கல்லூரிக்கு பெரும் புகழ் நிறுவிய இரு அதிபர்கள்

கல்லூரிக்கு பெரும் புகழ் நிறுவிய இரு அதிபர்கள்

DSC_4865-Copy-Copy

 

 

 

 

அமரர் கலாநிதி. ஆறுமுகம் தியாகராசா அவர்களின் 
நூற்றாண்டையொட்டி 17.07.2016இல்  வெளியிட்ட
“தியாகச் சுடர்“ நினைவுத் தொகுப்புக் கட்டுரை.

கலாபூஷணம் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை, ஓய்வுநிலை ஆசிரியர், காரை இந்துக் கல்லூரி.

ஆங்கில இந்துப் பாடசாலையென 1888 இல் தாபிக்கப்பட்ட காரைநகர் இந்துக் கல்லூரியில் இதுவரை காலமும் இருபத்தைந்து அதிபர்கள் இக்கல்லூரியை வழிநடத்தியிருக்கினறார்கள். இவர்கள்

அனைவரும் கல்லூரியை கட்டிக் காத்து, பாரம்பரியத்தைப் பேணி வளர்ந்த பெருந்தகையாளர்கள், இவர்களில் கல்லூரியைத் தாபித்த திரு.மு.சயம்பு அவர்களும் உயர் கல்லூரியாக வளர்த்தெடுத்த திரு.ஆ.தியாகராசா அவர்களும் கல்லூரிககு பெரும் புகழ் சேர்ததவர்களாவார். இவர்கள் கல்லூரியில் மிக நீண்ட காலம் கடமையாற்றிய பெருமைக்குரியவர்கள். சயம்பு உபாத்தியார் 43 வருட காலங்கள் ஆசிரியராக அதிபராக மனேஜராக, உள்ளூர் மனேஜராக கடமையாற்றியுள்ளார். திரு.ஆ.தியாகராசா அவர்களும் 3 வருடங்கள் ஆசிரியராகவும் 25 வருடங்கள் அதிபராகவும் சேவையை ஆற்றியவராவர்.

நாவலர் வழிவந்த அருணாசல உபாத்தியார் அவர்கள் காரைநகரில் சைவ ஆங்கில வித்தியாலயங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்றும் உயர் நோக்கை கொண்டவர். நல்லூர் முத்திரைச் சந்தியில் வாழ்ந்தவரும் ஆங்கில அறிவும் சைவப் பண்பும் மிக்கவராக விளங்கிய திரு.முத்து சயம்பு அவர்களை ஆசானாக அழைத்து வந்து 'இந்து ஆங்கிலப் பாடசாலை என்னும் பெயரில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்தார். இதன் பயனாக முத்து சயம்பு அவர்கள் மாணவர்களின் அறிவுப் பசியைப் போக்கும் ஆசானாகவும் தலைமைப் பொறுப்பாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். அக்காலம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலம். ஆங்கில மொழி, அரசமொழி, கிறிஸ்தவமதம் தழைத்தோங்கிய காலம், சைவப் பிள்ளைகள் ஆங்கிலக் கல்விக் கற்க பிறமத கல்லூரியில் பயில வேண்டிய சூழ்நிலை. இந்நிலையில் பணி தொடங்கிய திரு.சயம்பு அவர்கள் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறந்த முறையில் கற்பித்தார். சைவப் பண்பை வளர்த்தார். இதனால் சைவப் பிள்ளைகள் இத்தாபனத்தை நாடினர். இதனால் மத மாற்றத்தையும் தடுத்தார். இவரின் முயற்சியினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியாக சுடர்விட்டு வளரத் தொடங்கியது. 1905 ஆம் ஆண்டு பாடசாலைக்கென ஒரு மண்டபமும் இரு வகுப்பறையும் கட்டப்பட்டு அக்காலப் பகுதியில் யாழ்.அரசாங்க அதிபராக விளங்கிய திரு.W.துவைனம் என்பவரால் திறந்து வைக்கப்பட்டது. 1912இல் உதவி நிதி பெறும் பாடசாலையாக உயர்த்தப்பட்டது. இவையாவும் சயம்பு அவர்களின் கல்விச் சாதனையாகக் கருதப்பட வேண்டிய விடயமாகும்.

