காரைநகர் தந்த கவிஞர் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மன் அவர்களின் எழில்பூக்கள் அறிமுகவிழாவிற்கு சுவிஸ் காரை அபிவிருத்திசபை வாழ்த்து

                                                                                            உ
                                                                     சிவமயம்
        "பெற்றதாயும் பிறந்தபொன்னாடும் நற்றவ வானிலும் நனிசிறந்தனவே"

Nandy

 

                           வாழ்துச்செய்தி

கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மன் அவர்கட்கு

அன்புடையீர் வணக்கம்!

எமது கிராமத்தின் அபிவிருத்திக்கு பொருள் மற்றம் ஆன்மீக வளர்சியோடு கூடிய கல்விசார் சமூகத்தை வளர்ப்பதன் மூலமே அபிவிருத்தி என்ற இலக்கை  நாம் அடைய முடியும்.

தமிழர்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக போற்றி வந்த தமிழ் மரபுக் கவிதை என்னும் அற்புதமான கலை மெல்ல மறைந்து வரும் நிலையில் காலத்தின் தேவை கருதி தங்களால் அறிமுகப்படுத்தப்படும் "எழில் பூக்கள்" கவிதை நூல் மழலைக் குழந்தை ஒன்று பாலர் பாடசாலைக்கு செல்லும் போது குறிப்பிட்ட சில மாணவர்களுடன் தான் தனது மழலைக் கல்வியை ஆரம்பிக்கும் காலப் போக்கில் பல ஆசியர்கள் நண்பர்கள் பலருடனும் சேர்ந்து தனது கல்வியை விரிவாக்கும் அதபோல இன்றைய மாணாக்கரின் படைப்பாற்றல் பலமடங்கு விருத்தியடைவதற்கு உதவும் பெரும் படைப்பாகும். 

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட காரைநிலா- 2014 நூலிற்கு தாங்கள் வழங்கிய ஊர் வெண்பா – காரைநகர் நேரிசை வெண்பாவை நினைவு கூறுகின்றோம். 

கனடா டொரொண்டொ மாநிலத்தில் தமிழிசைக் கலாமன்றத்தில் இன்று (16.04.2017) மாலை 5மணிக்கு நடைபெறவிருக்கும் "எழில் பூக்கள்" கவிதை நூல் அறிமுகமும் இசை நிகழ்ச்சியும் மிகச் சிறப்புற அமைய ஈழத்துச் சிதம்பர ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ ஆனந்த தாண்டவ நடராஜனின் சௌபாக்கியங்கள் கிடைத்து இன்புற வாழ்த்துகின்றோம்.

                                                                        நன்றி

                                                        "ஆளுயர்வே ஊருயர்வு"

                                  "நன்றே செய்வோம் அதை இன்றே செய்வோம்".


                                                                                                           இங்ஙனம்.
                                                                                    சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
                                                                                           செயற்குழு உறுப்பினர்கள்
                                                                             மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
                                                                                           சுவிஸ் வாழ் காரை மக்கள்
                                                                                                             16.04.2017

swiss karai 16.04.2017

 

                                                      ஊர் வெண்பா – காரைநகர்
                                                             நேரிசை வெண்பா

ஈழத் திருநாட்டில் ஈசன் அருளாலே
ஆழக் கடல்நடுவே ஆனதுவாம் – வாழ
அருமையான ஊராய் அமைந்திட்ட ஊரின்
பெருமையினைச் சொல்லல்நற் பேறு.

காரைச் செடியங்கு கண்டதனால் தானதுவோ
காரைக் குடியார் கதியூரோ – பேரையன்று
காரைதீ வென்றுதன் காரணமாய்ப் பெற்றவதன் 
சீரைப் பரவல் சிறப்பு.

யாழ்ப்பாண மாநகர்க்கு யாவரும் போற்றிடவே
ஆழ்கடலில் பாலம் அழகமைத்து – பேழ்பெற்றார்
காரைதீ வையன்று காரை நகராக்கி
ஊரை உயர்த்தியதை ஓது.
பேழ் – பெருமை

காரை நகராம் கவினுறு பேருடைய
ஊரை நினைக்க உளமுவக்கும் – நாரை
பறக்கும் வயல்வெளியில் பச்சை படரச்
சிறக்கும் செல்வங்கள் சேர்ந்து.
கவின் – அழகு

வாழை பனையோடு மாமரமும் தென்னைகளும்
சூழ இருக்கின்ற சோலையுடன் – மாழை
பொருந்தும் வயல்களிலே பொற்கதிரும் ஆடி
விருந்துக் கழைத்தல் வியப்பு.
மாழை – அழகு

தண்ணீர்க்கோ பஞ்சந்தான் சற்றுஞ் சலித்திடார்
மண்ணுழுது நாளுந்தாம் மாய்ந்திடுவார் – கண்ணுக்குள்
நெய்விட்டுக் காத்திடுவார் நேர்நின் றுழைத்திடுவார்
பொய்சொல்லார் பொன்னூர் பொழிப்பு.
பொழிப்பு – சிறப்பு

பட்டப்பேர் வைத்ததனால் பாசமாய்க் கூப்பிடுவார்
திட்டங்கள் செய்வார் திறமாகத் – தொட்டதெல்லாம்
பொன்னாகும் நாளும் பொருள்பலவும் சேர்த்திடுவார்
அன்னாரின் ஊரே அழகு.
குறிச்சி பலவுண்டு கூறநா ஊறும்
வெறிச்சொல் எறியாத மேலோர் – குறைச்சல்கள்
இல்லா திருப்பர் இயற்கையைத் தாம்விட்டுச்
செல்லாதார் ஊரே சிறப்பு.

ஆடல் அரசன் அருமை உணர்ந்திடுவார்
பாடல் பலபாடிப் பக்திசெய்வார் – ஈடில் 
திருக்கோயில் கட்டிச் சிதம்பரமே கண்டார்
அருங்குணத்தார் ஊரே அழகு.

பஞ்ச இரதங்கள் பார்த்து மனம்நைவார்
நெஞ்சம் நினைந்துருகி நேர்ந்திருப்பார் – தஞ்சம் 
அடைந்திடுவார் நாளும் அரனருளால் பந்தம்
உடைந்திடுவார் ஊரே உவப்பு.

பள்ளிகள் கட்டிவைத்தார் பார்மெச்சக் கற்பித்தார்
பிள்ளைகள் முன்னேறப் பீடுற்றார் – உள்ளமெலாம்
நல்லவராய் ஆக்குவித்து நாடு சிறப்பித்து
வல்லராக்கிக் கண்டார் வனப்பு.


வெளியூர்கள் போனாலும் வெற்றிபல காண்பார்
களியூரில் வாழ்ந்தும் கவினூர் – துளியும் 
மறவார் மனத்தகத்தே வைத்து மகிழ்வார்
இறவாப் புகழூர் இனிப்பு.

த. நந்திவர்மன்
சிட்னி 
அவுஸ்திரேலியா
பங்குனி 2014

குறிப்பு 
ஊர்வெண்பா என்பது தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்று.  ஒரு ஊரைப்பற்றி பத்து வெண்பாக்களால் பாடி அமைவது அது.
எமதூரின் மீதுள்ள விருப்பத்தால் அடியேன் கற்பனையில் பன்னிரண்டு வெண்பாக்கள் வந்தன.