சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் “சாதனையாளன்” உயர்திரு வே.முருகமூர்த்தி அவர்களுக்கு வழங்கிய மாபெரும் கௌரவம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் “சாதனையாளன்” உயர்திரு வே.முருகமூர்த்தி அவர்களுக்கு வழங்கிய மாபெரும் கௌரவம்.

யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்பும் “முருகோதயம்” மலர் வெளியீடும் கடந்த 03.12.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் மணற்காட்டு முத்துமாரி அம்மன் ஆலயத்தின் பூசை வழிபாடுகளுடன் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இதற்கென விசேடமாக அமைக்கப்பட்ட ஆலங்காரப் பந்தலில் விருந்தினர்கள் மற்றும் விழா நாயகத் தம்பதிகளின் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.

நிகழ்வில் அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களின் சேவை நயப்ப பற்றியதான பிரதம விருந்தினர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், பாடசாலை மாணக்கர், பெற்றோர்கள் எனப் பலரும் சொற்பொழிவுகள் ஆற்றியிருந்தார்கள். ஊர்மக்களும், பொது அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து வழங்கிய சிறப்புமிக்க விழா மலர்மாலைகளாலும், கவிதை மழைகளாலும் மேடையை பொழிவு செய்து இருந்தது எனக் குறிப்பிடலாம்.

குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு
மஞ்ச ளழகு மழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை காரை அபிவிருத்திச் சபையுடன் வருடம்தோறும் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழா அதே விசேடமாக அமைக்கப்பட்ட ஆலங்காரப் பந்தலில் பிற்பகல் 2.45 மணிக்கு பிரதம அதிதிகளாக கலந்து கொண்டவர்களின் மங்கள விளக்கேற்றலுடன் முத்தமிழ் விழா இனிதே ஆரம்பமானது.

இயல், இசை, நாடகம், “தியாகத்திறன் வேள்வி-2017” போட்டிகளுக்கான பரிசளிப்பு, சான்றோர் கௌரவிப்பு, என நிகழ்வுகள் இடம் பெற்று இருந்தன.

சிறப்பு நிகழ்வாக சான்றோர் கௌரவிப்பு இடம்பெற்று இருந்தது. நிகழ்வில் அதிபர் உயர்திரு வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது.

சிவயோகச்செல்வன் ஆக்கிய கவிதை வரிகளின் வாழ்த்துப்பாவினை கலாபூஷணம் பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளைஅவர்கள் (ஓய்வுநிலை அதிபர், மணிவாசகர் சபை காப்பாளர், சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை மொழி,கல்வி மற்றும் கலைமேம்பாட்டுக் குழு உறுப்பினர், காரை அபிவிருத்திச்சபை பொருளாளர்) வாழ்த்துரைக்க பேராசிரியர் வேலுப்பிள்ளை தருமரத்தினம் (வாழ்நாள் பேராசிரியர்,முன்னாள் விஞ்ஞானபீடாதிபதி, யாழ் பல்கலைக்கழக, பேரவை உறுப்பினர்) பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பாவினை வழங்கியிருந்தார்கள்.

 

கிழே நிகழ்வின் நிழற்படங்களையும் வாழ்த்துப்பாவினையும் காணலாம்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர்
திருவாளர் வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களுக்கு
காரைக் கணித நல்லாசான் விருது வழங்கி வாழ்த்திய
வாழ்த்துப்பா

முருகென்ற தமிழ்மொழியின் மெல்லழகுப் பெயர் கொண்டாய்!
மருகொண்ட மாண்பு வேலுப்பிள்ளை திருமகனாய் வந்துதித்தாய்!
தருகொண்ட சடையாளிப் பதிபெருமையுற உருக்கொண்டாய்!
அருள்கொண்ட கல்விப்பணியாற்றி ஓய்வுபெற்றாய்! வாழி! வாழி!

சடையாளி! யாழ் இந்து! எழில் பேராதனை தந்த உளியோ!
இடை யாழி நாமகள் கணிதம் இணையாளி இல்லாது கற்றாய்!
விடையாளி இல்லாத கணக்கும் விளக்கி மாணவரின் மனத்து
வினா ஆழி நீந்திப் பலவூழி நீளச் செதுக்கி வைத்தாய்! வாழி! வாழி!

தூய கணிதமதை நேயமுடன் பலாலி மகரகம எனப்பயின்று
தோய அறிந்து கொழும்பு யாழ் கிளி வன்னியெங்கும் பரவித்
தாயாய் நினைந்து நாற்பதாண்டாய் நூற்றோரையேற்றி வைத்தாய்!
சேயோன் பெயர் கொண்ட முருகமூர்த்தி! பல்லாண்டு வாழியவே!

இருபத்தியேழு ஆண்டாயதிபராய் குருசித்தமேயிருந்து ஆண்டாய்!
அறுபத்துகளே அகவையானாய்! திருசித்தமேயிருந்து விழாக்கண்டாய்!
குருபக்தியோடு உவகையானோம்! குருசித்தமாய்ச் சிரம் தாழ்த்துகிறோம்!
திருசக்தியோடு “காரைக் கணித நல்லாசான்” விருதீந்தோம் வாழி! வாழி!

ஆக்கியோன்: சிவயோகச் செல்வன்

முத்தமிழ் விழா                                                                       வாழ்த்தி வழங்கியோர்கள்
யாழ்ற்றன் கல்லூரி                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை
03.12.2017                                                                காரைநகர் செயற்குழு உறுப்பினர்கள்
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.