காரை மாதாவின் புதல்வர்கள் என்கின்ற உணர்வு பீறிட்டுப் பாய்ந்த கனடா-காரை கலாசார மன்றத்தின் ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும்

 

DSC_0371காரை மாதாவின் புதல்வர்கள் என்கின்ற உணர்வு பீறிட்டுப் பாய்ந்த கனடாகாரை கலாசார மன்றத்தின் ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் – காரை. மைந்தன் –   


கனடாவின் வாழ்க்கை முறை தாயக வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இங்கு நிலவுகின்ற அதிக பனி மழைப் பொழிவும், கடும் குளிரும் காரணமாக குளிர் காலத்தில் வதிவிடங்களுக்குள் முடங்கிக்கிடக்கும் மக்கள் களியாட்ட நிகழ்வுகளிலோ அன்றி பொழுதுபோக்கு நிகழ்வுகளிலோ கலந்துகொண்டு அதிக வேலைப்பழுவினால் ஏற்பட்டிருக்கக்கூடிய மனச்சோர்வையும், உடற்சோர்வையும் நீக்கி உற்சாகத்தினையும் புத்ததுணர்சியையும் பெற்று மகிழ்ச்சிகரமானதாக இருப்பதற்கான வாய்ப்பு மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. கோடை காலம் பிறந்ததும் மக்கள் தமது சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் பூங்கா கடற்கரை போன்ற பொழுது போக்கிடங்களில் ஒன்றுகூடி சந்தோசமாகப் பொழுதைப்போக்கி வருகின்றனர். ஆனால் இங்கு ஊரின் பெயரால் உள்ள அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்ற ஊர் மக்களின் ‘கோடைகால ஒன்று கூடல்’ பெரு விழாவாக அமைந்திருப்பதுடன் வெறும் பொழுதுபோக்கு நிகழ்வாக மட்டுமல்லாது ஊர் நலன் சார்ந்து மக்கள் மத்தியில் பல அனுகூலமான சிந்தனை மாற்றத்தினை ஏற்படுத்தக்கூடியது என்ற வகையில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றது. சிறப்பாகக் கூறுவதாயின் இந்நிகழ்வானது ஊர் அமைப்புக்களால் ஊர் நலன் சார்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தி அவர்களது ஈடுபாடு ஏற்பட ஊக்குவிப்பதுடன், ஊர்மக்களிடையே உறவுப் பிணைப்பினைப் பேணி வலுப்படுத்துவதுடன் ஊடாக அவர்கள் மத்தியில் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தக் கூடியனவாகும்.

அந்தவகையில் கனடா-காரை கலாசார மன்றத்தினால்; முன்னெடுக்கப்பட்டிருந்த காரைநகர் மக்களின் வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டு போட்டியும் சென்ற யூலை மாதம் 30ஆம் திகதி பிரபல்யம்மிக்க Morningside பூங்காவில் வெகு சிறப்பாக  அனைவரும் பாராட்டும்படியாக நடைபெற்ற்pருந்தது. கனடா-காரை கலாசார மன்றத்திற்கு திரு. சபாரத்தினம் பாலச்சந்திரன் தலைமையிலான புதிய நிர்வாகம் அண்மையில் அமையப்பெற்றது. இந்நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்ட்ட முதலாவது முக்கியமான இந்நிகழ்வானது மிகப்பெரிய வெற்றியாக அமைந்திருந்தது நிர்வாகத்தின செயற்திறனை நிரூபித்ததுடன் எதிர்காலத்தில் இந்நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள ஏனைய செயற்பாடுகளும் சிறந்து விளங்கும் என்கின்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்தியதாக அமைந்திருந்தது.

நிகழ்வு நடைபெறும் இடம் என அறிவிக்கப்பட்டிருந்த Morningside பூங்கா நோக்கி காலை 9.00மணிக்கு காரைநகர் மக்களுடைய வருகை ஆரம்பித்தது எனலாம். சொந்த வானங்களிலும், பொதுப் போக்கு வரத்துப் பேருந்துகளிலும் குடும்பங்களுடனும், சொந்தங்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து அவர்களுடைய வருகை அமைந்திருந்தது. இவ்விதம் வந்தவர்களுக்கு காலை உணவாக பாலப்பம் உடனுக்குடன் சுடப்பட்டு வழங்கப்பட்டது. அதேவேளையில் எமதூரின் முன்னோர்கள் விரும்பிப் பருகி வந்ததும் மருத்துவக் குணங்களைக் கொண்டதுமான பழஞ்சோற்றுத் தண்ணீரும் பரிமாறப்பட்டிருந்தது. இதன் சுவையை அதிகரிப்பதற்காக மோரும் கலந்து பரிமாறப்பட்டிருந்த இதனை பலரும் விரும்பிப் பெற்று பருகியிருந்தனர். பொதுவாக காரைநகரிலுள்ள விவசாயிகள் நெல் அறுவடையின்போது கமங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு இப்பழஞ்சோற்றுத் தண்ணீரை வழங்கி வருகின்ற வழமையைக் கொண்டுள்ளனர். இப்பழஞ் சோற்றுத் தண்ணீரை திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை குடும்பம் தமது வீட்டிலிருந்து தயாரித்து வந்து வழங்கியதுடன் சென்ற சில ஆண்டுகளாகவே இதனை இவர்கள் வழங்கி வருவதாக அறிய முடிந்தது.

