ஊர் மேம்பாட்டில் நாடகக் கலையின் சாத்தியமான பங்களிப்பு

ஊர் மேம்பாட்டில் 

நாடகக் கலையின் சாத்தியமான பங்களிப்பு 

 

அறிமுகம்: தமிழ்ச் சமூகத்தில் நாடகம் 

எம் தமிழ்ச் சமூகத்தில் ஆடுதல் என்ற சொல் மிகவும் ஆதியானது. பழங்குடிச் சமூகத்தில் ஆடற் கலையைக் குறித்தே இவ்வார்த்தை தோன்றியிருக்க வேண்டும். ஏனெனில் உடல் சார்ந்த தொழிற்பாடுகளைக் குறிக்கும் பல வினைச் சொற்களில் ஆடு என்பது பின் பகுதியாக அமைகிறது. உதாரணமாக, நீராடு, விளையாடு, போராடு, சதிராடு,.. போர் இல்லாத காலங்களில் அல்லது வெற்றியைக் கொண்டாடும் விழாக்களில் மன்னன் படையினருக்கு கள்ளும் உணவும் வழங்கி ஆடிப்பாடி மகிழ்வது உண்டாட்டு ஆகும். சங்கப்பாடல்களில் பதிவாகியிருக்கிறது. முருகன் பெண்களைத் தொற்றிக் கொண்டு துன்பம் விளைவித்தால் வேலன் வெறியாட்டு நிகழ்த்தி முருகனுக்குப் பரிகாரம் செய்து பெண்ணைக் குணப்படுத்துவர். 

ஆடுதல் தமிழ் மரபில் இறைநிலைக் கலை. புனிமானது. இறைவனே கூத்தன். கூத்தின் மூலம் இறைவன் ஐந்தொழில்கள் புரிவது பற்றிய ஈழத்து அறிஞர் ஆனந்தக்குமாரசுவாமியின் ஆங்கில நூலான சிவானந்த நடனம் (The Dance of Shiva) மேற்கிலும் மிகப்பிரபலமானது. அது போல் பேராசிரியர் கார்திகேசு சிவத்தம்பி அவர்களது கலாநிதிப் பட்ட ஆய்வு நூல் பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம் (Drama in Ancient Tamil Society) என்ற ஆய்வு நூலும் தமிழ் நாடக ஆய்வில் முக்கிய நூலாகும்.

ஆடல் கூத்து நாடகம் நடனம் அம்பலம் அரங்கம் என்பன தமிழர் வாழ்வியலோடு இரண்டறக் கலந்தவை. பரகசியமான விடயத்தை அம்பலத்துக்கு வந்து விட்டது அல்லது அம்பலமாகியது என்போம். தில்லையில் அம்பலம் சைவர்களுக்கு. அரங்கமாநகரான திரு அரங்கம் வைணவர்களுக்கு. ஆண்டாளின் மொழியில் கண்ணனும் கூத்தனே. 

ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பு ஏறிப் புகப் பாய்ந்து 
வாய்த்த காளியன் மேல் நடமாடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே!

என்கிறது அவரது நாச்சியார் திருமொழி.

அம்பலம் என்பது கூத்துக் களரியைக் குறிப்பது. கூத்துக் கட்டுதல் என்பார்கள். கட்டுதல் என்பது கற்பனையில் உருவாக்குதல் என்றபொருளில் தான் கட்டுரை என்ற சொல் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் திருப்பாவையில் பின்வரும் வரிகள் இதை உணர்த்தும். 

"வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்"

உன் கற்பனையான பொய்கள் நன்றாக உள்ளன. முன்னாளிலேயே உன் பேச்சை அறிவோம் என்பது பொருள். 

