சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய தாளக் காவடியின் காவலர்  முருகேசு மயில்வாகனம் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய தாளக் காவடியின் காவலர்  முருகேசு மயில்வாகனம் அவர்களுக்கு மதிப்பளிப்பு.

தமிழர்களின் மிகவும் பழமை வாய்ந்த பாரம்பரிய கலைவடிவமான தாளக்காவடி முன்னர் மேடைகளிலும், கோயில்களிலும் ஆடப்பட்டு வந்தது. நாதஸ்வரம், நடனம் போல் தாளக்காவடியும் தமிழர் விழாக்களில் இடம்பெறும் நிகழ்ச்சியாக இருந்து வந்துள்ளது. ஆயினும் காலப்போக்கில் மேடையில் ஆடப்படுவது அருகி இன்று கோயில்களில் மட்டும் ஆடப்படும் கலைவடிவமாக தாளக்காவடி மாற்றமடைந்துள்ளது.

ஈழத்தில் இன்று தாளக்காவடியை முறைப்படி பயிற்றுவித்து வரும் அண்ணாவியார்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர். அவர்களில் அண்ணாவியார் முருகேசு மயில்வாகனம் மிகவும் முக்கியமானவர். அவர் வேலையின் நிமித்தம் எங்கெல்லாம் செல்ல நேரிடுகிறதோ அங்கெல்லாம் சிறார்களை சேர்த்து தாளக்காவடிப் பயிற்சியளித்து அக்கலையை அழியாது பாதுகாத்து வருகிறார்.

யாழ் மாவட்டத்திலே காரைநகரில் விக்காவில் என்ற இடத்தைச் சேர்ந்த முருகேசு மயில்வாகனம் அவர்கள் 1940 ஆனி 05 ஆம் திகதி இலகடி வலந்தலை என்னும் இடத்தில் முருகேசு – பொன்னாச்சி தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவரின் சகோதரர்களான அமரர் வள்ளியம்மை, அமரர் சீதேவி, அமரர் அன்னலட்சுமி, அமரர் கந்தசுவாமி ஆகியோருடன் கடைசி மகனாக மயில்வாகனம் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை இலகடி இந்து கலவன் பாடசாலையில் பயின்றார். அதன் பின்பு காரைநகர் இந்துக் கல்லூரியில் க.பொ.த சாதாரண தரம் வரை பயின்றார். அப்போது பாடசாலையின் கீழ்பிரிவு,  மத்தியபிரிவு, மேல்பிரிவுகளில் நடைபெற்ற சங்கீதப் போட்டிகளில் முதலிடம் பெற்றார். பாடசாலையில் கல்வி கற்கும் காலங்களில் இவர் தனது கலை அறிவினை வளர்த்து வந்தார்.

1962 ஆம் ஆண்டு நடனக் கலையை தனது பெரிய தந்தையாராகிய  அண்ணாவியாரும் சித்த ஆயள்வேத வைத்தியருமாகிய சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்களிடம் பயின்று அவரின் ஆசியினைப் பெற்றார். அன்றிலிருந்து காவடியினை மாணவர்களுக்கு பழக்கி வருகின்றார். 1963 ஆம் ஆண்டிலிருந்து நடனக் காவடியை பழக்கும் காலத்தில் பக்த மார்க்கண்டேயர், பக்த பிரகலாதா, பக்த சுந்தரமூர்த்தி நாயனார், திருவிளையாடல் எனும் பல நாடகங்களில் பெண்

வேஷமும், ஆண் வேஷமும் தரித்து நகைச்சுவை செய்து மக்கள் மத்தியில் புகழ் பெற்று விளங்கினார். கோவில் நேர்த்திகளுக்கு சிறுவர்களுக்கு நடன காவடியைப்பழக்கிப் பிரசித்தி பெற்றார். அத்துடன்; பாடசாலை மட்டத்தில் நடைபெறும் மாணவர்களின் நடனப் போட்களுக்கு மயில் நடனம், சிவநடனம், கும்மி, கோலாட்டம் என்பனவற்றைப் பழக்கி பாடசாலைகளுக்கு புகழீட்டிக் கொடுத்தார்.