மக்களுடைய வருகை வரவர அதிகரித்துக்கொண்டேயிருந்தது. நிகழ்வு நடைபெற்ற இடத்தின் நுழைவுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த  கருமபீடத்தில் மக்கள் தமது சுய விபரங்களைப் பதிவு செய்து கொண்டதுடன் விரும்பிய நன்கொடைகளையும் வழங்கியிருந்தனர். இவ்விதம் வருகை தந்தவர்கள் பூங்காவின் மர நிழல்களிலும் நிழற் கூடாரங்களிலும் அமர்ந்திருந்து காரை. மண்ணின் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு அளவளாவிக்கொண்டிருந்தனர். 10.00 மணிக்கு சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பித்தன. இவற்றில் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்குகொண்டு தமத ஆற்றல்களை வெளிப்படுத்தினர். நல்ல பண்புகளை வளர்த்துக்கொண்டு சாதனையாளர்களாக மிளிர்ந்து காரை மண்ணை பெருமைப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையை இவ்விளையாட்டுப் போட்டியில் சிறுவர்கள் காட்டிய அதீத ஆர்வம் வெளிப்படுத்தியிருந்தது. அதே வேளையில் இப்போட்டியானது வாரிவளவு நல்லியக்கச் சபையின் சார்பில் பட்டு மாமாவினால் நடாத்தப்பட்டு வந்த சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டியை எம்மனக்கண் முன் நிறுத்தியது.

மதியம் 12.00 மணியளவில் பூங்காவின் நிகழ்வு நடந்த பகுதி முழுவதும் காரைநகர் மக்களால் நிரம்பி வழிந்தது. நீண்டகாலம் சந்திக்காதவர்கள், புதியவர்கள், பழையவர்கள் என அனைத்து உறவுகளையும் சந்தித்து நலம் விசாரித்து நினைவுகளையும் உணர்வுகளையும் பரிமாறிக் கொள்வதில் மக்கள் அனைவரும் அதிக ஆர்வத்துடன் இருந்ததை அவதானிக்க முடிந்தது. அதே வேளையில் பல விதமான உணவு வகைகள் காலை முதல் நிகழ்வு நிறைவுறும் வரைக்கும் தொடர்ச்சியாக பரிமாறப்பட்டுக்கொண்டிருந்தது.  மதிய உணவாக சோறு, மரக்கறி என்பவற்றுடன் ஆட்டிறைச்சிக் கறியும் பரிமாறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். சிறுவர்களுக்கு, அவர்கள் விரும்பி உண்ணும் உணவு வகைககள் விசேடமாகத் தயாரிக்கப்பட்டு தாராளமாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. இவற்றை அவர்கள் உண்டு விளையாடி பட்டாம் பூச்சிகள் போன்று பூங்காவில் ஓடித்திரிந்து குதூகலித்து மகிழ்ந்த காட்சி மனதிற்கு இதமளிப்பதாகவிருந்தது.

மருத்துவ குணங்களைக் கொண்டு ஆரோக்கியத்தை ஏற்படுத்தவல்ல எமது பாரம்பரிய உணவு வகைகள் நாகரிகம் என்ற பெயரில் மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு வருகின்ற இன்றைய காலகட்டத்தில் காரைநகர் மக்கள் எமது முன்னோர்கள் உணர்த்திய   பாரம்பரிய உணவு வகைகளின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு  இன்றும் பயன்படுத்தி வருபவர்கள் என்பதை  ஒடியல் கூழ் சைவமாகவும், அசைவமாகவும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டதன் மூலமும் பழஞ்சோற்றுத் தண்ணீர் வழங்கப்பட்டதன் மூலமும் உணர்த்தினர். ஒடியல் கூழ் மக்களின் பெரு வரவேற்பினைப் பெற்ற ஒன்றாக இருந்தது. எந்த வித வேறுபாடுமின்றி கலந்து கொண்ட அனைவருமே இதனைப் பருகிச் சுவைத்தனர். ஒடியல் கூழ் தயாரிக்கும் முறை குறித்தும் அதன் குணங்கள் குறித்தும் விளக்கமான தகவல்கள் ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தமை, அதனை முன்பு சுவைத்து அனுபவித்திராதவர்களுக்கும் ஒரு முறை சுவைத்துவிடவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