கட்டுக்கதை என்ற பெயர்ச் சொல்லும் கதைகட்டுதல் என்ற வினைச்சொல்லும் அது ஓர் கலையாக நம்மிடம் பண்டை நாளில் இருந்ததையே உணர்த்துகின்றன. கட்டிய கதை கட்டு ஆகும். இன்னும் நடனக்கலையில் அடவு போல கட்டு என்ற சொல் இருக்கிறது. கட்டு ஆடுதல் என்பது கூத்தாடுதலாகும். இன்னும் தென்னிந்தியாவில் கட்டு நாயக்கர் என்ற கூத்து கலைசார்ந்த குலத்தினர் உள்ளனர். ஈழத்திலும் கட்டு ஆடிகள் உள்ளனர். இவர்கள் கூத்துக்கலைஞர்கள். இன்னும் இலங்கையின் மேற்கில் ஆண்டியம்பலம், அம்பலத்தடி இடங்கள் உண்டு. அவற்றின் அருகேதான் கட்டு நாயக்கர்களைக் குறிக்கும் கட்டுநாயக்கா என்ற இடம் உண்டு என்பது மேலும் ஆய்வுக்குரிய விடயம். 

"மண்டினி ஞாலத்து மன்னுயிர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்பது சீத்தலைச் சாத்தனின் மணிமேகலை காப்பிய வரும் வரிகள். பசிப்பிணி போக்கி அறம் வளர்க்க ஆலயங்களில் அன்னதானத்திற்கு மடங்கள் இருந்தன. அதுபோல் கலைகள் வளர என ஆலயங்களில் அம்பலங்கள் இருந்தன. வடமொழியில் சிற்சபை, கனகசபை, சித்திரசபை என்பனவும் கோயில்களில் உள்ள இக் கூத்தரங்குகளையே குறிப்பன. தஞ்சைப் பெருங்கோயில் வெளிப்பிரகார நடுவில் கல்லினால் ஆன வெளிஅரங்கு அமைந்துள்ளது. 

அம்பலம் என்று முடியும் குறிச்சி காரைநகரில் உள்ளதா தெரியவில்லை. ஆனால் காதுகுத்தல் மற்றும் காவடியாடுபவர்களுக்கு முள் ஏற்றும் பயிற்சியுடையோர் இருந்திருக்கின்றனர் இன்னமும் "முள்ளேத்தி" என்ற அடைமொழி சில குடும்பங்களுக்கு உண்டு.  

வேலன் வெறியாட்டு கூத்து நாடகம் நடனம் காவடி சன்னதம் தெய்யான் கூத்து ஆரியக் கூத்து கோலாட்டம் குதிரையாட்டம் பொம்மலாட்டம் பாவையாட்டம் என்ற சொற்கள்;; இன்னும் தமிழில் வழக்கில் உள்ளவை. தொன்மை மகளிர் பூப்பந்தாடுதல் போல் பூவில் பாவை செய்து நீராடி இறைவனை வேண்டும் நடைமுறையில் இருந்துதான் திருவெம்பாவையும் திருப்பாவையும் கவிதை இலக்கியங்களாக மலர்ந்தன. மணிவாசகரின் திருவாசகத்தில் வரும் பல பாடற் தொகைகள் தமிழரின் அன்றாட வாழ்க்கையின் பலவிதமான கலைகள் விளையாட்டுக்கள் சடங்குகள் மற்றும் தொழில்கள் சார்ந்த பாடல்களே. பண்பாட்டு மானுடவியல் நோக்கில் அவை ஆய்வு செய்யப்பட வேண்டும். 

ஆடும் கலைகள் ஆரோக்கியத்துடன் சம்பந்தமுடையவை. ஒவ்வொரு தொழில் செய்வோருக்கும் ஒரு ஆட்ட முறை இருந்தது. அவர்களுக்கெனத் தனியான தெய்வம் கலைவடிவம் என்பன இருந்தன. அவை எல்லாம் அருகித் தற்போது திரைப்படங்களும் தொல்லைக் காட்சித் தொடர்களும் தான் எஞ்சியுள்ளன. 

ஈழத்தில் சமகாலத்தில் நாடகக் கலையின் நிலை

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 1990களில் போராசிரியர் சி. மௌனகுரு அவர்களின் முன்முயற்சியினாலும் அயராத உழைப்பினாலும் வருடந்தார நாடக விழாக்கள் இடம் பெற்றன. நான்கு ஐந்து தினங்கள் அல்லது வாரம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் இவ்விழாக்களில் நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக் கழகமும் நாடகத்துறை வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றிவருகிறது. 

