்தலை, காளிகோவிலடி,திக்கரை,ஊரி உள்ளிட்ட கிராமங்கள்) 356வாக்குகளைப் பெற்று நல்லையா ஜெயக்கிருஸ்ணனும் 5ம் வட்டாரத்தில் (கருங்காலி,வியாவில்,பலகாடு,கல்லந்தாழ்வு உள்ளிட்ட கிராமங்கள்) 263 வாக்ககளைப் பெற்று மயிலன் அப்புத்துரையும் 6ம் வட்டாரத்தில் (துறைமுகம் பிள்ளையார் கோவிலடி, பாலாவோட, தோப்புக்காடு உள்ளிட்ட கிராமங்கள்) 275 வாக்குகளைப் பெற்று மாணிக்கம் யோகநாதனும் தெரிவாகி உள்ளதுடன்.

காரைநகர் பிரதேசம் முழுவதும் இலங்கைத் தழிழரசுக் கட்சி 1623 வாக்குகளையும் ஜக்கிய தேசியக் கட்சி  1263 வாக்குகளையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 1197 வாக்ககளையும் மீன் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக்குழு 1080 வாக்ககளையும் பெற்றது. அகில இலங்கைத் தழிழ் காங்கிரஸ் மொத்தம் 359 வாக்ககளையும் தழிழர் விடுதலைக் கூட்டணி 156 வாக்குகளைம்,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 136 வாக்ககளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 15 வாக்குகளையும் காரைநகர் மக்களிடம் சுவீகரித்துக் கொண்டது.

………………………………………………………………………………………………………………………………………

பெப் 06

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லநர் போட்டி பெப் 06 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கல்லூரி பிரதி அதிபர் திருமதி கலைவாணி அருள்மாறன் தலைமையில் இடம்பெற்றது.

இப் போட்டிக்குப் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் வே.முருகமூர்த்தியும் சிறப்பு விருந்தினராக இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வே.புவனேந்திரராஜாவும் கலந்துகொண்டனர்.

………………………………………………………………………………………………………………………………………

பெப் 07

காரைநகர் வேதரடைப்பு சோலையான் வீதி ஆலங்கன்று ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் பெப்ரவரி 07ம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.

பத்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரை இடம்பெற்று மறுநாள் புதன்கிழமை காலை 7.35 மணி முதல் 8.40 மணி வரை உள்ள சுபவேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

சிவஸ்ரீ சி.மங்களேஸ்வரக் குருக்கள் பிரதம குருவாக இருந்து கும்பாபிஷேகத்தினை நிகழ்த்தி வைத்தார். தொடர்ந்து 48 தினங்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்று இறுதி நாள் அன்று 1008 சங்காபிஷேகம் இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………………………

ஜன 18

காரைநகர் மாப்பாணவூரி அருள்மிகு நாச்சி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஜனவரி 18; வியாழக்கிழமை இடம்பெற்றது.

காரைநகர் ஈழத்துச் சிதம்பர பிரதம குரு சிவஸ்ரீ தியாக உமாசுதக்குருக்கள் தலைமையில் முற்பகல் 11.30 மணி தொடக்கம் 1.30 மணி வரையுள்ள சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெறது.

…………………………………………………………………………………………………………………….

பெப் 02

காரைநகர் வலந்தலை ஸ்ரீ மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பஞ்சதள இராஜ கோபுர மகா குப்பாபிஷேகம் தைப்பூச தினமான ஜனவரி 30 புதன்கிழமை இடம்பெற்றது.

நயினை நாகபூசனி அம்மன் ஆலய பிரதம சிவாச்சாரியார் சிவஸ்ரீ ப.முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாக இருந்து  கும்பாபிஷேகத்தினை நிகழ்த்திவைத்தார்.

இராஜ கோபுரத்தினை சுவிஸ் நாட்டில் வதியும் பரோபகாரி சுப்பிரமணியம் கதிர்காமநாதனும் மணிமண்டபத்தினைக் கலைமாடக்கோன் சண்முகம் சிவஞானமும் தங்களது உபயமக அமைத்து வழங்கினர்.