இங்கு சமையல் பகுதியில் எவ்வித சலிப்பும் இன்றி பொறுமையோடும், பொறுப்போடும், ஊரின் உணர்வோடும் பணியாற்றிக்கொண்டிருந்த தொண்டர்களின் கடுமையான உழைப்பினையும் அவர்கள் சமைத்த சுவையான உணவு வகைகளையும் அனைவரும் பாராட்டத் தவறவில்லை. காரைநகர் மக்களுடைய உணவுப் பாரம்பரியம் சிறப்பானதாகும் என்பதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்.  விருந்துபசாரம் வழங்கி வரவேற்பதிலும், சுவையான உணவு வகைளைச் சமைப்பதிலும் சிறந்து விளங்குபவர்கள். 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல்யம் மிக்க கவிஞரான கல்லடி வேலுப்பிள்ளை என்பவர் காரைநகருக்கு வருகை தந்திருந்து அவர்கள் வழங்கிய உணவை அருந்திய பின்னர் இயற்றிய பாடல் ஒன்று அவர்களின் விருந்தோம்பல் பண்பினையும் சுவையான உணவுகளைச் சமைக்கும் ஆற்றலையும் வெளிப்படுத்துவதாகவுள்ளது.

காரைதீவிற் சோறும் கடுகடுத்த பச்சடியும்

ஊராருக் கன்றி மற்றையோர்க் குவப்பில்லை-பார்மீதில்

தங்கோடைச் சைவன் சமைத்த கறிசாதம்

எங்கே போய்க்காண்பேன் இனி.

 

அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வேக நடைப் போட்டி மக்களை வெகுவாகக் கவர்ந்திருந்தது எனலாம். இதில் பங்குபற்றியவர்கள் போட்டியின் போதான ஒரு சில கணப்பொழுதில் காட்டியிருந்த வேகமும் விறுவிறுப்பும் அவர்களை இளைஞர்களாகவே மாற்றிவிட்டிருந்தது. இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுள் 83வயதுடைய திரு.கந்தப்பு அம்பலவாணரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

எமது ஊரின் அனைத்துக் குறிச்சிகளிலும் விளையாடப்பட்டு வருகின்ற எமது பாரம்பரிய விளையாட்டான கிளித்தட்டு எனப்படும் தாய்ச்சிப் போட்டியில் ஆண்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை ஆண்களுடன் இணைந்து விளையாடிய பெண்கள் நிரூபித்திருந்தனர்.

ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்த நிகழ்வாக இறுதியாக நடைபெற்ற தாம்பிழுவைப் போர் என அழைக்கப்படும் கயிறு இழுத்தல் போட்டி இடம்பெற்றது. இப்போட்டியானது காரைநகரின் இரு பெரும் பாடசாலைகளான இந்துக் கல்லூரி, யாழ்ற்ரன் கல்லூரி ஆகியவற்றில் நடைபெற்று வருகின்ற விளையாட்டு விழாவினை நினைவுபடுத்தியது. சிறுவர்களுக்கான போட்டி நிறைவுற்றதும் ஆண்கள் ஒரு அணியாகவும், பெண்கள் ஒரு அணியாகவும் கலந்து கொண்டு தமது பலத்தினைக் காட்ட முற்பட்டபோது அவர்களது பலத்திற்கு ஈடுகொடுக்கமுடியாத கயிறு இரண்டு துண்டுகளாக அறுந்துவிட்டது. அதிஸ்டவசமாக எவரும் காயப்படவில்லை. சென்ற ஆண்டும் இவ்விதம் நடந்ததாக அறியமுடிந்தது. எதிர்காலத்தில் இக்கயிற்றினைப் பெற்றுக்கொள்வதில் கூடிய கவனம் செலுத்தப்படவேண்டும் என்பதை இச்சம்பவம் உணர்த்தியது.

 

திட்டமிட்டவாறு குறிப்பிட்ட நேரத்திற்கு அனைத்தும் நிறைவுபெற்று பரிசளிப்பு நிகழ்வு 6.00மணிக்கு ஆரம்பித்தமை பாராட்டப்படக்கூடியதாகும். மக்கள் கலைந்து சென்ற பின்னர் குறைந்தளவு மக்களுடன் இப்பரிசளிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டுவந்த நிலை மாற்றப்பட்டு அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டிருந்தமை வெற்றிபெற்ற சிறுவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் ஊக்குவிப்பாகவிருந்தது. மன்றத்தின் செயலாளர் திரு.செல்லத்துரை தேவகுமாரின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவுற்றது. 150 சிறுவர்கள் உள்ளிட்டு 500 வரையான காரைநகர் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்ததாக மதிப்பிடப்படுகிறது. காரைநகர் மக்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படக்கூடியவகையில் உணர்வுபூர்வமாக நடந்த இவ்விழாவினை சிறந்த முறையில் திட்டமிட்டு நெறிப்படுத்திய திரு.பாலச்சந்திரன் தலைமையிலான நிர்வாகமும், அனைத்துப் பணிகளிலும் ஈடுபட்டு உணர்வோடு தமது சேவையை வழங்கிய தொண்டர்களும், அனுபவரீதியான ஆலோசனைகளையும் உழைப்பினையும் வழங்கிய முன்னைய நிர்வாக சபை உறுப்பினர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்களாகும்.