பாடசாலைகளில் கல்வித் திணைக்களத்தால் பல்வேறு அரச நிறுவனங்களினால் பாடசாலையின் முக்கிய நிகழ்வுகளின் போது பாடசாலை நிர்வாகத்தினால் என நாடகங்கள் ஒழுங்கு செய்யப் படுவதுண்டு. ஏனெனில் நாடகம் வெறும் கலை மட்டுமல்ல அது ஒரு கற்கைச் செயற்பாடு. இன்று பெரும் அரசியல் செயற்பாடுகள் மற்றும் சமூக சீர்திருத்தச் செயற்பாடுகளுக்காக ஆங்கிலத்தில் invisible theater என அழைக்கப்படும் மறைநிலை அரங்குகள் பயன்படுத்தப் படுகின்றன. அதில் செயற்பாட்டாளர் மக்களிடையே ஒரு பிரச்சனையை முன்வைத்து ஒரு மறைமுகமான விவாதத்தை முன்வைப்பார். அதில் மக்களிடமிருந்து பிரதிவாதம் எதிர்வினை செயற்பாடு என்பன எதிர்பார்க்கப்படும். இதில் ஒருவருக்கும் மேலானவர்களும் பங்கெடுக்கலாம். 

சமூக மேம்பாட்டில் நாடகக் கலையின் முக்கியத்துவம்

நாடகக்கலை என்பது சமூகப்பிணிகள் பலவற்றிற்கு மருந்தாகும். ஒரு குறிச்சியின் மக்கள் இணைந்து நாடகப் பிரதியைத் தேர்ந்தெடுத்து வசனம் பழகி ஆடல் பழகி அரங்கு அமைத்து திருவிழாக்களில் மேடையேற்றுவது ஒரு கூட்டுத் தொழிற்பாடு. இத் தொழிற்பாட்டின் போது பன்முகத் திறன்கள் மக்களிடையே வளர்கின்றன. நாடகம் போடுதல் என்பது ஒரு சமூக உளவியல் ஆற்றுப்படுத்தல். 

சிறுபிள்ளையாய் இருந்தபோது பெரியமணல், சிவகாமி அம்மன் கோவிலடி, நீலிப்பந்தனை, காரைநகர் இந்துக் கல்லூரி, யாழ்ற்றன் கல்லூரி, பட்டு மாமாவின் வாரிவளவு நல்லியக்கச் சபையரங்கு, சைவமகா சபை எனப் பல இடங்களில் நாடகங்கள் பார்த்த இனிய நினைவுகள். அரிச்சந்திரனோடு சேர்ந்து அழுதகணங்கள். சாவித்திரியையும், பக்த பிரகலாதனையும், காத்தவராயனையும், அண்ண றைட் நடத்துனரையும், டிங்கிரி சிவகுரு-கனகரத்தினம் ஆகியோரின் நகைச்சுவைப் பாத்திரங்களையும் கண்ணகியையும், குழந்தை சண்முகலிங்கம் ஐயாவின் மண் சுமந்த மேனியரையும் பார்த்து மகிழ்ந்த பள்ளிக் காலங்கள் எமக்கு வாய்த்தன. சின்னமணியென்ற கணபதிப்பிள்ளை ஒரு தனிநபர் அரங்கம். வில்லிசையிலேயே ஆடல் இசை நடிப்பு உணர்ச்சி அறிவு நகைச் சுவையென கலந்து விருந்தளித்த வித்தகர். வெளிக்கிடடி விசுவமடுவுக்கு, அப்பு வாணை ஆனையிறவுக்கு போன்ற நவீன நகைச்சுவை நாடகங்கள் இன்னும் நினைவில் நிற்கின்றன. வெளிநாட்டு மோகம் (அந்தக் காலத்தில் லண்டன் மாப்பிளை), சீதனம், போலி மேற்கத்தைய ஆங்கில நாகரிக மோகம் என்பவற்றைச் சாடும்  நாடகங்கள் நகைச் சுவை நாடகங்களாக மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தன. 

