சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர்   திருவாளர் க.கார்த்திகேசு நடராஜா அவர்களுக்கு மதிப்பளிப்பு.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் மதிப்புக்குரிய முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர்   திருவாளர் க.கார்த்திகேசு நடராஜா அவர்களுக்கு மதிப்பளிப்பு.

வட்டுக் கோட்டைத் தொகுதியின் பல பாடசாலைகளிலிருந்தும் தேர்ச்சி பெற்ற அதிகமான மாணவர்களை உள்வாங்கி பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறவும், பௌதிக வளங்களை அபிவிருத்தி செய்யவும் உழைத்த, கல்விச் சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரிய மலேசியாவில் திணைக்களம் ஒன்றில் கடமையாற்றிய அமரர்களான திரு, திருமதி க.கார்த்திகேசு, கா. வள்ளியம்மை தம்பதியினரின் புதல்வரான திருவாளர் க.கார்த்திகேசு நடராஜா அவர்கள்  07.07.1929 ஆம் ஆண்டு காரைநகர் பயிரிக்கூடல் என்னும் குறிச்சியிற் பிறந்தவர். கடந்த காலங்களில்   காரைநகரின் சமூகசேவை வரலாற்றில்; இவரது பங்கு கணிப்பிற்குரியது.

28.06.1952 இல் ஆசிரியராக இவரது  கல்விச் சேவை ஆரம்பித்தது. அதிபராக யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர் , காரை இந்துக் கல்லாரி, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதுளை இந்துக் கல்லூரி, கண்டி கின்ஸ்வோட் கல்லூரி  ஆகியவற்றில் கடமையாற்றினார்.  08.07.1989 இல் ஒய்வு பெற்றார். 27 வருடங்களாக இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள  பாடசாலைகளிலும், ஆசிரியராகவும்,அதிபராகவும் கல்விச் சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரியவர்.

காரைநகர் சைவமகாசபை, மணற்காட்டு அம்மன் திருப்பணிச்சபை, இணக்கசபை, ஈழத்துச் சிதம்பர திருப்பணிச்சபை, மாணிக்கவாசகர் அன்னதானசபை,  கூட்டுறவுச்சங்கம்,  மூளாய் மருத்துவமனை ஆகியவற்றில் தலைவராக   பல  வருடங்கள் செயலாற்றியவர், காரைநகர் பயிரிக்கூடல் சுப்பிரமணிய சுவாமி கோவில்   முன்னாள் பொருளாளராகவும்  சிறப்புற பணிபுரிந்தவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

தியாகராசா அவர்களுக்குப் பின் வந்த அதிபர்களில் திரு. K.K நடராசா B.sc அவர்களின் சேவையும் சிறப்பானது. கணித பாடம் கற்பித்தலில் நல்லாசானாக விளங்கிய இவர் 1974 – 1977 வரை காரைநகர் இந்துக் கல்லூரியிலும்ää 1983 -1987 வரை யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர் ஆகிய பாடசாலைகளில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். இவர் கணிதம்ää விஞ்ஞானம் ஆகிய உயர்தர வகுப்புக்களில் அதிக கவனம் செலுத்தினார். புதிய பட்டதாரி ஆசிரியர்களையும், தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்பித்த புகழ் நாட்டிய ஆசிரியர்களையும் நியமனம் பெற்றக் கொடுத்தார். இதனால் 120 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கணித,விஞ்ஞானப் பிரிவுகளில் கற்று உயர் சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது. அயல் கிராமத்திலிருந்தும் மாணவர்கள் இக்கல்லூரிகளை நாடி வந்தனர்.

காரைநகர் இந்துக் கல்லூரியில் வெள்ளிவிழா அதிபர் கலாநிதி ஆ.தியாகராசா காலத்தில் 1967ஆம் ஆண்டு இணைந்து 1988 ஆம் ஆண்டு வரை இரசாயனவியல், கணித பாடங்களைக் கற்பித்து பல நன்மாணக்கர்களை உருவாக்கியதுடன் பல்கலைக்கழக அனுமதி பெற கல்விச் சேவை புரிந்தவர் என்ற பெருமைக்குரிய அமரர் திருமதி கமலாவதி நடராஜா அவர்கள் திருவாளர் க.கார்த்திகேசு நடராஜா அவர்களின் அன்புத்துணைவியாவார்.