 

1972 ஆம் ஆண்டு சிவசக்தி நடனக் குழுவை உருவாக்கி அதன் மூலம் எண்ணற்ற சிறார்களுக்கு இந்த கிராமியக் கலைகளை கற்பித்து வருகிறார். இதன் மூலம் காரை சிறார்களின் மத்தியில் கலை ஆர்வம் அதிகமாகியது. சிவசக்தி நடனக்குழுவில் ஐந்து வயது பாலகர்களுக்கு நடனக்காவடியை பழக்கி அரங்கேற்றினார். அத்தோடு கொழும்பு, நொச்சிகாமம், வவுனியா, அனுராதபுரம், கிளிநொச்சி, மாங்குளம் போன்ற இடங்களில் உள்ள கோவில்களுக்கும் கொண்டு சென்று அரங்கேற்றியுள்ளார். மற்றும் யாழ்மாவட்டத்தில் உள்ள தீவுப்பகுதிகளான நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைதீவு, ஊர்காவற்றுறையில் புளியங்கூடல் அம்மன், நிந்தன் பிள்ளையார், வேலனை ஐயனார், சுருவில் ஐயனார், சிவன் கோவில் என்பவற்றிற்கும் கொண்டு சென்று அரங்கேற்றியுள்ளார்.

1972 ஆம் ஆண்டு புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் இவரால் நெறியாள்கை செய்யப்பட்ட நடனங்கள் பல இடம்பெற்றது. சிவநடனம், காவடி, கும்மி, கப்பல் நடனம், பிள்ளையார் நடனம், பாம்பு நடனம், உறிநடனம் எனும் பல நடனங்களைப் பயிற்றுவித்து தொடர்ச்சியாக அரங்கேற்றினார். அங்கு தவில் நாதஸ்வர வித்துவான்களாகிய N.K பத்மநாதன், N.R கோவிந்தசாமி, M.B பாலகிருஸ்ணன் N.R சின்னராசா கைதடி பழனி ஆகியோர் இவரது நடனத்தைக் கண்டு களித்ததுடன் மாலை அணிவித்து பாராட்டி நடனக் கலைஞர்” என்னும் பட்டத்தையும் வழங்கினார்கள்.

1978 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமிய நடனங்களை பார்வையிடுவதற்காக யாழ் செலயகத்திற்கு வருகைதந்திருந்த அப்போதைய கலாசார அமைச்சர் E.L குருகே அவர்களின் பாராட்டைப்பெற்ற இவரின் காவடி நடனம் கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் அரசாங்க அதிபர் ஊடாக அரங்கேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1985 ஆம் ஆண்டு தொடக்கம் காரைநகர் ப.நோ.கூ சங்கத்தில் கடமை புரிந்தார். பின்னர் இடம்பெயர்வு காரணமாக 1992 இல் தீவுப்பகுதி ப.நோ.கூ சங்கத்தின் காரைநகர் கிளையில் விற்பனையாளராக கடமை புரிந்தார். 1993 இல் எழுவைதீவு ப.நோ.கூ சங்க முகாமையாளராக பதவி உயர்வு பெற்றார். ஊர்காவற்றுறை ப.நோ.கூ சங்க தலைமை காரியாளயத்தில் எழுதுவினைஞராகவும், அனலைதீவு ப.நோ.கூ சங்கத்தில் 1995ஆம் ஆண்டு முகாமையாளராக பதவி வகித்தார். 1993 – 2000 ஆம் ஆண்டு வரை விஷக்கடி வைத்தியராகவும், சித்த ஆயுள் வேத வைத்தியராகவும் பணியாற்றி வந்தார்.