80களுக்கு முற்பட்ட காலத்தில் சிறார்களாய் இளைஞர்களாய் இருந்த நமது தலைமுறையினரின் ஆளுமை உருவாக்கத்தில் நாடகம் கனதியான பங்காற்றிருக்கிறது. 

நாடகக் கலையின் பின்னடைவும் அரசியல் யுத்தமும் தொழில்நுட்ப யுத்தமும்

எண்பதுகளில் உலகின் சுதேசிய வாழ்க்கை முறைகளை, பண்பாடுகளை, ஏன் தேசங்களின் வரலாறுகளையுமே புரட்டிப்போடுகின்ற மாற்றங்கள் நிகழ்ந்தேறின. மூலதனத்தின் வியாபித்த கரங்களுக்குள் பண்பாடுகள் சிக்கித் திக்குமுக்காடின. மூலதனம் தொழில்நுட்பத்தை கையில் வைத்துக் கொண்டது. அதன் மூலம் உலகம் முளுவதுமான ஒற்றைச் சந்தையை உருவாக்குவதற்கு வசதியாக உலக மக்களின் பன்முக வாழ்க்கை முறைகளையும் கலை உட்பட்ட பண்பாட்டுத் தனித்தன்மைகளையும் களைந்து வேரறுத்து உழுது புரட்டிப் போட்டது.

எண்பதுகளில் ஈழத்தமிழரின் கலை வரலாற்றின் சவால்களாக இரண்டு அள்ளுறுகள் வந்தன. ஒன்று தேசிய வன்முறை. தேசிய வன்முறையை விட இரண்டாவதான தொழில்நுட்ப வன்முறை நமது கலைகளை அதிகம் பாதித்துவிட்டது என்ற உண்மை நாம் உணரமுடியாத அளவுக்கு வளர்ந்துவிட்டது. உதாரணம், தொலைக்காட்சியும் காணொளி நாடாவும் தொலைபேசித் தொழில்நுட்பமும். 

குறிச்சிக்கு குறிச்சி தென்னிந்தியச் திரைப்படங்கள் காணொளி நாடா மூலம் காட்டப்பட்டன. ஓரிரவில் மூன்று திரைப்படங்கள் கூடக் காட்டப்பட்டன. பார்த்துவிட்டு மறுநாள் பிற்பகல் எழுந்தால் இராமன் சிதைக்கு என்ன முறையென்று தெரியாது. குழப்பம்தான் மிஞ்சும். கவுண்டமணி செந்திலை கீழ்தரமாகத் திட்டுவது அடித்து உதைப்பதான கீழத்தரமான நகைச்சுவை உணர்வை நமக்குள் விதைத்தது. அதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். 

நவீன தொழில்நுட்பம் எமது ஆக்கத்திறன்களை முடக்கி அழித்து நம்மை வெறும் கலை நுகர்வோராக்கிவிட்டது. நம் ஒவ்வொருவருக்குள் இருக்கும் படைப்பாளியும் ஒடுக்கப்பட்டு நாம் வெறும் பார்வையாளர்களாக மாறிவிட்டோம். இது வெறும் எதேச்சையான நிகழ்வல்ல. திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் பாற்பட்டது. 

வாழ்வின் அனைத்து அம்சங்களும் வியாபாரப் பண்டங்களாக மாற்றப்பட்டது போல கலையும் விற்பனைக்குரிய பொருளாக மாற்றப்பட்டது. நுகர்பண்டங்களுக்கும் கலைப்படைப்புக்குமான வேறுபாடு அற்றுவிட்டது. மரபணுமாற்றம் செய்யப்பட்ட பொதிசெய்யப்பட உணவை உண்டபடி வர்த்தக நோக்கில் தயாரிக்கப்பட்ட விளம்பரதாரர்களின் அனுசரணையில் ஒளிபரப்பப்படும் மலினமான கலைப்படைப் படைப்புக்களைப் பார்க்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். 