ஊரின் கல்விமான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்தின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமதுசபையின் நோக்குகளில் ஒன்றாகும். அந்த வகையில் திருவாளர் க.கார்த்திகேசு நடராஜா அவர்களின் இளைய மகனான  கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன் அவர்கள் உலக தர புற்று நோய் மருத்துவ நிபுணராக தாய்நாட்டில் கடமை புரிந்து வருகிறார். என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்கு உழைத்த பெரியோரை “வாழும்போது வாழ்த்துவோம்” என்பது எமது சபையின் நோக்கங்களில் ஒன்று. காரைநகரின் கல்விக்கும் பொது ஊர் மேம்பாட்டுக்கும் காத்திரமான பங்காற்றியவரும்  சுறுசுறுப்பாகப் பொதுப்பணி ஆற்றிவருபவருமாகிய  முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர்   மதிப்பிற்குரிய  கார்த்திகேசு நடராசா அவர்களுக்கு பொதுப் பணிச் செம்மலே”   விருதளிப்பதில் சுவிஸ்-காரை அபிவிருத்திச் சபையும் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரும் பெருமிதமடைகிறோம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 03 – 12 – 2017 அன்று யாழ்ரன் கல்லூரியில் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம்   (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்களின்  தலைமையில் நடாத்திய முத்தமிழ் விழா – 2017 இல் முன்னாள் யாழ்ற்ரன் கல்லூரி அதிபர்   மதிப்பிற்குரிய  கார்த்திகேசு நடராசா அவர்களுக்கு பொதுப் பணிச் செம்மலே”   விருதளித்து மதிப்பளித்தது.

K.K நடராசா என உலகில் பரந்து வாழும் பல நூற்றுக்கணக்கான மாணவர்களால் அன்பாக அழைக்கப்படும் திருவாளர் க.கார்த்திகேசு நடராஜா அவர்கள் உடநலக்குறைவு காரணமாக இந் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அவர் சார்பாக மூத்த மகனான ஆசிரியர் திரு நடராஜா சிவகுமாரன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

 

சிவயோகச் செல்வன் ஆக்கிய வாழ்த்துப் பாவை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் மொழி, கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர்  பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்  அவர்களால் வாழ்த்துரை இசைக்கப்பட்டு  பேராசிரியர் வேலுப்பிள்ளை தருமரத்தினம் (வாழ்நாள் பேராசிரியர், முன்னாள் விஞ்ஞானபீடாதிபதி, யாழ் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்) பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பாவினை வழங்கியிருந்தார்கள்.

 

 

குருவே சரணம்!

எங்களது அன்புக்குரிய இணைப் பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம் அவர்கள் 10.01.2018 புதன்கிழமையன்று இயற்கையெய்தினார். அவர் நினைவாக சில சிந்தனைகள்.

எமது சபையால்  நடாத்தப்படும் காரைத்தென்றல், முப்பெரும்விழா, முத்தமிழ்விழா ஆகிய விழாக்களில் மதிப்பளிக்கப்படும் சான்றோர்கள், கலைஞர்களின் வாழ்த்துப்பாவின் கவிதைகளை எங்கள் கலாநிதி கென்னடி விஜயரத்தினம்   அவர்கள் மிகத் திறமையாக எழுதி வந்தார்கள் தனது தாயரிடத்து உள்ள அளவற்ற அன்பால் சிவயோகச் செல்வன் என்னும் புனைபெயரில் கடந்த மூன்று வருடங்களாக  இதுவரை பதினாறு வாழ்த்துப்பாக்களை எழுதி வந்துள்ளார். காவடிக் கலைஞர் முருகேசு மயில்வாகனம் அவர்களது வாழ்த்துப்பா இன்னும்  இணையத்தளத்தில் வெளிவரவிலலை அடுத்த சில வாரங்களில் வெளிவர முயற்சிக்கின்றோம்.