திரு.ஆ.தியாகராசா அவர்கள் மலேசியாவில் ஆரம்ப சிரேஷ்ட கல்வியைக் கற்று சென்னையில் அடையாறு கலாஷேத்திரத்தில் உயர்கல்வி பயினறு B.A.பட்டம் பெற்றார். M.A.என்னும் முதுமாணிப்

பட்டத்தையும் இலக்கியத் துறையில் M.Lit.என்னும் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். இவர் தாய், தந்தையர் வசிக்கும் மலேசியா செல்லாது “ஊருக்கு உழைத்திடல் யோகம்“ என்னும் பாரதி

பாடலுக்கேற்ப தம் ஊரான காரைநகரில் பணிபுரிய வந்தமை போற்றுதற்குரிய செயலாகும். 1943ஆம் ஆண்டு தொடக்கம் இக் கல்லூரியின் ஆசிரிய சேவையாற்றினார். 1946.01.16ஆம் நாளில்

அதிபராகப் பொறுப்பேற்றார்.

  உற்றார், நாட்டவர் ஊரார் – இவர்க்கு

  உண்மைகள் கூறி இனியன செய்தல்

  நற்றவம் ஆவது கண்டோம்- இதில்

  நல்ல பெருந்தவம் யாதொன்றுமிலலை – என்ற பாரதியின் வாக்கை உணர்தத இவர் தம் ஊர்

  பணியானது நல்ல பெருந்தவம் எனக் கருதிச் செயல்பட்டார் போலும்.

இவர் பணியாற்றத் தொடங்கிய நாளில் கல்வி அமைச்சராக இருந்த C.W.W.கன்னங்கரா அவர்களால் உருவாக்கப்பட்ட இலவச கல்வித்திட்டம் நாடு முழுவதும் செயல்படத் தொடங்கியது.

இலவசக் கல்வியினால் மாணவர்கள் தொகை பெருகியது. அமெரிக்க மிஷனால் நடத்தப்பட்டு வந்த சாமி பள்ளிக்கூடம் என்னும் ஆங்கில விததியாசாலையில் கல்வி பயினற மாணவர்கள் பலர் இக் கல்லூரியை நாடி வந்தனர். மாணவர்கள் தொகைக்கு ஏற்ப பாடசாலைக் கட்டடங்கள், தளபாடங்கள், விஞ்ஞான கூடங்கள் விஸதரிக்க வேண்டிய அவசரமும் அவசியமுமான நிலை அதிபருக்கு ஏற்பட்டது.

இதனைக் கண்டு துவளாது ஆதரவாளர்களின் உதவியைப் பெற்று இரசாயனம், பௌதீகம், தாவர, விலங்கியல் ஆகிய விஞ்ஞான பாடங்களுக்குத் தனித்தனி ஆய்வுகூடங்களை நிறுவினார்.

மனையியல் புவியியல், நூல் நிலையம் ஐந்து வகுப்பறைகள் கொண்ட கட்டடங்கள் யாவற்றையும் கட்டி முடித்தார். வடக்குப் பகுதி 'ப' வடிவில் கட்டடங்களுக்கு நடுவில் பெரியதொரு முற்றமுமாக

அமைத் திருந்தார். மேலும், உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.N.நடராசா K.C அவர்களின் ஞாபகார்த்த மண்டபம் ஒன்றை அவரது பாரியார் தங்கம்மா நடராசா அவர்களால் 1950இல் கட்டி முடிக்கப்பட்டது.