பல நூற்றுக்கணக்;கான பக்தர்களின் அரோகராக் கோசத்துடன் கும்பாபிஷேகம் சிறப்புற இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………..

ஜன 29

காரைநகர் மணற்காடு கும்பநாயகி ஸ்ரீ மத்துமாரி அம்மன் ஆலயத்தில் ஜனவரி 29 செவ்வாய்க்கிழமை பாற்குடப் பவனியும் மகா கும்பாபிஷேக தின சங்காபிஷேகமும் இடம்பெற்றது.

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்திலிருந்து அம்பாள் ஆலயத்தை நோக்கிப் பாற்குடப் பவனி இடம்பெற்றது. தொடர்ந்த பாற்குட அபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் இடம்பெற்று பகல் 12.00 மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப் பூசையை தொடர்ந்து அம்பாள் திருவீதி உலா வரும் காட்சி இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………………

ஜன 28

காரைநகரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கையினைக் கட்டாக்காலி கால்நடைகள் அழித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

காரைநகரில் இம்முறை சுமார் ஆயிரத்து இருநூறு எக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் போதிய மழை பெய்யாத காரணத்தால் நெற்செய்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.சுமார் பத்து வீதமான நெல் விளைந்த போதிலும் அவற்றினைக் கட்டாக்காலிக் கால்நடைகள் அழித்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கால்நடைகளைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

……………………………………………………………………………………………………………………………

ஜனவரி 31

காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத் தேர்த்திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

………………………………………………………………………………………………………………………………..;

பெப் 03

காரைநகர் இந்துக் கல்லூரி வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பெப்ரவரி 03 சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெறற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பிரதேச செயலர் பொ.சிவானந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கம்,தேசிய சேமிப்பு வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் ரி.மையூரன் ஆகியோரும்.

கௌரவ விருந்தினர்களாக கல்லூரியின் பழைய மாணவர்களான கனடாவில் வதியும் தி.பிரமேந்திரதீசன்,பழைய மாணவர் சங்க கனடாக் கிளைப் பொருளாளர் மா.கனகசபாபதி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

…………………………………………………………………………………………………………………………………

ஜன 25

காரைநகர் பிரதேசத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசாரப் பணி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.காரைநகர் பிரதேச சபையின் பத்து ஆசனங்களுக்காக 13 கட்சிகளைச் சேர்ந்த 104 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் தினமும் வீடு வீடாகச் சென்று பிரசாரப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் வீதிகள் எங்கும் பல வர்ண பிரசுரங்களை இரவிரவாக ஒட்டி வருகின்றனர்.இவற்றினை காலையில் உரிய தரப்பினர் தினமும் அகற்றி வருகின்றனர்.

………………………………………………………………………………………………………………………………….

ஜனவரி 10

காரைநகரைச் சேந்த பேராசிரியர் கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் (வயது 50) எதியோப்பிய நாட்டில் கடந்த புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.

எதியோப்பியா மடவளபு பல்கலைக்கழகத்தின் ஆங்கில இணைப் பேராசிரியராக பணியாற்றிய இவர் காய்ச்சல் காரணமாக எதியோப்பிய மருத்துவ மனையில் கடந்த புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.

காரைநகர் நீலிப்பந்தனையைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பணியாற்றி கடந்த ஆறு வருடங்களாக எதியோப்பியப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

சிறந்த கல்விமானும் சமூக சேவையாளருமான இவர் புலம்பெயர் நாடுகளில் வாழும் காரை மக்களை ஒன்றினைத்து அவர்கள் ஊடாக மொழி,கல்வி,கலை,மேம்பாட்டுக் குழுவை தாபித்து காரைநகர் அபிவிருத்திச் சபை ஊடாக காரைநருக்குச் சேவையாற்றியதுடன் கடந்த மாத இறுதியில் அவருடைய தலைமையில் காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் இடம்பெற்ற கலை இலக்கியப் பெருவிழாவில் கலந்த கொண்ட பின்னரே எதியோப்பியா சென்றிருந்தார்.