1998 ஆம் ஆண்டு இவரை ப.நோ.கூ சங்கத்தின் கிளை மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றார். 2000 ஆம் ஆண்டு இவரின் சேவைக்காலம் முடிவுற்றது. சங்கானை கலாச்சார சபையால் நடாத்தப்பட்ட விழாவில் வீரமணி ஐயர் அவர்களின் கரங்களால் பொன்னாடை போர்த்தி தாள லய ஞான பூபதி எனும் பட்டமும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இவருக்கு  பல பொது அமைப்புக்களும், அரச நிர்வனங்களும் மதிப்பளித்திருந்தமை என்பது  குறிப்பிடத்தக்கது.

 

ஊரின் கல்விமான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமதுசபையின் நோக்குகளில் ஒன்றாகும். அந்த வகையில் தாளக் காவடியின் காவலர்  முருகேசு மயில்வாகனம் அவர்கள் இளையோருக்கு விடுக்கும் செய்தியாக் கிராமியக் கலையினை முற்றாக அழிய விடாது அதனைப் பயிற்றுவிக்க வேண்டும் என பல இளைய சமூதாயத்தினரிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால் யாரும் முன் வருவரவில்லை. இன்று வரையும், இனிமேலும் கிராமியக் கலையினை அழிய விடாது பாதுகாக்க வேண்டும் எனக் கூறி இருக்கின்றார்.

ஊருக்கு உழைத்த பெரியோரை “வாழும்போது வாழ்த்துவோம்” என்பது எமது சபையின் நோக்கங்களில் ஒன்று. காரைநகரின் கிராமியக் கலைக்கும் ஊர் மேம்பாட்டுக்கும் காத்திரமான பங்காற்றியவரும்  சுறுசுறுப்பாகப் கலைப்பணி ஆற்றிவருபவருமாகிய தாளக் காவடியின் காவலர்  முருகேசு மயில்வாகனம்    அவர்களுக்கு காரையூர் ஆடலரசு   விருதளிப்பதில் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையும் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரும் பெருமிதமடைகிறோம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 03 – 12 – 2017 அன்று யாழ்ரன் கல்லூரியில் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்   (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களின்  தலைமையில் நடாத்திய “முத்தமிழ் விழா – 2017” இல் காவடிக் கலைஞர் முருகேசு மயில்வாகனம் அவர்களுக்கு “காரையூர் ஆடலரசு”  விருதளித்து மதிப்பளித்தது.

சிவயோகச் செல்வன் ஆக்கிய வாழ்த்துப் பாவை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழிääகல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர்  பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்  அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு  பேராசிரியர் வேலுப்பிள்ளை தருமரத்தினம் (வாழ்நாள் பேராசிரியர், முன்னாள் விஞ்ஞானபீடாதிபதி, யாழ் பல்கலைக்கழக, பேரவை உறுப்பினர்) பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பாவினை வழங்கியிருந்தார்கள்.

 

குருவே சரணம்!

எங்களது அன்புக்குரிய இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்கள் 10.01.2018 புதன்கிழமையன்று இயற்கையெய்தினார். அவர் நினைவாக சில சிந்தனைகள்.

வாழ்த்துதல் என்பது சடங்கல்ல. அது நற்செயலுக்கான அங்கீகாரம். அது பயனுள்ள சமூகச் செயற்பாடு என நான் கருதுகின்றேன். ஏனெனில் சம்பந்தப் பட்டவர்களை மேலும் நற்திசையில் ஏக ஊக்கப்படுத்தும்.

எமது சபையால்  நடாத்தப்படும் காரைத்தென்றல், முப்பெரும்விழா, முத்தமிழ்விழா ஆகிய விழாக்களில் மதிப்பளிக்கப்படும் சான்றோர்கள், கலைஞர்களின் வாழ்த்துப்பாவின் கவிதைகளை எங்கள் கலாநிதி கென்னடி விஜயரத்தினம்   அவர்கள் மிகத் திறமையாக எழுதி வந்தார்கள் தனது தாயரிடத்து உள்ள அளவற்ற அன்பால் சிவயோகச் செல்வன் என்னும் புனைபெயரில் கடந்த மூன்று வருடங்களாக  இதுவரை பதினாறு வாழ்த்துப்பாக்களை எழுதி வந்துள்ளார்.