இம் மண்டபம் அமைப்பதற்கு உந்து கோலாக இருந்தவர் திரு.ஆ.தியாகராசா அவர்களே. இப் பெரிய மண்டபம் போல் இன்று வரை யாரும் காரைநகரில் அமைத்ததில்லையெனலாம். இம்

மண்டபத்தையும் இதற்குரிய நிலப்பரப்பையும் மாணவர்களுக்கு அத்தியாவசியமான விளையாட்டு மைத்தானத்துக்குரிய பெரும் நிலப்பரப்பையும் தர்ம சாதனமாகப் பெற்றுக்கொண்டார். இத்தகைய

பௌதீக வளங்கள் யாவும் தியாகராசா அவர்கள் ஆற்றிய கல்விச் சேவைக்கு வழங்கிய பரிசில்களாக

கருதலாம்.

திரு.ஆ. தியாகராசா அவர்கள் கடமையாற்றிய காலத்தில் கல்வித்திட்டத்தில் பெரும் மாற்றங்கள்

ஏற்பட்டன.

1. இலவசக் கல்வித்திட்டம்

2. தாய்மொழிக் கல்வி

3. அரசினர் பாடசாலையாக மாற்றப்பட்டமை

 

இத்திட்டங்களை முன்னெடுத்துத் திறமையாகச் செயற்பட்டு வெற்றிகண்டார். இதனால் கல்லூரி

வளர்ச்சியில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தினார்.

சயம்பு அவர்கள் காலத்தில் வடமாகாண சபையால் நடத்தப்படும் J.S.C என்னும் பரீட்சை உயர் பரீட்சையாக கருதப்பட்டது. இப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் சாதனையை நிலைநாட்டி பெரும் புகழை நிறுவியுள்ளார் தியாகராசா காலத்தில் அரசினால் நடத்தப்பட்ட S.S.C பரீட்சை உயர் பரீட்சையாக விளங்கியது. கால மாற்றத்தின் பின் H.S.C பரீட்சை உயர் பரீட்சையாகவும், பல்கலைக் கழக புகுமுகப் பரீட்சையாகவும் விளங்கியது.இப் பரீட்சைகளுக்கெல்லாம் மாணவர்கள் தோற்றி உயர்பெறுபேறுகளைப் பெறுவதற்கு அதிபர் தியாகராசா அவர்களின் பங்களிப்பு பெரிதாக விளங்கியது.  இதனால் இக் கல்லூரியை 1 AB பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.

பாடசாலை பாட விதானங்களில் எவ்வாறு முக்கியத்துவம் செலுத்தினார்களோ அவ்வாறே விளையாட்டுத்துறையிலும் கவனம் செலுத்தினார். சயம்பு அவர்கள் காலத்திலும் அவர்களுக்குப்

பின் வந்த காலத்திலும் தேசிய மட்ட ரீதியில் மாணவர்கள் பங்கு கொண்டு வெற்றியீட்டி கல்லூரிக்குப் பெரும்புகழை நிலைநாட்டியுள்ளனர். திரு.தியாகராசா அவர்கள் இல்ல மெய்வல்லுநர் போட்டிக்குரிய பயிற்சியை தாமே முன்னின்று பயிற்றுவிப்பார். உதை பந்தாட்டப் போட்டிகளில் யாழ்.பிரபல்யமான

கல்லூரிகளுடன் போட்டியிட்டு சாதனையை நிலை நாட்டிய பெருமையும் இக் கல்லூரிக்கு உண்டு.