தனது சொந்த நிதியிலிருந்து பாடசாலை,பல்கலைக் கழகக் கல்வியைத் தொடரும் வறிய மாணவர்கள் பலருக்கு நிதியுதவியும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரது பூதஉடல் எதியோப்பிய நாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு அவரது சொந்த ஊரான காரைநகரில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் இடம்பெற உள்ளன. தமிழ் உணர்வாளனான அன்னாரது இழப்புக் குறித்து காரைநகரில் உள்ள பொது அமைப்புக்கள்.கல்விச் சமூகம் என்பன இரங்கல்களை வெளியிட்டு வருவதுடன் காரைநகர் சோபை இழந்து சோகத்தில் மூழ்கியுள்ளது.

………………………………………………………………………………………………………………………….

ஜன 25

காரைநகர் வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலையின் வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் விழையாட்டு விழா ஜனவரி 26 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் அதிபர் க.நேத்திரானந்தன் தலைமையில் இடம் பெற்றது.

இவ் விழாவிற்குப் பிரதம விருந்தினராக முன்னாள் காரைநகர் பிரதேச செயலரும் யாழ் மாநகரசபை ஆணையாளருமான இ.த.ஜெயசீலனும் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கம்,இலங்கை வங்கி காரைநகர் கிளை முகாமையாளர் வே.புவனேந்திரராஜா ஆகியோரும் கௌரவ விருந்தினராக தி.பிரமேந்திரதீசனும் கலந்து சிறப்பித்தனர்.

……………………………………………………………………………………………………………………………..

ஜன 25

காரைநகர் மணிவாசகர் சபையின் தலைவராக ஓய்வு பெற்ற காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் கலாபூசணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைநகர் மணிவாசகர் சபையின் வருடாந்தப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் அமைந்துள்ள சபை மண்டபத்தில் சபைத் தலைவரும் யாழ்ற்ரன் கல்லூரி ஓய்வு நிலை அதிபருமான வே.முருகமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற போது புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.

சபையின் உப தலைவர்களாக ஓய்வு நிலை அதிபர் க.தில்லையம்பலம்.ந.பாரதி ஆகியோரும் இணைச் செயலாளர்களாக யாழ்ற்ரன் கல்லூரி ஓய்வு நிலை அதிபர் வே.முருகமூர்த்தி,வியாவில் சைவ வித்தியாலய சிரேஸ்ர ஆசிரியர் பா.இராமகிருஸ்ணன் ஆகியோரும் பொருளாளராக ஆசிரியர் பொ.யோகேஸ்வரனும் சபையின் பரீட்சைச் செயலராக தீவக வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆ.யோகலிங்கமும் தெரிவு செய்யப்பட்டதுடன்

நிர்வாக சபை உறுப்பினர்களாக யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி திருமதி வீரமங்கை யோகரத்தினம்,வலந்தலை தெற்கு அ.மி.த.க.பாடசாலை அதிபர் க.நேர்த்திரானந்தன்,காரைநகர் இந்துக் கல்லூரி உப அதிபர் தெ.லிங்கேஸ்வரன்,காரைநகர் மெய்கண்டான் வித்தியாலய ஆசிரியர் தே.சத்தியானந்தன்.கூட்டுறவுத் திணைக்களப் பரிசோதகர் சு.அகிலன்.ஓய்வு நிலை வங்கியாளர் து.நாகேந்திரம்,பனை அபிவிருத்திச் சபையின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் நா.பாலகிருஸ்ணன்,மா.கனகசபாபதி.சி.சோதிலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டதுடன் கணக்குப் பரிசோதகர்களாக வே.சபாலிங்கம்,ஆசிரியர் வே.உருத்திரசிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

……………………………………………………………………………………………………………………………….