கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்.

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் கடந்த சனிக்கிழமை, ஏப்.19,2014 அன்று பி.ப 2:30 இற்கு ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் சங்கத் தலைவர் திரு.த.அம்பிகைபாகன் தலைமையில் நடைபெற்றது.


சிவநெறிச் செல்வர்.தி.விசுவலிங்கம் அவர்களின் கடவுள் வணக்கத்துடன் தொடங்கப்பட்ட இக்கூட்டத்திற்கு கனடா-காரை கலாச்சார மன்றத் தலைவர் திரு.த.பரமானந்தராஜா, முன்னாள் தலைவர் திரு.வே.இராஜேந்திரம், முன்னாள் பொருளாளர்களான திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தம், திரு.சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம், மற்றும் கலாநிதி.த.ரவிச்சந்திரன் ஆகியோருடன் மூத்த பழைய மாணவர்கள் உள்ளிட்ட சுமார் அறுபது வரையான சங்க உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர்.


அகவணக்கம், கல்லூரிப் பண் என்பனவற்றைத் தொடர்ந்து தலைவர் திரு.த.அம்பிகைபாகன் தனது பள்ளிக் கால நினைவுகளை மீட்டியதுடன் தனது மாணவியான தற்போதய அதிபர் திருமதி.வாசுகி தவபாலனின் நிர்வாகத் திறனையும் பாராட்டிப் பேசினார்.


செயலாளர் திரு.கனக.சிவகுமாரன் செயற்பாட்டு அறிக்கையையும் கடந்த பொதுக் கூட்ட அறிக்கையையும் சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.


பொருளாளர் திரு.ஆ.சோதிநாதன் கடந்த நிதியாண்டிற்குரிய வரவு-செலவு அறிக்கையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.


மேற்படி இரு அறிக்கைகளும் சபையினால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


புதிய நிர்வாக சபைத்தேர்தலை தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்கள் நடத்தினார்.


திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை அவர்கள் தலைவராகவும், திரு.கனக.சிவகுமாரன் அவர்கள் செயலாளராகவும், திரு.நடராசா பிரகலாதீஸ்வரன் அவர்கள் பொருளாளராகவும் கொண்ட நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது.


தலைவர் திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை தனது உரையில் அதிபர் கலாநிதி.ஆ.தியாகராசா காலத்தில் தாம் கல்வி பயின்ற நினைவுகளையும் அதிபர் அவர்கள் மலேசியா வாழ் பழைய மாணவர்களின் உதவியுடன் எவ்வாறு பௌதீக வளங்களை மேம்படுத்தி கல்லூரி என்ற உயர்நிலைக்கு பாடசாலையை விருத்தி செய்தார் என்றும் கூறினார்.


கல்வித்திணைக்களத்தினால் தொழில்நுட்பத்துறை சார்ந்த புதிய கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எமது பாடசாலை தீவக வலயத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக மூன்று மாடிக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கல்விப்பகுதி முன்வந்துள்ளதாகவும் அதற்கான காணி கல்லூரி வளாகத்தினுள் இல்லாத காரணத்தினால் தனியார் காணியொன்றைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்து அதற்காக பெருந்தொகை நிதி தேவைப்படுவதாகவும் அதற்கு ஒவ்வொருவரினதும் ஆதரவினை வேண்டினார்.


அப்போது கருத்துத் தெரிவித்த கனடா-காரை கலாச்சார மன்ற தலைவர் திரு.தம்பிஐயா பரமானந்தராஜா எல்லா புலம் பெயர் காரை அமைப்புகளின் உதவிகளையும் நாடினால் இலகுவாக இந்தத் திட்டத்தை ஒருங்கிணைந்து நிறைவேற்றலாம் என தனது கருத்தினைத் தெரிவித்தார். அவரது கருத்தினை சபை ஆதரித்தது.


பாடசாலையின் இன்றைய நிலை, அதன் வளர்ச்சியில் சமூகத்தின் ஒத்துழைப்பு, கல்வித்தர மேம்பாடு என்பன குறித்த பல கருத்துகள் சபையினால் முன்வைக்கப்பட்டிருந்தன.


சங்கத்திற்கான யாப்பு திருத்தப் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டு அவை திருத்தங்களுடன் சபையினால் அங்கீகரிக்கபட்டது.


அமரர் S. P. சுப்பிரமணியம் அவர்களின் மகன் திரு. அரிகரன் அவர்கள் தந்தையார் S. P. S. ஞாபகார்த்தமாக இருபத்தையாயிரம் ரூபாவினை எதிர்வரும் டிசம்பரில் க.பொ.த(சா-த) பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களில் மிகச் சிறந்த மாணவர்களிற்கு வழங்க முன்வந்துள்ளதாக செயலாளரினால் பொதுச் சபைக்கு அறியத்தரப்பட்டதைத் தொடர்ந்து கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.


தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையை வாழ்த்தி வரவேற்பதுடன் முன்னைய நிர்வாக சபையின் சேவையையும் பாராட்டுகின்றோம்.


மேலதிக செய்திகளையும் புதிய நிர்வாக சபையின் விபரத்தையும் சங்க இணையத்தளமான www.karaihinducanada.com  இல் பார்வையிடலாம்.


கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.