எமது சபையின் மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர்  பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்  அவர்கள் கடந்த தைப்பொங்கள் தினத்தன்று ஒரு வாழ்த்துப்பாவினை இணையத்தளத்தில் வெளிவர தொகுப்பினை எழுதி அனுப்புவதாக எம் முடன் தொடர்பு கொண்டு கூறியிருந்தார்கள். ஆனால் காலன் அவர்களை தொடர்ந்து எம்முடன் சேர்ந்து செயற்பட அனுமதிக்கவில்லை. உனது வெற்றிடத்தை இனி நிரப்புவது யார்? உனது உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் ஈடினை யாரோ? என்ற கேள்வி எம்மிடையே எழுந்திருக்கின்றது.

எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு 2014ஆம் ஆண்டில் இருந்து எம்மோடு தோளோடு தோள் நின்று மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது ஆளுமை விருத்திக்கு அயராது உழைத்த வருமாகிய கலாநிதி; ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களது  ஆத்மா சாந்தி அடைய  அவரது பணியை தொடந்து செயற்படுத்துவதே நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் காணிக்கையாகும்.

காவடிக் கலைஞர் முருகேசு மயில்வாகனம் அவர்கள் புலம்பெயர் தேசத்திலிருந்து  கோவில்  நேர்திக்காக  காவடி எடுக்கும் சிறார்களுடன் நிற்கும் நிழற்படங்களும், வாழ்த்துப்பாவும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

 

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

29.04.2018

 

 

 

 

 

 

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்

காவடிக் கலைஞர் முருகேசு மயில்வாகனம் அவர்களுக்கு

“காரையூர் ஆடலரசு”விருது வழங்கி வாழ்த்திய

வாழத்துப்பா

 

சேவடி தூக்கியாடும் தில்லைக் கூத்தனவன் குமரன்

தாவடி தூக்கியாடும் நல்லைக் கந்தனவன் மயிலாய்

காவடி தூக்கியாடும் மயில்வாகனமே வாழி! – பயிலும்

சீரடி தூக்கியாடும் தளர்விலாத் தாண்டவனே! வாழி! வாழி!

 

தொல்கலைத் தமிழ்; மருத்துவ விசகடி வித்தகன்

பல்கலை வித்தகனாம் இலகடி அண்ணாவி கணபதியின்

நில்கலை வாரிசு! நல்கவி! பாடலரசு! நடிகவேளே!

நல்கலை நாடக வித்தக! முருகேசு மயில்வாகனம் வாழி!

 

“கலாஞான வித்தகன்” “கலைமாமணி” “கலைஞானத் தொண்டன்”

“கலைஞான சுரபி” “கலைஞானச் சுடர்” “யாழ் முத்து” என்றாங்கு

பலஞானப் பட்டங்கள் பெற்ற பண்டிதரே! விலையேதுமில்லாத

கலைஞானி யாழ் பல்கலைக் கழகத்தின்; குருவே வாழி!

 

பலவாய தொண்டுடையாய்! கலையும் பண்டுவமும் தேர்ந்தாய்!

பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் பலமான பதவி கொண்டாய்!

மலைநாடாம் சுவிஸ் வதியும் காரையூரார் அகமகிழ்ந்துமக்கு

கலைநாடாம் “காரையூர் ஆடலரசு” விருதீந்தோம் வாழி! வாழி!

ஆக்கியோன்: சிவயோகச் செல்வன்

முத்தமிழ் விழா

யாழ்ற்றன் கல்லூரி

காரைநகர்

03.12.2017

வாழ்த்தி வழங்கியோர்கள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி,கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.