இன்னும் ஒருபடி மேலே போய் வர்த்தகப் பரிமாற்றத்தில் எந்த தீர்மானத்தையும் தாக்கத்தையும் செலுத்த முடியாத பண்டங்களோடு பண்டங்களாகவே நம் படைப்பாற்றலும் நாமும் மாற்றப்பட்டுவிட்டோம். மக்களின் மேம்பாட்டுக்கான, பண்பாட்டின் செழுமைக்கான கலைகள் புறக்கணிக்கப்பட்டு மூலதனத்தை அதன் சந்தை விரிவாக்கத்தை நோக்கமாகக் கொண்டே கலைகள் உருவாக்கப்படுகின்றன. கலைகள் நல்ல விழுமியங்களை பண்பாட்டின் கூறுகளை வளர்ப்பதற்குப் பதிலாக காசேதான் கடவுள் என்ற தோற்றத்தை உருவாக்கவே படைக்கப்படுகின்றன.  

நவீன உலகின் பண்டமயமாக்கல் பண்பாட்டில் உடலாரோக்கியத்தின் முக்கிய கூறான உணவு மரபணுமாற்றம் செய்யப்பட்டு விடமாக்கப்பட்டது. மருந்துற்பத்திகள் உணவாக்கப்பட்டது. வைத்தியசாலை தவிர்க்க முடியாத தலமானது. வைத்தியம் செய்வது வியாபாரம் இல்லாத தர்ம காரியமாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் வைத்தியசாலைகள் பார்த்தீனியம் போல் கிளைபரப்பி பணம் கறக்கும் காளவாசல்கள் ஆகிவிட்டன. அதுபோலவே நமது உள ஆரோக்கியத்தின் அடிப்படையானதும் இயல்பூக்கங்களில் ஒன்றானதுமான படைப்பாற்றலும் காயடிக்கப்பட்டு நாம் முட்டாள்களின் பெட்டியென ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தொலைக்காட்சிகளின் முன்னே அமர்ந்து மாற்றுத் திறனாளிகள் போல் கலைப் பண்டங்களை நுகர்கிறோம். 

யதார்த்தத்தில் என்ன செய்கிறோம் உண்கிறோம் என்பதை விட தொலைக்காட்சித் தொடரில் நாளைக்கு மாமியாரை எப்படி மருமகள் விஷம் வைத்துக் கொல்லப் போகிறாள் என்பது நமக்கு முக்கியமாகிறது. ஜீனியர் சுப்பர் சிங்கரில் தோற்றுப் போன பையன் என்னவானான் என்று தேட ஆரம்பித்து விட்டோம். பின்னை நவீனத்துவப் பண்பாட்டில் நிஜத்திற்கும் நிழலுக்குமான வேறுபாடு அற்றுப் போய்விட்டது. வீட்டிலுள்ள பசியுற்ற முதியோருக்கு உணவுதர மறந்து அல்லது மறுத்து தொலைக் காட்சிக் கதாபாத்திரத்துக்கு காய்ச்சலென்று உச்சுக் கொட்டுகிறோம்.

நிழல்களான கலைகள் நிஜங்களைப் புரிந்து கொள்ளவும் மாற்றியமைக்கவுமே தவிர நிஜங்களை மறைத்து நிழல்களுடன் நம்மை வாழவைக்கவல்ல.  

உழைப்பதற்காகப் படிக்கிறோம். உடல் உள ஆரோக்கியத்தைப் பேணவும் மகிழ்வாக இருக்கவும் நம் படைப்பாற்றலை பயன்படுத்தத் தவறுகிறோம். மேற்கு நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் நிலை பரவாயில்லை. கற்றல் செயற்பாடுகளில் படைப்பாற்றலை வளர்க்கும் பொறிமுறை அங்கு உண்டு. மருத்துவ மாணவரும் கவிதை கற்கும் வாய்ப்பு பள்ளிக்கூடத்திலேயே வழங்கப்படுகிறது. 