சயம்பு அவர்களும் தியாகராசா அவர்களும் உனக்கு நீயே உண்மையாக இரு (To Thine Own Self Be True) என்னும் கல்லூரி மகுட வாசகத்தை திருமந்திரமாகக் கொண்டு செயல்பட்டவர்கள். தன்னலமற்ற சேவையைப் பெரிதும் ஆற்றியவர்கள். தம் கடமை நேரம் நோக்காது அல்லும் பகலும் உழைத்தவர்கள். தாம் வேறு கல்லூரி வேறு என்று கருதியவர்கள் அல்லர். “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்“ என்பதில் அசையாத நம்பிக்கையுடையவர்கள். இதனை மாணவர்கள் மத்தியிலும்

நிலைநாட்டியுள்ளனர். இவர்களிடம் கற்ற மாணவர்கள் அவர்களை அணுகுமிடத்து பயம் கலந்த அபிமானமும் அவர்களின் நற்செயல் காரணமாக பக்தி (பயம் + பக்தி = பயபக்தி) நிறைந்த மாணவர் களாக விளங்குவதைக் காண முடிகிறது.

கல்வியே சமூகத்தின் திறவுகோல் என்னும் வாக்குக்கிணங்க கல்வியை முழுமையாக வழங்கி பண்பட்ட நாகரிகம் மிக்க காரைநகரை கல்விச் சமூகமாக மாற்றியமைத்த பெரியவர்கள் இவர்கள்.

சயம்பு அவர்கள் அக்காலத்திற்கு அவசியமான ஆங்கிலக் கல்வியைப் போதித்தார். என்பதை

   இயம்பிடு ஆங்கிலக் கல்வியை

   வியன்மிகு காரைநகர் தன்னில்

   நலம்பெற உரைத்த நல்லாசான் – என்று

   காரை மண் தந்தவித்துவான் F.X.C. நடாராசா அவர்கள் “காரை மான்மியம்“ நூலில் குறிப்பிட்டுள்ளார். சயம்பு அவர்களிடம் ஆங்கிலக் கல்வி பெற்று மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடு

களுக்குச் சென்ற மாணவர்கள் அரச தொழில்பெற்று உயர் பதவி அடைந்து வளமாக வாழ்ந்து பாடசாலையின் பெருமையை மேலோங்கச் செய்துள்ளனர். இதனை காரைநகர் மான்மியம்

என்னும் நூல் “சயம்புச் சட்டம்பியார் காரைநகருக்கு வந்திலரேல்“ பெருங்குடி மக்களாய் திகழும் மலாய் நாட்டுப் பென்சனியர்மார் (அரச ஓய்வாளர்கள்) நம்மூரில் தோன்றியிருக்க மாட்டார்கள். என்று

குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோல் தியாகராசா அவர்களிடம் கற்ற பல்லாயிரம் மாணவர்களும் பல்வேறு துறைகளிலும் உயர்பதவி பெற்று நம்நாட்டிலும் வெளிநாட்டிலும் சீரும் சிறப்புமாக வாழ்ந்து நம் கல்லூரிக்கு பெருமை தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள்.

கல்லூரிக்கு பெரும் புகழ் நிறுவிய இரு அதிபர்களின் நாமங்களும் என்றும் நிலைத்திருக்கும். இக் கல்லூரிக்கு பல பெயர்கள் வழங்கப்பட்டிருந்தபோதும் “சயம்பு பள்ளிக்கூடம்“ என்பதை

சயம்பற்றை பள்ளிக்கூடம் என்று கதைப்பதை இன்றும் காணலாம். தியாகராசா அவர்களின் சேவையைக் கௌரவிக்கும் வகையில் 1983இல் இருந்து 2015 ஆம் ஆண்டு வரை(33 ஆண்டுகள்)

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலயம் என்று பெயர் பூண்டு இக்கல்லூரி விளங்கியுள்ளது என்றால் இவரின் பெருமை தான் என்னே!

இவர்களின் பூதவுடல் அழிந்தாலும் புகழ் உடல் என்றும் அழியாது நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.


                                                “ஆளுயர்வே ஊருயரவு“ 
                        “நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்“ 
 
                                                                                        இங்ஙனம் 
                                                                  சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை 
                                                                        செயற்குழு உறுப்பினர்கள் 
                                                                         சுவிஸ் வாழ் காரை மக்கள் 
                                                               மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                         08 – 05 – 2017