எமது சபையின் மொழி,கல்வி மற்றும் கலை மேம்பாட்டுக் குழு இணைப்பாளர்  பேராசிரியர் கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்  அவர்கள் கடந்த தைப்பொங்கள் தினத்தன்று திருவாளர் க.கார்த்திகேசு நடராஜா அவர்களின் வாழ்த்துப்பாவினை இணையத்தளத்தில் வெளிவர தொகுப்பினை எழுதி அனுப்புவதாக எம் முடன் தொடர்பு கொண்டு கூறியிருந்தார்கள். ஆனால் காலன் அவர்களை தொடர்ந்து எம்முடன் சேர்ந்து செயற்பட அனுமதிக்கவில்லை. உனது வெற்றிடத்தை இனி நிரப்புவது யார்? உனது உணர்வுக்கும் ஊக்கத்துக்கும் ஈடினை யாரோ? என்ற கேள்வி எம்மிடையே எழுந்திருக்கின்றது.

எமது சபையின் நிர்வாக உறுப்பினர்களோடு 2014ஆம் ஆண்டில் இருந்து எம்மோடு தோளோடு தோள் நின்று மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவை உருவாக்கி மாணக்கரது ஆளுமை விருத்திக்கு அயராது உழைத்த வருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஜயரத்தினம் அவர்களது  ஆத்மா சாந்தி அடைய  அவரது பணியை தொடந்து செயற்படுத்துவதே நாம் அனைவரும் சேர்ந்து அன்னாருக்கு செய்யும் காணிக்கையாகும்.

வாழ்த்துப்பாவும்  நிழற்படங்களும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி

“ஆளுயர்வே ஊருயர்வு”

“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்

                      சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்

12.03.2018

 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்

திருவாளர் கார்த்திகேசு நடராசா அவர்களுக்கு பொதுப் பணிச் செம்மலே” விருது வழங்கி வாழ்த்திய வாழ்த்துப்பா

 

கார்த்திகேசு வள்ளியம்மை நோற்றிருந்து காரையூர்க்கு

காத்திரமாய் தந்த கொடை ஆசான் கே. கே. நடராசா!

நேர்த்திறமாய் இரசாயனம் கற்பித்த கமலாதேவி கரம்பிடித்து

சீர்த்திறமாய் சேவையாற்ற மூன்று செல்வம் ஈந்தீர்! வாழி! வாழி!

 

சீர் கணிதத்தில் பட்டம்பெற்று நல்லாசானாய்! தியாகரின்

நேர் வாரிசாய் சயம்பு பள்ளி பேர் விளங்க வந்தாய்! வாழி

பார் புகழ நாற்பதாண்டாய் சீர் கல்விப் பணிபுரிந்தாய்!

ஓர் மைந்தன் உலகத்தர மருத்துவனை நமக்கீந்தாய்! வாழி!

 

சைவமகாசபை மணற்காட்டாள்; திருப்பணிச்சபை இணக்கசபை

தெய்வத்திருச் சிதம்பர திருப்பணிச்சபை அன்னதானசபை காரை

உய்யவந்த கூட்டுறவுச்சங்கம் பையவே மூளாய் மருத்துவமனை

மைய்யமாய் அத்தனைக்கும் தலைமை தந்த நடாராசா வாழி! வாழி!

 

தாண்டவத் தெய்வத்தின் பெயருடையாய்! வாழ்த்த வயதில்லை!

வேண்டத்தக்க தெல்லாம் வாய்க்கப்பெற்ற குருவே! வணங்குகிறோம்!

ஆண்டவன்தன் அருளாலும்மை மாண்புசெய ஆசையுற்றோம்- ஐயா!

“பொதுப் பணிச் செம்மலே|| பெயர் பல்லாண்டு விளங்க வாழி! வாழி!

 

ஆக்கியோன்: சிவயோகச் செல்வன்

முத்தமிழ் விழா

யாழ்ற்ரன் கல்லூரி

காரைநகர்

03.12.2017

 

வாழ்த்தி வழங்கியோர்கள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை

செயற்குழு உறுப்பினர்கள்

மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு

சுவிஸ் வாழ் காரை மக்கள்.