ஏன் நாடகக் கலை புத்துயிர் பெறவேண்டும்

எனவே நமது மரபு வழி வாழ்க்கையின் ஆரோக்கியமான உணவுப் பண்பாட்டை, விவசாய உத்திகளை மீட்டெடுக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அந்தளவுக்கு கலைகளையும் மீட்டெடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

முக்கியமாக உள்ளுர் மரபுகளிலிருந்து கிளம்பும் ஆற்றுகைக் கலையான நாடகக்கலை ஒரு சமூக உளவியற் செயற்பாடு என்ற வகையில் மீட்டெடுக்கப்பட வேண்டியது அவசியம்.

காத்தவராயனும் பிரகலாதனும் அரிச்சந்திரனும் சாவித்திரியும் ஏழுபிள்ளை நல்லதங்காளும் அருச்சுனனும் கர்ணனும் ஆனையடக்கிய அரியாத்தையும் காரைக்கால் அம்மையும் நீலியும் இன்னும் நம் வாழ்விற்கு சமூகத்திற்குத் தேவையான கதாபாத்திரங்கள். அவர்களது கதைகளிலிருந்து கற்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது. இலக்கியமும் கலையும் காலத்தை வென்றன. காலம் பிரதேசம் என்ற வரையறைகளைக் கடந்தன. மனிதம் வளரவேண்டுமெனில் அவை ஓம்பப்பட வேண்டும். 

அதையும் விட நமது படைப்பாற்றல் வளரவேண்டியது அவசியம். அதுதான் உண்மையான கற்றற் செயற்பாடு. தகவல்களை உள்வாங்கிக் கொள்வது மட்டுமல்ல கல்வி.  உள்ளிருந்து படைப்புத் திறனை அழகியலோடு வெளிப்படுத்தும் செயற்பாடு அது. நமது ஆளுமையை தன்னடையாளத்தை வளர்க்கும் செயற்பாடு அது. அதனாற்தான் ஒரே நாடகத்தை இருவேறு குழுக்கள் மேடையேற்றும் போது நிறைய வேறுபாடுகள் தெரிகின்றன.

எனவே காரைநகரின் கலைமரபுகளிலொன்றான நாடகத் துறையை வளர்த்தெடுக்க வேண்டியது ஆளுமை விருத்திச் செயற்பாடுகளில் ஒன்றாகிறது. ஒப்பீட்டளவில் எண்பதுகளுக்கு முன்னர் இருந்ததை விடத் தற்போது பௌதீக வளங்கள் நன்கு வளர்ச்சியுற்றிருக்கின்றன. ஆனால் ஆளுமை விருத்திச் செயற்பாடுகளில் தேக்கநிலை காணப்படுகிறது. 

போருக்கு முன்னர் 80களின் ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது ஊரில் பௌதீக வளங்கள் நன்கு வளர்ச்சியுற்றிருக்கின்றன. ஆனால் கலை பண்பாடு கல்வியென்பன தேய்நிலையில் உள்ளன. நம் ஊரின் எதிர்கால இருப்பு என்பது நம் எதிர்காலச் சந்ததியின் ஒட்டுமொத்த ஆளுமை என்ற தரத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது. தற்கால உலகு அளவை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. தமிழச்சமூகம் அளவை அன்றி தரத்தை மையமாகக் கொண்டே மேம்பாட்டை அளவீடு செய்தது. செய்ய வேண்டும். 

நாடகம் எண்ணக்கருவில் உருவாகி மேடையேற்றம் வரை பல படிநிலைகளைக் கொண்டது. தலைமைத்துவப் பண்புகள் மொழியாற்றல் அறக்கருத்துக்கள் முற்போக்கான சிந்தனைகள் உடலாரோக்கியம் சமூக ஒற்றுமை இணைந்து வினையாற்றல் ஆடல் பாடல் அழகியல் உணர்வு ஆரோக்கியமான போட்டி அறிவுத்தேடல் எனச் சமூகத்தில் பன்முகத்திறன் வளர்க்கும் அதன் வகிபாகம் காத்திரமானது. 

 


24-04-2017                                                                         ஆக்கம்: 
                                                                      கலாநிதி. கென்னடி விஜயரத்தினம்
                                                 இணைப்பாளர்: மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக்குழு
                                                                        சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை.