சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை அக மகிழ்கின்றது.

               சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை அக மகிழ்கின்றது.

                               “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்”

இன்றைய சிறிய விதைகள், நாளைய பெரிய மரங்கள், இன்றைய சிறிய செயல்கள் நம்மைக்காக்கும் நாளைய நற்பணிகள்.

S.K.T நாதன் அவர்களுடைய தாய்மண் அபிவிருத்திப் பணிகள் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்ற தமிழரின் தொன்மையான தத்துவத்திற்கேற்ப ஆலய பரிபாலனங்களுக்கு அப்பாலும் பரந்து விரிந்து மனிதநேயம் சார்ந்த தளங்களில் கிளைபரப்பி நிற்கிறது. பெற்றோரை இழந்த சிறார்கள், ஆதரவற்ற முதியோர்கள், கல்வி, விளையாட்டுத்துறை, கலை, பொருளாதார விருத்தித் திட்டங்கள் என கதிர்காமநாதன் அவர்களின் ஆதரவுத் திட்டங்கள் காரைநகரிலும் தமிழ்மண் எங்கும் பரந்துபட்டது.

நாதன் நற்பணி மன்றம் ஊடாக 02.02.2018 வெள்ளிக்கிழமை அன்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவுக்கு ஓரு கோடியே 30 லட்சம் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கியதன் மூலம் அவரது ஆதரவுக்கரம் நீட்சியுற்றிருக்கிறது. கோடி நன்றிகள்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஊர் சார்ந்த அபிவிருத்திப் பணிகளுக்கு 2004ஆம் ஆண்டில் இருந்து பெரும்நிதிகளை வழங்கி வருகின்றார். என்பது யாவரும் அறிந்ததே! எமது சபை இவரது பொதுப்பணிகளுக்காக காரைத்தென்றல்-2015இன் நிகழ்வில் “அறக்கொடை அரசு” விருது வழங்கி கௌரவமளித்திருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சர் திரு.யோ.திவாகர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகண சுகாதார அமைச்சர் திரு. எஸ்.குணசீலனும், மற்றும் வைத்திய அதிகாரிகளும் கலந்து சிறப்பித்ததோடு திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களை பாராட்டியதோடு நினைவுச் சின்னமும், வாழ்த்துமடலும் வழங்கி உத்தியோக பூர்வமாக வைத்தியசாலை நிர்வாகம் கௌரவித்திருந்தது. “அறக்கொடை அரசு” திருவாளர் சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களின் பணிகள் தொடர சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும் வாழ்த்துகின்றனர்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” – (972)

                                                                                          நன்றி

   “ஆளுயர்வே ஊருயர்வு”
“நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்”

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
05-02-2018

 

நிகழ்வின் நிழற்படங்களை கீழேகாணலாம்.