காரைநகர் மணிவாசகர் சபை பத்தி பூர்வமாக நடைபெற்ற அமரர் கலாநிதி,சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவிற்கான சமர்ப்பண நூல் வெளியீடு

 

 


சிவமயம்

காரைநகர் மணிவாசகர் சபை

பத்தி பூர்வமாக நடைபெற்ற
அமரர் கலாநிதி,சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள்
                                                 அவர்களின்
                                                            இரண்டாவது ஆண்டு நினைவிற்கான
                                                          சமர்ப்பண நூல் வெளியீடு

அமரர் கலாநிதி,சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவிற்கான சமர்ப்பண நூலாக சைவப்பெரியார் சு.சிவபாதசுந்தரம் அவர்களால் எழுதப்பட்ட “திருவாசக மணிகள்” என்ற நூல் காரைநகர் மணிவாசகர் சபையினரால் வெளியிடப்பட்டது.

இந் நிகழ்வானது 24.09.2017 பி.ப 3.00 மணிக்கு குருக்கள் அவர்கள் கல்வி கற்ற பாடசாலையான காரைநகர் இந்துக் கல்லூரி நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் சபையின் காப்பாளர் கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

முதல் நிகழ்வாக குருக்கள் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அவரது மகள் செல்வி இராணி வைத்தீஸ்வரக்குருக்கள் அஞ்சலி விளக்கினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து சபையின் காப்பாளர், சபைத்தலைவர் ஆகியோர் சுடர்கள் ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து ஈழத்துச்சிதம்பர பிரதம குரு சிவஸ்ரீ வி. ஈஸ்வரக்குருக்கள் அவர்கள் தீபாரதனை நிகழ்த்தினார்.
யாழ்ற்ரன் கல்லூரியின் சங்கீதத்துறை ஆசிரியர் செல்வி லீலாவதி இராசரத்தினம் அவர்களினால் பஞ்சபுராணம் ஓதல் இடம்பெற்றது.

சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் 1939 ஆம் ஆண்டு மணிவாசகர் சபையை ஆரம்பிக்க யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளிடம் சென்று ஆசி வேண்டியபோது அவர் “வேண்டத்தக்கது அறிவோய் நீ ” என்ற திருவாசகத்தை பாடி அன்று தனது ஆசியை குருக்கள் அவர்களுக்கு வழங்கினார். இதனை சித்தரிக்கும் காட்சி யோகர் சுவாமிகள் அருள் பெற்ற யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி ஓவியர் திரு.சு.பத்மநாதன் அவர்களால் வரையப்பட்டது. இத்திருவுருவப் படத்தைச் செய்ய அரிய பிரயத்தனங்களைச் செய்து ஒப்பேற்றியவர் காரைநகர் சடையாளி ச.வே.சிவகுருநாதன் அவர்களைச் சாரும்.
இப்படம் குருக்கள் அவர்களின் மகளினால் திரைநீக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிவஸ்ரீ ஈஸ்வரக்குருக்கள் அவர்களின் தீபாராதனா இடம்பெற்றது. மணிவாசகர் சபையின் வரலாற்று நிகழ்வாகிய இப்படத்தில் யோகர் சுவாமிகள் அபயம் அளிக்கும் திருக்கரமும் கடைக்கண்பார்வையும் படத்தில் அற்புதமாக இருக்கின்றமை குறிப்படத்தக்கது.

பின்னர் மணிவாசகர் சபைத்தலைவர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து தலைமையுரை இடம்பெற்றது.

நினைவுரையினை அதி.வண கலாநிதி S.ஜெபநேசன் அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் குருக்கள் அவர்கள் புத்தகங்களில் இருந்த ஈடுபாட்டினை மிகவும் துல்லியமாக எடுத்துக்காட்டினார். மேலும் நினைவுரை ஆற்றிய சிவஸ்ரீ ப. சிவானந்த சர்மா அவர்கள் குருக்கள் அவர்களின் சைவப்பணி, தமிழ்ப்பணி ,நூல் வெளியீட்டுப் பணி என்பவற்றினை கோடிட்டுக் காட்டி உரை நிகழ்த்தினார்.

தொடர்ந்து திருவாசக மணிகள் நூல் வெளியீடு செய்யப்பட்டு நூலிற்கான நயப்புரையினை சைவப்புலவர் சு. செல்லத்துரை அவர்கள் எடுத்துக்கூறினார். திருவாசக மணிகள் நூல் திருவாசகத்திற்கு ஓர் ஆரம்ப நூல் இதனை நன்கு படித்தால் திருவாசகத்தின் ஒவ்வோர் அதிகாரத்தினையும் பற்றிய கருத்துக்களை அறிந்து கொள்ள முடியும் என்பதையும் குறிப்பிட்டார். நூலில் குருக்கள் அவர்களின் திருவாசம் பற்றிய கட்டுரை, சைவப் பெரியார் சிவபாதசுந்தரனார் அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு ஆகியவை இடம்பெறுகின்றமை நூலினை மேலும் அணி செய்வதாக சைவப்புலவர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து கௌரவப் பிரதி , முதற்பிரதி , சிறப்புப் பிரதி என்பன வழங்கப்பட்டன. விழாவிற்கு வருகை தந்த அனைவரும் நூற்பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

இறுதியாக சபையின் செயலாளர் திரு.பா.இராமகிருஷ்ணன் அவர்களால் நன்றியுரை கூறப்பட்டு விழா இனிதே நிறைவேறியது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????